Chapter 10
நூல் நூற்றுக் கொண்டிருந்த கனபாடிகளின் மனம் தக்ளியில் லயிக்காமல் சஞ்சலப்பட்டுக் கொண்டிருந்ததால் நூலிழை ‘பட்’ ‘பட்’டென்று அறுபட்டுக் கொண்டிருந்தது.
" ’பாய்காட்’னா என்ன பண்ணப் போறாளாம்?" என்று கேட்டாள் கெளரி அம்மாள்.
"எல்லாருமாச் சேர்ந்து நம் வீட்டு விசேஷங்களுக்கு வராமல் நம்மை ஒதுக்கி வச்சுடுவா, அதுக்குப் பேர்தான் பாய்காட். ஊராருக்கு இங்கிலீஷ்ல தெரிஞ்சவார்த்தை அது ஒண்ணுதான்போல இருக்கு ஹ்ம்…" வருத்தத்தோடு சிரித்தார் கனபாடிகள்.
"அப்படி என்ன மகாபாவம் பண்ணிட்டயாம் நீ?"
“பாகீரதி கூந்தலை எடுக்காம இருக்காளே, அதுக்குத் தான்.. “
"அவாவா வீட்ல இப்படி ஒண்ணு நடந்திருந்தா அப்பத்தான் தெரியும் அந்தக் கஷ்டம். அது சரி; இத்தனை பேரும் பேசாம இருந்துட்டு இப்ப என்ன திடீர்னு பாய்காட்?" என்று கேட்டாள் கெளரி,
"கோபத்துக்குக் காரணம் வேற. நான் சொன்ன தீர்ப்பு, சிலபேருக்குப் பிடிக்கலை. இதுக்கு என் பேரில் குரோதம் பாராட்டிப் பழி வாங்க நினைக்கிறது சரியா…”
"அந்தக் கடுக்கன் ஆசாமிதான் ரொம்பத் துள்றான்." என்றான் கிட்டு.
"யாருடா அந்த கடுக்கன்? அவனுக்கென்ன அவ்வளவு ஆத்ரம்?"
"நேத்து உங்களையே எதிர்த்து கேள்வி கேட்டானே ஒருத்தன், அந்த அயோக்கியன் தான். அவன் நாசமாப் போயிடுவான்."
“கிட்டா யாரையும் சபிக்காதே! நீ வேதம் ஒதுகிறவன். சாபம் கொடுத்தா நிஜமாவே பலிச்சிடும்."
"நன்னாப் பலிக்கட்டும்; உங்களை எதிர்த்துப் பேசலாமா அவன்!"
"கெளரி ! எதுக்கும் நாம் முன்னேற்பாடா இருந்துடறது நல்லது. கடைசி நேரத்துலே நம்மாத்து திவசத்துக்கு யாரும் வராம இருந்தாலும் இருந்துடுவா. அப்புறம் காரியம் கெட்டுப் போயிடும். பித்ருகர்மாக்களை விட்டுட முடியுமா? அதுவும் தாயார் சிராத்தமாச்சே!"
"கவலைப்படாதே, அண்ணா நாளைக்கே ரெண்டு பேரும் சிதம்பரம் போயிட்டாப் போச்சு!" என்றாள் கெளரி.
"திருவிசகல்லூர் ஸ்ரீதர ஐயர்வாள் கதை தெரியுமோ, உனக்கு?" என்று கேட்டார் கனபாடிகள்.
"அதென்ன கதை? சொல்லு!"
"அந்தக் காலத்துல ஸ்ரீதர ஐயர்வாள்னு ஒருத்தர். அவர் கதையும் இப்படித்தான். அந்த ஊர் பிராமணாளெல்லாம் சேர்ந்துண்டு அவரை ‘பாய்காட்’ பண்ண ஆரம்பிச்சா. ‘நீங்க திவசம் பண்றதை ஒரு கை பார்த்துடறோம்’னு ஆவேசமா தடியும் கையுமா அவர் வீட்டைச் சுத்தி நின்னுண்டு திவசத்தன்னைக்கு ஒருத்தரையும் உள்ளே போக விடாமல் தடுத்துட்டா."
"அப்படி என்ன குத்தம் பண்ணிட்டார் அவர்?"
