Chapter 13

உள்ளே போன கிட்டா சர்பத் கொண்டு வந்தான்.

"இந்தா, ஐஸ் போட்டிருக்கேன், குடி! இந்த வெய்யிலுக்கு ‘ஜில்’லுனு இருக்கும்" என்றான்.

பரதேசிக்கோலம் நெருங்கி வந்து கொண்டிருப்பதை நாயன ஓசை அறிவித்தது.

"காசி யாத்திரை கிட்டத்துல வந்துடுத்து. மாப்பிள்ளை வாசலுக்கு வரப் போறார். ஆர்த்தி, ஆர்த்தி !" என்று உரத்த குரலில் அவசரப்பட்டார் சாஸ்திரிகள்.

"மூர்த்தி ! ஆபீஸ் போறவாளுக்காக இப்பவே ஒரு பந்தி போடப்போறா. நாம அந்தப் பந்திலேயே உட்கார்ந்துடுவோம்," என்றான் கிட்டா.

"முகூர்த்தம் முடிஞ்சப்புறம் சாப்பிடலாமே!" என்றான் மூர்த்தி.

"மணி பதினொண்ணாயிடும். அது வரைக்கும் பசி தாங்காது. அத்தோட முதல் பந்தி சாப்பாடுதான் ஜோரா யிருக்கும். எப்பவும் பந்திக்கு முந்திக்கணும்; தெரிஞ்சுக்கோ" என்றான் கிட்டா.

இருவரும் பந்தியில் போய் ஒரு மூலையாக உட்கார்ந்து கொண்டார்கள்.

"உங்க மாமாவிடம் என்னை அறிமுகம் பண்ணி வைக்கிறதாச் சொன்னயே!" என்றான் மூர்த்தி.

"ஆகட்டும், முகூர்த்தம் முடிஞ்சதும் கொஞ்சம் ஓய்வா இருப்பார். சமயம் பார்த்துப் பண்ணி வைக்கறேன்" என்று பச்சடியை விரலால் ருசி பார்த்தான் கிட்டா.

"பரிசேஷணம் பண்ணாம சாப்டறது தப்பு இல்லையா?”

"இது ஆபீஸ்கரராள் பந்தி ! இங்க வைதிகம் பார்க்க வேணாம்" என்றான் கிட்டா,

"எனக்கு மறுபடியும் வேத அத்தியயனம் பண்ணணும்னு கொள்ளை ஆசையா இருக்கு !"

"நீதான் வரமாட்டங்கறயே ! என்னைத் தேட வேணாம்னு கனபாடிகளுக்குக் கடுதாசி வேற எழுதிப் போட்டுட்டே ! உன் லெட்டரைப் படிச்சுட்டு அவர் எப்படி தேம்பித் தேம்பி அழுதார் தெரியுமா?"

"வேற எங்கயாவது பாடசாலை இருந்தா சேர்ந்து படிக்கலாம்."

"இந்த ஊர்லயே ஒரு பாடசாலை இருக்கு ! எங்க மாமாதான் அதுக்கு போஷகர். என்கிட்ட ரொம்ப அபிமானம் அவருக்கு. கவலைப்படாதே! நான் சொன்னா நாளைக்கே சேர்த்துடுவார். நீ தான் ஒரு தீர்மானத்துக்கும் வரமாட்டேங்கறயே ! சஞ்சலப்படறயே ! க்ஷண சித்தம் க்ஷணபித்தமா இருக்கயே! இன்னைக்கு வேதங்கறேஒ நாளைக்கு வேணாங்கறே ! முதல்ல மணசை திடப்படுத்திக்கோ…. இன்னொரு ஜாங்கிரி சாப்பிடறயா? எப்படி இருக்கு பார் ரோஜாப்பூ மாதிரி"

"எங்கப்பா கடுதாசி எழுதியிருக்கார்…"

"என்ன எழுதியிருக்கார்?"

" ‘அம்மா சங்கிலியைக் கழுத்தைவிட்டு எடுக்காதே. வேதத்தைப் பாதில நிறுத்தாதே ! கனபாடிகள் பேச்சைத் தட்டாதே’ன்னு முக்கியமா மூணு விஷயம் எழுதியிருக்கார்."

"வேதத்தை விட்டுட்டே! கனபாடிகள் பேச்சைத் தட்டிட்டே! ரெண்டு விஷயம் போச்சு. இன்னும் ஒண்ணுதான் பாக்கி. கழுத்துச் சங்கிலியை விட்டு வெச்சிருக்கே!"

"இப்ப அதையும் வித்துடலாம்னுதான் கடைத் தெருவுக்குப் போயிண்டிருந்தேன். நடு வழியில உன்னைப் பார்த்தேன்…"

"சந்தியாவந்தனம் ஒழுங்காப் பண்றயா? தினம் ஒரு ஆவ்ருத்தியாவது வேதம் சொல்றயா?"

