Chapter 8

நெய்யில் முந்திரிப்பருப்பு வறுபட்டுக் கொண்டிருந்த மணம் பாடசாலை முழுதும் ‘கமகம’த்தது. வெள்ளிக்கிழமையானதால் சுவாமி நைவேத்தியத்துக்கு அவல் பாயசம் !

கனபாடிகளும் கிட்டாவும் பசு மாட்டுக்கு மஞ்சள் பூசி குங்குமம் இட்டுக் கொண்டிருந்தார்கள்.

பத்து நாட்களுக்குமுன் கொட்டிலுக்குப் ‘புது வரவு’ ஒன்று சேர்ந்திருந்தது. காவேரிப்பாக்கம் பசு ஈன்றெடுத்த அந்த ஆண் கன்றுக்கு இன்று நாமகரணம்!

உடல் முழுக்க, பட்டை பட்டையாக, திட்டுத்திட்டாக, வெள்ளையும் பழுப்பும் கலந்த வெல்வெட் வழவழப்பில் அந்த சேங்கன்று துள்ளிக் கொண்டிருந்தது.

"அடே கிட்டா ! இதுக்கு என்ன பேர் வைக்கலாம் சொல்லு ! கமலாவையும் பாகீரதியையும் கூப்பிடு. அவாளையும் கேட்போம்" என்றார் கனபாடிகள்.

அவர்கள் வந்தார்கள்.

"ராஜான்னு வைக்கலாம்ப்பா" என்றாள் கமலா.

"ஸ்வாமி பேர் எதுவும் தோணலையா? நீ என்ன சொல்றே பாகீ?"

ஏதும் சொல்லத் தெரியாதவள் போல் மெளனமாய் நின்றாள் அவள்.

"நம்ப மூர்த்தி ஞாபகமாக அவன் பேரையே வெச்சடலாமே!" என்றான் கிட்டா.

கனபாடிகள் முகத்தில் ஒரு பிரகாசம் பளிச்சிட்டது. "சரி; அந்தப் பேரையே வச்சுடுவோம். எனக்கு ரொம்ப திருப்தி. பாகீ உனக்கு?"

"அவளுக்கும் பரம திருப்திதான். எனக்குத் தெரியும்" என்றான் கிட்டா.

"உனக்கெப்படிடா தெரியும்?"

“கன்னுக்குட்டிக்கு மூர்த்தி பேரை வைக்கலாம்னு நேத்தே அவள் எங்கிட்ட சொல்லிட்டாளே!"

"ஒகோ, ஏற்கனவே தீர்மானம் ஆயிட்டுதோ!" என்றார் கனபாடிகள்.

கிட்டா எங்கேயோ ஒடிப்போய் கன்றுக் குட்டிக்குத் தர ‘பசும்புல்’ கொண்டு வந்தான்.

"இதை உன் கையாலேயே கொடுடா! உனக்கு ரொம்பப் புண்ணியம்" என்றார் கனபாடிகள்.

சேங்கன்று அதை ஆவலாய்ச் சாப்பிட்டது.

"நம்ப மூர்த்தி இப்போ எங்கே இருக்கானோ? யார் அவனுக்கு சாதம் போடறாளோ?" என்று கனபாடிகள் துக்கப் பட்டார்.

இச்சமயம், பாடசாலைப் பையன் ஒருவன் ஓடி வந்து, "உங்களைப் பார்க்க வாசல்லே யாரோ கும்பலா வந்திருக்கா. பக்கத்து அக்கிரகாரமாம்!" என்றான்.

"திண்ணையில உட்காரச் சொல்லு, இதோ வந்துட்டேன். முதல்ல எல்லோருக்கும் மோர் கொண்டு போய்க் கொடு" என்றார்.

கனபாடிகள் வாசலுக்கு வந்தபோது அவர்கள் எல்லோரும் பவ்யமாக எழுந்து நின்றார்கள்.

"பக்கத்தூர்லேந்து வறோம்" என்றார் ஒருவர்.

அப்படிச் சொன்னவரைப் பார்த்து, "நீ வெங்கடேச தீட்சிதர் பிள்ளை இல்லையோ? உன்னைப் பார்த்திருக்கேன். இத்தனை பேரும் எங்க இந்த வெய்யில் வேளையில?...."

ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள்.

வெங்கடேச தீட்சிதர் மகன்தான் பேசினார் :

"ஒரு முக்கியமான விஷயம். சாஸ்திரப் பிரச்னை, நீங்கதான் முடிவு சொல்லணும். அந்தத் தகுதி உங்களுக்குத் தான் உண்டு."

"பூர்வ பீடிகையெல்லாம் பலமா இருக்கே. விஷயத்தைச் சொல்லுங்கோ" என்றார் கனபாடிகள்.

"அத்திப்பட்டு ராமகிருஷ்ண சாஸ்திரிகள்னு கேள்விப் பட்டிருப்பேள்!"

" நன்னாத் தெரியுமே; அவர் காலமாயிட்டார் இல்லையோ?"

"ஆமாம். அவருக்கு ஒரு பெண். பார்வதின்னு பேர். கல்யாணமாகி இருபது வருஷம் ஆறது. அவளுடைய புருஷன் கல்யாணமான ரெண்டு வருஷத்துக்கெல்லாம் கடல் கடந்து பினாங்கு போனவன் இப்பத்தான் திரும்பி வந்திருக்கான். பார்வதி இத்தனை நாளும் பட்டணத்திலே யாரோ ஒரு பணக்காரர் வீட்டிலே சமைச்சுப் போட்டுண்டு காலத்தைக் கழிச்சுண்டிருந்தா. இந்த வருஷம்தான் ஊரோட வந்து சேர்ந்துட்டா, குழந்தை குட்டி கிடையாது."

"சரி, விஷயத்துக்கு வாங்க."

”திடீர்னு இப்ப அவள் புருஷன் எங்கிருந்தோ வந்து முளைச்சிருக்கான்.”

"அப்புறம்?..."

"கெட்டழிஞ்சு வந்திருக்கான். யாரோ மலாய்க் காரியைக் கல்யாணம் பண்ணிண்டானாம். அவளும் போயிட்டாளாம். நிறையப் பணம் காசோட வந்திருக்கான். மறுபடியும் பார்வதியோட சேர்ந்து வாழப் போறேங்கறான்…"

"பார்வதி என்ன சொல்றா?"

‘ஊர் ஒத்துக்குமா’ன்னு கேட்கிறா."

"நீங்கள்ளாம் என்ன நினைக்கிறேள்?"

"அக்கிரகாரத்துல முக்கியமானவாளெல்லாம் கூடிப் பேசினோம். சில பேர் சேர்த்துக்கலாம்னு அபிப்ராயப்படறா. சில பேர் கூடாதுங்கறா. கடல் கடந்து போனவனை அதுவும் இருபது வருஷம் கழிச்சு வந்திருக்கவனை எப்படி சேர்த்துக்க முடியும்? மாமிசம்கூடச் சாப்பிட்டிருப்பான். ஐாதிப் பிரதிஷ்டம் பண்றதைத் தவிர வேறவழி இல்லேங்கறா. இப்ப அக்கிரகாரம் ரெண்டு கட்சியாப் பிரிஞ்சு நிக்கறது. அதான் உங்களைக் கேட்டு முடிவு பண்ணலாம்னு ரெண்டு கட்சிக்காராளும் சேர்ந்து வந்திருக்கோம்"

"நான் சொல்ற தீர்ப்பை ஏத்துக்க வந்திருக்கேளா, இல்லே, சாஸ்திரம் என்ன சொல்றதுன்னு தெரிஞ்சுண்டு போக வந்திருக்கேளா? “

ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.

"கனபாடிகள் சொல்ற முடிவை ஏத்துக்கலாம்னுதான் வந்திருக்கோம்."

"கடல் கடந்து போனவனுக்கு, அதுவும் இத்தனை வருஷம் கழிச்சு வந்திருக்கான். ஜாதிவிட்டு ஜாதி கல்யாணம் வேற பண்ணிண்டிருக்கான். இதுக்கு பிராயச்சித்தமே கிடையாது. சில பாவங்களுக்குத்தான் பிராயச்சித்தம் உண்டு. இப்படிப் பட்டவாளுக்கு சமூகத்துல அங்கீகாரம் கிடையாதுன்னுதான் சாஸ்திரம் சொல்றது. அதுதான் என் தீர்ப்பும்" என்றார் கனபாடிகள்.

