Chapter 20
காலையிலிருந்து பாகீரதிக்கு அத்தையின் ஞாபகமாகவே இருந்தது.
"அத்தைக்குத்தான் என் பேர்ல எத்தனை அன்பு! ஊருலேந்து அக்கறையா தாழம்பூ கொண்டு வந்து தலைபின்னி அழகு பார்த்தாளே! அந்தத் துணிச்சலும், அப்பாவை எதிர்த்துப் பேசிச் சமாளிக்கிற தைரியமும் வேறு யாருக்கு வரும்?
"அத்தை இன்னொரு முறை அந்த மாதிரி எனக்குத் தலைபின்னி விட மாட்டாளா? மூர்த்தி எதேச்சையா வந்து என் அலங்காரத்தைப் பார்த்து ரசிக்கமாட்டானா?" என்று உள்ளுக்குள் கொழுந்துவிட்டிருந்த ஆசைக்குக் கற்பனை வடிவம் கொடுத்துப் பார்த்தாள்.
சமையல் கட்டிலிருந்து, நெய் வாசனையும் தாளிப்பு நெடியும் வீடு முழுதும் கமகமத்தது. ராவ்ஜி சமையல்!
கனபாடிகள் "ராமா!" என்று அணில் பிள்ளையைப் பால் குடிக்க அழைத்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கே வந்த கிட்டா "காஞ்சீபுரம் சம்பந்தியாத்துக்காரா உங்களுக்கு அரும்பாக்கம் லேகியம் கொடுத்தனுப்பிருக்கா. தலை சுத்தல், தள்ளாமை எல்லாம் போயிடுமாம்!" என்றான்.
"அரும்பாக்கம் வைத்தியருக்கே இப்ப என் வயசு ஆயிருக்குமே!" என்று சொல்லிக் கொண்டே டப்பாவைத் திறந்து கொஞ்சம் லேகியம் உருட்டிச் சாப்பிட்டார்.
"நான் இல்லாதப்ப மூர்த்தி வந்திருந்தானாமே?" கிட்டா கேட்டான்.
"ஆமாம்; சமையல் ராவ்ஜியை அழைச்சுண்டு வந்தான். உங்க மாமா, கிட்டப்பா லெட்டர் கொடுத்தனுப்பிருந்தார். கெளரி மூர்த்தியை தத்தெடுத்துக்க ஆசைப்படறளாம். என் அபிப்ராயம் என்னன்னு கேட்டிருந்தார், எனக்குப் பூர்ண சம்மதம்னு பதில் எழுதி மூர்த்தியிடமே கொடுத்தனுப்பிட்டேன்."
"மூர்த்தி தஞ்சாவூர்லயேதான் வேதம் படிக்கப் போறானா? இங்கே வரமாட்டானா?" என்று கேட்டான் கிட்டா,
"என்ன சொன்னே? வேதம் படிக்க…" என்று இழுத்தார் கனபாடிகள்.
"படிக்கப் போறானான்னு கேட்டேன்."
"வேதம் படிக்கிறதுன்னு சொல்லக் கூடாது. ஓதறதுன்னு சொல்லணும்; எழுதப்பட்டதைத்தான் படிக்கலாம். ஒலியை ஓதணும். மிருதங்கம் அடிக்கிறான்னு சொல்லக் கூடாது. வாசிக்கிறான்னு சொல்லணும்,"
வாசலில் வந்து நின்ற ஜட்காவிலிருந்து அத்தையும் அவள் கணவர் அருணாசலமும் இறங்கி வந்தார்கள்.
பட்டுப் புடவையும் காசு மாலையும் பளபளக்க முக மலர்ச்சியோடு வந்து நின்ற பணக்கார அத்தையை பாகீரதி அப்படியே தழுவிக்கொண்டு "வாங்க அத்தை ! கார்த்தால் லேந்து உங்க நினைவுதான். உங்களுக்கு ஆயுசு நூறு !" குதூகலம் பொங்க வரவேற்றாள் பாகீரதி.
"கையில என்ன அது செம்பு!" என்று கேட்டான் கிட்டா.
"கங்கைச் செம்பு, தெரிஞ்சவா காசியாத்திரை போயிருந்தா, அவா கொண்டு வந்து கொடுத்தா. புண்ணிய தீர்த்தம். அண்ணாவுக்குக் கொடுக்கலாம்னு கொண்டு வந்தேன்" என்றாள் கெளரி அத்தை.
"இதுக்குப் பதிலா ஒரு குடம் தண்ணி கொண்டு வந்திருந்தா ரொம்ப உபயோகமாயிருக்கும்" என்றான் கிட்டா.
"தண்ணிக்கு அவ்வளவு பஞ்சம் வந்துட்டுதா, இங்கே? சிதம்பரத்துல பரவாயில்லே" என்றாள் கெளரி.
"பஸ் லேட்டோ?" என்று கேட்டார் கனபாடிகள்.
"ஆமாம்; நடு வழில பஞ்ச்சர்" என்றார் கெளரியின் கணவர்.
