Chapter 30

சட்டாம்பட்டி சந்து பொந்துக்கள் கூடச் சத்தமிட்டன.

ஊர்ப் பொதுக் கிணறுகளில் தோண்டிப் பட்டைகள் மூலம் தண்ணீ ர் பிடித்த பெண்கள் மத்தியில், கோலவடிவுப் பேச்சு..... ஒரு சிலரின் தோண்டிப் பட்டைகள் பேச்சுக் கவனத்தில் தொழில் வேகம் போய் மூலப்படியில் மோதிக் கிடந்தன. அவற்றைப் பார்க்காமலே அவர்கள் புஷ்பத்தின் கற்பழிப்பு விவகாரத்தை மனதுக்குள் படம் போட்டுப் பார்த்து வர்ணனை கொடுத்தார்கள்.. ஊராட்சி போட்ட உருப்படாத குழாயடிகளிலும் இதே பேச்சு.... ஆயிரம் சண்டை நடந்தாலும் கரும்பட்டையான் பகுதியில் உள்ள தேநீர் கடைக்கு வழக்கமாக வரும் செம்பட்டையான்களை இப்போது காணவில்லை... கொஞ்ச நஞ்சமிருந்த கரும்பட்டையான்கள் துளசிங்கத்தையும் அலங்காரியையும் துண்டு போட்டு ஏசினார்கள். செம்பட்டையான் மளிகைக் கடைக்கு வழக்கமாய் வரும் கரும்பட்டையான் பெண்கள் இப்போது தலை கவிழ்ந்தபடியே வேறு கடையை நோக்கி நகர்ந்தார்கள். பள்ளிக்கூடத்தில் மாணவ மாணவியருக்குக் கல்லெறிச் சம்பவம் பேச்சானது... ஆசிரிய ஆசிரியைகளுக்கு அது ஒரு பொருட்டல்ல. கோலவடிவே சிலபஸ்..... துளசிங்கமே பாடம். புஷ்பமே பரீட்சை .

இந்தப் பள்ளிக்கூடத்தை விட்டு, பஸ்ரோடு பக்கமாக வந்தால் அந்தச் சாலைக்கு மேற்கே உள்ள ஆசாரிமார் குடியில், பெண்கள் எந்தவிதப் பாதிப்பும் இல்லாமல் அலசினார்கள். கல்வீச்சு இந்தப் பக்கம் வரவில்லை . வரவும் முடியாது.... ஆனாலும் மாட்டுக்கு லாடம் கட்டிய கொல்லாசாரி கலப்பையைத் தண்டிப்பது போலவும் தட்டிக் கொடுப்பது போலவும் அல்லாடிய தச்சாசாரியிடம் பேச்சுக் கொடுத்தார்..... திருமலை புஷ்பத்த ஒண்ணு கிடக்க ஒண்ணு பண்ணிட்டானாமே..... இதைத் தாண்டினால் காரைவீட்டார் பகுதி... இங்கே 'நம்ம குடும்பந்தான் நல்ல குடும்பம்...' என்பது மாதிரியான பேச்சுக்கள்.

இப்படி ஊர் எல்லாப் பக்கமும் ஏதோ ஒருவகையில் ஒரு விவகாரத்தையே பல்நோக்காய் பேசினாலும் துளசிங்கம் கடை இருக்கும் பகுதியில்தான் சத்தம், பலத்த கத்தலாகியது.... இதற்கு அருகே உள்ள காத்துக்கருப்பன் குடியிருப்புப் பகுதியில் ரோட்டுப் பக்கமான மைதானத்தில், ஒரே கூட்டம். பற்குணமும், பீடி ஏசெண்டும் துள்ளிக் குதித்தார்கள். சொக்காரர்கள்.... ஆங்காங்கே இடைச் செறுகல் போட்டார்கள்.