"அப்ப அந்த அம்மா பார்வதியின் வாழ்க்கை சூன்யமாப் போயிட வேண்டியதுதானா?" என்று கேட்டது ஒரு குரல்.

"சாஸ்திரம் என்ன சொல்றது என்று கேட்டேன். சொன்னேன். என் தீர்ப்பையும் சொன்னேன். அப்புறம் உங்க இஷ்டம்" என்றார் கனபாடிகள்.

"நம்ப சமூகம், சமுதாயம் எல்லாம் நல்லபடியா வாழனுங்கறதுக்குத்தானே சாஸ்திரம் சம்பிரதாயமெல்லாம்? இப்படி வாழ்க்கையே அடியோடு நாசமாப் போயிடறதுக்கு ஒரு சாஸ்திரமா? அது நமக்குத் தேவைதானா? அப்படிப்பட்ட சாஸ்திரத்தை மாத்தி அமைக்க வேண்டியதுதானே!"

கனபாடிகளுக்குக் கோபம் பொத்துக் கொண்டது.

"என்ன சொல்றிங்க நீங்க? சாஸ்திரத்தையே மாத்தணுங்கறேளா? பேஷ் ! சாஸ்திரங்கறது உங்க வீட்டு ஈயப் பாத்திரம்னு நினைப்பா? உங்க இஷ்டம்போல அழிச்சு மாத்தறதுக்கு. அது ஒரு பிரமாணம், யுகம் யுகமாய் மாறாமல், மாற்றாமல் இருந்து கொண்டிருக்கிற வேதப் பிரமாணம். சூரியனையும் சந்திரனையும் மாத்தணும்னு சொல்றது எவ்வளவு அபத்தமோ, அவ்வளவு அபத்தம் சாஸ்திரங்களை மாத்தணுங்கறதும். எப்பவோ ஏற்பட்ட சாஸ்திரம் இப்ப நமக்குப் பொருத்தமா யில்லேன்னா, நம்ம இஷ்டத்துக்கு அது வளைஞ்சு கொடுக்கலேன்னா, அதுக்காக மூலத்தையே மாத்திடறதா!"

"ஏன், முடியாதா? கூடாதா?" என்று கேட்டது ஒரு குரல்.

"ஒரு தேசத்துல கடுமையான வெய்யில் தகிக்கிறது. இன்னொரு தேசத்துல தாங்கமுடியாத குளிர் நடுக்கறது. இந்த இரண்டு இடத்துக்குமே சூரியன் பொதுவானவன். அந்தந்த இடத்துக்குக் தகுந்தாப்பலதான் சூரிய வெப்பம் இருக்கணும், அதுக்கு ஏற்ற மாதிரி ஒரு சூரியனைச் சிருஷ்டி பண்ணணும்னு சொன்னா அது எப்படி சாத்தியமில்லையோ, அது மாதிரிதான் சாஸ்திரத்தை மாத்தணுங்கறதும். பூர்வ ஜன்ம பலனை இந்த ஜன்மத்துல அனுபவிக்கிறோம். அது அவரவர்களுடைய பாவ புண்ணியத்துக்கு ஏத்த மாதிரி அமையறது. அதை அனுபவிச்சு தான் தீரணும். சாஸ்திரம் எல்லா யுகங்களுக்கும் பொதுவானது. கால தேச வர்த்தமானத்துக்கு ஏத்த மாதிரி அதை மாத்திண்டிருக்க முடியாது. இது சத்தியம், வேதவாக்கு" என்றார் கனபாடிகள்.

"அப்ப பார்வதிக்கு மறுவாழ்வு கிடையாதுங்கறேள்! அதுதானே உங்க தீர்ப்பு?" என்று ஆவேசமாகக் கேட்டுக் கொண்டு முன்னால் வந்து நின்றார் ஒருவர்.

