Chapter 9

வேப்ப மரத்துக் காக்கை கரைய "யார் வரப் போறாளோ, தெரியலே" என்று கமலா சொல்லி வாய் மூடுமுன் வாசலில் ஜட்கா வண்டியிலிருந்து சிதம்பரம் கெளரி அத்தை கழுத்தில் காசுமாலை பளபளக்க இறங்கிக் கொண்டிருந்தாள்.

"திடீர்னு அத்தை வந்திருக்காளே, என்ன விஷயமோ!" என்று எண்ணிக் கொண்ட கமலா "பாகீ! வாசல்ல யார் வந்திருக்கா பாரு" என்றாள்.

அடுப்பில் பொங்கிக் கொண்டிருந்த பாலை அடக்கிவிட்டு ஓடிவந்த பாகீரதி அத்தையைக் கண்டதும் அகமும் முகமும் மலர "வாங்க அத்தை ! நேத்தெல்லாம் உங்க நினைப்புத்தான் எனக்கு" என்றாள்.

அத்தையை ஆர்வத்தோடு அணைத்துக் கட்டிக்கொண்டவள் மகிழ்ச்சி பொங்க "நீங்க வருவீங்கன்னு மனசிலே தோணிண்டே இருந்தது, அத்தை !" என்றாள்.

"இட்சிணி ஏதாவது சொல்லித்தா?"

அத்தையின் கையிலிருந்த பரண்டையையும் தாழம்பூவையும் வாங்கிக்கொண்ட கமலா “காக்கா கத்திண்டே இருந்தது!" என்றாள்.

"நீ எப்ப வந்தடி இங்க? அம்புலு எங்கே?" என்று கேட்டாள் அத்தை.

"தூங்கறது. நாலு நாளாச்சு வந்து ஊருக்குப் போகணும்னு சொல்லிண்டேதான் இருக்கேன். இதுக்குள்ள என்னென்னவோ குழப்பம் !"

"என்ன குழப்பம்?"

“என்னவோ! ஒண்ணும் சொல்லிக்கிற மாதிரி இல்லே!"

அதைத் தெரிந்துகொள்வதில் அத்தை அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை. அப்புறம் நிதானமாக விசாரித்துக் கொள்ளலாம் என எண்ணி "அண்ணா எங்கே?" என்று கேட்டுக்கொண்டே பின்கட்டுப் பக்கம் நடந்தாள்.

அங்கே கனபாடிகள் சிவப்பழமாய் உட்கார்ந்து கண்களை முடி ஜபம் செய்து கொண்டிருப்பதைப் பார்த்ததும் திரும்பி வந்தாள்.

"என்ன அத்தை அத்தி பூத்தாப்பல?" என்றாள் கமலா.

"பரண்டை கொண்டு வந்திருக்கனே, பார்க்கலையா? இன்னும் ரெண்டு நாள்ல உங்க பாட்டிக்கு திவசம் வரப் போறதுடி ! ஒரு திவசத்துக்காவது வராம இருந்திருக்கனோ?"

"உங்க அம்மாவுக்குன்னு சொல்லு. இது மாசி மாசம்கறது மறந்தே போச்சு. பாட்டியோட திதி இப்பத்தான் வர வழக்கம். அப்பாவுக்கு ஞாபகம் இல்லையோ, என்னவோ!"

"பாவம், அவனுக்கு எத்தனையோ கவலை ! மறந்திருப்பான் !"

கனபாடிகள் ஜபத்தை முடித்துக்கொண்டு ஆசமனம் செய்துவிட்டு வந்தபோது "கெளரி அத்தை வந்திருக்கா! பார்த்தேளா, அப்பா" என்றாள் கமலா.

"கணீர்னு குரல் கேட்டுது, வெண்கலக் குரலாச்சே! எங்கே அவள்?" என்று கேட்டார் கனபாடிகள்.