"கடைசில.... காத்திருந்தவன் பெண்டாட்டிய நேற்று வந்தவன் கொண்டு போனவன் கதையாப் போயிட்டே..."

"அப்படிப் பாத்தா காத்து இருந்தவன் துளசிங்கம்ட. நேத்து வந்தவன் தான் அக்னிராசா.... பழமொழி தலைகீழாயிட்டு..."

"என்னல ராகம் போட்டு பேசுற..? நம்ம குடும்பத்துக்கு நிச்சயித்த பொண்ண செறுக்கி மவன் கூட்டிட்டுப் போயிட்டான்... அப்படியும் ஒனக்கு கோபம் வராட்டா நீ மனுஷனா?"

"எனக்கும் கோபம் வரத்தான் செய்யுது... துளசிங்கம் மேல மட்டுமில்ல.... ரெண்டு பேருக்கும் இஸ்கு... தொஸ்கு இருக்கது தெரிஞ்சும் அவசர அவசரமாக அந்த கூறு கெட்டவள நம்ம தலையில் போட நெனச்சாரே பழனிச்சாமி.... அவரு மேலயும் கோபம் கோபமா வருது.."

"வெந்த புண்ணுல வேல பாய்ச்சாதப்பா... பாவப்பட்ட மனுஷன்.... மகள் அந்த ஓநாய்ப் பயலுக்கும் மகன போலீஸ் பயல்வ கிட்டயும் பறிகொடுத்துட்டு பரிதவிச்சு நிக்கார்... இரக்கம் இல்லாட்டாலும்

இறக்கிப் பேசப்படாது..."

"திருமலய எப்போ பிடிச்சுட்டுப் போனாவளாம் பற்குணம்..."

"அவன வீட்டுக்குள்ள பூட்டிப் போட்டிருக்கான்.... அப்புறமா அவன் வெளில போகணுமுன்னு கத்துனான்னு கதவ திறந்து விட்டிருக்காவ... திருமலை புளியந்தோப்பு பக்கமா போயிருக்கான்.... அவன் எப்படியும் வருவான்னு கள்ளச் சாராயப் புதருப் பக்கமா நின்ன போலீஸ்காரங்க அப்படியே தூக்கிட்டுப் போயிட்டாங்க... ஊருக்கு வராம பரும்புக் காட்டு வழியா கொண்டு போயிட்டாங்களாம்..."

"ஊர் வழியா ஏன் வர்லியாம்..."

"நீ முன்ன பின்ன போலீஸ் ஸ்டேஷன் போயிருந்தால் தெரியும்.... ஆள்பலம் இருக்குற குடும்பத்துல எப்பவும் நேருக்கு நேரா வந்து பிடிக்க மாட்டாங்க... அப்படியே வந்துட்டாலும், சும்மா ஸ்டேஷனுக்கு வாங்கன்னு பூனை மாதிரி பதுங்கிட்டு ஸ்டேஷன்ல போய் புலி மாதிரி பாய்வாங்க... பாவம் அவன் என்ன பாடு படுத்துறாங்களோ... போய் பார்த்துட்டு வருவோமா..."

"அவன் எந்த ஸ்டேஷன்ல இருக்கானோ... போலீஸ்காரங்க... ஒருத்தன் பிடிக்கலன்னா.... அவனப் பிடிச்ச எந்த ரிக்கார்டும் இல்லாம ஸ்டேஷன் விட்டு ஸ்டேஷனுக்கு மாத்துவாங்களாம்..."

"சரி.... எந்த ஸ்டேஷன்னுதான் பார்ப்போமே...” "பழனிச்சாமியே சும்மா இருக்காரு... நமக்கென்ன..."

"ஒருவேள திருமல ஊர்ல இருந்தா, கொலகில பண்ணிப்புடுவான். ரெண்டு நாளைக்கு ஸ்டேஷன்லயே இருக்கட்டுன்னு நெனக்காரோ... என்னவோ... என்ன சொல்ற பற்குணம்..."

