Chapter 14

வெயிலின் உக்கிரம் உடம்பெல்லாம் வியர்க்க, தெருப் புழுதி கால்களை நெருப்பாய்ச் சுட ‘மஞ்சுவுக்கு என்ன ஆயிற்றோ?’ என்ற கவலையில் ஒரு ஆவேசத்தோடு ஓடினான் மூர்த்தி. கால்கள் கொப்பளித்து நடக்க முடியாமல் தத்தளித்த போது வைதிக சாஸ்திரி ஒருவர் சைக்கிளில் வந்து நின்றார். சாதுவாய்,ஒல்லியாய், ருத்திராட்சமாலை அணிந்திருந்தார்.

"தம்பி! எங்க போயிண்டிருக்கே, இந்த கொளுத்தற வெய்யில்ல? கல்யாண வீட்ல பார்த்தனே உன்னை !" என்றார்.

"பெரிய ஆஸ்பத்திரிக்குப் போறேன். அங்க ஒருத்தரைப் பார்க்கணும்" என்றான் மூர்த்தி.

“ஏறிக்கோ பின்னால. நான் கொண்டு விட்டுடறேன்" என்றார்.

மூர்த்தி தயங்கியபடி "வேணாம், பெரியவாளுக்கு சிரமம் !" என்றான்.

"பரவாயில்ல, ஏறிக்கோ."

ஆஸ்பத்திரியில் கொண்டு விட்டார்.

"உங்க உதவியை மறக்க மாட்டேன்" என்று கூறி நன்றியோடு நமஸ்கரித்தான்.

ஆஸ்பத்திரி வராந்தா பெஞ்ச்சில் மஞ்சுவின் தகப்பன் கவலையே உருவாக உட்கார்ந்திருந்தான். மூர்த்தியைக் கண்டதும் துக்கம் பீறிட அழ ஆரம்பித்து விட்டான்.

"அழாதீங்க. மஞ்சு எப்படி இருக்கா?"

"என்னை இங்கயே உட்காரச் சொல்லிட்டு உள்ளே தூக்கிட்டு போனாங்க. ரொம்ப நேரமாச்சு. ஒண்ணுமே சொல்ல மாட்டேங்கறாங்க."

"இங்கயே இருங்க. நான் போய்ப் பார்த்துட்டு வரேன்" என்று ஓடினான்.

எமர்ஜன்ஸி வார்டுக்குப் போய் கட்டில் கட்டிலாக மஞ்சுவைத் தேடினான்.

குறுக்கே வந்த நர்ஸ் ஒருத்தி "யாரைத் தேடுது தம்பி? “ என்று கேட்டாள்.

"வயத்துலே கத்தி பாஞ்சுட்டுதே…"

“ஓ, அந்தக் கேஸா? ஆபரேஷன் தியேட்டர்ல இருக்குது. தையல் போட்டுக்-கிட்டிருக்காங்க, கத்தி ஆழமாப் பாஞ்சிருக்கு. கொஞ்ச நேரத்துல ஸ்ட்ரெச்சர்ல கொண்டு வருவாங்க… வெய்ட் பண்ணு."

"உயிருக்கு ஆபத்து இல்லையே? பிழைச்சுடுவளா?"

"பெரிய டாக்டர் வருவார். கேளு….

காத்திருந்த சில நிமிடங்கள் சில யுகங்களாய் நீண்டன.

கடைசியில், மஞ்சுவை ஸ்ட்ரெச்சரில் தூக்கி வந்து ஏழாம் நம்பர் கட்டிலில் கிடத்தினார்கள்.

அவள் கண்களை மூடி மயக்க நிலையில் இருந்தாள்.

டாக்டர்கள் மூன்று பேர் பின் தொடர்ந்து வந்தார்கள்.

"பயமில்லையே டாக்டர் !" என்று பெரிய டாக்டரை அணுகிக் கேட்டான் மூர்த்தி.

"நிறைய ரத்தம் சேதாரமாயிருக்கு. ஸீரியஸ் கேஸ்தான். நீ யார்?" என்று கேட்டுவிட்டு, ‘உனக்கும் இவளுக்கும் என்ன சம்பந்தம்?’ என்பது போல் பார்த்தார்.

"அவளுக்குத் தெரிஞ்சவன், நான் ரத்தம் தரலாமா?!" என்று கேட்டான்.

