Chapter 15

மூர்த்தியைப் பிரிந்த சோகத்தில் சங்கர கனபாடிகள் அமைதி இழந்து தூக்கமிழந்து அடிக்கடி படுக்கையில் உட்கார்ந்து ‘மூர்த்தி, மூர்த்தி’ என்று துயரம் தோய்ந்த குரலில் முனகிக் கொண்டிருந்தார்.

துயரத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் தவித்த தவிப்பில், தள்ளாமை மேலிட்டு, தளர்ந்து, உலர்ந்த திராட்சை போன்ற சுருக்கங்களுடன் இளைத்துப் போனார்.

அன்று அவர் ராமாயண பாராயணம் செய்து கொண்டிருந்தபோது, ராமனின் பிரிவாற்றாமையால் வாடிக்கொண்டிருந்த தசரதனின் புத்திர சோகத்தை வால்மீகி வர்ணித்திருந்த வார்த்தைகள் கண்ணீர் உகுக்கச் செய்தன, மேலும் படிக்க முடியாமல் கண்ணீர் திரையிட்டபோது விம்மி வந்த துக்கத்தை அடக்கிக் கொண்டார்.

இச்சமயம் "அதோ, கிட்டா வந்துட்டானே!" என்ற கமலாவின் உற்சாகக் குரல் கேட்டதும், கனபாடிகள் கிட்டா வரும் திசையை நோக்கி "வா கிட்டா, எல்லாரும் க்ஷேமம்தானே? மூர்த்தியைப் பார்த்தயா?" என்று ஆவல் பொங்கக் கேட்டார்.

"போன முதல் நாளே பார்த்துட்டேன். மாப்பிள்ளை காசி யாத்திரை போறப்ப அவனே குறுக்கே வந்து சேர்ந்தான் ! அப்புறம் நாலு நாளும் என்னோடதான் இருந்தான்.

‘வேதத்தைப் பாதில விட்டுட்டு நடுத்தெருவில நிக்கறேண்டா, கிட்டு ! திடீர்னு விளக்கணைஞ்சு இருட்டில தவிக்கற மாதிரி இருக்கு. நீதான் உதவி பண்ணணும்’னு கேட்டான். எங்க மாமா கிட்டப்பாவிடம் அழைச்சுண்டு போய் அவனைப்பத்தி சொன்னப்போ ‘அதுக்கென்னடா! நம்ம பாட சாலைலயே சேர்த்துட்டாப் போச்சு. அச்சுத கனபாடிகள் கவனிச்சுக்குவார். கவலைப்படாதே’ன்னு ரொம்ப சுலபமா பிரச்னையைத் தீர்த்துட்டார். மூர்த்தியைப் பத்தி நிறையவே தெரியும்னு வேற சொன்னார்.”

"அப்படியா ! அச்சுத கனபாடிகள் பாடசாலைல சேர்ந்திருக்கானா? ரொம்ப சந்தோஷம் அவர் சாஸ்திர சிரோமணி. பிரகஸ்பதின்னு சொல்லுவா."

மகிழ்ச்சியில் திளைத்த கனபாடிகள் கமலாவை அழைத்து "கேட்டயா கமலா ! மூர்த்தி தஞ்சாவூர் வேத பாடசாலைல சேர்ந்திருக்கானாம். என் வயிற்றில் பால் வார்த்த மாதிரி இருக்கு ! பாகீரதிக்குத் தெரிஞ்சா ரொம்ப சந்தோஷப்படுவா ! அவளைக் கூப்பிடு! இங்கே இன்னைக்கு ஸ்வாமி நைவேத்தியத்துக்கு பால் பாயசம் பண்ணச் சொல்லணும் ! “ என்று மகிழ்ச்சிப் பெருக்கில் திக்குமுக்காடினார்.

"மூர்த்தியானா உங்ககிட்ட சொல்லிக்காமப் போயிட்டான் ! நீங்களோ அவன் மேல உயிரையே வெச்சிருக்கேள்!" என்றான் கிட்டா

” ’இவனுக்கு நீங்கதான் மாதா பிதா குரு தெய்வம் எல்லாம்’ என்று சொல்லி மூர்த்தியை அவன் தகப்பனார் என்னிடம் ஒப்படைச்சுட்டுப் போனார். மூர்த்தி காணாமப் போனதும் அவருக்கு என்ன பதில் சொல்றதுன்னு தெரியாம தவிச்சுப் போனேன். தினம் தினம் பகவானைப் பிரார்த்தனை பண்ணிண்டிருக்தேன். என் பிரார்த்தனை வீண்போகலே, ஸ்வாமி செவி சாய்ச்சுட்டார்!"