"அவரு , பாவம் மெல்லவும் முடியாம விழுங்கவும் முடியாம துடிப்பாரு... நாமதான் ஏதாவது செய்யணும்... வாங்கப்பா ஊரத் திரட்டிக்கிட்டுப் போயி போலீஸ்ல கேட்போம்... திருமல ஆத்திரத்துல செய்ததை பெரிசா எடுக்கப்படாதுன்னு சொல்லிப் பார்ப்போம்.... இல்லன்னா வக்கீலப் பிடிச்சு ஜாமீன்ல எடுப்போம்..."

"இப்போ போலீசுக்குப் போயிட்டா அப்புறம் சுடலைமாடன் கொடைய நிறுத்த முடியாது. அதோ பாருங்க..... நம்ம குடும்பமும் கரும்பட்டையான் குடும்பமும் தல தாழ்ந்து நிக்கோம்... செறுக்கி மவனுவ திமிரப் பாருங்களேன்..."

ஒருத்தர் காட்டிய திசையை எல்லோரும் பார்த்தார்கள்.... முதலில் ரசித்தும் பிறகு வெறுத்தும் நோக்கினார்கள்.

ஆசாரிமார்குடி அருகே அறுபது செம்பட்டையான்கள் மேளதாளத்தோடு வந்தார்கள். கெட்டுமேளச் சத்தம் காதைத் துளைத்தது. நாதஸ்வரக்காரர்களும், மேளக்காரர்களும் பின்புறமாய்த் திரும்பித் திரும்பி ஊதிக்கொண்டும் அடித்துக் கொண்டும் நடந்தார்கள். அவர்களுக்குப் பின்னால் ஒரு சாமியாடி உடம்பு முழுக்க சந்தனம் அப்பியிருந்தார். தலையில் ஒரு குடம் - சின்னச் செப்புக் குடம். அதன் வாய் மாதிரியான தலையில் ஒரு தேங்காய். இடையிடையே சாய்த்துச் செருகப்பட்ட மாவிலைகள். அவர் குடம் விழாதபடி உடலைக் குறுக்கிய போது ஐந்தாறு செம்பட்டையான்கள் கழுத்துக்களில் மாலைகளைப் போட்டுக் கொண்டு கையில் பிரம்புகளை வைத்துக்கொண்டு சாமியாட்டம் போட்டார்கள். துள்ளித் துள்ளி... தாவித்தாவி... தொலைவில் இருந்து இதைப் பார்த்த காத்துக் கருப்பன்களால் பொறுக்க முடியவில்லை. பற்குணம் குரல் கொடுத்தார்.

"செறுக்கி மவனுவ... குதிக்கிற குதியைப் பாரு... ரெண்டு குடும்பத்தையும் அவமானப்படுத்திட்டோம் என்கிற திமுறுல குதிக்கானுவ பாரு.... இவனுவள ஆட விடாப்படாதுடா... சுடலமாடன் கோவிலுல பந்தல் இருக்கப்படாதுடா..."

"இவனுவ எங்க போயிடுவானுவ... மொதல்ல திருமலய மீட்டுட்டு வருவோம்..."

"திருமல கிடக்கான். அவன் கடிச்சா தின்னுப்புடுவாங்க... இப்போ அவன் முக்கியம் இல்ல.. நம்மள அவமானப்படுத்துறது மாதிரி ஈவு இரக்கம் இல்லாம ஆடுற இந்தப் பயலுவ இன்னையோட சரியாகணும்... இந்த வருஷம் எந்தக் கோவிலுக்கும் விசேஷம் வேண்டாம். வாங்கடா... ஏலே செறுக்கி மவனுவளா..... வாரோண்டா... வாரோம்..."

