Chapter 17

மூர்த்தியைக் கண்டதும் பாகீரதிக்கு ஏதேதோ பேச வேண்டும்போலிருந்தது. பழைய நினைவுகளில் மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் மேலிட்டுப் பேச முடியாமல் தடுமாறினாள்.

"இவர் தஞ்சாவூர் வேதபாடசாலைல சமைச்சிண்டிருந்தார். ஆனந்தராவ்னு பேர். ராவ்ஜினு கூப்பிடுவா. ராயர்னும் கூப்பிடுவா. சமையலுக்கு ஆள் வேணும்னு அப்பா எப்பவோ கேட்டிருந்தாராம். கிட்டப்பா இவருக்குத் துணையாக என்னை அனுப்பி லெட்டரும் எழுதிக் கொடுத்திருக்கார்."

"ஓகோ, அப்படிச் சொல்லு, அதனாலதான் வந்திருக்கேன்னு சொல்லு !" என்று கேலியாகச் சிரித்துக்கொண்டே சொன்னாள் பாகீரதி.

"அப்படித்தான் இருக்கட்டுமே!" என்றான் மூர்த்தி.

“சரி, இப்பவே இவரை சமைக்கச் சொல்லட்டுமா? உனக்கு என்ன பிடிக்கும்னு சொல்லு. அதையே சமைக்கச் சொல்றேன்" என்றாள்.

மூர்த்தி இங்கே இரவு தங்கப் போகிறானா இல்லையா என்பதைத் தெரிந்துகொள்ளவே பாகீரதி தந்திரமாக இப்படி ஒரு கேள்வியைப் போட்டாள்.

"கனபாடிகளைப் பார்த்துப் பேசினப்புறம்தான் தெரியும்" என்றான் மூர்த்தி.

"புதுக் கன்னுக்குட்டியைப் பார்க்கலையே நீ? வா, பார்க்கலாம்" என்று அவனைத் தொழுவத்துக்கு அழைத்துச் சென்றாள்.

கன்றுக்குட்டியின் கழுத்தைக் கட்டிக்கொண்டு ”எப்படி இருக்கு?" என்று கேட்டாள்.

"ரொம்ப அழகா இருக்கு" என்றான்.

“உன்னாட்டம்" என்றாள்.

"கிட்டா இல்லையா? எங்கே போனான்?"

"காஞ்சீபுரம் போயிருக்கான். ரெண்டு நாளாகும் வர. பங்குனி உத்திரம் பார்த்துட்டு வந்துருவான். நீ இன்னைக்கே போகணுமா?"

"தெரியலை, கனபாடிகளைத்தான் கேட்கணும்" என்று பிடிகொடுக்காமல் பேசினான்.

திருக்குறள் புஸ்தகத்துக்கு அட்டை போட்டு அனுப்பி யிருந்தனே, பார்த்தயா?"

"பார்த்தேன். உன் உதவியை என்னைக்கும் மறக்க மாட்டேன். அந்தக் கடனை எப்ப எப்படி திருப்பித் தரப் போறேனோ, தெரியலை."

"அதுக்கென்ன? சந்தர்ப்பம் வராமலா போயிடும்? அப்ப வட்டியும் முதலுமாச் சேர்த்துக் கொடுத்துடு. அது சரி; அட்டைக்குள்ளே வேற ஒண்ணும் பார்க்கலையா?"

"பார்த்தனே!..."

"அதைப் பத்தி ஒண்ணுமே பேசமாட்டேங்கறயே!"

"எனக்கு பயம்மா இருக்கு…" என்றான்.

"என்ன பயம்? ஏன் பயப்படறே? எதுக்கு பயம்?"

"உன்னை நினைச்சுத்தான்…"

"என்னைப் பிடிக்கலையா உனக்கு?"

"பிடிக்கிறது…"

"அப்புறம் என்ன?"

"உன் அளவு தைரியம் எனக்கில்லே. உன்னாலதான் என் பிரம்மசரியமே போச்சு. நீ கெட்டதுமில்லாம என்னையும் கெடுத்துட்டயே!"

"நான் கெடுத்தனா! நீயும் சம்மதப்பட்டுதானே கெட்டுப் போனே?"

"அந்த மாதிரி ஒரு நிலைல, உன் நிர்ப்பந்தத்துல நான் புத்தி மயங்கிப் போயிட்டேன்."

"இது ரெண்டு பேருமே சேர்ந்த செய்த குற்றம்தான். இதுக்கு நான் மட்டும்தான் காரணம்னு சொல்லாதே! நீயும்தான்! இதை நீ அப்பவே யோசிச்சிருக்கணும்!"

”எப்ப?”

"உன் எச்சிலை நாள் விழுங்கறப்பவும், என் எச்சிலை நீ விழுங்கறப்பவும்…"

”சே!”

உதடுகளை உள்ளங்கையால் துடைத்துக் கொண்டான்.