"யாரோ ஒரு ஹரிஜன், ஐயர்வாள் ஆற்று வெள்ளத்தைக் கடந்து போறதுக்கு ஒத்தாசை பண்ணியிருக்கான். அதுக்கு நன்றிக்கடனா அவர் அவனுக்குத் தன் வீட்டுத் தோட்டத்துல வைத்து சாப்பாடு போட்டிருக்கார், அது பெரிய பாவமாம்! அதுக்காக திவசத்தை நடத்த முடியாமத் தடுத்துட்டா. மணி பத்தாச்சு, பன்னிரண்டாச்சு, ஒண்ணாச்சு- சொல்லி வெச்சிருந்த பிராமணாள் யாருமே வரலை. ஐயர்வாள் கலங்கிக் கண்ணீர் வடிச்சு, மனம் உருகி தெய்வத்தைப் பிரார்த்தனை பண்ணிண்டார். அதனால ஆண்டவனே பிராமணர்கள் ரூபமா அவர் வீட்டுக்குள் பிரத்யட்சமாகி திவசத்தை நடத்தி வச்சட்டுப் போயிட்டார். வீட்டைச் சுத்தி காவல் காத்துண்டிருந்தவாளுக்கு ஒரே ஆச்சரியம்! அவர்கள் மட்டும் எப்படி உள்ளே போனாள்னு ஒருத்தரை ஒருத்தர் பார்த்து விழிச்சுண்டு நின்னா! பகவானை யாரால தடுக்க முடியும்? இவர்கள் கண்ணுக்கு அவன் தெரிவானா?
உண்மையா நடந்தது இது.
இன்னைக்கும் ஒவ்வொரு கார்த்தி மாசமும் திருவிசை நல்லூார்ல கார்த்திகை அமாவாசை தொடங்கி பத்து நாள் தடபுடலா உற்சவம் நடக்கிறது. பாம்பு பஞ்சாங்கத்தை வேனுமானா எடுத்துப் பார். அதில் கார்த்திகை அமாவாசை திருவிசைகல்லூர் ஸ்ரீதர ஐயர்வாள் உற்சவம்னு போட்டிருக்கும்" என்றார்.
"இந்தக் கலியுகத்துலகூட இப்படியெல்லாம் நடக்கிறதா என்ன? நம்ப முடியலையே!" என்றாள் கெளரி.
" நடந்திருக்கே சமீபத்துலதான். இருநூறு வருஷம்கூட ஆகல்லே."
"அந்த மாதிரியெல்லாம் இப்ப நடக்காது. கலி முத்திப் போச்சு. பேசாம நாளைக்கே இரண்டு பேரும் சிதம்பரத்துக்குக் கிளம்பிப் போய் காதும் காதும் வெச்சாப்பல திவசத்தை முடிச்சுடலாம், வா" என்றாள் கெளரி.
"ஒருவேளை இவா சிதம்பரத்துக்கும் வந்து கலகம் பண்ணுவாளோ, என்னவோ..?"
"இவா ஜம்பமெல்லாம் அங்கே சாயாது. எங்க பேச்சை யாரும் தட்டமாட்டா" என்றாள் கெளரி.
"எப்படிச் சொல்றே?."
"ஆயிரம் ஐந்நூறுன்னு ஒவ்வொருத்தருக்கும் கடன் கொடுத்து வைச்சிருக்காரே, இவர். இந்தக் காலத்துல யார் கடன் கொடுப்பா? எல்லாருமே எங்களுக்கு தாட்சண்யப்பட்டவா தான். எங்க பேச்சை யாரும் மீற மாட்டா."
"இவாளும் அந்த அளவுக்குப் போவான்னு தோணல்லே. ஏதோ இப்ப ஒரு வேகம்."
கமலா குறுக்கிட்டு "எனக்கு ஒண்ணு தோண்றது அத்தை எல்லாரும் காஞ்சிபுரத்துக்கே போயிட்டா என்ன?" என்றாள்.
"அதெல்லாம் சரியா வராது கமலா, உனக்கு அந்த வீட்ல உரிமை இருக்கலாம். எனக்கு அது சம்பந்தி வீடுதானே? அவர்கள் வீட்டிலே போய் திவசம் பண்றேன்னு சொல்றது நியாயமில்லே. சுப காரியமாயிருந்தால் பரவாயில்லை. இது அப்படி இல்லையே !" என்றார் கனபாடிகள்.
