Chapter 12
கங்கம்மாவின் உடல்நிலை நாளுக்கு நாள் மோசமாகியது. பனி கொட்டும் காலைப்பொழுதில் அவள் இறந்து விட்டாள். கடைசியில் எதுவும் பேசாமல், மனசில் எண்ணக் குமுறல்கள் பொங்கி வழிய அவள் ஆத்மா பிரிந்துவிட்டது.
பட்டப்பா துடிதுடித்துப்போனான். தாயைவிடப்பரிந்து வளர்த்தவள். இவனிடமிருந்து ஒரு குழந்தையை, எதிர்ப் பார்த்து. அது நிறைவேறாமல் நிறைவேறாது என்று உறுதியாகத் தெரிந்து கொண்டு அதிர்ந்துபோய்,பேசும் சக்தியை இழந்து அவள் நாலைந்து மாதங்கள் உணர்வுகளுடன் போராடினாள். பிறகு, ஓய்ந்தும் போனாள்,
பெரிய வீடு. கங்கம்மா அதில் ஒரு பட்டத்தரசிபோல் சாவிகள் குலுங்க வளைய வருவாள். பூரணிக்கு, எதிர் வீட்டுக்கு என்று பக்ஷணங்கள் செய்வாள். பூ தொடுத்துக் காடுப்பாள். பாலுவுக்கு வரும்போதெல்லாம் ஏதாவது கொடுத்து உபசரிப்பாள். இப்படி, அவள் கார்வார்த்தனம் அவளோடு அடங்கிப்போயிற்று.
நர்மதா ஆழாக்கு அரிசி சமைத்தாள். இஷ்டமிருந்தால் சுவாமிக்கு விளக்கேற்றினாள். முடிந்தால் பக்கத்துவீட்டுப் பூரணியோடு பேசினாள். பட்டப்பாவோடு பேசுவதையும் குறைத்துக் கொண்டாள். தன்னைத்தானே தண்டித்துக் கொண்டு பாதி உடம்பாக மெலிந்துபோனாள் நர்மதா.
வெங்குலட்சுமி மூலமாக எல்லா விஷயங்களையும் கேள்விப் பட்ட சாயிராம் ஒரு தடவை நர்மதாவின் வீட்டுக்கு வந்தான்.
வீட்டையும் வாசலையும் நோட்டம் விட்டான். ஒரு லட்சத்துக்குக் குறையாது என்று மதிப்புப் போட்டான். நில புலன் வேறே இருக்கிறதையும் தெரிந்து வைத்துக்கொண்டி ருந்தான். எல்லாவற்றுக்கும்மேலே பக்கத்து வீட்டு பாலு அந்த பரமரகசியமான விஷயத்தை இவனிடம் தெரிவித்தான்.
"அப்படியா?" என்று வியந்துபோனான் சாயிராம்.
"பின்னே ... அவ எங்கூட சினிமாவுக்கு வந்திருக்கிறா. எம் பொண்டாட்டி பிரசவத்துக்குப் போனப்ப சாப்பாடு போட் டிருக்கிறா அப்ப அவ கையைக்கூடப் பிடிச்சுப்பார்த்தேன். விஷயம் ரொம்ப சுவாரஸ்யமாக இருந்தது.
ஊர்க்காரன் ஆயிற்றே என்று இரண்டு வேளைகள் சாப் பாடுபோட்டாள். பட்டப்பா வெளியில் போயிருந்த சமயங்களில் கொல்லையில் மரம் செடி கொடிகளுடன் உட் கார்ந்திருந்தாள்.
"என்ன இப்படி வெளியே உக்காந்துண்டு? ஆனந்தமா ஊஞ்சல்லே உக்காந்து ஆடமாட்டியோ"
"வாண்டாம்... அதெல்லாம் எனக்குப் பிடிக்கிறதில்லே"
"ஏன்னு கேக்கிறேன்? ஊர் உலகத்துலே நாத்தனார் செத்துப்போறதில்லையா? இப்படி அதுக்காக விரக்தியா இருந் துட முடியும்?"
நர்மதாவுக்கு எரிச்சலாக இருந்தது. தன் அம்மாவின் மீது கோபமாக வந்தது.
"வாயை வச்சுண்டு பேசாம இருக்கமாட்டா..."
பட்டப்பா வெளியே இருந்து வந்ததும், "என்ன சார்! நர்மதா இளைச்சிருக்கா?" என்று கேட்டான்.
"அதான் தெரியலை. ஊருக்கு வேணா போயிட்டு வான்னு சொல்றேன். கேக்கலை"
"என்னோட அனுப்புங்கோ"
"பேஷா...எல்லாத்துக்கும் அவளுக்குப் பூரண சுதந்திரம் கொடுத்தாச்சு. அவதான் இப்படி இருக்கா.
"எனக்கு ஊர்லே என்ன வச்சிருக்கு? நீங்க கிளம்பிப் போங்க. எப்ப வரணும்னு அவசியம் ஏற்படறதோ அப்ப வரேன்."
சாயிராம் கிளம்பிப் போய்விட்டான்.
"நாய் ஜன்மங்கள். ஏன்தான் இப்படி கிடந்து அலைய றதுகளோ தெரியலை."
இங்கேயானால் பாலு ஜாடைமாடையாகத் துரத்துகிறான். பூரணிக்குத் துரோகம் பண்ணிக்கொண்டு எப்படி இவனால் இப்படி இருக்க முடியறதோ? ஊருக்குப்போனால் சாயிராம் வந்து விடுவான். அரசல் புரசலாக இல்லாமல் தன் வாழ்க் கையில் குறிக்கிட்டிருக்கும் இந்த இரண்டு ஆண்களும் விஷயத்தை அப்பட்டமாகத் தெரிந்து வைத்திருக்கிறார்கள்.
எங்கேயாவது கண்காணாத ஊருக்குப் பட்டப்பாவுடன் போய்விட வேண்டும். இப்போதெல்லாம் ஒரு விரக்தி மனசில் படிந்து விட்டது.
எவனைப் பார்த்தாலும் மனம் மரத்துக்கிடக்கிறது.
நர்மதா யோசித்தாள்.

