Chapter 18

கனபாடிகள் தந்த கடிதத்தை மூர்த்தி மெளனமாகவே படிக்கவும், "உரக்கவே வாசிக்கலாம், பரவாயில்லை" என்றார்.

“உரக்கவா? எதுக்கு?" என்று யோசித்துவிட்டு உரக்க வாசிக்கத் தொடங்கினான்.

சங்கர கனபாடிகளுக்கு கிட்டப்பா சாஷ்டாங்க நமஸ்காரம் பண்ணி எழுதிக்கொண்டது –

கலியாணத்துக்குத் தாங்கள் வருவீர்கள் என்று ஆவலோடு எதிர்பார்த்தேன். ஏதோ இக்கட்டான நிலை காரணமாகத் தங்களால் வர முடியவில்லை என்று கிட்டா மூலம் அறிந்து கொண்டேன்.

மூர்த்தி இங்கேயே சப்தரிஷி பாடசாலையில் சேர்ந்து விட்டான். அவனைப் பற்றிய கவலை வேண்டாம். மிக உத்தமமான பையன். சமையல் வேலைக்கு ஆள் தேவை என்று கடிதம் எழுதியிருந்தீர்கள்.

ஆனந்தராவ் என்பவரை அனுப்பியிருக்கிறேன். ரொம்ப சாதுவான மனிதர். நளபாகமாய்ச் சமைப்பார். அவருக்குத் துணையாக மூர்த்தி வருகிறான்.

நிற்க, சிதம்பரத்திலுள்ள தங்கள் சகோதரி கெளரி அம்மாளும் அவள் புருஷனும் இங்கே வந்திருந்தார்கள். ஒரு நல்ல பிள்ளையாகப் பார்த்து சுவீகாரம் எடுத்துக்கொள்ளப் போகிறார்களாம். "உங்க சப்தரிஷி வேதபாடசாலையில் யாராவது பொருத்தமான பையன் இருக்கானா?" என்று கேட்டார்கள்.

"வெண்ணெயை வைத்துக் கொண்டு நெய்க்கு அலைவானேன்? நம்ப மூர்த்தி இருக்கானே, அவனையே தத்து எடுத்துகொள்ளலாமே!" என்று யோசனை சொன்னேன். அவர்களுக்குப் பரம சந்தோஷம். ஒருவேளை நீங்களே இப்படி ஒரு எண்ணம் வைத்திருக்கலாம், மூர்த்தியை சுவீகார புத்திரனாக்கிக் கொள்ளும் அபிப்ராயம் உங்களுக்கே இருக்கலாம் என்று நினைக்கிறார்கள். எதற்கும் உங்களை ஒரு வார்த்தை கேட்டு விட்டுப் பிறகுதான் முடிவு செய்ய வேண்டும் என்று சொல்லி விட்டுப் போயிருக்கிறார்கள். இதுபற்றி அவர்களிருவரும் தங்களிடம் பேசுவதற்கு அச்சப்படுவதால் அவர்கள் சார்பில் நானே இக்கடிதம் எழுதுகிறேன். உங்கள் அபிப்ராயம் தெரிந்த பிறகு தான் மேற்கொண்டு ஆக வேண்டியதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.

அடியேன் ஏதேனும் அதிகப் பிரசங்கித்தனமாக எழுதி யிருந்தால் மன்னிக்க வேண்டுகிறேன்.

இப்படிக்கு,

சாஷ்டாங்க நமஸ்காரங்களுடன்,

கிட்டப்பா.

கனபாடிகள் சற்றுநேரம் கண்களை முடி யோசித்தபின் ஒரு முடிவுக்கு வந்தவராய் ‘ம். அப்புறம்?’ என்று தனக்குத்தானே கேட்டுக்கொண்டு ஈரத் துணியால் உடம்பைத் துடைத்துக் கொண்டார். "ஒரே புழுக்கமாயிருக்குடா ! விசிறி எடுத்துண்டு வந்து கொஞ்சம் வீசறயா?" என்று கேட்டார். மூர்த்தி ஓடிப்போய் விசிறி எடுத்து வந்து வீசத் தொடங்கினான்.

"நீ என்ன நினைக்கிறே மூர்த்தி?" என்று அவனை சம அந்தஸ்தில் உயர்த்தி வைத்துக் கேட்டார் கனபாடிகள்.

"இதல நான் நினைக்கறதுக்கு ஒண்ணுமில்லை. நீங்க எது சொன்னாலும் அதுவே எனக்கு வேத வாக்கு. உங்க இஷ்டப்படி நடந்துக்குவேன்" என்றான்.

"சரி, கெளரி ஆசைப்படறாளாம். அவளுக்கும் புத்திர பாக்கியம் இல்லே. உனக்கு சம்மதம்னா கிட்டப்பாவுக்கு லெட்டர் எழுதித் தரேன். நீ நாளைக்கே புறப்பட்டுப் போகலாம்"

கனபாடிகளுக்குத் தூக்கம் வரும்வரை வீசிக்கொண்டிருந்துவிட்டு அப்புறம்தான் படுத்தான்.