"என் மீது கோபப்பட்டு என்ன பிரயோஜனம்? நீங்க தானே சாஸ்திரம் என்ன சொல்றதுன்னு என்னைக் கேட்க வந்தேள்? நான் சத்தியத்தைச் சொன்னேன்."

ஆமாம்; உங்க சொந்த விஷயத்துல மட்டும் அக்க சாஸ்திரம் கிடையாதாக்கும்?" என்று கடுக்கன் ஆசாமி ஒருவர் வெடுக்கென்று கேட்டார்.

செருப்பை மிதித்த மாதிரி "ஸ்ஸ்ஸ்ஸ்" என்று கூட்டத்தில் சப்தம் எழுந்தது.

"என்ன சொன்னீங்க?" கனபாடிகள் குரலில் ஒரு ஆக்ரோஷம் தொனித்தது.

"உங்க சொந்த விஷயத்துலே மட்டும் அந்த சாஸ்திரம் கிடையாதான்னு கேட்கிறோம். உங்க பெண் பாகீரதி மாங்கல்யம் இழந்தவதானே?" அவள் மட்டும் தலைமயிரை எடுக்காமல் இருக்கலாமோ? அது சாஸ்திர விரோதமில்லையோ? உங்க சாஸ்திரம் அதுக்கு மட்டும் ஒத்துக்கறதாக்கும். வாங்கய்யா போகலாம். இவரிடம் என்ன பேச்சு?" என்று ஆவேசமாய்ப் பேசிவிட்டுப் புறப்பட்டார் அந்தக் கடுக்கன்.

மற்றவர்களும் புறப்படத் தயாரானார்கள்.

"நாராயண நாராயண" என்று காதைப் பொத்திக் கொண்டார் கனபாடிகள்.

அந்த அக்னிக் கணைகளை தாங்கிக் கொள்ளும் சக்தி அற்றவராய் நெருப்பில் விழுந்த புழு மாதிரி துடித்துப் போனார்.

துடித்துத் துவண்டு, தவித்துத் தடுமாறி இரண்டு கைகளாலும் தலையில் அடித்துக் கொண்டார்.

கிட்டா அவரை ஆதரவாக அணைத்து அழைத்துக் கொண்டு போய் ஊஞ்சலில் உட்கார வைத்தான்.

"மனசை வாட்டிக்காதீங்க" என்றான்.

"சாஸ்திரம் அறிந்தவன், யாகம் செய்தவன், பிராம்மணோத்தமன் என்றெல்லாம் பெயரெடுத்து என்ன பிரயோஜனம்? என்னைப் பார்த்து இப்படிக் கேட்டு விட்டார்களே!" என்று உருகிப் போன கனபாடிகள் தம்மைச் சுதாரித்துக் கொண்டவராய் "உம், சரி பரவாயில்லே; அவா சொல்றதுலேயும் தப்பு இல்லே. அவாளையெல்லாம் உள்ளே அழைச்சுண்டு வா. சாப்பிட்டுவிட்டுப் போகலாம்னு சொல்லு. வீடு தேடி வந்தவர்களைப் பட்டினியோடு அனுப்பக் கூடாது," என்றார்.

அன்றிரவு கனபாடிகள் அவமானத்தால் குன்றிப் போய், மனம் நொந்து தலை குனிந்து பெருமூச்சு விட்டபடி ஊஞ்சலில் உட்கார்ந்திருந்தார். அப்போது பாகீரதி அவர் அருகில் வந்து நின்றாள்.

"என்னாலதானே அப்பா உங்களுக்கு இந்த அவமான மெல்லாம்?"

அவர் வேதனையோடு அவளைப் பார்த்தார்,

அவள் ஒரு தீர்மானத்துக்கு வந்தவள் போல் ஒரு விரக்தியோடு, ஒரு துணிச்சலோடு நிமிர்ந்து நின்றாள்.

"சாஸ்திர விரோதமான, சமூகம் ஏற்றுக்கொள்ளாத இந்தக் கூந்தல் எனக்கு வேணாம். இன்னைக்கு வெள்ளிக் கிழமை. நாளைக்கே இதை…."

மேலே பேசமுடியாமல் அவள் நெஞ்சுக் குழியில் துக்கம் அணை போட்டது.