மூர்த்தியின் ரத்தத்தைப் பரிசோதித்தார்கள். பொருந்துகிறது என்று தெரிந்ததும் ஏராளமான ரத்தத்தை அவனிடம் உறிஞ்சிக்கொண்டார்கள்.

ஆறுமணி வரை காத்திருந்து மஞ்சு கண் விழித்துப் பார்த்த பிறகே மூர்த்தி கலியாண வீட்டுக்குத் திரும்பினான்,

இருட்டாகிவிடவே கலியாண வீட்டுப் பந்தலில் காஸ்லைட் எரிந்து கொண்டிருந்தது. உடலும் உள்ளமும் சோர்ந்து, கண்கள் சிவந்து வாடிய முகத்துடன் காணப்பட்டான்.

அவனைப் பார்த்ததும் --

"ஏதோ நடந்திருக்கிறது" என்பதை ஊகித்துக்கொண்ட கிட்டா, "என்ன ஆச்சு மூர்த்தி ! ஏன் இவ்ளோ லேட்? மூணு மணிக்கே வந்துடுவேன்னு பார்த்தேன். உன் விஷயமா மாமாட்ட கூடப் பேசி வெச்சிருக்கேன். அவரும் "சரி வரட்டும், முகூர்த்த நாளாயிருக்கு. இன்னைக்கே சேர்த்துடலாம்னு சொல்லி பாடசாலை கனபாடிகளைக் கூட இங்க வரச் சொல்லியிருந்தார். கனபாடிகள் இத்தனை நேரம் உனக்காகக் காத்துண்டிருந்தார்" என்றான் கிட்டா.

"மாமா எங்க போயிருக்கார்?"

"மாடில சீட்டாடிண்டிருக்கார்."

"மஞ்சுக்கு வயத்துல கத்தி பாஞ்சு ஆஸ்பத்திரில படுத்திண்டிருக்கா. இத்தனை நேரமும் அங்கதான் இருந்துட்டு வரேன். ‘ரத்தம் கொடுத்தா மஞ்சுவைப் பிழைக்க வெக்கலாம்’னு பெரிய டாக்டர் சொன்னார். என் ரத்தம் பொருத்தமாயிருந்தது. கொடுத்துட்டு ஆறு மணி வரைக்கும் அங்கயே உட்கார்ந்திருந்தேன். அப்புறம்தான் கண் முழிச்சுப் பார்த்தா, என்னைக் கண்டதும் விக்கி விக்கி அழ ஆரம்பிச்சுட்டா. ‘கவலைப்படாதே, நான் கவனிச்சுக்கறேன்’னு ஆறுதல் சொல்லிட்டு அவ அப்பாவையும் அங்கயே இருக்கச் சொல்லிட்டு வந்திருக்கேன். பாவம், ரொம்பப் பரிதாபமாயிருக்குடா அவ நிலமை. நினைச்சுப் பார்க்கவே கஷ்டமாயிருக்கு!"

"உயிருக்கு ஒண்ணும் பயமில்லையே? பிழைச்சுடுவாளோன்னோ!"

"பயமில்லேன்னுதான் டாக்டர் சொல்றார். இன்னும் நிறைய ரத்தம் செலுத்தணுமாம். நாலு நாளைக்கு ஆஸ்பத்திரிலயே தான் இருக்கணுமாம்."

"நீ என்ன பண்ணப் போறே?"

"அப்பப்ப போய்ப் பார்க்கணும். என் உயிரைக் காப்பாத்தினவளாச்சே! நன்றிக்கடன் பட்டிருக்கனே! அந்தக் கடனைத் தீக்கறதுக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைச்சுது. என் ரத்தத்தைக் கொடுத்து அவளைப் பிழைக்க வெச்சுட்டேன். அந்த வகையில ரொம்ப சந்தோஷமா திருப்தியாயிருக்கு…"

"ஏன் ஒரு மாதிரி விந்தி நடக்கறே?"

"மத்தியானம் கொதிக்கிற வெயில்லே நடந்தப்போ கால் கொப்புளிச்சுப் போச்சு…"

"மாமா ஏதாவது ‘ஆயிண்ட்மெண்ட்‘ வெச்சிருப்பார், வா, கேட்டுப் பார்க்கலாம்."

மாமாவிடம் போனார்கள். அவர் சீட்டாட்டத்தில் மும்மரமாக இருந்தார்.

