முகுந்த சந்திரிகை (அல்லது) ஏழை உழவன் (நாடகம்)
சந்திரிகை - கதாநாயகி
சாரங்கன் -- அவள் தமயன்
பெருமாள் - அரச வம்ஸத்தான்
இரவற் சேலை - அவன் தங்கை
சுந்தரி - அவன் மனைவி
முகுந்தன் - சுதா நாயகன், ஏழை உழவன்
முராரி - தந்தை
முத்தாயி - தாய்
ராஜகானி - இடை நாட்டை இருந்தாளும் சோழப் பிரதிநிதி
சேனாதிபதி - இடை நாட்டின் சேனாதிபதி
சோழன் - சோழநாட்டரசன்
மந்திரி - ௸ யார் பிரதானியார்
ஏழை உழவன் அல்லது முகுந்த சந்திரிகை
களத்தில் குவிந்த நெல் அளக்கப்படுகிறது. தண்ணீர் இறைத்த கடனுக்கும், எரு வாங்கிய கடனுக்கும் நில வரிக்கும் பிற ஆட்களுக்கும் பகிர்ந்து கொடுத்தபின் மீதியில்லை .
அளவுகாரன் மீதியில்லை என்பதைத் தெரிவிக்கிறான். முகுந்தன் என்னும் ஏழை உழவன் விழிக்கிறான். வயோதிகத் தாய் தந்தையரைக் காப்பது எப்படி என்று தவித்து நிற்கிறான். அவன் நிழல் கண்ணில் படுகிறது. என் அருமைத்தாய் தந்தையால் வளர்க்கப்பட்ட இத்தனை பெரிய உடல் எனக்கிருந்தும் பயனென்ன என்று அளவு காரனிடம் கூறுகிறான். இதைக்கேட்டுக் கொண்டே வந்த அவர் தந்தை முராரி, "எல்லாம் தரும் இந்த உடல் அப்பா, வருந்தாதே'' என்று கூறித் தேற்றுகிறான்.
வீட்டில் தாய் தந்தையார்க்கு உருக்கமான சம்பாஷணை. முராரி சோழநாட்டில் உள்ள உழவுத் தொழில் வசதியைக் கூறுகிறான். அந்த வசதி இடை நாட்டில் இல்லை. காரணம் இடை நாடு அடிமை நாடு. காடழிக்கிறார்கள். முகுந்தன் மரம் பிளக்கிறான், மற்றும் பலரோடு.
காட்டுக் குத்தகைக்காரன் அவரவர் பிளந்த அளவுக்குக் கூலி கொடுக்கிறான்.
ஓர் கிழவன் பிள்ளையில்லாதவன். தன்னால் கட்டை பிளக்க முடியவில்லை. முடியாமை தெரிந்தால் எப் போதுமே கிழவனைக் காட்டுக்குள் விடமாட்டார்கள். அந்தக் கிழவனுக்கு முகுந்தன் தான் வெட்டிய விறகுகளில் பாதியை கிழவன் வெட்டியதாகக் காட்டுகிறான். இதனால் சரிபாதிக் கூலி கிழவனுக்குப் போகிறது.
முகுந்தன் கூலி பெற்றுச் சிறிது விறகைத் தலையில் சுமந்து வீட்டுக்குப் போகிறான்.
வழியில் பறை முழங்குகிறது. கிராமத்தார் கூடு கிறார்கள். ஆல மரத்தின் கீழ் சந்திரிகா (கதாநாயகி) சாரங்கன் (ஷைள் தமயன்) பெருமாள் பாடு, இரவற்சேலை முதலிய தேசத்தொண்டர்கள் பிரசங்கம் செய்கிறார்கள். இடை நாடு சுதந்தரம் அடைய வேண்டும் என்பது பற்றித் தான் பேச்சு, அப்பிரசங்கம் பொது ஜனங்கட்கு உணர்ச் சியை உண்டு பண்ணவில்லை. விளங்கவில்லை. ஜனங்கள் தேசத்தொண்டர்களிடைப் பரஸ்பர முணுமுணுப்பு. பேதம். இதற்கிடையில் நீங்கள் நன்றாக விஷயத்தை விளக்கவில்லை" என்று ஒரு குரல் கேட்கிறது. இப்படிக் கூறிய பிறகு தலைவன் மேடையில் பேசக் கேட்டுக் கொள்ளப்படுகிறான். வாய்க்கால் வடிகால் ஏரிமராமத்து இல்லை. தொழிலாளர்க்கு வசதி, உழவுக்குக் கடன் கொடுப்பதில்லை என்று தொடங்கி சுதந்திரம் தேவை என விளக்குகிறான். மக்களிடைச் சந்தோஷ ஆரவாரம்.
