Chapter 12
பாடசாலையை மறந்து, வேதத்தைத் துறந்து, தஞ்சைக்குப் புறப்பட்டு வந்த மூர்த்தி இங்கே வந்தபின் எந்த முடிவுக்கும் வர முடியாமல் சஞ்சலப்பட்டான்.
மஞ்சு அழகாக இருந்தாள். இவனிடம் அளவு கடந்த பற்றும் பாசமும் காட்டினாள். ஆயினும் மூர்த்தி மட்டும் அவளிடம் ஒட்டுறவு ஏதுமின்றி, தாமரை இலைத் தண்ணீர் போல் பழகிக் கொண்டிருந்தான்.
"மஞ்சு, நீ என்னை வெள்ளத்திலேருக்து மீட்கலேன்னா நான் அன்னைக்கே செத்துப் போயிருப்பேன். அதுக்காக உனக்கு நன்றி சொல்லிட்டுப் போகலாம்னுதான் வந்தேன். நீ என்மீது வெச்சிருக்கும் உண்மையான அன்பைப் பார்த்தப்புறம் உன்னோடயே தங்கிடலாம்னு தோணித்து. தங்கிட்டேன். ஆனாலும் என்னோட ஆசாரம், அனுஷ்டானம், வேதம் இவ்ளவும் உனக்கும் எனக்கும் நடுவே குறுக்குச் சுவர் போட்டிருக்கு. உன்னைத் தொடவோ, நீ சமைத்துப் போடுவதைச் சாப்பிடவோ, மனசு ஒப்பலை. நீயோ என்னைப் பெரிசா நம்பிண்டிருக்கே. நான்தான் ஒண்ணும் புரியாம குழம்பிண்டிருக்கேன்" என்றான் மூர்த்தி.
"உன்னை நம்பிப் பெரிய மனக்கோட்டையெல்லாம் கட்டிட்டேன். நீ குடுமியை எடுக்காம நாளைக்கடத்தறதிலிருந்தே சந்தேகப் பட்டேன்.“
வேதத்தைப் பாதில விட்டுட்டு வந்த மாதிரி என்னையும் விட்டுட்டுப் போயிடுவியான்னு?" நான் அன்னைக்கே கேட்டேன். நான் சந்தேகப்பட்ட மாதிரிதான் நடக்குது."
"சரி, இப்ப எனக்கு ரொம்பப் பசியாயிருக்கு, முதல்ல ஆனந்தா லாட்ஜ் வரைக்கும் போயிட்டு வந்துடறேன். அப்புறம் விவரமாப் பேசிக்கலாம்" என்றான் மூர்த்தி.
"நான் இன்னும் கொஞ்ச நேரத்துல வெளியே கிளம்பிடுவேன். அப்பாவை அழைச்சுட்டு வித்தை செய்யப் போறேன்."
”எங்க?"
"சிவகங்கா கார்டன் பக்கத்துல இன்னைக்குப் புது மாதிரி வித்தை செய்யப் போறேன். இதுவரைக்கும் நீ பார்க்காத ஐட்டம்!"
"நான் அங்கயே வந்து பார்த்துடறேன்!" என்று சொல்லிப் புறப்பட்டான் மூர்த்தி.
“காசு வெச்சிருக்கயா?"
"என் அப்பா கொடுத்துட்டுப்போன காசெல்லாம் தீர்ந்து போச்சு. ஒரே ஒரு அரையணாத்தான் மிச்சம்!"
“அஞ்சு ரூபா தறேன், எடுத்துட்டுப்போ..!"
"வேணாம்; உனக்கு ஏற்கனவே நிறையக் கடன்பட்டிருக்கேன். நன்றிக்கடன் ! எப்படித்தான் தீர்க்கப் போறனோ?"
"அரையணால வயிறு ரொம்பிடுமா? ரெண்டே ரெண்டு இட்லிதானே கிடைக்கும். அது எப்படிப் பத்தும்? இந்தா காசு!"
“வேணாம். கழுத்திலே எங்கம்மாவின் சங்கிலி இருக்கு. அதை வித்துடப் போறேன்…"
"அந்தப் பணமும் தீர்த்து போச்சுன்னா அப்புறம் என்ன செய்வே?"
