முன்னுரை — கவியரசு வைரமுத்து
நாணலைப் பார்த்து நதி முன்னுரை கேட்குமா? கேட்டிருக்கிறதே?
இதோ என்னிடம் சாவி.
இந்த ”வேத வித்து” என்னும் வசன காவியத்துக்கு முதல் வாசகன் நான் என்பதனால் முன்னுரை எழுதச் சம்மதித்தேன்.
இந்த நாவலை நான் வாசித்தேன் என்பது பொய்.
இந்த நாவலுக்குள் நான் வசித்தேன் என்பதே மெய்.
மூர்த்தியோடு அந்தப் படித்துறையில் நடந்து அவன் கழுத்தில் ஆடும் தங்கச் சங்கிலியாய்க் கிடந்து, பாகீரதியின் விதவைக் கூந்தலில் ஒரு மல்லிகைப் பூவாய்
மணத்து, கனபாடிகளின் மந்திர உச்சாடனத்தில் நானும் ஒரு வார்த்தையாய் ஒலித்து. மஞ்சுவின் கழைக் கூத்தாடிக் கயிற்றில் நானும் நடந்து, கனபாடிகளின் மரணத்தின் போது கொட்டும் மழையில் நானும் ஒரு துளியாகி…..
ஓ....
இந்த நாவலை நான் வாசிக்கவில்லை.
இந்த நாவலுக்குள் நான் வசித்திருக்கிறேன்.
சாவிஅவர்கள் எழுதத் தொடங்கினால் அவர் கையிலிருக்கும் பேனா தூரிகையாவது வழக்கம்.
ஆனால், வழக்கத்துக்கு மாறாய் ‘வேதவித்து’ எழுதப் போன அவர் பேனா உளியாகியிருக்கிறது.
அவரின் மற்ற படைப்புகள் ஒவியங்களென்றால் இது சிற்பம்.
மனசுக்குள் கனமாய் உட்கார்ந்து கொண்டு பேசும் சிற்பம்.
சாவியின் மற்ற படைப்புகள் தீட்டப்பட்டவை என்றால் இது வடிக்கப் பட்டது.
இந்த நாவலுக்குள் அவர் ஆண்டிருக்கும் விஷயம் ஆபத்தானது என்று கருதப்படுவது.
கத்தி எடுத்து யுத்தம் செய்வது எளிது.
ஆனால், கத்தி மேல் நடந்து யுத்தமும் செய்வது கடிது, நின்று விட்டாரே! கத்திமேல் நின்று போர் புரிந்து சாவி வென்று விட்டாரே!
மாறி வரும் மனித மதிப்பீடுகளை எதிர்காலத்தில் ஆராயப் புகும்போது இந்த நாவல் அதற்குச் சேதாரமில்லாத ஆதாரமாக விளங்கும் என்பது என் எண்ணம்.
காலங்காலமாய் இந்தச் சமூகத்தின் கால்களைப் பிணைத்திருக்கும் சாஸ்திரச் சங்கிலிகளை மயிலிறகு வார்த்தைகளால் வருடிக் கொண்டே சம்மட்டியால் அடித்திருக்கிறார் சாவி.
"நம்ப சமூகம், சமுதாயம் எல்லாம் நல்லபடியா வாழணுங்கிறதுக்குத்தானே சம்பிரதாயமல்லாம்? இப்படி வாழ்க்கையே அடியோடு நாசமாப் போயிடறதுக்கு ஒரு சாஸ்திரமா? அது நமக்குத் தேவைதானா? அப்படிப்பட்ட சாஸ்திரத்தை மாத்தி அமைக்க வேண்டியதுதானே!" (பக்கம் 67)
இதுதான் இந்த நாவலுக்கு, சாவி அவர்கள் எடுத்திருக்கிற ஆழமான அஸ்திவாரம்.
தான் போட்டுக் கொண்ட இந்த எல்லைகளைத் தாண்டி சாவி அவர்கள் தன் பேனாவை ஒரு மில்லி மீட்டரும் அசைக்கவில்லை.
இப்படி கனமான விஷயத்தைச் சுமந்து கரையேற்றுவதும், கரையேறுவதும் கஷ்டம்.
சாவி அவர்கள் கரையேறியிருக்கிறார் ; கரையேற்றியுமிருக்கிறார்;
இந்தத் துணிச்சல் அவருக்கு வெறும் வேட்கையால் வந்ததன்று: வாழ்க்கையால் வந்தது.
இந்த நூலின் வாசகங்களெங்கும் வைதீக வாழ்க்கையின் வடிவங்கள் வண்டல் வண்டலாகப் படிந்து கிடக்கின்றன.
எந்த எழுத்தாளனுக்கும் இரண்டு கலைகள் வேண்டும்.
ஒன்று. அவன் உணரத்தெரிந்திருக்க வேண்டும். இரண்டு, உணர்ந்ததை உணர்த்தத் தெரிய வேண்டும்.
