Chapter 3
பஞ்சாயத்துக் கிணற்றின் வட்டமான சுவரைச் சுற்றி ஒரே பெண்கள் கூட்டம். முப்பதடி ஆழமுள்ள அந்த கிணற்றுக்குள், நான்கடி உயரத்திற்கு தண்ணிர் நின்றது. பஞ்சாயத்து போட்ட குழாய்கள், வழக்கம் போல் பழுதடைந்து இருந்ததால், மின்விளக்கு வீட் டில் மெழுகுவர்த்தி இருப்பதுபோல், தோண்டிப்பட்டை" வைததிருந்த பெண்கள் கூட்டம், கிணற்றை மொய்த்தது. கிட்டத்தட்ட இருபது பெண்கள், உடலின் பாதிப் பகுதியை, சுவரோடு சேர்த்துக் கவிழ்த்து, கயிற்றை கிணத்துக்குள் விட்டு நீர் மொண்டு கொண்டிருந்தார்கள். எல்லாப் பெண்களும் இப்படி ஒரே சமயத்தில் குனிந்தது, தாமரை மலர்போல் தோன்றியது. இதற்குள் சில சுறுசுறுப்பான இளம் பெண்கள், சீக்கிரமாக நீரை மொண்டு, முதுகை நிமிர்த்தி, கிணற்றுச் சுவரை ஒட்டி யிருந்த பானைகளில் நீரை ஊற்றிவிட்டு, மீண்டும் குணிவதும், அவர்கள் இப்படி குனியும்போது, சில நடுத்தரப் பெண்கள் நிமிர்வதையும் பார்த்தால், ஒரு ரம்மியான கும்மியாட்டம் அங்கே நடப்பதுபோல் தோன்றியது. சில நாவிதப் பெண்களும் சலவைத் தொழிலாளப் பெண்களும், தத்தம் வெற்றுக் குடங்களைக் காட்டிக் கொண்டு, சீக்கிரமா தண்ணி ஊத்துங்கம்மா' என்று குடங்களுக்கருகே இருந்த பெண்களைக் கேட்டுக் கொண்டே இருந்தார்கள். இது பஞ்சாயத்துக் கிணறு தான் என்றாலும், இங்கே அந்தப் பெண்கள் தோண்டிப் பட்டையைப் போட்டு நீரிறைக்க முடியாது.
சரஸ்வதி பால் பவுடர் டின்னை வைத்து, தண்ணிர் மொண்டு கொண்டிருந்தாள். மானேஜர் வீட்டு மாட்டுத் தொட்டியில் இதுவரை பத்துக் குடங்களை ஊற்றியாகி விட்டது. இன்னும் பத்துக் குடங்கள் ஊற்றியாக வேண்டும். மாலையில் பள்ளிக்கூடம் விட்டதும், வீட்டுக்குப் போய் தலையைக் காட்டிவிட்டு, மானேஜர் வீட்டிற்குப் போய் குடங்களை எடுத்துக்கொண்டு வந்து விட்டாள். பள்ளிக்கூடத்தில் கத்திக் கத்தி தொண்டை வலித்தது. இப்போது அந்த வலியை, வளைந்து வளைந்து நிமிர்ந்ததால் ஏற்பட்ட முதுகுவலி விழுங்கியது. அருகே இருந்த பெண்ணிடம் முதுகுவலி தீரும்வரை பேசுவது என்று, எதையோ அவள் பேசிக் கொண்டிருந்தபோது, கீழத் தெரு சுப்பையா வீட்டில் நடந்த சடங்குக்குப்’ போய்க் கொண்டிருந்த மானேஜரின் மனைவி ராசம்மா, 'ஏய் சரசு சீக்கிரமா வேலய முடியேண்டி. எவ்வளவு நேரமா தண்ணி எடுக்கப்போறே கொஞ்சம்கூட இது இல்லையே' என்று நின்று நிதானமாகச் சொல்லிவிட்டு நடந்தாள். பிறகு திரும்பி நடந்து வந்து "ஏய் மங்காத்தா! ஒன்னு கடனை அடைக்கனும், இல்லன்னா வட்டி கட்டணும். ரெண்டும் பண்ணாட்டா எப்டி? சோறுதான திங்ற?' என்று சொல்லிவிட்டுப் போனாள். மங்காத்தா திரும்பிப்போன ராசம்மாவின் முதுகைக் குத்துவதுபோல் கையை ஓங்கிக் கொண்டாள். சரஸ்வதிக்கு என்னவோ போலிருந்தது. பெற்ற தாய் கூட நான்குபேர் முன்னிலையில் இப்படிப் பேசமாட்டாள். பக்கத்தில் நின்ற ஒரு பெண், அவளை உசுப்பினாள். எல்லாப் பெண்களும், சரஸ்வதியை ஒட்டுமொத்தமாகப் பார்த்தார்கள். மங்காத்தாவை, ராசம்மா இப்படிக் கேட்பது வழக்கம். அவள் இப்போது 'அசிங்கமாக'த் திட்டினாள். கேட்பவர்களையும் திட்டுவாள். ஆகையால் அவளை விட்டுவிட்டு, சரஸ்வதியைச் சாடினார்கள்!