"அது சரி அண்ணா ! இத்தனை நாளா நானும் கேட்ட தில்லை. நீயும் சொன்னதில்லை. எவ்வளவோ சாஸ்திரம் படிச்சிருக்கே, யாகம் பண்ணிருக்கே, சிரோமணிப் பட்டம் வாங்கிருக்கே. வேதவித்தாயிருக்கே. இவ்வளவும் இருந்தும் நீயே பாகீரதியை தலைமயிரோட இருக்க எப்படி சம்மதிச்சேங்கறதுதான் ஆச்சரியமாயிருக்கு" என்றாள் கெளரி.
"தசரதர் கைகேசிக்கு வரம் கொடுத்த மாதிரி நானும் பாகீரதியின் அம்மாவுக்கு ஒரு சந்தர்ப்பத்தில் சத்தியம் பண்ணிக் கொடுத்துட்டேன். அந்த சத்தியம்தான் என்னை இப்படி சிரமப்படுத்தறது.
"பாகீரதியைப் பத்து மாதம் சுமந்து பெற்றெடுத்தவளாச்சே அவள்.
“நான் கண் மூடறதுக்கு முன்னால பாகீரதிக்கு ஒரு நல்ல இடமாப் பார்த்து கலியாணத்தைப் பண்ணி முடிச்சுடுங்க. அப்பத்தான் நிம்மதியாப் போவேன்"னு என்னிடம் சொல்லிக் கண்ணீர் விட்டாள்.
"இப்ப திடீர்னு அவ்வளவு பணத்துக்கு நான் எங்கே போவேன்?"னு அவளிடம் கேட்டேன்.
"என் சீதன சொத்தையெல்லாம் வித்துடுங்க. பாகீரதி கலியாணம்தான் முக்கியம்" என்றாள். அவசரம் அவசரமா ஒரு பையனைத் தேடிப் பிடிச்சு பாகீரதி கல்யாணத்தை முடிச்சேன். பாவம், பாகீரதி கொடுத்து வைக்கலே. ஒரு வாரத்துக்கெல்லாம் அவள் மாங்கல்யத்தை இழந்துட்டா. அடுத்த வருஷமே பாகீரதியின் அம்மா மாடு முட்டிக் கீழே விழுந்தவள் தான். அப்புறம் அவளும் எழுந்திருக்கலே, அந்த சமயத்துலதான் ஒரு நாள் "பாகீரதி சின்ன வயசுப் பெண். அவளை அலங்கோலப் படுத்திடாதீங்க!" என்று என்னைப் பார்த்து கெஞ்சி, சத்தியம் பண்ணிக் கொடுக்கச் சொன்னாள். செய்து கொடுத்துட்டேன் !"
இந்தச் சமயம் அங்கே வந்த கமலா "அத்தை உங்களை பாகீரதி உள்ளே வரச் சொல்றா?" என்றாள்.
"எதுக்கு?..."
"உங்களுக்குப் பிடிக்கும்னு ரொம்ப ஆசையா தவலை அடை பண்ணி யிருக்கா, உங்க ஆசை மருமாள்!" என்றாள் கமலா.
"நெய் வாசனை மூக்கைத் துளைக்கிறதே!" என்று சொல்லிக்கொண்டே அத்தை சமையலறையை நோக்கிப் போனாள்.
அத்தை அந்தப் பக்கம் போனதும் "அப்பா ! மூர்த்தி கடுதாசி எழுதியிருக்கான்னு சொன்னயே, அதைக் கொஞ்சம் கொடுங்க பார்க்கலாம்" என்றாள் கமலா.
"நீ இன்னும் பார்க்கலையா அதை? இங்கதான் ராமாயண புஸ்தகத்துல வச்சிருந்தேன், கொஞ்சம் இரு" என்று கூறி அந்தப் புத்தகத்தை எடுத்துத் தேடினார். கடிதத்தைக் காணவில்லை, இதில்தானே வச்சிருந்தேன்!" என்றார்.
"இந்தா, இதோ இருக்கு" என்று தன் கையிலிருந்த கடிதத்தைக் கனபாடிகளிடம் நீட்டினாள் கமலா.
"இது எப்படி உன் கைக்கு வந்தது !" என்று ஆச்சரியப் பட்டார் கனபாடிகள்.
"கூடத்துல படத்துக்குப் பின்னால் இருந்தது?"