மரியாதையாக மூர்த்தி கொஞ்சம் தள்ளியே நின்றான்.

"மூர்த்தி வந்துட்டான். வெயில்ல செருப்பில்லாம நடந்திருக்கான், கால் கொப்புளிச்சட்டுதாம்" என்றான் கிட்டா.

“செருப்பு போட்டுண்டு நடக்கறதுக்கு என்ன?" என்று மூர்த்தியைப் பார்த்தார் மாமா.

"வசதி இல்லையே !" என்றான் கிட்டா.

"அதுக்கென்னடா வசதி ! கலியாணத்துக்கு வந்தவா கழட்டிப் போட்ட செருப்பிலே எதையாவது மாட்டிண்டு போக வேண்டியதுதானே!" என்றார்.

"ரொம்ப எரிச்சலாயிருக்காம். ஏதாவது ஆயிண்ட் மெண்ட் இருக்கா, மாமா?"

"அதெல்லாம் ஒண்ணும் வேணாண்டா, துரங்கப் போறதுக்கு முன்னால தேங்கா எண்ணெயைத் தடவிண்டு தூங்கச் சொல்லு, கார்த்தால சரியாப்போயிடும். இத்தனை நேரமா எங்க போயிருந்தான்?"

"ஆஸ்பத்திரியில யாரோ தெரிஞ்சவாளைப் பாக்கப் போயிருக்கான். போன இடத்துல லேட்டாயிடுத்தாம்!"

"யார் அது? சரி, அப்புறம் பேசிக்குவோம். முதல்ல அவனை கீழே அழைச்சுண்டுபோ, ஏதாவது சாப்பிடச் சொல்லு, களைச்சாப்ல தெரியறான், பாவம்"

"என்ன சாப்பிட்றே மூர்த்தி?" என்று கேட்டான் கிட்டா.

"ஸ்நானம் பண்ணி சந்தியா வந்தனத்தை முடிக்காம பச்சைத் தண்ணிகூடக் குடிக்கமாட்டேன். இதோ வந்துடறேன் என்று ஆற்றங்கரைக்குப் புறப்பட்டான். அங்கே போய், படிக்கட்டில் உட்கார்ந்து தண்ணீரில் கால்களை நீட்டித் துழாவினான். எரிச்சலுக்கு இதமாக இருந்தது. மீன்கள் குத்தவே கால்களை எடுத்துக் கொண்டான்.

பிறகு, ஸ்நானம் செய்து, ஜபம் முடித்து மஞ்சுவுக்காக மனமுருகிப் பிரார்த்தனை செய்தபின் கலியாண வீட்டுக்குத் திரும்பினான்.

இரண்டு நாளைக்கெல்லாம் மஞ்சுவும் ஆஸ்பத்திரியிலிருந்து வந்து விட்டாள். ’ஒரு மாத காலம் படுக்கையிலேயே இருக்க வேண்டும்’ என்று ஆஸ்பத்திரியில் நிபந்தனை போட்டிருந்தார்கள்.

மூர்த்திதான் குதிரை வண்டி ஏற்பாடு செய்து, புல் மெத்தைபோட்டு, மஞ்சுவைப் பழையபடி சத்திரத்தில் கொண்டு சேர்த்தான்.

"தினம் என்னை வந்து பார்ப்பியா? மறந்துடமாட்டயே?" என்று துக்கம் பொங்கக் கேட்டாள் மஞ்சு.

"எனக்கு உயிர் தந்தவளாச்சே நீ! உன்னை மறப்பனா?" என்றான் மூர்த்தி.

மாமா சிபாரிசின் பேரில் மூர்த்தியைத் ‘தஞ்சாவூர் ஸப்தரிஷி வேத பாடசாலை’யில் சேர்த்துவிட்டு கலியாணம் முடிந்த மறுநாளே கிட்டா ஊருக்குப் புறப்பட்டு விட்டான்.

"மாமா, முர்த்தியை கவனிச்சுக்குங்க. ரொம்ப நல்லவன்" என்றான் கிட்டா.

"அவனைப் பத்தி எனக்கு நிறையவே தெரியும்டா. நீ கவலைப்படாம போயிட்டு வா" என்றார் மாமா.

கிட்டாவுக்கு ஆச்சரியமாயிருந்தது. ‘மாமாவுக்கு நிறையவே தெரியுமாமே! எப்படி?’ என்று யோசித்தான்.