காத்துக் கருப்பன்களில் ஒரு சிலர் தவிர ஒவ்வொருவருக்கும் செம்பட்டையான் சாமியாட்டம் சற்று அதிகமாகவே தெரிந்தது. பற்குணம் போட்ட கூச்சலில், ஒவ்வொருத்தரும் தனக்கு வருவதாக இருந்த ஒருத்தியை யாரோ ஒரு எதிரி கடத்திக்கொண்டு போய்விட்டது போலவும், அந்த எதிரியே இப்போது வீட்டுக்கு வந்து மீண்டும் பெண் கேட்டுக் கதவைத் தட்டுவது போலவும் தோன்றியது.... ஒரே கூட்டமாய், சாலை மேட்டுக்கு வந்தார்கள்.... அங்கே இருந்த துளசிங்கம் கடைகளை ஒருசிலர் அடித்து நொறுக்கப் போனார்கள்.... அப்போது பலரும் அவர்களைத் தடுத்து விட்டு கூட்டத்தை சாமியாட்ட செம்பட்டையான் பக்கம் ஏவிவிடப் போனபோது -

வடதிசையில் இருந்து சத்தம் கேட்டது... அந்த சத்தத்திற்கு உருவகமாய் பூமியதிர வேன்கள் வந்தன... முன்னாலும் பின்னாலும் இரண்டு வெள்ளை வேன்கள்... மேக்கப் செய்யப்பட்ட லாரிகள் மாதிரி... இவற்றிற்கு மத்தியில் ஒரு பச்சை நிற வேன்... கடைசியில் ஒரு ஜீப்... காத்துக் கருப்பன்கள், எங்கேயோ போகிற அந்த வண்டிகள் போகட்டும் என்பதுபோல் வழிவிட்டு நின்ற போது, அந்த நான்கு வண்டிகளும் துளசிங்கம் கடை முன்னால் நின்றன. வேனில் இருந்து துளசிங்கமும், சினிமாக்காரர்களும் வெள்ளைக் கூண்டு லாரிகளில் இருந்து போலீஸ்காரர்களும் சொல்லி வைத்தது போல் ஒரே சமயத்தில் குதித்தார்கள்... பாராசூட்டிலிருந்து குதிப்பது போல் குதித்த போலீஸ்காரர்களிடம் சட்டையில் அசோக முத்திரை போட்ட ஒருவர் ஏதோ சொல்ல அவர்கள் தாவிப் பாய்ந்தார்கள்.... கூட்டமாக நின்ற கரும்பட்டையான்களிடையே லத்தியும் கம்புமாய் பாய்ந்து போனார்கள் - ஒருவர் ஜீப்பில் இருந்தபடி கத்தக் கத்த போலீஸ் லத்தி வீச்சில் நான்கைந்து காத்துக் கருப்பன்களுக்கு நல்ல அடி.

"என்னய்யா மொட்டக் கூட்டம் போடுறீங்க..... அவனவன் வீட்டப் பாத்துப் போங்க... இல்லாட்டி முதுகு பிஞ்சிடும்... ஏ மேன் வாயால சொன்னா போக மாட்டீங்களா?"

காத்துக்கருப்பன் கூட்டம் சிதறியது.... தனித்தனியாகப் பிரிந்து வைக்கோல் குவியல்களில் பதுங்கி, வண்டிகளுக்கு பின்னால் மறைந்து நின்று, போலீஸ் மர்மங்களை மர்மமாகப் பார்த்தார்கள்... பற்குணம் பற்களைக் கடித்தபடியே காண்டிராக்டர் தாமோதரன் வீட்டை நோக்கிப் போனார். அவருக்குப் பிடறியில் அடி... அவர் போலீஸையும் எதிர்க்கக்கூடியவர்தான். ஆனால் இப்போது எதிர்த்தால் முதுகு பிய்யும் என்பது தெரிந்த மனிதர்.