'ஏன் சரசு, வாத்தி வேலயில் முந்நூறு ரூபாயாவது கிடைக்கும். இன்னுமா கூலிக்கு தண்ணி எடுக்கணும்? 'இவள் கூலிக்கு தண்ணி பிடிக்கலடி அந்தப் பள்ளிக் கூடத்தில வேல கிடைச்சதுக்கு லஞ்சமா தண்ணி எடுக்காள். இவளால ஐயாயிரம் கொடுக்க முடியாது பாரு. அத...தண்ணியா தீர்த்துக் கட்டுறாள்.' 'சர்க்கார் பணத்தத்தான் சம்பளமா வாங்குகிறாள். இதுக்கு எதுக்கு தண்ணி எடுக்கணும்?' 'ராசம்மாவோட திமிரப் பாரேன்? நாம மெய்க் கணுமுன்னு"...இவள அதட்டிட்டுப் போறாள். அதாவது படிச்ச பெண்ணு தன் கிட்ட வேலக்காரியா இருக்கத காட்டிக்கிறாளாம்.' 'எல்லாம் இவளால. இவள் எதுக்கு இன்னும் பழைய வேலைக்காரியா நடந்துக்கணும்? தலயயா வாங்கிடு வாங்க? ஊசி...இடங்கொடுக்காமே, நூல் நுழையுமா? கொடுப்பாரக் கண்டால் பய பிசாசு கொனச்சி கொனச்சி ஆடுமாம்.'" 'மேயுற மாட்டக் கெடுக்குமாம், நக்குற மாடு. ஒனக்கென்ன அம்மாளு...இவா பாடு, அவா பாடு." ஒவ்வொரு தடவையும், கயிற்றை கிணற்றுக்குள் விடும்போதும் தானே அந்தக் கிணற்றுக்குள் விழுவது போல், சரஸ்வதி தவித்தாள். முன்பு லேசாகத் தெர்ந்த அந்த டின், இப்போது தூக்க முடியாத சுமையாகத் தெரிந்தது இந்தப் பெண்கள் சொல்வதுபோல், ராசம்மா தன்னை அதட்டிவிட்டுப் போனது அவளுக்கு அடிமைத் தனமாகத் தெரிந்தது. இவ்வளவுக்கும், மானேஜர் மற்ற வர்கள் சம்பளத்தில் ஐம்பது ரூபாய் பிடித்தால், தன் சம்பளத்தில் நூறு ரூபாய் பிடிப்பதும், அப்போது
அவளுக்கு மாபெரும் கொடுமையாகத் தெரிந்தது. மடமடவென்று நான்கைந்து குடங்களை நிரப்பிவிட்டு தன் வீட்டுக்குப் போனாள். சரஸ்வதி அந்த ஒலைவீட்டின் முற்றத்திற்கு வந்த போது குடிசைக்குள் பொன்னையாவும் அம்மாவும், தன்னைப்பற்றி பேசுவது கேட்டதால், அவள் அங்கேயே நின்றாள். "ஒமக்கு மூளையே கிடையாது. மிஞ்சி மிஞ்சி இருந் தால், அவளுக்கு இப்போ இருபது இருக்கும். இன்னும் ரெண்டு வருஷம் கழியட்டுமே. நாம இப்பதான் ஏதோ சாப்பிடறோம்.' 'அப்படி இல்ல பிள்ள. மாப்பிள்ளைக்கி செங்கல் பட்டு பக்கத்துல, ஒரு மில்லுல பெரிய வேலையாம். பூர்வீகம் குட்டாம்பட்டியாம். எழுநூறு ரூபாய் வாங்கு றானாம். கல்யாணம் ஆன ரெண்டு வருஷத்துல பெண் டாட்டி இறந்துட்டாளாம்... ஏழு வயசில ஒரு பையன் மட்டும் இருக்கானாம். இவ்வளவுக்கும் வயது முப்பதாறு தானாம்.' "நான் உயிர விட்டாலும் விடுவேனே தவிர. என் மவள ரெண்டாந்தாரமா அதுவும் பாதிக் கிழவனுக்கு" கொடுக்க மாட்டேன்.' 'ஏமுழா வீம்பு பிடிக்கே? நம்ம தங்கப்பாண்டி பாத்த மாப்பிள்ளை நாம தட்ட முடியுமா? வாக்கு கொடுத்துட்டேன்னு வேறே சொல்லுதான்.' 'அவனுக்குத்தான் ஒரு மகள் இருக்காளே. அவள கொடுக்கச் சொல்லும்.' பொறிகலங்கிப் போனவள்போல், சரஸ்வதி திடுக் கிட்டாள். அப்படியானால், அவள் இந்த ஊரை விட்டு
