Chapter 16
அப்பா, கமலா காஞ்சீபுரம் போறாளாம்!" என்று சொல்லிக் கொண்டே வந்தாள் பாகீரதி.
"ஏன்? என்ன அவசரமாம் அவளுக்கு?" என்று கேட்டார் கனபாடிகள்.
"வந்து ஒரு மாசத்துக்கு மேல ஆறதே! இத்தனை நாள் தங்கியிருந்ததே அதிசயம்!"
"வாஸ்தவம்தான் அவள் எங்க இப்போ?"
"அம்புலுவைக் குளிப்பாட்டப் போயிருக்கா. மத்தியானம் பஸ்ஸுக்கே போகப் போறாளாம்."
"கிட்டாவையும் காணலையே?"
"தோட்டத்துலேந்து கொஞ்சம் கத்தரிக்கா பறிச்சிண்டு வரச் சொன்னேன். கமலா போறப்போ கொடுத்தனுப்பலாம்னு. மழை இல்லாம தோட்டமே வறண்டு கிடக்கு."
“அத பார், அக்கூ பட்சி கத்தறது. அது கத்தினா மழை வரும்னு சொல்லுவா."
"அது தினம்தான் கத்தறது. ஆனா அந்த மழைக்குத்தான் காது கேட்கலை! இப்படியே காஞ்சுதானா பயிர் பச்சையெல்லாம் வாடவேண்டியதுதான். தாது வருஷத்துப் பஞ்சம்னு சொல்வாளே, அந்த மாதிரி ஆயிடுமோ, என்னவோ?" என்றாள் பாகீரதி.
"உலகத்துல அக்கிரமம் அதிகமாயிடுத்து. அதான்" என்றார் கனபாடிகள்,
கமலா வந்தாள்,
"காஞ்சீபுரம் போறயாமே? போயிட்டு வா. ஒன்பது பத்தரை ராகுகாலம், அதுக்கப்புறமா புறப்படு. துணைக்கு யாரு?" என்று கேட்டார் கனபாடிகள்.
"நொண்டி கிட்டா தான்…" என்றாள் கமலா.
“அங்கஹீனமானவாளை நொண்டி, கூனன், குருடன்னு சொல்லக் கூடாது. அவா மனசு கஷ்டப்படும். அது பாவமில்லையா? கிட்டாவுக்குச் சின்ன வயசுல இளம்பிள்ளை வாதம் வந்து கால் ஊனமாயிடுத்து, ஆனாலும், அவன் மாதிரி யாரால வேகமா நடக்க முடியும்?"
மூட்டை முடிச்சுகளைக் கொண்டு போய்த் திண்ணையில் வைத்துவிட்டு, சவாரி வண்டி அழைத்து வரப்போனான். கிட்டா.
பாகீரதி உள்ளே போயிருந்த சமயம் பார்த்து கமலா அப்பாவின் காதில் கிசுகிசுத்தாள்:
"அப்பா, நான் சொன்னதெல்லாம் ஞாபகம் இருக்கட்டும். ஏதோ நடந்திருக்கு, ஆனா எதையும் தீர்மானிக்க முடியலை. அவசரப்பட்டு எந்த முடிவுக்கும் வந்துடாதீங்க!"
பாகீரதி கொண்டு வந்த குங்குமத்தை நெற்றியில் இட்டுக் கொண்ட கமலா, "வரேன் பாகீரதி ! ஒரு மாசமா சேர்ந்து இருந்துட்டு இப்ப பிரியறதுக்கு கஷ்டமாயிருக்கு" என்று சொல்லும்போதே கமலாவுக்கு துக்கம் தொண்டையை அடைத்தது.
"பஸ்ஸுக்கு நேரமாச்சு, புறப்படு" என்று துரிதப்படுத்திய கிட்டா மூட்டைகளை வண்டியில் ஏற்றினான். பாடசாலைப் பிள்ளைகள் கும்பலாக வாசலுக்கு வந்து வழி அனுப்பி வைத்தார்கள். எல்லாருக்கும் கமலா காசு கொடுத்தாள்.
அவள் புறப்பட்டுப் போனதும் பாடசாலையே வெறிச்சோடி விட்டது.
கனபாடிகள் ஒரு சூன்யமான நிலையில் உள்ளே போகப் பிடிக்காமல் திண்ணையிலேயே சாய்ந்துகொண்டார்,
புழுக்கம் அதிகமாகியிருந்தது. எழுந்துபோய் ஆகாசத்தைப் பார்த்தார். வடமேற்கில் இருண்டிருந்த ‘கருமேகம்’ இப்போது முழுமையாய்க் கரைந்து போயிருந்தது, மரங்களில் சருகுகள் இங்கொன்று அங்கொன்றாய் உதிர்ந்து கொண்டிருந்தன. அக்கூ பட்சி மட்டும் பிடிவாதமாக இன்னமும் கத்திக் கொண்டிருந்தது.