தேசத் தொண்டர்கள் கூடி, முகுந்தன் தாய் தந்தை யரிடம் போகிறார்கள். தாய் தந்தையர் தமது வறுமை நிலையிலும் தம் குமாரனை நாட்டுக்கு தத்தம் புரிகிறார்கள்.
சந்திரிகா முடியிழந்த மன்னன் மகள். அவள் முகுந்தன் என்னும் அந்த ஏழை உழவன் மேல் காதல் கொள்கிறான்.
அடிக்கடி இருவரும் சந்திக்க நேர்ந்த போதெல்லாம் சந்திரிகா பேசும் காதல் பேச்சுகட்கெல்லாம் முகுந்தன் பொருள் தெரியாது தேசீய விடை கொடுக்கிறான். இதனால் அவன் எண்ணம் தேசத்தொண்டில் ஈடு பட்டிருப்பதைச் சந்திரிகா உணருகிறாள். மேலும் முயலுகிறாள். பல சந்திப்புக்குப் பின் முகுந்தனுக்கும் அவள் மேல் காதல் உண்டாகிறது. எனினும் அடிமை நாட்டில் திருமணம் செய்து கொள்ளேன் என்கிறான். சுதந்திரம் பெற்றவுடன் மணம்-முத்தம் என்று ஒரே பிடியாகப் பிடிக்கிறான். கடைசியில் ஓரிரவு பூரண சந்திரனும் வானம்பாடியின் இனிய சேஷடையால் அவள் காதல் தீயில் கொளுத்தப்பட்டதால் அவனை மருந்துக்கு இழுக்கிறாள். முடியவில்லை. சுதந்திர நாட்டில் திருமணம் செய்து கொள்வதாக உறுதி கூறுவதாகக் கைபோட்டுத் தருகிறான். இதை மறைவிலிருந்து சேனாதிபதி (இடை நாட்டில் சோழனால் நியமிக்கப்பட்டிருப்பவன்) பார்த்து விடுகிறான். கிண்டலான சம்பாஷனைகளின் பின், சேனாதிபதி, சீக்கிரம் நாட்டுக்குச் சுதந்தரம் கிடைக்கப் போகிறது. அதனால் உங்கள் திருமணமும் சீக்கிரம் நடக்கும் என வாழ்த்திச் செல்லுகின்றான்.
சுதந்தரம் கிடைத்த மாதிரிதானே நாம் கலியாணம் செய்து கொள்ளலாமே. தாராளமாக இப்போதே எனக்கு ஒரு முத்தம் தரலாமே என்கிறாள் சந்திரிகா. சிரிப்போடு மறுக்கிறான் முகுந்தன்.
நகர வீதியில் பிற நாட்டார்க்கு இங்கென்ன வேலை என்ற பாட்டைப் பாடி மக்களுக்கு எழுச்சியை உண்டாக்குகிறார் முகுந்தனும் பிறரும்.
மற்றொருபுறம் "கலையும் தொழிலும் நாம் அறிவோம், போர் செய்வோம். முன்னர் ஆண்டாம்; இப்போதும் ஆள்வோம். ஆயத்தமாய் இருங்கள்'' என்ற பாட்டும் பிரசங்கமும் நடைபெறுகிறது முகுந்தனால்
முகுந்தன், சந்திரிகா, பிறர் கைது செய்யப்பட்டு சேனாதிபதியால் விலங்கிடப்படுகிறார்கள். ராஜதானி (சோழன் பிரதிநிதியாக இருந்து இடை நாட்டை ஆண்டு வருவோன்) வருகிறான். தேசத் தொண்டர்களுக்கு அனு கூலமாகப் பேசி அவர்களை விடுதலை செய்கிறான்.