விட்டுப் போய்த்தான் ஆக வேண்டுமா? அதுவும் அம்மா சொன்னதுமாதிரி ஒரு பாதிக் கிழவனுக்கு... முடியாது... என்ன ஆனாலும் முடியாது... இந்தத் தங்கப்பாண டி மாமாவுக்கு நான் என்ன கொடுமை செய்தேன்? அப்பா ஏன் அவர் வாக்கை தேவ வாக்கா எடுக்கார்? இந்த தங்கப்பாண்டியை மட்டம் தட்டுறதுக்காவது நான் மாட்டேன்... மாட்டேன்...' திடீரென்று, அவள் நினைக்காமலே, சண்முகம் அவள் நெஞ்சுள் வந்து நின்றான். உடம்பின் ஒவ்வொரு அணுவிலும், அவன் ஊடுருவி நிற்பது போன்ற பிரமை. அப்பா... அம்மா பேசுவதை அவன் அசரீரியாக நின்று கேட்டுக்கொண்டிருப்பது போலவும், தக்க சமயத்தில் தலையிடுவான் என்பது போன்றும் ஒரு எண்ணம். ஒரு கற்பனை... ஒரு நப்பாசை. இதுவரைக்கும் அவள் அவனிடம் தனியாகப் பேசியதில்லை. சரசு’ என்று சொல்லமாட்டாரா என்று ஏங்கும் அவளை, இன்றுவரை "டீச்சர்' என்றுதான் கூப்பிடுகிறான். படித்த கர்வம் இல்லாமல், உளளுர் டீக்கடைகளில் மற்ற ஏழைகளோடு அமர்ந்து, மசால் வடையைத் தின்றுகொண்டே, அவர் களோடு வாயால் மல்லாடுவதும், பாமர மக்களுக்கு கடிதங்கள் எழுதுவதும், சில சமயம் அவர்களை அதியா யங்களில் இருந்து மீட்பதும், ஆதரவு கொடுப்பதும் அவனுக்குப் பொழுதுபோக்கு... பொழுதுபோக்கல்லஒரு விசுவாசமான தொண்டு. ஊரில் எல்லா பிரமுகர் களுக்கும் அவன் கவாலி'. இது ஒன்றே போதும், அவன் நல்லவன் என்பதற்கு. அவரு இல்லாத பள்ளிக்கூடம், 'களை இல்லாம போயிட் டு...! எப்டி கலகலப்பா பேசுவாரு. எப்டி வெட்டு ஒண்னு துண்டு ரெண்டுன்னு பேசுவாரு. இவ்வளவுக்கும் எனக்கு ஜூனியர். வேலையில சேர்ந்து மூணு மாதந்தான் ஆகுது. மானேஜர இப்படியே விடப்
படாது. கொஞ்சங் கொஞ்சமா எதிர்த்துப் பேசணுமுன்னு எப்படிச் சத்தம் போட்டு கத்துவாரு. அதுவும் இந்திரா இருக்கும் போதுகூட. அவரப் பார்த்ததும பிள்ளிங்ககூட 'ஸார்... கதை சொல்லுங்க லார்னு எப்டி மொய்க்கு துங்க. அடிக்காமலே அவங்கள வசியப்படுத்துற வேலய எங்க கத்துக்கிட்டாரு? அவங்கள மட்டுமா 'வசக்கி வைத் திருக்காரு? ஒவ்வொரு ஆசிரிய ஆசிரியைக்கும் வக்கனை' வச்சிருக்க... இந்த பிள்ளிங்ககூட அவருக்கு... வக்கணையே வைக்கலியே. தங்கப்பாண்டி, தொந்திப் பாண்டியாம் கனகம் உச்சர், தார்க்குச்சியாம். தங்கச்சாமி... பிள்ளப் பூச்சியாம். வேலாயுதம், கரும்பனையாம். நான் , மேல கண்ணியாம். ஆனால சண்முகத்துக்கு மட்டும் வக்கனை கிடையாதாம்! எல்லோரையும் அதட்டுற மானேஜர் மாமா கூட, அவரப் பார்த்துச் சிரிக்காரே. ஒருவே ள இவரும் அவரு மகள விரும்புறாரோ? அதனாலதான் அவரப் பார்த்ததும் தானாச் சிரிக்கிற என்னை "டிச்சர் டீச்சர்னு சொல்லுதாரோ? 