Chapter 21

தெய்வம் கொடுக்கற தண்டனை அதுதான்னா, பாகீரதியோட எதிர்கால வாழ்க்கைக்காக நீ அதை தாராளமா ஏத்துக்கலாம், பரவாயில்லே."

கெளரியின் இந்த வார்த்தை கனபாடிகளின் மன அடிவாரத்தில் திரும்பத் திரும்ப ஒலித்துக் கொண்டிருந்தது.

"இப்ப நான் சொல்றது உனக்கு அக்ரமமாத்தான் தோணும். நீயே நிதானமா யோசிச்சுப் பார்த்தா நியாயம் புலப்படும்."

"உண்மைதான்; நியாயந்தான். பாகீரதியின் எதிர்காலம் பற்றி நான் தீர்க்கமா யோசிக்க வேண்டியதுதான்."

யோசித்தார்; இரவெல்லாம் யோசித்தார்.

தூக்கம் இல்லாமல் திண்ணையில் போய் உட்கார்ந்து தெருவில் போய் நின்று, முன்னும் பின்னும் நடந்து, ஆகாசத்தைப் பார்த்து...

நிலா வானம் நிர்மலமாய்த் தெரிந்தது. ஊரே உறக்கத்தில் ஆழ்ந்திருந்தது. தாகம் நெஞ்சை வறட்டியதால் வீட்டுக்குள் வந்து தண்ணீர் அருந்தினார். ஊஞ்சலில் உட்கார்ந்தார். கிட்டா அயர்ந்து குறட்டைவிட்டுக் கொண்டிருந்தான்.

"பாவம், ரொம்ப அலைச்சல் அவனுக்கு!"

செம்பில் ஐலம் எடுத்துக்கொண்டு கொல்லைப் பக்கம் போய், சாக்கடை ஓரமாக உட்கார்ந்து, சிறுநீர் உபாதையை முடித்துக்கொண்டு திரும்பினார். இருள் சூழ்ந்திருந்த மாட்டுக் கொட்டிலில் பசு மாட்டின் கண்கள் மட்டும் பளபளத்தன அதைப் பார்த்துக் கொண்டே வந்தவரின் கால்களைக் கீழே இருந்த வாளி ஒன்று பலமாகத் தாக்கவே, கனபாடிகள் வலி பொறுக்காமல் ‘அப்பா, ராமா!’ என்று அலறிக்கொண்டு கீழே விழுந்து விட்டார்.

‘ராமா’ என்ற கனபாடிகளின் குரல் கேட்டு அவர் வளர்ப்புச் செல்லம் அணில் குட்டி பயந்து போய், படபடத்து மூலைக்கு மூலை ஓடியது.

வாளிச் சத்தமும் கனபாடிகளின் அலறலும் கேட்டுப் பதறி எழுந்த ராவ்ஜியும் கிட்டாவும் ஓடிச் சென்று "கீழே விழுந்துட்டேளா? ஐயோ, என்ன ஆச்சு?" என்று கேட்டுக் கொண்டே கனபாடிகளைத் தூக்கி நிறுத்தினார்கள்.

"வாளி தடுக்கிட்டுதுடா,நல்ல அடி! ரொம்ப வலிக்கிறதுடா, கிட்டா! கால் வீங்கியிருக்கா பாரு!" என்று முனகினார் கனபாடிகள்.

இருவரும் அவரை கைத்தாங்கலாய் அணைத்துக்கொண்டு உள்ளே அழைத்துச் சென்றார்கள்.

எல்லா துக்கங்களும் சேர்ந்துகொள்ளவே கனபாடிகள் சின்னக் குழந்தைப்போல் அழத் தொடங்கி விட்டார்.

"சிதம்பரம் போய் வரமுடியுமான்னு சந்தேகமாயிருக்கு, கிட்டா ! இன்னும் நாலஞ்சு நாள்தான் இருக்கு. உடம்பில சக்தி குறைஞ்சு போச்சு. ஒரு சின்ன வலிகூடத் தாங்கிக்க முடியலே!" என்று வருத்தப்பட்டார்.

"இப்படி பட்டினிக் கிடந்தா உடம்பு என்னத்துக்கு ஆகும்?" என்றான் கிட்டா.

"இந்தாங்க இந்தப் பாலைக் குடியுங்க. சுடச்சுட காய்ச்சிண்டு வந்திருக்கேன்" என்று சொல்லி கனபாடிகளிடம் பாலைக் கொடுத்தார் ராவ்ஜி. அதை வாங்கிக் குடித்த பிறகுதான் கனபாடிகளுக்குக் கொஞ்சம் தெம்பு வந்தது. சற்று நேரத்துக் கெல்லாம் தூங்கிப் போனார்.