"புதுக் கன்னுக்குட்டியைப் பார்க்கப் போயிருக்கா!" என்றாள் கமலா .

கனபாடிகள் தொழுவத்துக்குப் போய் "வா, கெளரி ! அவர் செளக்கியமா? நல்ல வேளை! நீ வந்தே; இல்லேன்னா அம்மாவை மறந்தே போயிருப்பேன். என்னைக்கு சிராத்தம்? புதன்கிழமையா இப்பவே கிட்டாவை அனுப்பி வாத்தியாரிடம் சொல்லிட்டு வரச்சொல்றேன்" என்றார்.

"ஏன், ஒரு மாதிரி இருக்கீங்க எல்லாரும், கலகலப்பே இல்லாம?" என்று கேட்டாள் அத்தை.

“கமலா சொல்லியிருப்பளே" என்றார் கனபாடிகள்.

"ஏதோ குழப்பம்னு மாத்திரம் மொட்டையாச் சொல்லி நிறுத்திட்டா. அப்புறம் எதுவும் சொல்லலை. நானும் கேட்கலை. நீயே சொல்லு" என்றாள் கெளரி.

"பக்கத்து அக்கிரகாரத்துலேந்து நேத்து ஏழெட்டு பேர் என்னைத் தேடிண்டு வந்தா ! யாரோ ஒருத்தன் தாலி கட்டின பெண்டாட்டியைத் தவிக்க விட்டுட்டு சமுத்திரம் தாண்டிப் போயிட்டானாம். வெளி தேசம் போய் வேறொருத்தியைக் கல்யாணம் பண்ணிண்டு இருபது வருஷம் அவளோடு வாழ்ந்தப் புறம், அவள் காலமானதும், இப்ப ஊர் திரும்பி வந்து இந்தப் பெண்டாட்டியோட வாழப்போறேங்கறானாம். ‘சாஸ்திரம் இதுக்கு ஒத்துக்குமா? நீங்க என்ன சொல்றேள்’னு ஊரார் என்னைக் கேட்க வந்தா. சாஸ்திரம் கண்டிப்பா ஒத்துக்காது. ஜாதிப் பிரஷ்டம் செய்ய வேண்டியதுதான்னு நான் தீர்ப்பு சொன்னேன்.

“உங்க பெண் பாகீரதி கூந்தலை எடுக்காம இருக்காளே! அதுக்கு என்ன சொல்றீங்க? அதை மட்டும் உங்க சாஸ்திரம் ஒப்புக்கறதாக்கும் !" என்று என்னையே மடக்கி அவமானப் படுத்திட்டு போயிட்டா!

இதையெல்லாம் கேட்டுண்டிருந்த உன் செல்லம் பாகீரதி ராத்திரி என் கிட்டே அழுதுண்டே வந்து என்ன சொல்லித்து தெரியுமா? அதை என் வாயாலே திருப்பிச் சொல்றதுக்கே நாக்கூசறது!"

பாகீரதி என்ன சொன்னாள் என்று அத்தை கேட்க வில்லை. அவளே அதை ஒரு மாதிரி ஊகித்துக் கொண்டாள்.

“சரி, அண்ணா! இதுக்கெல்லாம் மனசைப் போட்டு குழப்பிக்காதே! நம்ம குழந்தையோட சந்தோஷம்தான் நமக்கு முக்கியம் !" என்றாள்.

இச்சமயம் பாடசாலைப் பையன்களில் ஒருவன் கனபாடிகள் எதிரில் வந்து நின்றான்.

"என்னடா?"

"நேத்து நீங்க சொல்லிக் கொடுத்த வேத பாடத்தை ஸ்லேட்டில் எழுதிக்கொண்டு வந்திருக்கேன்," என்றான்.