இச்சமயம் கனபாடிகள் முன்கட்டிலிருந்து "மூர்த்தி !" என்று குரல் கொடுக்கவே "இதோ வந்துட்டேன் !" என்று சொல்லிக் கொண்டே ஓடினான்.

"மூர்த்தி ! உன்கிட்ட நிறையப் பேசணும். முக்கியமான விஷயம். ராத்திரி நீ இங்கயே என் கூடவே படுத்துக்க" என்றார் கனபாடிகள்.

"அம்மாடி, பாகீரதியிடமிருந்து தப்பினேன்" என்று எண்ணிக் கொண்டான்.

அணில் குட்டி ஒன்று கனபாடிகளைச் சற்றிச் சுற்றி ஓடிக் கொண்டிருக்தது.

"ராமா, இங்க வாடா!" என்று அதைச் செல்லமாக அழைத்தார். அது ஓடி வந்து உரிமையோடு அவர் தோள் மீது ஏறி விளையாடியது.

"நீ போனப்புறம் இதுதான் எனக்கு செல்லப்பிள்ளை, இதை ஆசையோட வளர்க்கிறேன். பால் கொடுக்கிறேன். "ராமா, ராமா"ன்னு தினம் நூறு தடவை கூப்பிட்றேன். அதனால அந்த ராமன் பேரைச் சொல்ற புண்ணியம் கிடைக்கிறதே, அந்த ஒரு பலன்தான்! ஆனா இந்த அணிப் பிள்ளை கொள்ளி போடறதுக்கு உதவுமா? எனக்குச் சொந்தமா ஒரு பிள்ளை வேணாமா?" என்று வருத்தத்துடன் பெருமூச்செறிந்தார்.

கனபாடிகளின் பேச்சு மூர்த்தியைக் கண்கலங்கச் செய்தது.

"எனக்கு வயசாயிட்டுது, மூர்த்தி ! நான் இன்னும் ரொம்ப நாளைக்கு உயிரோட இருப்பேன்னு தோணலை. மனசுல எத்தனையோ விசாரங்கள். வெளியில சொல்லிக்க முடியாத துக்கங்கள். இன்னைக்குக் காலைலகூட அக்கிரகாரத்து பிராம்மணாளெல்லாம் கும்பலா வந்து ‘மழை இல்லாம ஊரே கஷ்டப்படறது. நீங்க வந்து விராடபர்வம் வாசிக்கணும்னு கேட்டுண்டா. நான் முடியாதுன்னுட்டேன். அவா என்னை பாய்காட் பண்ணப்போறதா பேசிண்ட சமாசாரமெல்லாம் உனக்குத் தெரிஞ்சிருக்கும். கிட்டா சொல்லியிருப்பானே! அவா வந்து போனதுலேந்து மனசே சரியாயில்லே. லேசா ஜூரம் வேற வீசறது. ராத்திரி எனக்கு எதுவுமே வேணாம். ரவாக் கஞ்சி மட்டும் பண்ணாப் போதும்னு சொல்லிடு. போ, பாகீரதியிடம் சொல்லிட்டு வந்துடு!" என்றார்.

மூர்த்தி சமையல் அறைக்குப் போய் "கனபாடிகளுக்கு உடம்பு சரியில்லை. "ராத்திரி ஆகாரம் எதுவும் வேண்டாம். ரவாக் கஞ்சி மட்டும் போதும்"னு சொல்லிட்டு வரச் சொன்னார்" என்றான்.

" நல்லவேளை ரவையும் சர்க்கரையும் தனித்தனியா டப்பாவில வச்சிருந்தேன். பூனை உருட்டி, அத்தனையும் கீழே கொட்டி, ரெண்டும் ஒண்ணாக் கலந்து போச்சு. அதைப் பிரிச்செடுக்க முடியாதே. அத்தனையும் வீணாப் போயிடுமே, என்ன பண்ணலாம்னு யோசனை பண்ணிண்டிருந்தேன். வழி கண்டு பிடிச்சாச்சு ரவாக் கஞ்சியாப் பண்ணிடலாமே! ஆக, இந்த உலகத்துல எது கெட்டுப் போனாலும் அதையே நல்லதா மாத்திடறதுக்கும் ஒரு வழி இல்லாமப் போகலேன்னு தெரியறது" என்றாள்.

பாகீரதி என்ன சொல்கிறாள், எதைக் குறிப்பிட்டுச் சொல்கிறாள் என்று மூர்த்திக்கு விளங்கி விட்டது!

"சரி, அப்பாவுக்கு ரவாக் கஞ்சி. உனக்கு என்ன பிடிக்கும்னு சொல்லு, ராவ்ஜியை பண்ணச் சொல்றேன்" என்றாள் பாகீரதி.

"எனக்குத் தனியா ஒண்ணும் வேணாம். பாடசாலைப் பசங்களோடு சேர்ந்து சாப்பிட்டு ரொம்ப நாளாச்சு, அவா என்ன சாப்பிட்றாளோ அதுவே போதும் " என்றான்.