ராஜதானி இடை நாட்டின் நல்ல நிலையையும் முகுந்தன் திறமையான பிரசாரத்தையும் கூறி, இடை நாட்டுக்குச் சுதந்திரம் கொடுத்து விட வேண்டும் என்கிறான். இது விஷயத்தைத் தான் சோழனுக்கு அறிவித்து விடப் போவதையும் கூறி, சேனாதிபதியின் அபிப்பிராயத்தையும் பெறுகிறான்.
பெருமா இமாடு என்பவன் அரச குடும்பத்தைச் சேர்ந்தவன். ஏழை முகுந்தனும் சந்திரிகாவும் சந்தோஷ மாகப் பேசியிருந்ததைப் பார்த்து விட்டதிலிருந்து தான்
சந்திரிகாலை அடைய வேண்டும் என்று சதா உடையை கிழிந்ததையும் பழசுகளையும் - ஏராளமாகத் தூக்கித் தோளில் போட்டுக்கொள்வதை உடுத்திக் கொண்டதாக நினைத்துச் சந்திரிகாவிடம் போய்ப் பாடுவதும் ஆடுவது மாக இருக்கிறான். அவள் எதிர்ப்பைப் பலப்படுத்தக் கூடாது என்றெண்ணிப் பெருமாள் மாட்டைத் தட்டிக் கொடுத்து வருகிறாள். பெருமாள் மாடு அதை உண்மை யென்றே நினைத்து விடுகிறான், தன் மனைவியாகிய சுந்தரியிடம் அவன் பேசுவதே கிடையாது அவள் ஒரு நாள் காரணம் கேட்கிறாள் தன்னைச் சந்திரிகை காதலிக் கிறாள் நான் அவனைக் காதலிக்கிறேன் என்றும் அதனால் செல்வம் கிடைக்குமென்றும் கூறுகிறான். இதற்காகச் சுந்தரி வருந்து கிறாள். ஒருநாள் அவள் தனியாகச்சிந்திக்கத் தொடங்கினாள். தன்னிடம் பால் குடிக்கும் குழந்தையிருப் பதால் தன் மீது அவன் வெறுப்பு அடைகிறான் என்ற முடி வோடு, பிள்ளையைத் தரையில் மோதக் தூக்குகிறாள். அக்குழந்தையின் சிரித்த முகம் அவள் அன்பைத் தூண்டி விடவே மோதத் தூக்கிய கைகள் தழுவிக் கொள்ள எண்ணவே ஒன்று முத்தத் தருகிறாள்.
பெருமாள் மாடு மனேராஜ்யம் புரிவதும், மனைவிவெறுப் பதும் மனோராஜ்யத்தில் கடைசியில் உணவு இல்லை என்ற முடிவு தெரிந்து பெருமாள் மாடு ஏமாறுவதுமாகக் காலந் தள்ளுகிறான். அவன் மனோராஜ்யத்தை முழுதும் ஆமோ திப்பவள் பெருமாள் மாட்டின் தங்கை இரவற்சேலை என் பவள்.
(சந்திரிகை மெச்சும்படி ஆரம்பத்தில் ஒருநாள் பெரு மாள் மாடு ஏராளமான உடைகளோடு வெளிவருகிறான். அவனைப் போலவே பெருமாள் மாடும் ஏராளமான துணி களைப் போட்டுக் கொண்டு போயிற்று. இதைக் கண்ட தண்பர்கள் அவனுக்குப் பெருமாள் மாடு என்ற பேரை வைத்து விடுகிறார்கள்.)