பாகீரதி, முகத்தில் எவ்வித உணர்ச்சியும் இன்றி சாதுவாக வந்து நின்றாள்.

"ஏண்டா, மூர்த்தியை இங்க அழைச்சுண்டு வரதுதானே? இங்க எல்லாரும் அவனைப் பாக்கறதுக்கு ஏங்கிப் போயிருக்கான்னு சொல்றதுதானே!" என்று பாகீரதியை ஒரக் கண்ணால் பார்த்துக்கொண்டே கிட்டாவைக் கேட்டாள் கமலா.

"சொல்லாம இருப்பனா ! புதுக் கன்னுக்குட்டிக்கு உன் பேரைத்தாண்டா வெச்சிருக்கோம். பாகீரதிதான் வைக்கச் சொன்னான்னுகூடச் சொல்லிப் பார்த்தேன். ஆனா அவன் எதுவுமே பேசலே, இடிச்ச புளியாட்டம் இருந்துட்டான்" என்றான் கிட்டா.

"அவன் எங்க இருந்தாலும் எப்படி இருந்தாலும் க்ஷேமமா இருந்தா சரி. நம்மையெல்லாம் மறந்தாலும் வேதத்தை மறக்காம இருக்கானே, அது போதும் எனக்கு !" என்று பரம திருப்தியோடு பேசினார் கனபாடிகள்.

"சும்மா சொல்லக் கூடாது. வேதத்துல அசைக்க முடியாத நம்பிக்கை வெச்சிருக்கான். பக்தின்னா கொஞ்ச நஞ்சமில்லே. உலகத்துலயே வேதம்தான் பெரிசுங்கற அளவுக்குப் பெரிய ஞானி மாதிரி பேசறான்" என்றான் கிட்டா.

"எனக்குத் தெரியும். மகா உத்தமமான பையன்டா அவன் ! ம்… ! ஏதோ ஒரு கெட்ட வேளை அவனை ஆட்டிப் படைக்கிறது. கிட்டா, நீ போய் சீக்கிரம் ஸ்நானத்தை முடிச்சுண்டு வா. நேரமாறது" என்று சொல்லி அனுப்பினார்.

தோட்டப்பக்கம் போன கிட்டாவை பாகீரதி வழியில் மடக்கி "மூர்த்தி என்னைப் பத்தி ஏதாவது சொன்னானா?" என்று குரலைத் தாழ்த்திக் கேட்டாள்.

"ஒண்ணும் சொல்லலை. பட்டுவேட்டியையும் புஸ்தகத்தையும் கொடுத்தேன். வாங்கிண்டான். அவ்வளவுதான்"

"யார் கொடுத்தான்னுகூடக் கேட்கலையா?"

” நானே சொல்லிட்டேன்"

"அதுக்கு என்ன சொன்னான்?"

"அதுக்கும் ஒண்ணும் சொல்லலை. முகத்தில ஒரு திருப்தி மட்டும் தெரிஞ்சுது!"

"என்னைப் பத்தி ஒரு வார்த்தைகூடப் பேசலையா!"

"பேசலையே!"

"அப்புறம்?."

"உள்ளே போயிட்டு கொஞ்ச நேரத்துக்கெல்லாம் திரும்பி வந்து பாக்கறேன். அந்த புஸ்தகத்துக்கு நீ போட்டிருந்த அட்டையைக் கிழிச்சுப் போட்டிருந்தான். ஏண்டா அட்டை போட்டா உனக்குப் பிடிக்காதோன்னு கேட்டேன். பதில் மழுப்பலா ஒரு சிரிப்பு அதோடு சரி!"

பாகீரதி முகம் பிரகாசமாயிற்று. "அம்மாடி அட்டையைப் பிரிச்சுப் பார்த்திருக்கான்" என்பதில் ஏற்பட்ட மகிழ்ச்சி அது.

"அவனுக்கு அட்டை போடறதும் பிடிக்காது; சட்டை போடறதும் பிடிக்காது" என்று கேலியாகச் சொல்லிச் சிரித்துக் கொண்டே போய் விட்டாள்.