"கிட்டப்பா லெட்டர் கொடுத்தனுப்பியிருக்கார்னு சொன்னயே? என்ன எழுதியிருக்கார் தெரியுமா?"

"எனக்கெப்படி தெரியும்?"

மூர்த்தி எதற்குமே பிடிகொடுக்காமல் பேசியது பாகீரதிக்குச் சற்று எரிச்சலாயிருந்தது.

"நீ ரொம்ப மாறிட்டே மூர்த்தி !நான் உன்னையே நினைச்சு நினைச்சு உருகிண்டிருக்கேன். நீயானால் என்கிட்ட அக்கறை இல்லாம அலட்சியமாப் பேசிண்டிருக்கே, என் மனசை நீ புரிஞ்சுக்கலை. உன் மாதிரி என்னால உறவை வெட்டிக்க முடியலை. உனக்கு யாரோ சொக்குப் பொடி போட்டு நன்னா மயக்கி வெச்சிருக்கா. அந்தக் கழைக்கூத்தாடிப் பெண்தானே?" என்று அழ ஆரம்பித்து விட்டாள் பாகீரதி.

”கனபாடிகள் எனக்காகக் காத்துண்டிருப்பார். நான் போறேன்" என்று சொல்லிவிட்டு நழுவினான் மூர்த்தி.

அன்றிரவு அழுக்கு கடிகாரத்தில் மணி பதினொன்று அடிக்கும் வரை கனபாடிகள் பேசிக்கொண்டேயிருந்தார்.

"மூர்த்தி! நீ என்னை மறந்தாலும், யாரை மறந்தாலும் வேதத்தை மறக்காம இருக்கயே, அதை நினைச்சு ரொம்ப பெருமைப்படறேன். வேதம்தான் நமக்கெல்லாம் வழிகாட்டி. அந்த ஒளி விளக்கை நாம அணையவிடக் கூடாது. ரிஷிகள் தங்கள் தபோ பலத்தின் சக்தியால் வான வெளியில் சப்தரூபமாக உலவும் வேத மந்திரங்களை கிரகித்து இந்த பிரபஞ்சத்துக்கு வழங்கியிருக்கா. ஆனா இந்த மந்திரங்களை உண்டாக்கியவா ரிஷிகள் அல்ல. அவர்கள் கிரகித்துத் தந்தவர்கள்தான். வேதம் அனாதியானது, அதற்கு மூல புருஷன் யாரும் கிடையாது. ‘அபெளருஷேய’ என்றுதான் சொல்வார்கள்”.

காலம் காலமாக ஒலி வடிவமாகவே காப்பாற்றப்பட்டு வரும் வேதத்தைப் போற்றி வளர்ப்பவர்களைத்தான் ‘வேதவித்து’ என்கிறார்கள். வித்துக்கள் இல்லையென்றால் பயிர்கள் இல்லை. பயிர்கள் தழைக்க வித்துக்கள் அவசியம். அதைப்போல வேத வித்துக்கள் நசித்துப் போனால் வேதமே தழைக்காமல் போய் விடும். நீ இந்தப் புனிதமான பணியைப் பாதில விட்டுவிடாதே" என்றார்.

மூர்த்தி உணர்ச்சி வசப்பட்டான்.

“மனதிலே பூட்டி வைத்துள்ள ரகசியங்களையெல்லாம் அக்கணமே அவர் எதிரில் கொட்டிவிடலாமா?" என்று யோசித்தான். ஆனாலும் சொல்லாமல் கட்டுப்படுத்திக் கொண்டான்.

"மூர்த்தி, என் அந்திம காலத்துக்கு உதவியாக உன்னை என் புத்திரனாக ஸ்வீகாரம் எடுத்துக்கொள்ள வேண்டுமென்று எண்ணியிருந்தேன். உன் அப்பா உன்னை என்னிடம் அழைத்து வந்து ஒப்படைத்தபோதே இதற்கு அவருடைய சம்மதத்தையும் பெற்றிருந்தேன். ‘இனி அவனுக்கு மாதா, பிதா, குரு, தெய்வம் எல்லாம் நீங்கதான்’ என்று சொல்லிட்டுப் போனார். இதை உன்னிடம் சமயம் வாய்க்கும்போது சொல்லி உன்னை என் புத்திரனாக்கிக்கொள்ளும் காலத்தை எதிர்நோக்கியிருந்தேன். ஆனா இப்ப கிட்டப்பா எழுதியுள்ள கடிதத்தைப் படிச்சப்புறம் அந்த எண்ணத்தை அடியோட மாத்திக்கொண்டு விட்டேன்" என்று கூறியவர் "இந்தா, கிட்டப்பா என்ன எழுதியிருக்கார்னு நீயே படிச்சுப்பார்" என்று அந்தக் கடிதத்தை மூர்த்தியிடம் தந்தார் கனபாடிகள்.