"நான் அங்கே வைக்கலையே?"
"சரி; நீங்களும் வைக்கலே, நானும் வைக்கலே. அப்புறம்..?"
"பாகீரதி வைத்திருப்பாங்கறயா?"
"ஒரு வேளை மூர்த்தி கடுதாசிதானே, படிச்சுப் பார்க்கலாம்னு எடுத்திருக்கலாம்" என்றாள் கமலா.
"மூர்த்தி கடுதாசில இவளுக்கு என்ன அத்தனை அக்கறை என்னைக் கேட்காமே, எனக்குத் தெரியாம எதுக்கு எடுக்கணும்? அப்புறம் படத்தின் பின்னால எதுக்குக் கொண்டுபோய் மறைக்கணும்?" என்று எண்ணி மனதுக்குள்ளேயே குழம்பினார் கனபாடிகள்.
"எதுக்கு முர்த்தி உங்ககிட்ட சொல்லிக்காமப் போறான்? போனவன் யாரும் என்னைத் தேடிண்டு வர வேணாம்னு லெட்டர் எழுதறான்?" என்றாள் கமலா.
"என்னைக் குழப்பாதே கமலா நேத்துலேந்து எல்லாமாச் சேர்ந்து நானே ரொம்பக் குழம்பிப் போயிருக்கேன். எனக்கு மண்டையே வெடிச்சுடும்போல இருக்கு. பூர்வ ஜன்மத்துலே என்ன பாவம் பண்ணினேனோ, இப்படியெல்லாம் அனுபவிக்கிறேன். முதல்ல நான் நாளைக்கே கெளரியோடு சிதம்பரத்துக்குப் போய் திவசத்தை முடிச்சுண்டு வந்துடறேன். அதுவரைக்கும் நீதான் பாகீரதியைப் பார்த்துக்கணும்" என்றார் கனபாடிகள்.
திடீரென்று வாசலில் பிராமணர்கள் ஏழெட்டு பேர் கூட்டமாக வந்து நிற்பது தெரிந்தது.
"கிட்டா ! வாசல்ல யாரோ வந்திருக்கா, போய்ப் பாரு" என்றார் கனபாடிகள்.
“அவாதான் ! அந்த ‘பாய்காட்’ கூட்டம்தான் வந்திருக்கு" என்று சொல்லிக்கொண்டே வாசலுக்கு விரைந்தான் அவன். பின்னோடு கனபாடிகளும் போனார். அந்தக் கடுக்கன் ஆசாமியை இரண்டு பேர் திண்ணையில் கொண்டு வந்து கிடத்தினார்கள். அவனுக்கு மூச்சு மட்டும் வந்து கொண்டிருந்தது.
”கனபாடிகளே, இவனைப் பாம்பு கடிச்சுட்டுது. நீங்கதான் மந்திரம் போட்டுக் காப்பாத்தணும்" என்று கூக்குரலிட்டது அந்தக் கும்பல்.
"பார்த்தயா ! சாபம் கொடுத்தயே, பலிச்சுட்டுது பார்" என்பதுபோல் கிட்டாவைப் பார்த்தார்.
"கடிச்சது என்ன பாம்புன்னு தெரியுமா?" என்று அவர்களிடம் கேட்டார்.
“நல்ல பாம்புதான். அதை அப்பவே அடிச்சுப் போட்டாச்சு!" என்றார் கூட்டத்தில் ஒருவர்.
"த்சு, த்சு பாம்பைக் கொல்லவே கூடாது. மகாபாவம்!" என்று சொல்லிக்கொண்டே தம் அங்கவஸ்திரத்தைச் சட்டென்று எடுத்து அதில் ஒரு பகுதியை நீளமாய்க் கிழித்து மந்திரம் ஜெபித்து ஒன்பது முடிச்சுகள் போட்டார், என்ன ஆச்சரியம் அடுத்தகணமே கடுக்கன் கண் விழித்துப் பார்த்தார் !
"விஷம் இறங்கிடுத்து; இனிமே பயமில்லை; இவரை அழைச்சுண்டு போகலாம்" என்றார் கனபாடிகள்.
கண்களில் கண்ணீர் பெருக அந்தக் கடுக்கன் ஆசாமி கனபாடிகளைக் கையெடுத்துக் கும்பிட்டபடியே "என்னை மன்னிச்சுடுங்க" என்றார்.