'ஸெட் கணக்குல டிரெ யினிங் எடுக்க மதுரைக்குப் பேrனவரு... எப்போ வரப் போறாரோ... பார்த்து எவ்வளவு நாளாச்சு? பாவி மனுஷன் ஒரு தடவ வந்தா என்ன? நான் இவரை நினைச்சி, அந்த நெனப்புலயே சுகத்த அனுபவிக்கையில மாப்பிள்ள பாக்காங்களாம் மாப்பிள்ள. பாத்துப் புடலாம். வீட்டுக்குள் சத்தம் வலுத்துக் கேட்டது. சரஸ்வதி, ஒரே தாவாகத் தாவி தந்தை முன்னால் போய் நின்றாள். 'எப்பா! நான் என்ன ஒங்க தலையிலயா உட்கார்ந்திருக்கேன்...? சுமக்க முடியாம கஷ்டப்படுநீங்க. எனக்கு இப்போ 'அது' ஒண்னும் வேண்டாம்.' பொன்னையா, மகளை ஆழமாகவும், அகலமாகவும் பார்ததார்! 'ஒரு வயதுப பெண் , தன் கல்யாணத்தைப் பற்றிப் பேசுவதா... அதுவும் பெத்த அப்பனிடம். இந்த விஷயத்தில் தலையிட இந்தப் பய மவளுக்கு என்ன ரைட் இருக்கு? எல்லாம் இந்த கழுத முண்ட கொடுக்கிற
செல்லம். பொன்னையா கத்தினார். 'பாத்தியாடி... ஒன் மவள் பேசுற பேச்ச? வர வர அவளுக்கு நான் அப்பனா தெரியாமப் போச்சுப் பாத்தியா? ஏன பேச மாட்டாள்? இருநூற்று ஐம்பது ரூபாய் சம் பாதிக்கால்லா. இந்த மரம் வெட்டி கண்ணுக்குத் தெரியுமா?" சரஸ்வதி, முதலில் சாந்தமாகத் தான் பேசினாள். "ஒம்ம மனசு நோவக்கூடாதுன்னு ரெண்டு வருஷமா மானேஜர் வீட்ல தினமும் தண்ணி எடுத்து ஊத்தறேன். சில சமயத்துல பாத்திரத்த தேக்கிறேன். தண்ணிக் கிணத்துல கேவலமாப் பேசுறாளு வ. ராசம்மா அத்த வேற, நாலுபேரு முன்னால அதட்டிட்டுப் போனாள். ஊர்ல. கசாமுசான்னு பேசுறாங்களாம். வாத்திச்சி வேல பாக்கற ஒவ்வொருத்தியும், ராணிமாதிரி இருக்கையில, நான்... இன்னும் நாயிலயும் கேவலமா வேல பாக்கேன். எல்லாம் ஒம்ம மனசு நோவக்கூடாது என்கிறதுக்காக. அப்படியும் நான் ஒமக்குப் பிடிக்கல. செங்கல்பட்டு கிணத்துல தள்ளப்பாக்கீங்க.' சரஸ்வதி விம்மினாள். சுவரில் தலையை வைத்துக் கொண்டு கேவிக் கேவி அழுதாள். பொன்னையா எழுநதார் மகளை அடிக்கப் போகிறாரோ என்று மனைவிக்காரி படபடப்போடு எழுந்தாள் ஆனால்-பொன்னையா, சரஸ்வதியின் இரண்டு கை களையும் பிடித்துக்கொண்டு நின்றார். மகள்... உள்ளு ரப்பட்ட வேதனை, மரம் வெட்டி மரம் வெட்டி மரமாகப் போன அவருக்கு, இப்போதுதான் உறைத்திருக்க வேண்டும், "ஏம்மா அழுவுற ஒன் இஷ்டத்த மீறி எதையும் செய்யமாட்டேன். இனிமேல் நீ தங்கப்பாண்டி வீட்டுக்கு மட்டுமல்ல, நம்ம வீட்டுக்கும் தண்ணி எடுக்கப் போகாண்டாம்-என்ன ஆனாலும் சரி