இதற்குள் போலீஸ்காரர்கள் பெட்டிக் கடைகளில் பீடி பற்ற வைத்தவர்களை விரட்டினார்கள் - அவர்கள் ஏதோ ஊருக்கு தீ வைக்கப் போவதுபோல்; இந்த பாக்கு எத்தன பைசா என்று கேட்ட ஒருவனை, "என்னடா ஊர் விவகாரத்த பேசுற" என்று சொல்லி அவன் கழுத்தைப் பிடித்துத் தள்ளினார்கள்.... இரண்டு போலீஸ் காரர்கள். துளசிங்கம் கடைக்கு முன்னால் பாரா போட்டார்கள்... நான்கைந்து பேர் சாலையோரமாய் இடைவெளி விட்டபடி நின்றார்கள்.

சற்று தொலைவில் வாலிபால் விளையாடிய வாலிபர்கள் பக்கம் பாய்ந்த போலீஸ் கும்பல் ஒன்று வலையை இழுத்துப் போட்டது.... பந்தைத் தூக்கி ஒருவர் மேல் வீசியது.... விளையாட்டுக்காரர்கள் திகைத்து நின்றபோது, 'வீட்டப் பாத்து போங்கடா.." என்ற லத்தி சாட்சியான அதட்டல்கள்... அந்த வாலிபக் கூட்டம் லேசான எதிர்ப்பைக்கூட காட்டாமல் கொத்தடிமைகளாய் கலைந்து போனது. ஒரு போலீஸ் பிரிவை அங்கேயே விட்டுவிட்டு, போலீஸ் ஜீப் தலைமையில் காவலர் வேன்களும், சினிமா வேனும் மீண்டும் ஓடின.... அப்படி ஓடி, செம்பட்டையான் சாமியாடி கூட்டத்தின் முன்னால் போய் நின்றது... அங்கே ஏழெட்டு போலீஸ்காரர்கள் இறங்கி சாமியாடிகளுக்குப் பாதுகாப்பு கொடுப்பது போல் மேளத்திற்கு முன்னாலும் கூட்டத்திற்கு பின்னாலும் பக்கவாட்டிலும் போய் கூட்டத்தோடு கலக்காமல், சிறிது இடைவெளிவிட்டு நடந்தார்கள்.... ஒரு போலீஸ்காரர், தனித்துவத்தைக் காட்டி தனியாக ஆடிய சாமியாடி ரத்தினத்தை சண்டை போட வந்த சதிகாரனாய் நினைத்து காலில் ஒரு போடு போட்டார்.

போலீஸ் பயத்தில் ஓடப்போன மேளக்காரர்களை இரும்புக்கரம் தடுத்து நிறுத்தின. வாசிக்கப் பயந்து நின்ற நாதஸ்வரக்காரர்களின் வாய்களில் நாதஸ்வர முனைகள் திணிக்கப்பட்டன.... தாறுமாறாக ஆடிய சாமியாடிகள் வரிசைப்படுத்தப்பட்டு லெப்ட் ரைட் போல் ஆடும்படி சொல்லப்பட்டனர்.

மீண்டும் போலீஸ் வண்டிகள் சினிமா வேனின் சிநேகிதத்துடன் ஓடியது... பள்ளிக்கூட மைதானம், ஊர்க்கிணறு, குழாயடிகள், காளியம்மன் கோவில், பழனிச்சாமி வீட்டின் பாதை, சுடலைமாடன் கோவில் முதலிய பல இடங்களில் லத்திக் கம்புக்காரர்கள் குதித்துக் குதித்து இறங்கினார்கள்.... ஆங்காங்கே மண்வெட்டிகளை வைத்துக் கொண்டு வயல் வரப்புகளுக்குப் போகப் போனவர்களைக் கூட ஆயுதத்தை எடுத்துக்கிட்டா நிற்கீங்க' என்று அதட்டினார்கள்.... போலீஸ் என்றால் பயம் வரவேண்டும் என்ற தத்துவார்த்த நோக்கத்துடன் வழியில் சிக்கியவர்களை அடித்தார்கள்.... வயதானவர் களை அதட்டினார்கள்... வழக்கம்போல் தேநீர் கடைகளில் உட்கார்ந்தவர்களை அதட்டி அப்புறப் படுத்தினார்கள். அந்த இடங்களில் உட்கார்ந்து கொண்டார்கள்... கிணறுகளில் தண்ணீர் எடுத்த பெண்கள் பாதிக் குடங்களோடு ஓடினார்கள்.