இச்சமயம் ஏழெட்டு பிராம்மணர்கள் கூட்டமாக வந்து கனபாடிகளைப் பார்த்து கைகூப்பி வணங்கினார்கள்.
"இந்த பதைபதைக்கிற வெயில்ல எல்லாருமா எங்க இவ்வளவு தூரம் ?" என்று இழுத்தாற்போல் கேட்டார் கனபாடிகள்.
மழையே இல்லாம ஏரி குளமெல்லாம் வறண்டு போச்சு, பயிர் பச்சையெல்லாம் பாழாப் போயிடும் போல இருக்கு, ஆடு மாடெல்லாம் ஒவ்வொண்ணா செத்துண்டிருக்கு. நீங்கதான் காப்பாத்தணும்" என்றார்கள்.
”நான் என்ன பண்ண முடியும்?" என்று கேட்டார் கனபாடிகள்.
"உங்க வாயால விராடபர்வம் வாசிச்சா போதும் ! மழை கொட்டு கொட்டுன்னு கொட்டிடுமே!" என்றார்கள்.
"விராட பர்வம் யார் வாசிச்சாலும் மழை வரும் ! அந்தக் கதையின் மகிமை அப்படி" என்றார் கனபாடிகள்.
"இருக்கலாம். ஆனா உங்க மாதிரி யாகம் பண்ணவா, சாஸ்திரம் படிச்சவா, வேதம் ஒதினவா வாயால சொன்னா அதனுடைய மகிமையே தனி" என்றார்கள்,
"நீங்கள்ளாம் கொஞ்ச நாளைக்கு முன்னால எங்கிட்ட சாஸ்திர விளக்கம் கேட்க வந்தப்போ நான் சொன்ன தீர்ப்பு உங்களுக்குப் பிடிக்கல. அதுக்காக என் மேல கோபப்பட்டு என்னையே பாய்காட் பண்ணப் போறதாப் பேசிண்டேளாம். நான் சாஸ்திரம் படிச்சவன் வேதம் ஒதினவன் என்பதெல்லாம் உங்களுக்கு அப்பத் தெரியாமப் போச்சு. இப்ப மழை வேணுங்கறப்ப மட்டும் தெரியறது இல்லையா? தயவுபண்ணி என்னை மன்னிச்சடுங்க. என்னை பாய்காட் பண்றேன்னு சொன்ன உங்களை இப்ப நான் பாய்காட் பண்றேன். விராட பர்வம் வாசிக்கறதுக்கு வேற ஆளைப்பாருங்க. என்னால முடியாது" என்று கோபமாகச் சொல்லிவிட்டு எழுந்தார்.
"அப்படியா சொல்றேள்? முடிவான வார்த்தைதானா?" என்று கொஞ்சம் கோபமாகவே குரல் கொடுத்தார் ஒருவர்.
"அதான் சொல்லிட்டனே! நான் வாசிக்கப் போறதில்லை, முடிவாத்தான் சொல்றேன்."
"சரி, வாங்கய்யா போகலாம். அவர்தான் சொல்லிட்டாரே! அப்புறம் என்ன? அடுத்தாப்பல நாம செய்ய வேண்டியதைச் செஞ்சுக்குவம்" என்றார் இன்னொருவர்.
"வெய்யில் வேளையில வந்திருக்கீங்க. தாகத்துக்கு ஏதாவது சாப்பிட்டுவிட்டுப் போங்க" என்றார் கனபாடிகள்.
"உங்க வீட்ல இனி பச்சைத் தண்ணிகூடக் குடிக்க மாட்டோம்; ஆமாம், நாங்க வரோம்" என்று அத்தனை பேரும் விறைப்பாகப் புறப்பட்டார்கள்.
"விராட பர்வம் வாசிக்கறதுக்கு மட்டும் நான் வேணுமோ? ஊரார்னா இந்த பிராம்மணாள் மட்டும்தான் ஊராரா? குடியானவாளெல்லாம் வரலையே ! அவாதானே பயிர் பண்றவா? அவாளும் சேர்ந்து வந்து கேட்டிருந்தா, நான் ஒத்துண்டிருப்பேன். எதுக்காக இந்த பிராம்மணாள் மட்டும் தனியா ஒதுங்கி வந்து கேட்கணும். இதல ஏதோ உள்நோக்கம் இருக்கு !" என்று சந்தேகப்பட்டார் கனபாடிகள்
அன்புள்ள அத்தைக்கு….