"சத்திரத்துக்குப் பக்கத்துலயே புது ஆறு ஒடறது ! காவேரித் தண்ணிதான். ஸ்நானத்துக்கு அங்க போயிடுவேன். ஜபதபம் எல்லாம் ஆனந்தா லாட்ஜ்ல. வைதிகாளுக்கு ஏத்த மாதிரி வசதியான இடம். மனஸ்லதான் நிம்மதி இல்லே."

"எங்க தங்கியிருக்கே?"

"சத்திரத்துல. என்னை வெள்ளத்துலேந்து காப்பாத்தினாளே, அந்தப் பெண்ணோட!"

"அந்தக் கழைக்கூத்தாடிப் பெண்ணோடயா?" பாயசத்திலிருந்த முந்திரியை விரலால் நெருடினான் கிட்டா.

“ஆமாம்; அவளைப் பார்த்து நன்றி சொல்லிட்டுப் பேசலாம்னுதான் இங்க வந்தேன். குறள் படிச்சுட்டா மட்டும் போதுமா? நன்றி உணர்வை மனஸ்லயே வச்சிண்டிருக்கக் கூடாது. வெளிப்படையா வாய்விட்டுச் சொல்லனும், சமயம் வரப்போ காரியத்துலயும் காட்டணும். இங்க வந்தப்புறம், அவளோட பழகினப்புறம் அவளை ரொம்பப் பிடிச்சுப் போச்சு, அவளும் ரொம்பப் பிரியமா இருக்கா !"

"ம்… ஆசாரம் கெடாம இருந்தா சரி, இன்னும் எத்தனை நாளைக்கு இப்படியே இருக்கப்போற?"

"அதான் தெரியலே. ஒரே குழப்பமா இருக்கு, குடுமியை எடுத்துடச் சொல்றா. எனக்குதான் இஷ்டமில்லே. தட்டிக் கழிச்சுண்டே இருக்கேன். வேதத்தைப் பாதியில விட்டுடவும் மனசு வரலே. அதைத் தொடர்ந்து படிக்கணும்னு ஒரு வேகமே வந்திருக்கு. இன்னைக்கு அப்பா கடுதாசியைப் படிச்சப்புறம் அந்த வேகம் ஒரு வெறியாவே மாறியிருக்கு."

"அவ பேர் என்ன சொன்னே?"

"மஞ்சு… ரொம்ப நல்ல பெண். என்மீது உசிரையே வச்சிருக்கா. எனக்குத்தான் இந்தக் கூத்தாடி வாழ்க்கை பிடிக்கலே. எந்த நேரமும் மனசு ‘வேதம் வேதம்’னு அடிச்சுக்கிறது. தாயைப் பிரிஞ்ச கன்னுக்குட்டி மாதிரி தவிச்சுண்டிருக்கேன். தினமும் ராத்திரி வேளைல சுவாமி வீதிவலம் போறப்போ பிராமணாள் கூட்டமா கணீர்ணு வேதம் சொல்லிண்டு போறதைப் பாக்கறப்போ மனசு கிடந்து அடிச்சுக்கிறது. ஐயோ! இந்த உத்தமமான வேதத்தை விட்டுட்டு அர்த்தமில்லாத அசட்டு வாழ்க்கை நடத்தறமேன்னு எனக்கு நானே ஏங்கிப் போறேன். ‘சீக்கிரமே உன்னைப் பிரிஞ்சு வேதம் படிக்கப் போறேன்’னு ஒருநாள் மஞ்சுவிடமே சொன்னேன். பாவம், அவ அழுதுட்டா. அன்னிலேந்து உலகமே அஸ்தமிச்ச மாதிரி, பிரமை பிடிச்ச மாதிரி மனசு ஒடிஞ்சு போயிருக்கா! அவளைப் பார்த்தா ரொம்பப் பரிதாபமா இருக்கு. கிட்டா ! அவளுக்கு எப்படி சமாதானம் சொல்றதுன்னே தெரியலே."

கையலம்பிக் கொண்டு இருவரும் வாசல் பந்தலுக்கு வந்தார்கள். சூரிய ஒளி பந்தல் துவாரங்களில் புகுந்து தரையில் வட்டம் வட்டமாய் டாலர்கள் வீசியிருந்தன ! பெஞ்சுமீது வெள்ளித் தட்டு நிறைய வெற்றிலையும் அசோகா பாக்கும், சந்தனமும் வைத்திருந்தார்கள்.

தற்செயலாய் மாமா அங்கே வந்தார்.

"யாருடா கிட்டா இந்தப் பையன்? விபூதியும் குடுமியுமா தேஜஸாயிருக்கானே!" என்று கேட்டார்.