பொழுது விடிந்ததும் ஆற்றங்கரைப் பிள்ளையார் கோவில் ஞாபகம் வந்துவிட்டது அவனுக்கு. ஆற்றையும் கோவிலையும் ஒரு முறை பார்த்துவிட்டு வரவேண்டும் போல் ஆசையாக இருந்தது.

"ஆற்றுக்குப் போய் ஸ்நானம் பண்ணிட்டு அப்படியே பூஜைக்கு ஜலம் கொண்டு வரட்டுமா? கிட்டாகூட ஊரில் இல்லையே!"என்று பாகீரதியிடம் கேட்டான்.

அவள் குடத்தைக் கொண்டு வந்து கொடுத்துவிட்டு "அப்படியே தஞ்சாவூர் போயிடயாட்டயே!" என்று கேலியாகக் கேட்டுச் சிரித்தாள்.

அவன் ஆற்றங்கரை படித்துறையில் போய் நின்று பார்த்த போது அந்த இடம் பாலைவனமாய்க் காட்சி அளித்தது. பசுமையெல்லாம் போய் காய்ந்து கிடந்த கரையோரப் புதர்களை ஆடுகள் மேய்ந்து கொண்டிருந்தன.

ஆற்றுக்கு நடுவே பெரிதாகப் பள்ளம் வெட்டி ஊற்றெடுத் திருக்தார்கள். அந்தத் தேக்கத்திலிருந்து ஓடிய வாய்க்கால் ஒரு பட்டத்தின் வால்போல் தெரிந்தது.

இதே படித்துறையில் அன்று வெள்ளத்தில் சிக்கித் திணறியபோது தன்னைக் காப்பாற்றிய மஞ்சவின் நினைவு தோன்ற ‘பாவம் மஞ்சுவிடம் சரியாகக்கூடப் பேசாமல் வந்து விட்டேன்’. ‘சர்க்கஸ் கம்பெனியில் சேரலாமா?’ என்று அவள் கேட்டபோது அலட்சியமாக ‘அது உன் இஷ்டம்’ என்று பதில் சொல்லிவிட்டு வந்து விட்டேன். ரத்தம் கொடுத்துவிட்டதால் நன்றிக்கடன் தீர்ந்து விட்டதாக நான் நினைத்தது எத்தனை அகம்பாவம். கழைக்கூத்தாடிப் பெண் தான் என்றாலும் அவளுக்குள்ள பண்பும் பெருந்தன்மையும் எனக்கு இல்லையே! என்று எண்ணித் தன்னைத்தானே நொந்து கொண்டான்.

சாவகாசமாகத் தண்ணீரில் உட்கார்ந்துகொண்டு கைகளால் அளையத் தொடங்கினான். பிறகு மல்லாந்து படுத்து அந்த வெதவெதப்பான குளுமையில் நீண்ட நேரம் அமிழ்ந்திருந்த பின் எழுந்தான். அப்புறம் துணிகளை உலர்த்தி, திருநீறு அணிந்து, குடத்தில் நீர் நிரப்பிக் கொண்டதும் கரையேறி கோயிலுக்குப் போனான். பிள்ளையாரை வணங்கிவிட்டு நந்தவனம் சுற்றி பூக்களைத் தேடினான். ஒரே ஒரு நந்தியாவட்டைப்பூ அபூர்வமாய்ப் பூத்திருந்தது ! அதைப் பறித்துக் குடத்து நீரில் போட்டுக் கொண்டு பாடசாலை நோக்கி நடந்தான்.

"கனபாடிகள் என்னை எதுவுமே கேட்காமல் சகஜமாய்ப் பேசுகிறாரே ! கோபமோ வருத்தமோ எதுவுமே முகத்தில் காட்டிக் கொள்ளவில்லையே ! ஒருவேளை எல்லா சமாசாரங்களையும் தெரிஞ்சிண்டுதான் இப்படித் தெரியாததுபோல் இருக்காரோ?" என்று வியந்தான்.

கடிதத்தை அவர் உரக்கப் படிக்கச் சொன்னதற்குக்கூட ஏதாவது உள் அர்த்தம் இருக்க வேண்டும். அவர் மன ஆழத்தை யாராலும் கண்டுபிடிக்க முடியாது என்று எண்ணிக் கொண்டான்.

பூஜை முடிந்து, சாப்பிட்டானதும் கனபாடிகளை நமஸ்கரித்து "ஊருக்கு போயிட்டு வரேன்" என்று சொன்ன போது அவர் உள்ளே போய்ப் பெட்டியைத் திறந்து புத்தம் புது பட்டு வேட்டி ஒன்றை எடுத்து வந்தார்.

இந்தா, பிரம்மசாரிக்கு நாலு முழம் வேட்டி போதும். என்னிடம் இந்த எட்டு முழம் வேட்டிதான் இருக்கிறது. இப்போதைக்கு இதை இரண்டாக மடித்துக் கட்டிக்கொள். என் ஆசீர்வாதம் !" என்றார்.