காலையில் எழுந்து கடிகாரத்தைப் பார்த்தவர் இவ்வளவு நேரமாவா தூங்கிட்டேன்! மணி ஒன்பது !" என்று தமக்குத் தாமே சொல்லிக் கொண்டு ஆச்சரியப்பட்டார். அடுத்தகணம் அடிப்பட்ட காலைப் பார்த்து, "ஸ்ஸ்! நன்னா வீங்கிப் போயிருக்கு !" என்றார்.

"நாளைக்குள் சரியாப் போயிடும். இன்னைக்கு நீங்க குளிக்க வேணாம். பேசாமல் படுத்துண்டே இருங்கோ" என்றான் கிட்டா.

"என்னால ஸ்நானம் பண்ணாமலும் இருக்க முடியாது; பூஜை பண்ணாமலும் இருக்க முடியாது. நான் போய் இதோ குளிச்சுட்டு வந்துடறேன்" என்று எழுந்தார். அந்த நேரம் பார்த்து கனபாடிகளைப் பார்க்க வாசலில் ஒரு பெரிய கூட்டம் வந்து நின்றது.

"விராடபர்வம் வாசிக்கணும்னு உங்களைக் கேட்டுக்கப் போறதா நேத்து அரசமரத்தடில கூட்டம் போட்டுப் பேசிண்டிருந்தா, அவாதான் வந்திருக்கா போலிருக்கு" என்றான் கிட்டா,

"ஓகோ, அப்படியா! பிரம்மணாள் மட்டுமா? குடியானவாளும் வந்திருக்காளா?" என்று கேட்டுவிட்டு அங்க வஸ்திரத்தை எடுத்துப் போர்த்திக்கொண்டவர் "அதோ அந்த கைக்கம்பைக் கொண்டு வா இப்படி" என்றார். கிட்டா கொண்டு வந்த கம்பை வாங்கிப் பார்த்துவிட்டு "ம்! இத்தனை நாள் இதை நான் தொட்டதே இல்லை. எங்கப்பா உபயோகிச்சது!" என்று பெருமையோடு கூறியபடி அதை ஊன்றிக் கொண்டே வாசலுக்கு விந்திவிந்தி நடந்து போனார்.

அவரைப் பார்த்ததும் ஊரார் கையெடுத்துக் கும்பிட்டனர்.

"இந்த வெயில்ல எல்லாருமா எங்க இப்படி..?"

"உங்களைப் பார்க்கத்தான். மழையே இல்லாம பயிர் பச்சையெல்லாம் போயிட்டுது. ஆடுமாடெல்லாம் ஒண்ணு ஒண்ணா செத்துட்டிருக்கு, தாது வருஷத்துப் பஞ்சம் மாதிரி மறுபடியும் வந்துருமோன்னு தோணுது. விதை நெல்லைச் சாப்பிட வேண்டிய கதிக்கு வந்துட்டோம்."

"என்ன சொன்னீங்க ! விதை நெல்லைச் சாப்பிடப் போறீங்களா? ஊஹூம் ! அந்த நிலைக்கு உங்களை நான் ஒரு நாளும் விட மாட்டேன் ! வேதத்துக்கும் விவசாயத்துக்கும் வித்து தானே முக்கியம் ! வித்து அற்றுப்போனா வேதமும் போச்சு, விவசாயமும் போச்சு, பயப்படாதீங்க. ஒரே வாரம் பொறுத்துக்குங்க. நான் வந்து விராடபர்வம் வாசிக்கிறேன்; நிச்சயம் மழை வந்துடும். நம்பிக்கையோடு இருங்க" என்றார்.

"ஒரு வாரமா! நாளைக்கே ஆரம்பிச்சுட முடியாதா?" என்று கேட்டான் ஒரு விவசாயி.

"முடியாதப்பா ! இத பார்த்தயா? என் கால்ல செம்மையா அடிபட்டிருக்கு. சப்பணம் போட்டு உட்கார முடியாது. விராடபர்வம் வாசிக்கணும்னா ரெண்டு மணி நேரமாவது உட்கார்ந்திருக்கணுமே. அடுத்த வாரம் நிச்சயம் ஆரம்பிச்சுடலாம். பதிமூணாம் தேதி சிதம்பரத்துலே ஒரு விசேஷம். அதுக்கு நான் கண்டிப்பா போயாகணும். போயிட்டு பதினாலு வந்துடுவேன். பதினஞ்சு வச்சுக்குங்க" என்றார்.