பாண்டியன் சோழ நாட்டின் மேல் படையெடுப் பானோ என்ற சந்தேகம் சோழனுக்கு ஏற்படுகிறது. இது பற்றிச் சோழன் தன் மந்திரிப் பிரதானிகளிடம் பிரஸ்தா பிக்கிறான். இச்சமவத்தில் இடை நாட்டுக்கும் நாம் சுதந் தரம் கொடுத்து விடுவது நல்லது என்ற முடிவுக்கு வரு கிறான் சோழன். இதே சமயம் இடைநாட்டை ஆண்டு வரும் ராஜதானியின் அறிக்கை கிடைக்கிறது. அவ்வறிக் கையும் இடைநாட்டின் நல்ல நிலையை உத்தேசித்தும், பாண்டியன் படையெடுப்பை உத்தேசித்தும், இடை நாட் டுக்குச் சுதந்திரம் கொடுத்து விடலாம் என்றிருக்கிறது. சோழன் தான் இடைநாட்டின் நிலைமை அறிந்து அங்கேயே சுதந்தரப் பிரகடனத்தை வெளிப்படுத்திக் வருவ தாகப் புறப்படுகிறான்.
இடை நாட்டின் கோட்டை வாசற்படியில் சில வைதீகப் பார்ப்பனர் வந்து உட்போக உத்தரவு கேட்கிறார்கள்.
பார்ப்பனக் கோலத்தைக் கண்டகாவற்காரர் ஆச்சரியப் படுகிறார்கள். தங்கள் தலைமுறையில் இப்படிப்பட்ட கோலத்தோடு இடைநாட்டில் மனதாரப் பார்த்ததில்லை என்றும் பார்ப்பனர் போன்ற பேரையே கேட்ட தில்லை யென்றும் கூறிவிடுகிறார்கள். ஆயினும் கடைசியில் அவர் கள் உட்போக அனுமதிக்கப் படுகிறார்கள்.
பிறகு சில பறையர்கள் உட்புசுக் கேட்கிறார்கள். அது பற்றியும் அப்படியே ஆச்சரியம் உண்டாகிறது. அவர்களும் உட்போக அனுமதிக்கப்படுகிறார்கள்.
இப்படி மாறுவேடத்துடன் வந்த சோழனும், பிர தானிகளும் இடை நாட்டில் ஜாதி என்ற பேச்சே மறைந்து விட்டதாக அறிந்து சந்தோஷிக்கிறார்கள். ராஜதானியும் சேனாதிபதியும் (இடை நாடு) பேசியிருக்கையில் இடை நாட்டுத்தேசபக்தர்கள் என்று கூறிக்கொண்டு சிலர் உள்ளே நுழைகிறார்கள். ராஜதானியையும், சேனாதிபதியை யும் பார்த்து எங்கள் நாட்டில் நீங்கள் இருப்பது மானங் கெட்ட வேலை என்று எதிர்ப்பாகப் போகிறார்கள், சேனாதிபதி வாளை உருவுகிறான். ராஜதானி தடுக்கிறான். தேசபக்தர்கள் என்று கூறிய அந்தச் சோழ மன்னன் முதலி யவர்களைச் சொந்த உருவத்தைக் காட்டி ராஜதானியின் தன்மையைப் பாராட்டுகிறார்கள்.
சோழனும் ராஜதானியும் சில பிரதானிகளும் மாறு வேடம் அணிந்தும், மற்றும் நினைத்த உருவத்தை அடைய உடை மீசை தாடிகளை எடுத்துக் கொண்டும் இடை நாட் டின் நிலையை அறியப் புறப்படுகிறார்கள்.
நாட்டுப்புறத்தில் சில குடிசைகள்.