"என்னோட வேதம் படிச்சிண்டிருந்தான் மாமா! மூர்த்தின்னு பேரு… இவனைப் பத்தி அப்புறம் விவரமாப் பேசணும். உங்களால ஒரு காரியம் ஆகணும்" என்றான்.

"அப்டியா? சாப்டாச்சா ! ரெண்டு பேரும் வெத்தலை போட்டுக்குங்க, கும்போணம் கொடிக்கா வெத்தலை!" என்றார் மாமா.

"பிரம்மசாரிகள் வெத்தலை போடலாமா, மாமா?"

"பிரம்மசாரிகள் கல்யாணமே பண்ணிக்கிறா ! ‘வெத்தலை’ போடறது தப்பா?" என்று ஒரு ஜோக் அடித்தார் மாமா!

"நான் சொல்லலே, மாமா ரொம்பத் தமாஷாப் பேசுவார்னு!" என்றான் கிட்டா.

தவில் ஓசை காதைப் பிளந்ததால் அவர்கள் சம்பாஷணை தடைப்பட்டது.

முர்த்தி வெளியே புறப்பட ஆயத்தமானான்.

"எங்க அதுக்குள்ள கிளம்பிட்டே?"

"சிவகங்கா கார்டன் பக்கத்துல வித்தை நடக்கறது. இன்னைக்கு மஞ்சு புது ‘ஐட்டம்’ பண்ணப்போறா; நான் போய்ப் பார்த்துட்டு வந்துடறேன்" என்றான் மூர்த்தி.

"நாலு மணிக்குள்ள வந்துடு, டிபன் காசி அல்வா, மெதுபக்கடா!..." என்றான் கிட்டா.

"ஞாபகம் வெச்சுக்கோ. மாமாவிடம் என்னைப்பத்தி சொல்றதுக்கு மறந்துடப் போறே" என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டான் மூர்த்தி.

வெய்யில் கொளுத்தி எடுத்தது. தெருப் புழுதியில் கால் பொரிந்தது, மூர்த்தி தெரு ஓரமாக தாண்டிதாண்டி நிழலுக்குத் தாவினான்.

"நாலு நாளைக்குச் சாப்பாட்டுக்குக் கவலையில்லை அம்மா சங்கிலி தப்பியது" என்று மனதுக்குள் மகிழ்ந்து கொண்டான்.

கண் முன் பாகீரதியின் நிலவு முகம் தெரிந்தது. அந்த மூன்று நோட்டுகளும் சட்டைப்பையில் இருக்கின்றனவா என்று தொட்டுப் பார்த்துக் கொண்டான். பாகீரதியின் முன் யோசனையையும் சாமர்த்தியத்தையும் வியந்தான்.

அந்தப் பூவுக்குக் கீழ் அவள் எழுதியிருந்த வாசகம் அவன் காதுகளில் ஏதேதோ ரகசியங்கள் பேசியது. "இவளுக்கு என் மீது எத்தனை அக்கறை? பாவம் ! தான் கெட்டதோடு என் பிரம்மசரியத்தையும் கெடுத்து விட்டாளே, அசட்டுப்பெண் !" என்று பச்சாத்தாபப்பட்டான். அந்தக்கசப்பும் இனிப்பும் கலந்த உணர்வில் முகம் சுளித்தான்.

சிவகங்கா தோட்டம் முச்சக்தியை அடைக்தபோது அங்கு யாரையுமே காணவில்லை. ஒரு நாய் மட்டும் நாக்கை நீட்டியபடி படுத்திருந்தது. போலீஸ்காரர் ஒருவர் நடைபாதைக் கடையில் இளநீர் குடித்துக் கொண்டிருக்தார். மூர்த்தி அவரை நெருங்கி, "இங்கே கழைக்கூத்தாடிங்க யாராவது வந்தாங்களா?" என்று கேட்டான் .

"வந்தாங்களே! வித்தை கூட பண்ணாங்க. பாதில அந்தப் பொண்ணு வயித்துல கத்தி பாஞ்சுட்டுது. ரத்தமாவது ரத்தம், வெள்ளமாக் கொட்டிடுச்சு! பாவம், மயக்கமாயிட்டா. இப்பத்தான் ஆஸ்பத்திரிக்கு தூக்கிட்டுப் போறாங்க."

"ஐயோ, மஞ்சு" என்று அலறிவிட்டான் மூர்த்தி.

"அத பாருங்க ரத்தம் புழுதில உறைஞ்சு கிடக்கு!"

”எந்த ஆஸ்பத்திரிக்கு எடுத்துட்டுப் போனாங்க, தெரியுமா?"

"பெரிய ஆஸ்பத்திரி"

அடுத்த கணம் மூர்த்தி பெரிய ஆஸ்பத்திரியை நோக்கி ஓடினான்.