Chapter 19

ஊர் ஓரத்து தென்னக் தோப்பில் மஞ்சு ‘கவாத்து’ பழகிக்கொண்டிருந்தபோது மூர்த்தி அங்கே போய் நின்றான்.

"உனக்கெப்படி தெரிந்த து இந்த இடம். யார் சொன்னாங்க?" என்று கேட்டாள் மஞ்சு.

"உங்க அப்பாதான் சொன்னார்?" என்றான் மூர்த்தி.

"அந்த சர்க்கஸ் ஆள் உன்னை ‘குத்தப் போறேன், வெட்டப் போறேன்’னு சொல்லிட்டிருக்கானே!"

"யார் அந்த கேரளாக்காரனா? அவனுக்கு என் மேல என்ன கோபம்?"

"பொறாமைதான்; நீ என்னோட அன்பாப் பேசறது, பழகறது, என் குடும்பத்துல ஒருத்தன் மாதிரி நடந்துக்கறதெல்லாம் அவனுக்குப் பிடிக்கலே!"

”ஏன்?”

"என்னைக் கட்டிக்கற உரிமை அவனுக்குத்தான் இருக்காம். அவனும் எங்களைப் போல குஜராத்லேந்து வந்தவனாம்!"

"அட நீ குஜராத்திப் பெண்ணா! சொல்லவே இல்லையே!"

"நாங்க மொத்தம் அஞ்சு குடும்பம், ரெண்டு தலைமுறைக்கு முன்னால தஞ்சாவூர்லதான் குடியேறினோம். கழைக்கூத்துதான் எங்க தொழில், உறவுவிட்டுப் போகாம எங்களுக்குள்ளயே கல்யாணம் செஞ்சுக்குவம்.“

"அந்தக் குடுமிக்காரப் பையனோட உனக்கென்ன சிநேகம்? உனக்கும் அவனுக்கும் என்ன உறவு?"ன்னு சண்டை போடறான். என்னை சர்க்கஸ்ல சேரச் சொல்லி ஒத்தக் கால்ல நிக்கறான் !"

”சரி; நீ என்ன செய்யப் போறே?"

"எனக்கு அவனைப் பிடிக்கலே."

"அழகாத்தானே இருக்கான்?"

"அழகு இருந்துட்டாப் போதுமா? மனசுல அழுக்கா இருக்கானே!"

"அவனை நீ கல்யாணம் செஞ்சிண்டா அப்புறம் நல்லவனாயிடுவான் !"

மூர்த்தியிடமிருந்து இம்மாதிரி ஒரு பதிலை அவள் சற்றும் எதிர்பார்க்கவில்லை. துக்கம் தொண்டையை அடைக்க, "இதுக்குத்தான் இத்தனை நாளும் உள்னோட அன்பாப் பழகினேனா? உன் மேல நான் உயிரையே வெச்சிருந்ததுக்கு இதுதான் முடிவா?" என்று கேட்டாள்.

"நம்ம நட்புக்கு முடிவு கல்யாணமாத்தான் இருக்கணும்னு நான் நினைக்கலே , நீ குஜராத்திப் பெண். நான் பிராம்மணன். எனக்கு வேதம்தான் முக்கியம். ஏதோ வெளியே சொல்லிக்க முடியாத நிர்ப்பந்தத்துல நான் இருந்த ஊரைவிட்டு வரவேண்டியதாப் போச்சு. வந்த இடத்துல எதேச்சையா சந்திச்சோம். அன்பாப் பழகினோம். இப்ப என் வாழ்க்கையில் ஒரு திருப்பம் ஏற்பட்டிருக்கு, கிட்டப்பா புண்ணியத்தாலே மறுபடியும் எனக்கு வேதம் ஓதற வாய்ப்பு கிடைச்சிருக்கு."

"நீ வேதத்தை தொடர்ந்து ஓதணுங்கறதுதான் என்னுடைய ஆசையும். அதுக்கு நான் இடைஞ்சலாயிருக்க விரும்பலே, எங்க அப்பவுக்கப்புறம் எனக்கு எந்தப் பாதுகாப்பும் இல்லயே; உன்னைக் கலியாணம் செஞ்சுட்டா என் வாழ்க்கை நிம்மதியாயிடும்னு நினைச்சேன், பரவாயில்லை; என் சுய கலத்துக்காக உன் எதிர்காலத்தைப் பாழடிக்கறது நியாயமாப் படலே. நீ வேதம் படிச்சுப் பெரியவனா ஆகணுங்கறதுதான் என் ஆசையும்."

"நீ அப்படியும் பேசற; இப்படியும் பேசறே! ஏன், எதனாலன்னு புரியலை. ஆச்சரியமாயிருக்கு."