அந்தக் குடிசைகளில் அந்த அர்த்த ராத்திரியில் சிலர் சில மாணவர்கட்குப் பாடம் சொல்லித் தருகிறார்கள். பிரதானிகளில் ஒருவன் மாறு வேடத்தோடு சென்று, 'ஏன் இந்நேரத்தில் படிப்பு?' என்கிறான். பிள்ளைகளைப் பாட சாலைகளுக்கு முறையாக அனுப்பாததால் நாட்டாண்மைக் காரர் எம்மை ஊரிலிருந்து நீக்கி விட்டார்கள். எம் பிள்ளைகட்குக் கணிதம், இலக்கியம், இலக்கணம் சொல்லி கொடுத்துவிட்டால் பிறகு ஊரில் சேர்த்துக் கொள்வார்கள் என்று பதில் கூறுகிறார்கள்.
அரசன் இடை நாட்டின் கல்வி அபிவிருத்தியைப் புகழ்கிறான்.
சீர்திருத்தத் திருமணம் நடக்கிறது. இங்கு நடத்திய சம்பாஷணைகள், சச்சரவுகளால் பறையன் என்பதும் பார்ப்பான் என்பதும் புரோகிதம் என்பதும் இடைநாட் டில் கிடையாது என்பதும் விளங்குகிறது.
மூஞ்சி சுருங்கிய தொண்டு கிழவன் குறட்டை விட்டுத் தூங்குகிறான். அவன் பக்கத்தில் அவன் இளமனைவி இருந்து அவன் கோலத்தைப் பார்த்துச் சிரிக்கமாட்டாதவ ளாகி விஷத்தை அருத்தும் சமயம் அவள் தாய் பார்த்துத் தடுக்கிறாள். இதற்குள் கிழவன் விழித்து விஷயம் அறிந்து, தான் இளமங்கையை மணந்தது தவறு என்று உணர்ந்து அவளைப் பார்த்து, 'பெண்ணே நான் இறந்தால் நீ வேறொருவனை மணந்து கொள்வதாக எனக்கு உறுதி கொடு' என்கிறான். அவள் மறுக்கிறாள்.
அச்சமயத்தில் தேசபக்கன் (முகுந்தனின்) சின்னத்தின் சப்தமும் தேச நீதி முழக்கமும் கேட்கிறது. அதை எடுத்துக் காட்டி - உறுதி கேட்க அவள் அவ்வாறே தேச நீதிக்குக் கீழ்ப்படிகிறாள்.
தாயும் மங்கையும் அப்புறம் போனதும், கிழவன் தள்ளாடி நடந்து விஷத்தை எடுத்துக் குடித்து உயிர் துறக் கிறான். இது கண்ட அரசன் முதலியவர்கள் நாட்டின் நிலைக்கு மெச்சியும், கிழவனிலைக்கு வருந்தியும் அகலுகிறார்கள்.
நாட்டுப்புறத்தில் குடியானவன் பசு கன்று போடு கிறது மழை பொழிகிறது. இல்லம் வீழ்கிறது வீட்டுக் காரி பிரசவவேதனை அடைகிறாள். கொல்லையில் பண்ணையாள் குளிரால் மெலிந்து உயிர் விடுகிறான். மழையீரம் காயுமுன் அவசரமாக விதைக்க நெல்கொண்டு போகிறான். வழியிலே கடன்காரர் மறிக்கிறார்கள் . சாவோலை கொண் டொருவர் எதிரே வருகிறார். விருந் தாளி ஒருவன் வந்து விடுகிறான். கடைசியாகக் குடியான வனைச் சர்ப்பம் தீண்டுகிறது. அவன் இறந்து போகிறான்.
இவைகளை யெல்லாம் கண்ட அரசர் முதலானோர் இடை நாட்டின் வறுமை நிலைக்கு வருந்திச் செல்கிறார்கள்.
முகுந்தன் தன் பரிவாரத்தோடு ஆயுதச் சாலையைப் பார்வையிடுகிறான். அங்கு ஊக்கமளிக்கும் சில வார்த்தைகள் வீரர்கட்குச் சொல்லுகிறான்.
குதிரைப் படையைப் பார்வையிடுகிறான். ' சுதந்தரம் நமது ஆத்மா" என்று கூறிக் குதிரைகளைச் சேர்க்கும்படி கூறுகிறான்.
காவாட்களை அணுகி ஓர் சொற்பொழிவு நடத்துகிறான்.