“அது ஆண்டவன் கவலை!"
மூர்த்தி கழுத்துச் சங்கிலியைத் தொட்டுப் பார்த்தான். அம்மாவின் நினைவு தோன்ற, கண் கலங்கியபடி ஐயன்கடைத் தெரு நோக்கிப் புறப்பட்டான். மெயின் ரோடைப் பிடிக்க குறுக்குச் சந்தில் புகுந்து நடந்தபோது எதிரில் காசி யாத்திரை போகும் கலியாணக் கும்பல் ஒன்று வந்து கொண்டிருந்தது. மாப்பிள்ளையைச் சூழ்ந்து ஒரு பெரிய கூட்டம். நாதசுரக்காரர் வாத்தியத்தை தாராளமாய் வீசி வாசிக்க முடியாத அளவுக்குக் குறுகலான சந்து.
பரதேசிக்கோல மாப்பிள்ளைக்கு குடை பிடித்துக் கொண்டு நின்ற கிட்டா மீது மூர்த்தியின் பார்வை விழுந்தது.
"அடl இவன் எப்படி வந்தான் இங்கே?" என்ற ஆச்சரியத்துடன் அவனை அணுகி "கிட்டா !" என்று கூப்பிட்டான் மூர்த்தி.
மூர்த்தியைக் கண்டதும் கிட்டாவுக்குச் சந்தோஷம் தாங்க வில்லை. ‘அடடே’ என்று ஓடி வந்து மூர்த்தியைக் கட்டிக் கொண்டான்!
"மூர்த்தி! நீ இன்னும் இந்த ஊர்லதான் இருக்கயா? மத்தியானத்துக்கு மேல உன்னைத் தேடிப் பார்க்கணும்னு நினைச்சுண்டிருந்தேன். தெய்வமாப் பார்த்து உன்னை இங்கே கொண்டு வந்து விட்டிருக்கு!" என்றான் கிட்டா.
"மாப்பிள்ளை யாருடா? உனக்கு என்ன உறவு?"
"எனக்கு மாமா பிள்ளை. டாக்டருக்குப் படிக்கிறான். அதோ உயரமா வராறே, அவர்தான் எங்க மாமா. வெள்ளிக் கடை கிட்டப்பான்னா தஞ்சாவூர்ல தெரியாதவா இருக்கமாட்டா. ரொம்பத் தமாஷாப் பேசுவார். வேதம் படிக்கிறவாளைக் கண்டா ரொம்பப் பிடிக்கும். மத்தியானமா உனக்கு அறிமுகப்படுத்தி வைக்கிறேன். நீ இப்ப என் கூட வா. கலியாண வீட்லயே சாப்பிடலாம். மற்றதெல்லாம் அப்புறம் பேசிக்கலாம்" என்றான் கிட்டா.
"உனக்குத்தான் மாமா உறவு. எனக்கும் இந்தக் கலியாணத்துக்கும் என்ன சம்பந்தம்? எனக்கு சங்கோஜமா இருக்குடா. நான் வரலே, என்னை விட்டுரு" என்றான் மூர்த்தி.
"அசடாட்டம் பேசாதே, உன்னை நான் விடப் போறதில்லே. நாலு நாளைக்கும் நீ என்னோடதான் இருக்கப்போறே, ஆமாம்.“
"கனபாடிகள் செளக்கியமாயிருக்காரா? என் பேர்ல கோபமா இருக்காரா?”
"தினமும் உன்னை நினைச்சு நினைச்சு புலம்பிண்டிருக்கார். சதா உன் ஞாபகம்தான். காவேரிப்பாக்கம் பசு கன்னு போட்டிருக்கு தெரியுமோ? சேங்கன்னு! அதுக்கு உன் பேரைத்தான் வெச்சிருக்கோம்."
"என் பேரா? எதுக்கு என் பேரை வெச்சீங்க?"