கல்கண்டு, திராட்சை, மாம்பழம், மாதுளம்பழம், வாழைப்பழம், வெற்றிலை பாக்கு எல்லாவற்றையும் ஒரு மூங்கில் தட்டில் வைத்து கனபாடிகள் காலில் விழுந்து "நமஸ்காரம் செய்து "ஆசீர்வாதம் பண்ணுங்க!" என்றனர் கெளரி தம்பதியர்.
"முகூர்த்தம் எப்ப வெச்சுக்கப் போறேள்?" என்று கேட்டு, அந்த ஒரு கேள்வியிலேயே சுவீகார சமாசாரம் பூராவும் மறுபடி ஒருமுறை பேச வேண்டிய அவசியமில்லாமல் செய்து விட்டார் கனபாடிகள்.
"உங்களுக்கு எப்ப வர செளகரியப்படுமோ, அப்ப வெச்சுக்கலாம்" என்றார் கெளரியின் கணவர்,
"சீக்கிரமே ஒரு நல்ல நாள் பார்த்து நடத்திடவேண்டியதுதான்!" என்றார் கனபாடிகள்.
"நீங்க வரணும்; அதுதான் முக்கியம்."
"என்னால முடியும்னு நினைக்கிறயா, கெளரி ! வரவர உடம்பு ரொம்ப பலகீனம் ஆயிண்டிருக்கே?"
"முகூர்த்தம் நடக்கறப்போ நீங்க இருக்கணும். காலைல வந்து மூர்த்தியை ஆசிர்வாதம் பண்ணிட்டு சாயந்திரமே திரும்பிடலாம். நாங்க ஒரு "ப்ளெஷர்" ஏற்பாடு பண்ணி அனுப்பறோம்" என்றார் கெளரியின் கணவர்.
"கிட்டா, அந்த பஞ்சாங்கத்தை எடு" என்றார் கனபாடிகள்.
கிட்டா பஞ்சாங்கம் கொண்டு வந்தான்.
அதைப் புரட்டி, "அசுவனி, பரணி என்று நட்சத்திரங்களை விரல் விட்டு எண்ணி, "மூர்த்திக்கு மூல நட்சத்திரம். ஆண் மூலம் அரசாளும்னு சொல்லுவா. அரசாளப் போறானோ இல்லையோ, அரசமரத்தை ஆண்டுண்டிருக்கான்" என்று சொல்லிச் சிரித்தார். அவர் இந்த மாதிரி சிரித்து ரொம்ப நாளாயிற்று.
"மூர்த்தியின் முழுப்பெயர் என்னன்னு தெரியலே." என்று இழுத்தார் கெளரியின் கணவர்.
"சாம்பமூர்த்தி. மூல நட்சத்திரத்துக்கு இந்த மாசம் பதிமூணாம் தேதி பொருத்தமாயிருக்கு" என்றார் கனபாடிகள்.
"பதிமூணுன்னா இன்னும் ஆறே நாள் தானே? அதுக்குள்ளே எல்லா ஏற்பாடும் பண்ணிட முடியுமா அண்ணா!" என்று கவலைப்பட்டாள் கெளரி.
"நீ என்ன கலியாணமா பண்ணப்போறே? சுவீகாரம் தானே? ரெண்டு மணி நேரத்துல முடிச்சுடலாம். ஏழெட்டு வைதிகாளைக் கூப்பிட்டா போதும். நான் வறேன். வெள்ளிக் கடை கிட்டப்பா வருவான். ஜாம்ஜாம்னு நடத்திடலாம். கார்த்தால ஒன்பது பத்தரை மிதுன லக்னம் முகூர்த்த நேரம்" என்றார் கனபாடிகள்.
"முகூர்த்தப் பத்திரிகையை உங்க கையாலயே எழுதி மஞ்சள் தடவி ஆசீர்வாதம் பண்ணிக் கொடுத்துட்டா, நாங்க சாயந்திரமே புறப்பட்டுடலாம்" என்றாள் கெளரி.
"நாலு மணிக்கு மேல புறப்படுங்க. ராகுகாலம், வெயில் ரெண்டுமே போயிடும்!"
"பாகீரதியை என்கூடவே அழைச்சுண்டு போறேன் அண்ணா! இடையிலே இன்னும் அஞ்சே நாள்தானே இருக்கு" என்றாள் கெளரி.
"அப்படிச் சொல்லு. அதுக்குத்தான் வந்தேன்னு சொல்லு ! செல்ல மருமாளாச்சே!" என்று மறுபடியும் சிரித்தார் கனபாடிகள்.
"அவளும் இந்த வீட்டில எத்தனை நாளைக்கு கூண்டுக் கிளி மாதிரி அடைஞ்சு கிடப்பா? இப்பத்தானே சந்தர்ப்பம். சமையல்காரரும் வந்தாச்சு, துணைக்கு கிட்டா வேற இருக்கான்."
"எல்லாத்தையும் யோசனை பண்ணின்டு ஒரு பிளானோடு தான் வந்திருக்கே!" என்றார் கனபாடிகள்.