"வேதத்தை எழுத்தால் எழுதக் கூடாதுடா ! ‘எழுதா மொழி’ன்னு சொல்லுவா அதை. சப்த ரூபமான வேதத்தைக் காது வழியாக் கேட்டுதான் மனப்பாடம் செய்யணும். அப்படிக் தான் அது வழிவழியா வந்திருக்கு. ஒரு அட்சரத்தின் சப்தம் கூடப் பிசகக்கூடாது. பிசகினால் அர்த்தம் அனர்த்தமாயிடும், வேதத்துக்கு ஸ்வரம் உண்டு. அதில் அபஸ்வரம் பேசக்கூடாது. உச்சரிப்பு, ஸ்வரம், ஆரோகணம் அவரோகணம் இதெல்லாம் எழுத்தாலே சாத்தியப்படுமா? நீ சின்னப் பையன். இதெல்லாம் உனக்கு விளங்காது. போய் வேதத்தை ஓது! எழுதாதே! தினமும் ஒரு ஆவிருத்தியாவது வேதத்தை வாய்விட்டுச் சொல்லு. வேதம் ஓதறபோது பாதில விட்டுட்டு அங்கே இங்கே எழுந்து ஓடக் கூடாது. போ, போ" என்றார் கனபாடிகள்.

“மூர்த்தி பாதில விட்டுட்டு ஓடிப் போயிட்டானே!" என்றான் அந்த அசட்டுப் பையன்,

அந்தப் பையனின் வெகுளித்தனமான கேள்விக்கு அவரால் பதில் சொல்ல முடியவில்லை.

"நீ போடா!" என்றார்.

”பாகீ! ஏன் தலையை வாராமல் சிக்காக்கி வச்சிண்டிருக்கே? இப்படி வந்து உட்காரு. தாழம்பூ என்றால் உனக்கு ரொம்பப் பிடிக்குமே! உனக்காகவே நல்ல வாசனைத் தாழம்பூவா வாங்கிண்டு வந்திருக்கேன். அழகாப் பின்னி விட்டுடறேன், வறயா?" என்றாள்.

"ஐயோ, வேணாம் அத்தை ! அதுக்கெல்லாம் நான் கொடுத்து வைக்காத பாவியாயிட்டேன். இந்த உலகத்துல சிறுமைப்படவே இந்தப் பெண் ஜன்மம் எடுத்திருக்கேன், நேத்தே முடிவு பண்ணிட்டேன். இனி அப்பாவுக்கு என்னால எந்த அவமானமும் வரக்கூடாது. அதுக்கு நான் காரணமாயிருக்க மாட்டேன்."

"சீ, அசட்டுப் பிசட்டுன்னு பேசாதே! நீ சின்னக் குழந்தை. அறியாப்பருவத்தில் உனக்குத் தெரியாமலே எல்லாம் நடந்து போச்சு. அதுக்கு நீ என்ன செய்வே? உன்

அம்மா கடைசியா என் கிட்ட என்ன சொல்லிட்டுப் போயிருக்கா தெரியுமா? "அக்கா! நீங்கதான் பாகீரதியைப் பார்த்துக்கணும், அவள் கண் கலங்காம சந்தோஷமா இருக்கணும். தலைவிதி அவளை இந்த கதிக்கு ஆளாக்கிடுத்து. மத்த பெண்களைப் போல அவளுக்கும் ஆசைகள் இருக்காதா? சந்தோஷம் வேணாமா? உங்க அண்ணாவுக்கு ஒண்ணுமே தெரியாது. சதா வேதம், சாஸ்திரம்னு சொல்லிண்டு வைதிகத்துல மூழ்கிக் கிடப்பார். நீங்கதான் அவளை கவனிச்சுக்கணும். அவளை உங்ககிட்ட ஒப்படைச்சுட்டுப் போறேன். நீங்க அவள் பேரில் வெச்சிருக்கும் அன்பும் பாசமும் எனக்குத் தெரியும், அவளுக்கும் உங்க மேல அளவு கடந்த பிரியம். வாழ்ந்தால் அத்தையாட்டம் பணக்காரியா, தோரணையா, வாழணும்னு அடிக்கடி சொல்லிண்-டிருப்பான்னு உங்கம்மா சொல்லிட்டுப் போயிருக்கா" என்றாள் அத்தை.