"பாகீரதிதான் உன் பேரைவைக்கணும்னு ஆசைப்பட்டா. உன் பெட்டியைக் குடைஞ்சு திருக்குறள் புஸ்தகமும் பட்டு வேட்டியும் கொடுத்தனுப்பியிருக்கா. அத்தோட உனக்கு ஒரு தபால் கொண்டு வந்திருக்கேன். கவர்!"
“கவரா? யார் எழுதியிருக்கா?"
"தெரியலே. ரிஷிகேசத்துலேந்து வந்திருக்கு உங்கப்பாவா இருக்குமோ?"
அவசரம் அவசரமாய் இருவரும் கலியாண வீட்டுக்குப் போனார்கள். போனதும் கிட்டா எடுத்துக் கொடுத்த கடிதத்தை வாங்கிப் பிரித்தான் மூர்த்தி. அப்பாதான் எழுதியிருந்தார்:
சிரஞ்சீவி மூர்த்திக்கு ஆசீர்வாதம்.
க்ஷேமம்.க்ஷேமத்துக்கு எழுதவும். கனபாடிகளை நான் விசாரிச்சதாச் சொல்லவும். கனபாடிகள் எனக்கு ஆப்த நண்பர். உன் எதிர்காலத்தை அவரிடம் ஒப்படைத்துவிட்டு வந்திருக்கேன். அவரே உனக்கு ஏற்ற பெண்ணாகத் தேர்ந்தெடுத்துக் கலியாணம் செய்து வைப்பார். அவர் சொல்படி நடந்துகொள்.
அம்மா சங்கிலியை ஒருபோதும் கழுத்தைவிட்டு எடுக்காதே. அந்தச் சங்கிலி ரூபமாய் உன் தாயார் உன்னை ஆசீர்வதிச்சிண்டிருப்பாள்,
பிராம்மணனாகப் பிறந்தவன் வேதாத்தியயனம் செய்வது முக்கியம், வேதம் தெய்வத்தின் சுவாசம். அதை ஒரு நாளும் மறக்காதே! நேற்று இங்கே ஆசிரமத்தில் வேதத்தின் பெருமைகள் பற்றி சுவாமிஜி ஒருவர் ரொம்ப அழகாகப் பேசினார்.
‘வேதம் ஒதுகிறவன் தினமும் அதை அப்யாசிக்க வேண்டும். எப்படி ஒரு மருந்தை உபயோகிக்காமல் கொஞ்ச நாள் வைத்திருந்தாலும் அதன் வீரிய சக்தி குறைந்து விடுகிறதோ, அப்படியே வேதத்தை அப்யாசம் பண்ணாமலிருந்தாலும் அந்த மந்திரங்களின் சக்தி குறைந்துவிடும்’ என்று சொன்னார்.
இப்படிக்கு,
பரசுதீட்சிதர்.
கண்களில் கண்ணீர் தளும்ப கடிதத்தை மடித்துப் பைக்குள் வைத்துக்கொண்டான். அடுத்தபடியாக திருக்குறள் புத்தகத்தை எடுத்துப் புரட்டினான்.
பாகீரதி அதற்கு அழகாக அட்டை போட்டு வைத்திருந்ததைப் பார்த்தபோது ‘எதுக்கு இந்த அட்டை? அவசிய மில்லையே!’
ஒட்டப்பட்டிருந்த அட்டையை மெதுவாகப் பிரித்தான் அதிலிருந்து பத்து ரூபாய் நோட்டுகள் மூன்று கீழே உதிர்ந்தன. நல்லவேளை கிட்டா பார்க்கவில்லை.
"மூர்த்தி கொஞ்சம் இங்கயே இருக்கயா? இதோ உள்ளே போய் கொஞ்சம் சர்பத் கொண்டு வந்துடறேன்" என்று சொல்லிவிட்டுப் போனவன் இன்னும் வரவில்லை.
அட்டையை முழுதாகப் பிரித்தபோது உள் பக்கத்தில் வாடிப்போன மல்லிகைப் பூ ஒன்று ஒட்டிக் கொண்டிருந்தது.
“மூர்த்தி உனக்காக நான் இந்தப் பூவைப்போல் வாடிக் கொண்டிருக்கிறேன்.” என்று எழுதி கையெழுத்திட்டிருந்தாள் பாகீரதி.