"அண்ணா, உன்னோட ரொம்ப நாளாப் பேசனும்னு இருந்தேன். இப்பத்தான் அதுக்கு சந்தர்ப்பம் வாய்ச்சிருக்கு. பாகீரதி விஷயமாத்தான், உனக்கப்புறம் அவ கதி என்னன்னு யோசிச்சுப் பார்த்தயா? உன் காலத்துலயே, அந்தச் சின்னக் குழந்தைக்கு ஏதாவது ஒரு வழி செஞ்சுட வேணாமா?"
"அவள் தலையெழுத்து இப்படி ஆயிடுத்தே? அதை நம்மால மாத்தி எழுத முடியாதே"
"ஏன் முடியாது? மனசுவச்சா எழுதலாம்" என்றாள் கௌரி.
"நீ என்ன சொல்றே, கெளரி!"
"உனக்கப்புறம் அவளை யார் காப்பாத்தப் போறா? அதுக்கு யார் உத்தரவாதம்?
அதைப்பத்தி யோசிச்சயா? சின்ன வயசிலே கனபாடிகள் பொண்ணு நடுத்தெருவில நிக்கறாங்கற அபவாதத்துக்கு ஆளாகப் போறயா?"
“நீதான் இருக்கயேம்மா, அப்படி அனாதையாவா விட்டுடுவே?"
"நான் இருந்தாப் போதுமா? எனக்கும் வயசாறதே! நான் கவலைப்படறது எதைப் பத்தின்னு என்னால உடைச்சுப் பேச முடியலே, நான் சொல்றது உனக்குப் புரியும்னு நினைக்கறேன்."
"புரியறது. அவளுக்கு மறுபடியும் ஒரு கல்யாணத்தைப் பண்ணி வைக்கணுங்கறே, அதானே? அது என்னால முடியாது. சாஸ்திரத்துக்கு விரோதமா நான் எதுவும் செய்யமாட்டேன்."
"செஞ்சா என்ன ஆயிடும்?"
"கெளரி உனக்கு இவ்வளவு தைரியம் எப்படி வந்தது? என்னிட்டயா இப்படிப் பேசறே? ஊர் உலகம் ஒப்புக்குமா! ‘சாஸ்திரம் படிச்சவராம் ! யாகம் பண்ணவராம்! எல்லாருக்கும் சொல்லுமாம் பல்லி. தான் போய் கழுநீர்ப் பானையில் விழுமாம்கற கதையா கனபாடிகள் பண்ணிட்டார்’னு என்னை ஊர் ஏசாதா? காறித் துப்பாதா?"
"சரி; உனக்கப்புறம் அவாள்ளாம் வந்து உன் பொண்ணைக் காப்பாத்துவாளாமா? அதைக் கேளு; என்ன பதில் சொல்றா பாப்போம்."
"நீ அன்னைக்கு அவளுக்கு தாழம்பூ வெச்சு தலைபின்னி அழகு பார்த்தப்பவே நினைச்சேன். உன் மனசில ரொம்ப நாளா இப்படி ஒரு விபரீத ஆசை இருக்குன்னு எனக்கு அன்னைக்கே தெரிஞ்சு போச்சு!" என்றார்.
"இப்ப நான் சொல்றது உனக்கு அக்ரமமாத்தான் தோணும். நீயே நிதானமா யோசிச்சுப் பார்த்தா நியாயம் புலப்படும்!"
"இப்படி ஒரு அதர்மத்துக்கு நான் சம்மதிச்சா தெய்வம் என்னை சும்மா விடாது."
"என்ன பண்ணும்?"
"நரகத்துக்கு அனுப்பும்!"
"அனுப்பட்டுமே தெய்வம் கொடுக்கிற தண்டனை அதுதான்னா, பாகீரதியோட எதிர்கால வாழ்க்கைக்காக நீ அதை தாராளமா ஏத்துக்கலாம், பரவால்லே" என்றாள் கெளரி.
"நீ இந்த அளவுக்குப் பேசுவேன்னு நான் நினைக்கலே,”
கெளரிக்கும் அப்பாவுக்கும் நடந்த வாக்குவாதத்தை தூண் மறைவில் நின்று கேட்டுக் கொண்டிருந்த பாகீரதி "இந்த அத்தை ஒரு அதிசயப் பிறவிதான்! அப்பாவிடம் எத்தனை சாமர்த்தியமா வாதாடறாள். ஆனாலும் இந்த அத்தைக்கு ரொம்ப தைரியம் ஜாஸ்தி!" என்று மனசுக்குள் வியந்து கொண்டாள்.
அடுத்தகணம் "பாகீரதி நீ இன்னைக்கு சிதம்பரம் போகப் போறே ! நாளைக்கே அங்கு மூர்த்தி வருவான் ! அத்தை உனக்குத் தாழம்பூ வெச்சுத் தலைபின்னி விடுவா! காசு மாலையைக் கழற்றி உன் கழுத்துல் போடுவா! அந்த அலங்காரத்தை மூர்த்தி பார்ப்பான்" என்று அவள் உள் மனம் உற்சாகத்தில் விசிலடித்தது.