பின்கட்டுத் தாழ்வாரத்தில் அமர்ந்து பேனாவை உதறி கௌரி அத்தைக்குக் கடிதம் எழுதிக் கொண்டிருந்தாள் பாகீரதி.
திடீரென்று பாடசாலைப் பிள்ளைகள் "அதோ மூர்த்தி வந்துட்டான்" என்று உற்சாகம் பொங்கக் கூவினார்கள்
"யாருடா? நம்ப மூர்த்தியா" என்று ஆவலோடு கேட்டுக் கொண்டே வாசல் பக்கம் பார்த்தார் கனபாடிகள்.
மூர்த்தியும், அவனோடு கூனல் விழுந்த ஆசாமி ஒருவரும் உள்ளே வராமல் வாசலிலேயே தயங்கித் தயங்கி நின்றனர்.
"உள்ளே வாடா! வழி தெரிஞ்சுதா உனக்கு ! தஞ்சாவூர்லேந்தா வறே? இவர் யாரு?" என்று எதிர்பாராத மகிழ்ச்சியில் திக்குமுக்காடினார் கனபாடிகள்.
வெட்கமும், அச்சமும், குற்ற உணர்வும் மூர்த்தியைத் தலைகுணிய வைத்தன.
சாஷ்டாங்கமாய் அவர் காலில் விழுந்து நமஸ்கரித்து, "என்னை மன்னிச்சுடுங்கோ! உங்ககிட்ட சொல்லிக்காமப் போனது மகர பெரிய தப்பு. உங்க வாயாலே மன்னிச்சேன்னு சொன்னாத்தான் என் மனசு ஆறும்" என்றான் மூர்த்தி.
"எனக்குத் தெரியும், நீ எந்தத் தப்பும் பண்ண மாட்டேன்னு. ஏன் சொல்லிக்காமப் போனே? எதுக்கு இங்க மறுபடியும் வரமாட்டேங்கறே? “ என்றெல்லாம் உன்னை நான் கேட்கப் போறதில்லே. உன் பேரில் எனக்கு வருத்தமோ கோபமோ கிடையாது. உன் இஷ்டப்படியே நீ தஞ்சாவூர்லயே படி, எங்க இருந்தாலும் வேதத்தை மறக்காதே. அவ்வளவுதான் நான் வேண்டுவது" என்றார்.
“வெள்ளிக்கடை கிட்டப்பா இந்த லெட்டரை உங்கட்ட கொடுக்கச் சொன்னார்" என்று கவர் ஒன்றைக் கொடுத்தான்.
"இவர் யார்னு சொல்லலையே!"
"சப்தரிஷி பாடசாலைல சமையல் வேலை செஞ்சிண்டிருந்தார். இங்க சமையலுக்கு ஆள் வேணும்னு நீங்க கேட்டிருக்தேளாம். கிட்டப்பாதான் இவரை என்னோடு கூட்டி அனுப்பிச்சார். இவரைக் கொண்டுவிட்டுட்டு கனபாடிகளிடம் பேசிட்டுவான்னு சொல்லி அனுப்பிச்சார், ஆனந்த ராவ்னு பேர்."
"ராவ்ஜியா! என்ன வயசு?"என்று கேட்டார் கனபாடிகள்
"அறுபது வயசு முடியப் போறது" என்றார் ராவ்ஜி
”நன்னா சமைப்பேளா?"
"கிட்டப்பாவையே கேட்டுப் பாருங்க; நான் ரசம் பண்ணா டம்ளர்ல வாங்கிக் குடிச்சுட்டு உம்ம பேர் ஆனந்த ராவ் இல்லே, பிரம்மானந்த ராவ்னு சொல்லுவார்!" என்றார் ராவ்ஜி.
"கிட்டப்பா, எப்பவுமே தமாஷாத்தான் பேசுவார். மூர்த்தி! இவரை உள்ளே அழைச்சிண்டு போ, பாகீரதியைப் போய்ப் பார் முதல்ல" என்றார். அவர்களிருவரும் உள்ளே போனதும் கவரைப் பிரித்துப் படிக்கத் தொடங்கினார்.
கனபாடிகள் ”பாகீரதியைப் போய்ப் பார்" என்று சொன்னதும் மூர்த்தி உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக் கொண்டான். ‘அவள் முகத்தில் எப்படி விழிப்பது? என்ன பேசுவது? எப்படி ஆரம்பிப்பது?’ என்று யோசித்தபடியே பின் பக்கம் போனபோது, அங்கே சொர்ண விக்கிரகம் போல் நின்று கொண்டிருந்த பாகீரதி மூர்த்தியைக் கண்டதும் மகிழ்ச்சிக் குரலில் "வா, மூர்த்தி !செளக்கியமா? கிட்டா உன்னைப் பத்தி எல்லாம் சொன்னான்" என்றாள்.

