Chapter 15

சொத்துக்களைப் பற்றிய ஏற்பாடுகளைச் செய்துமுடிக்க ஒரு மாதத்துக்குமேல் ஆயிற்று. இன்னொரு கடிதம் வராதா என்று எதிர்ப்பார்த்தாள். ஏமாந்தாள். ஒன்றும் தகவல் இல்லை.' இந்த மட்டும் தற்கொலையில் இறங்காமல் உசிரோட இருக்கேன் என்று கடுதாசி போட்டாரே" என்று சந்தோஷப் பட்டாள் நர்மதா.

வெங்குலட்சுமிக்குக் காசிக்குப் போகப்போகிறோம் என்றவுடன் உற்சாகம் பீறிட்டுக் கொண்டு கிளம்பியது. அங்கே சமைத்துச்சாப்பிட அது இது என்று நாலைந்து டப்பாக்களை நிறப்பிக்கொண்டாள், சிலருக்கு அதிக துக்கம் ஏற்பட்டு விட்டால் மனசு கல்லுப்பட்டுப் போய்விடுமாம்.

நாரத்தங்காயிலிருந்து சுண்டைக்காய்வரை எடுத்து வைத்தாள். நர்மதா சுத்தமாக எல்லா நகைகளையும் கழற்றி "பாங்க்கின் பாதுகாப்பில் வைத்தாள். திருமாங்கல்யச் சரடு, கண்ணாடி வளையல்கள், ஒற்றை மூக்குத்தி, தோடுகள், நாலு நூல் புடவைகள்.

"என்னடி வேஷம் இது? அவன் எங்கேயாவது நன்னா இருக்கவேண்டாமோ?"

"இதோ" என்று திருமாங்கல்யத்தைக் காண்பித்தாள்.

"நன்னா இருக்கு! பளிச்சுனு இருந்தாத்தான் நாலுபேர் மதிப்பா. போற இடத்திலும் மதிப்பு கிடைக்கும். "

அம்மாவோட என்ன தர்க்கம் வேண்டியிருக்கு. அவ மனசு அப்படி என்று அவள் அதிகம் பேசவில்லை.

"இரண்டு நாள் என்னோடு இரேன்" என்று பூரணி கூப் பிட்டாள்.

"உன்னை மறந்துடவா போறேன், எல்லாத்தையும் கவ னிச்சுக்கோ... தேங்காய் பறிச்சுக்கோ... ஒரு நல்ல நாளாப் பார்த்துண்டு இந்த வீட்டுக்கு வந்துடுங்கோ. கங்கம்மா குழந் தைகளுக்கு ஆசைபட்டாள். ஒங் குழந்தைகள்தான் ஓடி விளையாடட்டுமே வேணா இன்னும் இரண்டு பெத்துக்கறது..." என்று கிண்டல் பண்ணினாள்.

"பெத்துக்க வேண்டியதுதான்!"

"பாரேன். நான் திரும்பி வரச்சே உனக்கு நாலுக்குமேலே இருக்கப்போறது!"

“போடி..."

பூரணி சிரிக்கவில்லை. துயரம் தாங்காமல் நர்மதாவைக் கட்டிக்கொண்டாள்.

கிளம்புகிறதற்கு முதல்நாள் வரையில் நர்மதா அம்மா கட்டி வைத்திருக்கும் மூட்டை முடிச்சுகளைக் கவனிக்கவில்லை. நாலைந்து தகரடப்பாக்கள். நார்மடிக்கூடை. பெட்டிவேறே.

"பெட்டியிலே என்னம்மா?”

‘ஒனக்கு நாலு பட்டுப்புடவை எடுத்து வச்சிருக்கேன்.”

"போருமே. எல்லாத்தையும் எடுத்து உள்ளே வை. இல்லைன்னா யாரையாவது கூப்பிட்டுக் குடுத்துடுவேன்."

கிழவி முணு முணுத்துக் கொண்டே எடுத்து வைத்தாள்.

கங்கா காவேரியில் ஜன்னல்ஓரம் உட்கார்ந்திருந்த நர்மதா வெகுநேரம் வரையில் பேசவில்லை. ரயில் கிருஷ்ணா நதியைத் தாண்டி, விரைந்து கொண்டிருந்தது பொங்கித் தளும்பி பிரவகிக்கும் தண்ணீரைக் கண் கொட்டாமல் பார்த்தாள். எத்தனை பேருடைய தாபத்தை. பாபத்தை இந்தப் புனிதநதி போக்கியிருக்கும்? ரயிலின் ஓரமாக மலைகள் வந்தன. சமவெளி வந்தது. அடர்ந்த காடுகள் வந்தன. தரிசு நிலங்கள் வந்தன. அடர்ந்த காடுகள் வந்தன. தரிசு நிலங்கள் வந்தன. இரவில் சந்திரிகை பிரகாசித்தது.

அவள் தன்னிடமிருந்து ஒரு பாரம் குறைவதை உணர்ந்தாள்.

வானத்து நிலவு தாவள்யமாகப் பிரகாசித்துக் கொண் டிருந்தது.

அவள் மனசில் ஒளிந்துகொண்டு ஆட்டம்போட்ட எண்ணங்கள், மனதை இருட்டாக அடித்த சபலங்கள் கொஞ்சம் கொஞ்சமாக விலகவிலக அவளுக்குள் ஒரு விழிப்புஏற்பட்டது.

பெட்டியில் எல்லோரும் தூங்க, அவள் விழித்திருந்தாள்.