அரை மணி நேரத்திற்குள் எதிர்பாராதது நடந்து விட்டது. ஊரே போலீஸ்மயமாகிவிட்டது... அந்த ஊருக்கு முன்பும் போலீஸ் வந்திருக்கிறது. மாமூலாக வந்து மாமூலாகப் போயிருக்கிறது. ஆனால் இப்படிப் பெரிய எடுப்பில் வந்ததில்லை... இப்படி கண்ணில் பட்டவர்களை எல்லாம் அடித்ததில்லை. தராதரம் தெரியாமல் நடந்ததில்லை. இன்றோ லத்திக் கம்பு இருக்கு என்பதற்காகவே அடிக்கிறார்கள்.

ஊர் மக்கள் அனைவரும் இப்போது தனிப்படுத்தப்பட்டு தனித்தனி மனிதர்கள் போல் தவித்தார்கள். போலீஸ் வரக் காரணம் என்ன என்றுகூட பேச முடியவில்லை . ஒருத்தர் நின்றால் திட்டு.... இருவர் நின்றால் மிரட்டல்... மூவர் நின்றால் அடி....

அந்த ஊர் பகுதி பகுதியாக, தெருத் தெருவாக விடுபடாத பயத்தில் மூழ்கியது. ஒவ்வொரு தெருவிலும் நான்கைந்து போலீஸ் காரர்கள். வேட்டியை மடித்துக் கொண்டு கூட நடக்க முடியவில்லை. குழந்தைகள் அழுதால் கூட போலீஸ்காரர்கள் என்ன சத்தம்' என்று உள்ளே வந்து அதட்டினார்கள்.... மாட்டுக்கு வைக்கோல் எடுக்க வெளியே வந்த ஒருவர் போலீஸ் முறைத்த முறைப்பில் உள்ளே ஓடிவிட்டார்... பள்ளிக்கூடத்திலிருந்து வரும் நான்கைந்து பயல்கள், போலீஸ்காரர் இருவர் பார்த்த பார்வையில் திரும்பித் திரும்பி பார்த்தபடியே எங்கிருந்து விடுதலை உணர்வோடு வந்தார்களோ அங்கேயே ஓடினார்கள்.... ஆக மொத்தத்தில் அந்த ஊரே போலீஸ் வலைக்குள் சுருட்டி வைக்கப்பட்டது போன்ற காட்சி.

போலீஸ் வண்டிகள் ஊர் முழுக்க சர்க்கஸ் அடித்தபோது, சினிமா வேன் எலி டாக்டர் வீட்டுக்கு வந்தது.... அதற்குள்ளும் நான்கைந்து போலீஸ்காரர்கள்... தொப்பி தெரியாமல் இருந்தார்கள்... அந்த வேனில் இருந்து துளசிங்கம் இறங்கியபோது, அலங்காரி, 'என் ராசா... நீதாண்டா சமர்த்தன்' என்று அவன் கன்னத்தில் முத்தமிட்டாள்... துளசிங்கம் சினிமாக்காரர்களை இறங்கும்படி சைகை செய்தான்... ஆனால் அவர்கள் இறங்கவில்லை டிரைவரை வண்டியை எடுக்கும்படி அவர் முதுகைப் பிடித்து முன்பக்கமாகத் தள்ளினார்கள்.

சினிமா வேன் பாரந்தது ரஞ்சிதம் தலைமையில் பீடி சுற்றும் பெண்கள் உள்ள முருகன் கோவிலை நோக்கி....