"இப்போதைக்கு என்றால் அதற்கு என்ன அர்த்தம்?" என்று யோசித்தபடியே பின்கட்டுக்குப் போனான். அங்கே பாகீரதி கொடியில் துணி உலர்த்திக் கொண்டிருந்தாள்.

"போயிட்டு வரேன் பாகீரதி" என்று அவளிடம் சொல்லிக் கொண்டபோது அவள் கண்கள் பனித்திருப்பதைக் கண்டு "வருத்தமா?" என்று கேட்டான்.

"எனக்கு நீ அத்தை பிள்ளை ஆகப்போறயே, அந்த சந்தோஷம் !" என்றாள் பாகீரதி!

"உனக்கெப்படி தெரியும்?"

"ராத்திரி லெட்டரை உரக்கப் படிக்கச் சொன்னாரே, அப்பா! எல்லாத்தையும் கேட்டுண்டுதான் இருந்தேன்" என்றாள்.

"ஒகோ! நீ கேட்கணுங்கறதுக்குத்தான் உரக்கப் படிக்கச் சொன்னார் போலிருக்கு. இப்பத்தான் புரியறது!" என்றான்.

"வந்ததும் வராததுமாக் கிளம்பிட்டயே ! அப்படி என்ன அவசரம்? அந்தக் கூத்தாடிப் பெண் முகம் மறந்து போச்சோ?" என்று குத்தலாய்க் கேட்டாள் பாகீரதி.

"அவள் ரொம்ப நல்ல பெண். நீ நினைக்கிற மாதிரி யெல்லாம் இல்லே" என்று சொல்லிவிட்டு அவசரமாய்க் கிளம்பிவிட்டான்.

தஞ்சாவூர் போய்ச் சேர்ந்ததுமே கனபாடிகள் எழுதித் தந்த கடிதத்தைக் கிட்டப்பாவிடம் கொடுத்தான்.

அதை அவர் பிரித்துப் படித்தார்.

"கிட்டப்பாவுக்கு ஆசீர்வாதம். உன் கடிதம் படித்தேன். எனக்குப் பூரண சம்மதமே. கெளரி விருப்பப்படியே நடக்கட்டும். ததாஸ்து" என்று சுருக்கமாக எழுதியிருந்தார்.

"மூர்த்தி உனக்கு சமாசாரமெல்லாம் தெரியுமோ? கனபாடிகள் சொன்னாரா?" என்று கிட்டப்பா கேட்டார்.

"தெரியும்; உங்க லெட்டரை என்னிடமே கொடுத்துப் படிக்கச் சொன்னார்."

”படிச்சயா?"

"படிச்சேன்."

"கெளரிக்குப் பிள்ளையாகப் போறதுல உனக்குச் சம்மதம் தானே? கனபாடிகளுக்கு என்ன பதில் சொன்னே?"

"கிணத்துல விழச் சொன்னாலும் விழத்தயார்னு சொன்னேன்!"

"எல்லாக் கிணத்துலயும் இப்ப தண்ணியே இல்லாம வறண்டு கிடக்கே, அந்த தைரியமா!" என்று கேட்டுச் சிரித்தார் கிட்டப்பா.

அவனும் சிரித்தான்.

"சரி; கெளரி அத்தைக்கு இன்னைக்கே எழுதிப் போட்டுடறேன். சுபஸ்ய சீக்கிரம் !" என்றார் கிட்டப்பா,

"நான் பாடசாலைக்குப் போகட்டுமா?" என்று கேட்டான் மூர்த்தி.

"கொஞ்சம் இரு. முக்கியமான விஷயம் சொல்ல மறந்துட்டனே ! நேத்து அந்தக் கழைக்கூத்தாடிப் பெண் உன்னைப் பார்க்க வந்திருந்தாள். "என்ன சமாசாரம்?"ணு கேட்டேன். யாரோ சர்க்கஸ்காரனாமே, அவன் அடிக்கடி வந்து அவளை சர்க்கஸ்ல சேரச் சொல்லி தொந்தரவு பண்றானாம். ‘மூர்த்தி சம்மதிச்சாத்தான் சேருவேன்’னு பதில் சொல்லிட்டானாம்.

"அப்படி என்ன உறவு உனக்கும் அந்தக் குடுமிக்காரப் பையனுக்கும்?"னு கேட்டுச் சண்டை போட்றானாம் அவன். அடிக்கடி வந்து ‘அந்தக் குடுமிக்காரப் பையனை ஒழிச்சுக் கட்டிடறேன் பார்’னு கலாட்டா பண்றானாம். குடிகாரனாயிருப்பான் போலிருக்கு மூர்த்தி வந்தால் ஜாக்கிரதையா இருக்கச் சொல்லுங்க, அவருக்கு ஏதாச்சும் ஆயிட்டுதுன்னா அதை என்னால தாங்கிக்க முடியாதுன்னு என்கிட்டே வந்து அழுதாள். யாருப்பா அந்த சர்க்கஸ்காரன்?" என்று கேட்டார் கிட்டப்பா.