அவன் சமுத்திரத்தைப் பற்றி எழுதினால் வாசகனின் வேட்டியின் கரையாவது நனைய வேண்டும்.
இந்த நாவலின் வெற்றிக்கு மூலம் என்னவென்றால், சாவி அவர்கள் உணர்ந்ததை விட உணர்த்தியது அதிகம்.
மூர்த்தி, பாகீரதி சங்கமம் பற்றி ஓர் அத்தியாயமே எழுதியிருக்கலாம்.
ஆனால், இரண்டு வாக்கியங்களின் இடைவெளியிலேயே அவர்கள் சங்கமம் முடிந்து விடுகிறது.
ஆனால், அந்த இடம் வந்தவுடன் என் ரத்தம் கொஞ்சம் சுட்டு அடங்கியது.
உண்மைதான் வார்த்தைகளை விட மெளனத்துக்கு அடர்த்தி அதிகம்.
நடை- நயமான நடை.
பனிப்பாறைகளின் மீது ஓர் ஆப்பிள் பழம் உருண்டு போவது மாதிரி தடையற்ற நடை.
கழைக்கூத்தாடியை வேடிக்கை பார்க்கும் கும்பலில் அந்தப் பிராமணன் மூர்த்தி நிற்கிறான்.
சாவி எழுதுகிறார் :
"கறுப்பான எள் குவியலுக்கு இடையே வெண்மையான பச்சரிசி ஒன்று கலந்தது போல் போல் அந்தப் பாமர மக்கள் கூட்டத்தில் அவன் சற்றும் பொருத்தமில்லாமல் நின்றான்” (பக்கம் 55)
நுட்பமான உவமை ;
உவமை என்பது புலமை.
அங்கங்கே இந்தக் கனமான விஷயத்தை இறக்கி வைத்து இளைப்பாறிக் கொள்ள சுமை தாங்கிக் கற்களாய் நகைச்சுவை வரிகள்.
"தோட்டப்பக்கத் தெருவில் பஜனைக் கும்பல் ஒன்று அபஸ்வரமாய்ப் பாடிக்கொண்டு போயிற்று.”
இப்படி அங்கங்கே தெறித்து விட்டுப் போகும் சின்னச் சின்ன மின்னல்கள்.
தான் எடுத்துக் கொண்ட கரு மட்டுமே அதிகம் கவனிக்கப்பட வேண்டும் என்பதற்காக, வெடித்துக் கொண்டு வரும் அவரது நகைச் சுவையை இதில் அடக்கியே வாசித்திருக்கிறார்.
வேதங்களுக்கும் சாஸ்திரங்களுக்கும் இருக்கும் வேர்களுக்கு வயது எத்தனையோ நூற்றாண்டுகள் என்பதை அவர் அறிவார்.
அவைகள் ஒரேநாளில் அறுத்து விடக்கூடிய - ஒரேநாளில் பெயர்த்து விடக் கூடிய சல்லிவேர்கள் இல்லை.
அதன் குறியீடாகத்தான் பாகீரதி - மூர்த்தி திருமணத்தை ஒரே நாளில் உருவாக்கி விடாமல் கால அவகாசம் கொடுத்து நிதானமாய்க் காட்டியிருக்கிறார்.
எந்தப் பாத்திரத்தின் மீதும் வெறுப்பு வராமல் அத்தனை பாத்திரங்களையும் நேசிக்கிற பாத்திரங்களாய் வார்த்திருப்பது நாவலைச் சுவைத்து விட்டு அசை போடும் போது சுகமாக இருக்கிறது.
கனபாடிகளின் மரணத்தை இதைவிடச் சுருக்கமான வார்த்தைகளால் சொல்ல முடியுமா?
"அந்த அணில் குஞ்சு கனபாடிகள் இறந்து போனது தெரியாமல் அவர் மீது ஓடி ஆடி விளையாடிக் கொண்டிருந்தது."
இந்த வரியை வாசித்துக் கொண்டிருந்த போது அந்த அணில் வால் துடித்தது மாதிரி இருதயம் துடித்தது.
அவர் எழுதிய அந்தக் கடைசிக்கடிதம் வேதங்களையும் நிகழ்காலத்தையும் இணைத்து வைக்கிற எழுத்துப் பாலமாகவே எனக்குப் பட்டது.
நாவல் முடியும் போது "அய்யோ! சாவி எவ்வளவு பெரிய ஆள்" என்று உதடு உச்சரித்துக் கொண்டது.
இதில் ஒரு குறிப்பு வருகிறது.
விராட பர்வம் படித்தால் மழை வருமாம். எனக்கு நம்பிக்கையில்லை.
ஆனால், வேதவித்து ஒரு விராட பர்வம்தான்.
இதைப் படித்தால் மழை வரும் –
கண்ணில்.
(வைரமுத்து, 21.5. 90)