மேல வீதி பங்காரு காமாட்சி அம்மன் கோயிலுக்குப் போய் கோபுரம் தரிசித்து பிரதட்சிணமாக நடந்து போனபோது ஆலயமணியின் ரீங்காரம் மூர்த்தியை பக்திப் பரவசத்தில் ஆழ்த்தியது.

வெள்ளிக்கிழமை சந்தியாகால பூஜை நேரம். தேங்காய், புஷ்பம், கற்பூரத் தட்டுடன் சந்நிதியில் போய் நின்றான்.

"அர்ச்சனையா, தீபாராதனையா?" அர்ச்சகர் கேட்டார்.

"அர்ச்சனை!"

"பேர், நட்சத்திரம், கோத்ரம்?"

"அம்மன் பேருக்கே பண்ணிடுங்க."

அஷ்டோத்திரம் சொல்லி அர்ச்சனை முடித்து கற்பூர ஹாரத்தி காட்டி தட்டுடன் மூர்த்தியிடம் வந்து நின்றார் குருக்கள்.

மஞ்சுவின் உடல்நிலை தேறி பழையபடி கழைக்கூத்து செய்யத் தொடங்கினால் சுவாமிக்கு அர்ச்சனை செய்வதாக மூர்த்தியின் பிரார்த்தனை,

கோயிலிலிருந்து சத்திரத்துக்குப் போகும் வழியில் ஒரு முழம் தஞ்சாவூர்க் கதம்பம் வாங்கிக் கொண்டான். ‘கதம்பம் என்றால் அவளுக்கு ரொம்பப் பிடிக்கும்’ என்று அவனுக்குத் தெரியும்.

சத்திரத்து வாசலில் குதிரை வண்டி ஒன்று நின்று கொண்டிருந்தது. வண்டிக்குள் பாண்டு வாத்தியக்காரர்கள் உட்கார்ந்திருந்தார்கள்.

வண்டி மீது ஒட்டப்பட்டிருந்த போஸ்ட்டர் ‘தஞ்சைக்கு கேரள சர்க்கஸ் விஜயம்’ என்று சொல்லிற்று,

சத்திரத்துக்குள் போனபோது அங்கே மஞ்சு யாரோ ஒரு கேரளாக்காரனுடன் பேசிக் கொண்டிருந்தாள். பார்வைக்கு சர்க்கஸ்காரன் போலிருந்தான்.

அழகாக, அரும்பு மீசையுடன் ஒரு நிர்வாகிக்குரிய மிடுக்குடன் காணப்பட்டான்.

மஞ்சுவின் திறமை பற்றி கேள்விப்பட்டு அவளைத் தன்னுடைய கம்பெனியில் சேர்த்துக் கொள்வதென்ற நோக்கத்தோடு வந்திருந்தான். தன் கம்பெனியிலுள்ள வசதிகள் பற்றியும் கட்டுப்பாடுகள் பற்றியும் மஞ்சு மயங்கிப் போகும் அளவுக்குப் பேசிக்கொண்டிருந்தான்.

"வெய்யில் மழையில் தெருத் தெருவாக மூட்டையைத் தூக்கிக்கொண்டு அலையறது ஒரு பொழைப்பா! சர்க்கஸ்ல சேர்ந்தா கெளரவமா வாழலாம். உங்கப்பாவுக்கு வயசாச்சு. உனக்கு ஒரு பாதுகாப்பான இடம் வேணாமா? உன்னாட்டம் நிறையப் பெண்கள் என் கம்பெனில வேலை செய்றாங்க. உனக்கு அங்க நல்ல எதிர்காலம் இருக்கு. யோசிச்சு முடிவு சொல்லு" என்று அவன் கூறிக் கொண்டிருந்தபோதுதான் மூர்த்தி கோயில் பிரசாதத்துடன் அங்கு போய்ச் சேர்ந்தான்.

"வா, மூர்த்தி நல்ல நேரத்துக்கு வந்தே ! தட்ல என்ன?" என்று கேட்டாள் மஞ்சு.

"காமாட்சியம்மன் கோயிலுக்குப் போய் அர்ச்சனை பண்ணி பிரசாதம் கொண்டு வந்திருக்கேன்."

பிரசாதத்தை அவளிடம் கொடுத்தான்.

"நல்ல சகுனம் ! சாமிப் பிரசாதம்கூட வந்திருக்கு !" என்றான் சர்க்கஸ்காரன்.