"இப்ப என் உடம்பிலே உன் ரத்தமும் சேர்ந்து ஒடுதே! ஒரு வேளை அதனால இருக்குமோ, என்னவோ?"

"அப்படின்னா நீ?..."

"எனக்கு ஒண்ணும் புரியலே. என்ன செய்யறதுன்னும் தெரியலே."

"பயப்படாதே அந்த சர்க்கஸ்காரனை நல்லவனா மாத்திடலாம். நீயும் சர்க்கஸ்ல சேர்ந்துடு, இது வரைக்கும் அவனுக்கு லைஸன்ஸே கொடுக்கலையாம். கிட்டப்பாதான் லைஸன்ஸ் கொடுக்கணுமாம். அவரே சொன்னார். அவர்தான் இந்த ஊர் முனிசபல் சேர்மனாம். மழை இல்லாம பயிர் பச்சை யெல்லாம் வாடி ஜனங்க ரொம்ப கஷ்டப்படறாங்களே, இந்த சமயத்துல சர்க்கஸுக்கு அனுமதி கொடுத்தா ஜனங்ககிட்ட இருக்கிற கொஞ்சநஞ்சம் காசும் போயிடுமேன்னு யோசிக்கிறாராம்”

"அப்படியா? லைஸன்ஸ் கொடுக்கலேன்னா அந்த ஆள் தாக்குப்பிடிக்க முடியாம ஊரைவிட்டே ஓடிடுவான் !"

"சே, பாவம் ! சர்க்கஸ் மிருகங்களெல்லாம் பட்டினி கிடந்து செத்துப் போயிடுமே! அத்தனைக்கும் தீனி போட பணத்துக்கு எங்க போவான்?" என்று பரிதாபப்பட்டான் மூர்த்தி.

"உன்னை என்னால புரிஞ்சுக்கவே முடியலே, மூர்த்தி! அந்த ஆள் உனக்குக் கெடுதல் நினைக்கிறான். நீயானா அவனுக்கு நல்லது நினைக்கிறே!"

"நமக்கு இன்னொருத்தர் தீங்கு நினைச்சாலும் நாம அவங்களுக்கு நல்லதுதான் செய்யணும். அப்படி செய்யலேன்னா குறள் படிச்சு என்ன பிரயோஜனம்? சேர்மனிடம் பேசி எப்படியும் லைஸன்ஸ் வாங்கிக் கொடுக்கப் போறேன். அந்த சர்க்கஸ் ஆளை கிட்டப்பா வீட்டுக்கு இப்பவே வரச் சொல்லு. நான் அங்கயே அவனுக்காக காத்துண்டிருப்பேன்" என்றான்.

இந்தச் சமயம் அருகிலிருந்த வைக்கோல் போரிலிருந்து வந்த பாம்பைக் கண்டு பதறிப் போன மஞ்சு "ஐயோ" என்று அலறினாள். பெரிய கல் ஒன்றை எடுத்து அதன் மீது எறியப் போனாள்.

“வேணாம். பாம்பை அடிக்காதே, அது பாவம்" என்று தடுத்தான் மூர்த்தி.

"சும்மாவிட்டா, அப்புறம் அது நம்மையே கடிக்கும்."

"கடிச்சா நான் மந்திரம் போட்டு விஷத்தை இறக்கிடறேன். கனபாடிகள் எனக்கு கத்துக் கொடுத்திருக்கார்."

"இந்த முர்த்தி ஏன் இவ்வளவு நல்லவனாயிருக்கார்! கடிக்க வர பாம்பை அடிக்கக் கூடாது என்கிறார். கொல்ல வர ஆளுக்கு நல்லது செய்யப் போறேங்கறார். என்னால இவரைப் புரிஞ்சுக்கவே முடியலே !" என்று மனதுக்குள் வியந்தாள். மஞ்சுவின் உள்ளத்தில் மூர்த்தி விசுவரூபமாய் உயர்ந்து நின்றான்.

மூர்த்தி எதிரில் வந்து நின்றதைக்கூட கவனிக்காமல் கிட்டப்பா சுதேசமித்திரனில் மூழ்கியிருந்தார். ஒருமுறை கனைத்து, தான் வந்திருப்பதை சூசகமாகக் காட்டிக்கொண்டான் மூர்த்தி.

"அட, நீயா! வா" என்றவர் "பேப்பர்ல பாத்தயா? பஞ்சம் வந்தாலும் வரும்னு போட்டிருக்கான். இப்படி மழையே இல்லாமப்போனா அப்புறம் ஜனங்க ரொம்பக் கஷ்டப்படுவா. கனபாடிகளை அழைச்சுண்டு வந்து விராடபர்வம் வாசிக்கச் சொல்லலாமான்னு யோசிக்கிறேன்" என்றார் கிட்டப்பா.