"ரொம்ப சந்தோசம்; உங்களுக்குக் கோடி புண்ணியம் உண்டு. மவராசனாயிருப்பீங்க!" என்று வாழ்த்திவிட்டுப் புறப்பட்டார்கள் குடியானவ மக்கள்.

பிராம்மணர்கள் புறப்பட ஆயத்தமானபோது, "நீங்கள்ளாம் கொஞ்சம் இருந்துட்டுப் போக முடியுமா? உங்களோடு முக்கியமா ஒரு விஷயம் பேசணும், என் சொந்த விஷயம்தான்" என்று விநயமாய்க் கேட்டுக் கொண்டார் கனபாடிகள்.

"எங்களோடயா?" என்றார் ஒருவர்.

"ஆமாம்; என் மகள் பாகீரதி விஷயமா இது வரைக்கும் நான் எதுவுமே யோசிக்காம இருந்துட்டேன். என் மூச்சு இருக்கப்பவே அவளுக்கு ஒரு வழி செய்துடனும்னு நினைக்கிறேன்."

"அதுக்கு நாங்க என்ன செய்ய முடியும்?"

"நீங்க ஒண்ணும் செய்ய வேணாம், கனபாடிகள் பெண் சீர்கெட்டு அலையறாங்கற அவப்பெயர் அவளுக்கு வரக்கூடாது. அவள் எதிர்காலம் என்னங்கறதை நான் முடிவு பண்ணியாகணும். இந்த விஷயத்துல உங்க அபிப்ராயம் என்னன்னு தெரிஞ்சுக்க விரும்பறேன்."

"மனசுல நீங்க என்ன நினைச்சுண்டு பேசறிங்கன்னு புரிஞ்சு போச்சு, கொஞ்ச நாளைக்கு முன்னால பார்வதியின் புருஷன் பினாங்கிலிருந்து திரும்பி வந்தப்போ அவனைச் சேர்த்துக்கலாமான்னு உங்களிடம் யோசனை கேட்க வந்தோம். அப்ப நீங்க பிடிவாதமா சாஸ்திரம் ஒப்புக்காதுன்னு சொல்லி அனுப்பிட்டேளே, ஞாபகம் இருக்கா? இப்ப மட்டும் அந்த சாஸ்திரம் ஒப்புக்கறதோ? ஊருக்கு ஒரு சாஸ்திரம். உங்களுக்கு ஒரு சாஸ்திரமோ?" என்று தைரியமாகக் கேட்டார் ஒருவர்.

"இப்ப நான் உங்களைக் கேட்கிறது சாஸ்திரம் அல்ல. உங்க அபிப்ராயம்தான். "எங்ககிட்ட ஒரு வார்த்தை கேட்டேளா?"ன்னு நாளைக்கு நீங்க பழி சொல்லக் கூடாது பாருங்க, அதுக்காகத்தான். என் பெண்ணை இப்படி இந்த நிலையிலே, விட்டுட்டுப் போனா அவளை யார் காப்பாத்துவா? யாராவது அவளை நல்லபடியா காப்பாத்துவேளா? அவளுக்கு நான் ஒரு வாழ்க்கையை அமைச்சுக் கொடுக்க வேணாமா? உங்களில் யாருக்காவது இஷ்டம் இருந்தா, யாராவது காப்பாத்த முன் வந்தா, இப்பவே சொல்லுங்க. இந்த நிமிஷமே என் சொத்தையெல்லாம் எழுதி வைக்கத் தயாராயிருக்கேன்"என்றார்.

யாருமே பதில் பேசவில்லை. வாய்மூடி மெளனிகளாக முகத்தை வேறுபக்கம் திருப்பிக் கொண்டார்கள்.

"தெரியும். உங்க பதில் இதுவாத்தான் இருக்கும்னு தெரியும். என் பெண்ணைக் காப்பாத்துங்கோன்னு உங்களை நான் கட்டாயப்படுத்தப் போறதில்லே. கெஞ்சப் போறதில்லே. அது உங்க இஷ்டம். ஆனா, நான் ஒரு முடிவுக்கு வரதுக்கு முன்னால உங்கனை ஒரு வார்த்தை கேட்க வேண்டியது என் கடமை இல்லையா? அதுக்காகத்தான் கேட்டேன். இப்ப நீங்க போகலாம்" என்று அவர்களை அனுப்பிவிட்டு மெதுவாக நடந்து போய் ஊஞ்சலில் உட்கார்ந்தார்.

உட்கார்ந்தவர் "கிட்டா நெஞ்சை வலிக்கிறதுடா!" என்று மார்பைக் கையால் தாங்கியபடி ஊஞ்சலில் சாய்ந்து படுத்துக்கொண்டார்.