அழகாகப் பின்னிவிட்ட தாழம்பூக் கூந்தலில் பாகீரதி புது மணப்பெண்போல் ஜொலித்தாள்.

அவளைப் பார்க்கப் பார்க்க அத்தைக்கு மகிழ்ச்சி தாங்க வில்லை. அவளை மேலும் அழகு படுத்திப் பார்க்க விரும்பினாள். பாகீரதியின் நெற்றியில் குங்குமம் இட்டு, தான் அணிந்திருந்த காசு மாலையைக் கழற்றி அவள் கழுத்தில் போட்டு கண் குளிர அழகு பார்த்தபடி "எத்தனை அழகுடி ,நீ மகாலட்சுமியாட்டமா!" என்று தன் புறங்கைகளால் அவள் கன்னத்தில் அழுத்தி திருஷ்டி சொடுக்கிப் போட்டாள்.

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த கமலா "எனக்கு பயமா இருக்கு, அத்தை ! அப்பா பார்த்துட்டா அப்புறம் நரசிம்மாவதாரம்தான்!" என்றாள்.

"பார்க்கட்டுமே, என்ன நடந்து போச்சு இப்பl என் ஆசைக்கு அலங்காரம் பண்ணிப் பார்த்தேன். இது பெரிய தப்பா? அவன் வரட்டும். நான் பேசிக்கிறேன்..." என்றாள் அத்தை.

அவர்கள் எதிர்பார்த்தபடியே கனபாடிகள் அங்கு வந்து விட்டார். பாகீரதியின் தகாத அலங்காரத்தைக் கண்டு, சூள் கொட்டி, திகைத்து நின்றார். பிறகு "கெளரி ! என்ன இதெல்லாம்!" என்று கோபித்தார்.

"நான்தான் தாழம்பூ வெச்சு தலை பின்னி விட்டேன். எப்படி இருக்கா பாரு! அவள் சின்னக் குழந்தைடா! அவளுக்கு ஆசை இருக்காதா அலங்காரம் பண்ணிக்க !"

"சாஸ்திர விரோதம்னு தெரியாதா உனக்கு ! தப்பு கெளரி, ரொம்பத் தப்பு!"

"அவள் கூந்தலை எடுக்காமல் வைத்திருப்பது உனக்குத் தப்பாத் தெரியலே ! தலைபின்னிப் பூ வைக்கறது மட்டும் தப்பாக்கும். நீ செய்தது நியாயம்னா நான் இப்ப செஞ்சதிலேயும் தப்பில்லே… அப்படி என்ன செய்துட்டேன். நீ செஞ்சதுக்கு மேல ஒரு படி போயிருக்கேன். அவ்வளவுதானே!"

பதில் சொல்ல முடியாமல் திணறிப்போன கனபாடிகள் "ராம, ராமா!" என்று முணுமுணுத்தபடி அப்பால் போய் விட்டார்.

திவச விஷயமாக வாத்தியாரைத் தேடிப் போன கிட்டா திரும்பி வந்தான். "புதன்கிழமை அவருக்கு வேலை இருக்காம். வர முடியாதாம்" என்றான்.

"பதிலுக்கு வேறு வாத்தியாரை ஏற்பாடு பண்ணிட்டுப் போக வேண்டியதுதானே, நீ கேட்டயா?"

"கேட்டேன். அங்கே பக்கத்தூர்க்காராளெல்லாம் கும்பலா இருந்தா. ஏதோ "கசமுசா"ன்னு பேசிக்கறா" என்றான் கிட்டா.

"என்னடா பேசிக்கிறா?"

"உங்களை "பாய்காட்" பண்ணப் போறாளாம்."

"ஒகோ !" என்றார் கனபாடிகள்.