"அவருக்கு உடம்பே சரியில்லையே. உள்ளூர்லயே விராட பர்வம் வாசிக்கணும்னு ஊரார் வந்து கேட்டுண்டாளாம்; முடியாதுன்னு சொல்லிட்டாராம். பாகீரதி சொன்னாள்" என்றான் மூர்த்தி.

"பாவம், இந்த வயசான காலத்துல பாகீரதி விசாரமே பாதி அவருக்கு" என்றார் கிட்டப்பா.

"உங்க கிட்ட, ஒரு சின்ன உதவி…"

"முதல் முதல் உதவி கேக்கறே, பெரிய உதவியாத்தான் கேளேன்!" என்றார் கிட்டப்பா.

"இதுவே பெரிய உதவிதான். சர்க்கஸுக்கு லைஸன்ஸ் இல்லேன்னு சொல்லிட்டேளாம். பாவம், யானை சிங்கமெல்லாம் பட்டினியாக் கிடக்கறதாம். தீனி வாங்கிப் போட பணமில்லாம திண்டாடறானாம் அந்த சர்க்கஸ் ஆள். நீங்கதான் காப்பாத்தணும் அவனை" என்றான் மூர்த்தி.

"என்ன சொல்ற நீ1 அந்த துஷ்டனுக்கா உதவி பண்ணச் சொல்றே?"

"இப்ப நீங்க உதவி பண்ணலேன்னா அத்தனை பேரும் பட்டினி கிடந்து சாகவேண்டியதுதான். சர்க்கஸ் கூடாரமே காத்துல பறந்திண்டிருக்கு" என்றான்.

அதோ, அவனே வரான் போலிருக்கே!"என்றார் கிட்டப்பா.

வந்தவன், "ஐயா என்னைக் காப்பாத்துங்க" என்று உணர்ச்சிவசமாகச் சொல்லிவிட்டு கிட்டப்பாவின் காலில் விழுந்தான்.

"முதல்ல இவர் காலில் விழு. அப்புறம்தான் மற்றதெல்லாம்…" என்றார் கிட்டப்பா.

"தவறா நினைச்சு கோவத்துல ஏதேதோ பேசிட்டேன். எவ்வளவு நல்லவர்னு இப்பத்தான் தெரியுது. என்னை மன்னிச்சுடுங்க மூர்த்தி!" என்று மூர்த்தியின் காலில் விழப் போனான்.

"வேணாம். வேணாம், பெரியவருக்குப் பண்ணாப் போதும்" என்று ஒதுங்கி நின்றான் மூர்த்தி.

"உன் பேர் என்னப்பா சொன்னே?" என்று கேட்டார் கிட்டப்பா.

"துக்காராம்…" என்றான்.

"அவர் ரொம்ப சாதுவாச்சே! அவர் பேரை வெச்சுண்டு நீ நேர்மாறா நடந்துக்கறயே" என்றார் கிட்டப்பா,

அவன் தலைகுனிந்து வெட்கப்பட்டான்.

"இனிமே குடிக்கமாட்டயே?"

"சத்தியமா குடிக்கமாட்டேங்க" என்றான்.

"சத்தியத்தை மீறிக் குடிச்சயானா தொலைச்சுப்புடுவேன், ஜாக்கிரதை ஒரு நல்ல நாளாப் பார்த்து சர்க்கஸை ஆரம்பிச்சடு. டிக்கட் ரேட்டைக் குறைச்சு வை, லைஸன்ஸ் தரச் சொல்றேன்" என்று சொல்லி அனுப்பினார் கிட்டா.

அந்த மகிழ்ச்சியில் அவன் எதுவும் பேசத் தோன்றாமல் வாயடைத்து நின்றான்.

”இன்னும் ஏன் நிக்கறே? புறப்படு" என்றார் கிட்டப்பா.

"உங்க உதவிக்கு நான் எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியலே. என் நன்றிக்கு அடையாளமா ஏதாவது…"

"என்ன செய்யப்போறே?"

"ஒரு யானையே வேணுமானாலும் கொடுத்துடறேங்க."

"ஏன்? அதைக் கட்டித் தினிபோட முடியலையோ? என் தலைல கட்டிடலாம்னு பாக்கறயா! வேணாம்; நன்றி மனசுல இருந்தாப் போதும். முக்கியமா மூர்த்திக்குத்தான் நீ நன்றி செலுத்தணும். மூர்த்திகிட்ட மரியாதைய நடந்துக்க. அது போதும்" என்றார்.

"அடுத்த ஞாயிற்றுக்கிழமையே ஆரம்பிச்சடறேன். நீங்க ரெண்டு பேரும்தான் வந்து தொடங்கி வைக்கணும்!" குரலில் மகிழ்ச்சி பொங்கக் கூறிக்கொண்டே கையெடுத்துக் கும்பிட்டான் துக்காராம்.