"இவர் சர்க்கஸ் கம்பெனிலிருந்து வந்திருக்கார். என்னை சர்க்கஸ்ல சேரச் சொல்றார்!" என்று மூர்த்தியின் முகத்தைப் பார்த்தாள் மஞ்சு,

“நீ என்ன சொன்னே?"

"நா ஒண்ணும் சொல்லலே. உன் அபிப்ராயத்தைச் சொல்" என்றாள்.

"உங்க அப்பாவும் நீயும் முடிவு செய்ய வேண்டிய விஷயம் இது, இதல நான் சொல்றதுக்கு என்ன இருக்கு?"

மஞ்சு இந்த பதிலை எதிர்பார்க்கவில்லை. மூர்த்தி அக்கறை காட்டாமல் பேசியது அவளுக்கு வருத்தமாயிருந்தது.

"எதுக்கும் நீங்க நாளைக்கு வாங்கய்யா, பேசிக்குவம்" என்று சர்க்கஸ் ஆசாமியிடம் சொல்லி அனுப்பிவிட்டாள்.

மூர்த்திக்கு அவனை அறியாமல் அந்த சர்க்கஸ்காரன்மீது ஒரு வெறுப்பு தோன்றியது. பொறாமையாகவும் இருந்தது.

"நேரமாச்சு, மஞ்சு ! போயிட்டு நாளைக்கு வந்து பாக்கறேன். பாடசாலைல காத்திண்டிருப்பா" என்று சொல்லிப் புறப்பட்டான் மூர்த்தி.

மஞ்சுவிடம் தனக்குள்ள உரிமை என்ன, உறவு என்ன என்பதை மூர்த்தியால் திட்டவட்டமாகப் புரிந்துகொள்ள முடிய வில்லை. ஆயினும் மஞ்சு தன்னை விட்டு விலகிச் செல்வதுபோல் உணர்ந்தான்.

"மூர்த்தி ! நீதானே வேதம், வேதம்னு சொல்லிண்டு அவளை விட்டு விலகிப் போயிருக்கே? நன்னா யோசிச்சுப் பார்! அவளாகவா விலகிச் செல்கிறாள்! அவள் இதுவரை உன்னைத்தானே நம்பிக் கொண்டிருந்தாள். நீ வேத பாடசாலையில சேர்ந்தப்புறம் தானே அவள் நம்பிக்கை குறைய ஆரம்பிச்சிருக்கு? சர்க்கஸ்காரன் அவளுக்கு நல்ல எதிர்காலம் இருப்பதாகச் சொல்கிறான். பாதுகாப்பு இருக்கிறது என்று அழைக்கிறான். நீதான் அவள் கேள்விக்குச் சரியான பதில் சொல்லாமல் அந்த சர்க்கஸ்காரனைக் கண்டு பொறாமைப்படுகிறாய்? இப்ப சொல். விலகிப் போறது நீயா, அவளா?" என்று மூர்த்தியின் உள் மனம் கேட்டது.

‘உண்மைதான்; மஞ்சுவிடமிருந்து நான்தான் விலகி வந்திருக்கேன், வேதத்தின் மீதுள்ள பற்றுதல் காரணமா அவள் எதிர்காலத்தைப் பற்றிக் கவலைப்படாம வந்திருக்கேன். இப்போது அவள் சர்க்கஸ் கம்பெனியில சேருவதற்கு சரியாக பதில் சொல்லாமல் அலட்சியமா வந்தது என் தப்புதான்’ என்றது இன்னொரு மனம்,

இந்த எண்ணங்கள் அவனைக் குழப்பத்தில் ஆழ்த்த, ஒரு முடிவுக்கும் வர முடியாமல் மேலும் சிந்தித்தவாறு சப்தரிஷி பாடசாலையை அடைந்தான்.

மூர்த்திக்காகக் காத்திருந்த அச்சுத கனபாடிகள் இவனைக் கண்டதும் "மூர்த்தி சாயந்தரம் வெள்ளிக்கடை கிட்டப்பா உன்னைத் தேடிண்டு வந்திருந்தார். நீ கோயிலுக்குப் போயிருப்பதாச் சொன்னேன். அவசரமா உன்னைப் பார்க்கணுமாம் !" என்றார்.

“அப்படி என்ன அவசரமாம்? யாராவது என்னைத் தேடிண்டு வந்திருப்பளோ? யார் வந்திருப்பா?" என்று யோசித்தான் மூர்த்தி.