இவைகளை யெல்லாம் பார்த்திருந்த அரசன் ஆச்சரியப்பட்டுச் சேனாபதியை மாறுவேடத்தோடு அவனிடம் பேசிவர ஏதோ கூறி அனுப்புகிறான்.
மாறுவேடத்தோடுள்ள சேனாபதி முகுந்தனிடம் நமது சோழ நாட்டின் மேல் பாண்டியன் படையெடுப்ப தால் சோழனுக்கு நெருக்கடி ஏற்படும் அந்த நெருக்கடி நமக்குச் சாதகமல்லவா? நெருக்கடியான நேரத்தில் நாமும் சோழனை எதிர்த்து நாட்டை மீட்கலாம்
இதுகேட்ட முகுந்தன், பாண்டியன் படையெடுப்பு நிச்சயமா?' என்கிறான். நிச்சயமென்று ஆதாரத்துடன் கூறவே,
சோழ ராஜனுக்கு நெருக்கடி நேரத்தில் நாம் சுதந்தி ரம் - கிளர்ச்சி ஆகிப்பதே சரியல்ல. உயர்ந்த நோக்க மாகாது. சுதந்திரம் நிலைக்காது. சோழராஜனும், ராஜ தானியும் கோரினால் நாம் அக்ரமக்காரனாகிய பாண்டி யனைச் சோழன் படையோடு சேர்ந்து முறியடிக்க வேண்டும். பிறகு நமது சுதந்தரக் கிளர்ச்சி என்று கூறி சேர்ந்த படைகளைக் கலைக்கிறான்.
இச்சமயம் பெருமாள் மாடு இதையெதிர்த்துப் பேசுகிறான்,
ஒருபுறம் பெருமாள் மாட்டை ஒருவன் தனியே அழைத்து ஏன் எதிர்க்கிறாய் என்று கேட்கிறான். இடை நாட்டுக்குச் சுதந்தரம் கிடைத்ததும் சந்திரிகை என்னைக் கலியாணம் செய்து கொள்வது பற்றி யோசிப்பதாகச் சொன்னாள் என்கிறான்.
அப்படியானால் சுய காரியத்தை உத்தேசித்துத்தான் நீ சோழனுக்கு நெருக்கடியை எதிர்பார்க்கின்றாயோ?
மற்றொருபுறம்.
முகுந்தன் சந்திரிகை பேசுகிறார்கள். ஏன் நீங்கள் இடை நாட்டின் சுதந்தர நாளைத் தள்ளிக்கொண்டு போகிறீர்கள்? கலியாணம்?
முகுந்தன். ஒழுக்கமும் பெருந்தன்மையும் சுயகாரியத் தைவிடப் பெரியவை என்கிறான்.
அரசன் முதலானோரிடம் பிர தானிகள் இதைக் கூற, அரசன் உண்மையில் இடை நாடு தேச ஒழுக்கத்தில் சிறந் தது என்று கூறிப் போகிறான்.
பாண்டியன் வேட்டையாடுகையில் புலி அடித்ததால் இறந்தான் என்ற சேதி சோழனுக்குக் கிடைக்கிறது. சோழ நாட்டின் மேல் பாண்டியன் படையெடுப்பு இல்லை என்று தெரிந்து விட்டது. சோழன் வருகையைத் தேசத் தொண்டர்கட்கு அறிவிக்கப்படுகிறது. இடைநாடு முடி யிழந்த மன்னன் மாளிகையில் சோழன் முதலியவர்கட்கு உற்சாகமான வரவேற்பு நடக்கிறது. சோழன், பாண்டியன் இறந்ததைக் கூறி - இடை நாட்டிற்குச் சுதந்திரம் அளிப்பதாகவும் வாக்களிக்கிறான். அனை வரும் மகிழ்ச்சியடைகிறார்கள்.
முகுந்தன் சந்திரிகையைக் கண்டு இந்தச் சந்தோஷச் செய்தியைத் தெரிவிக்க ஓடுகிறான். அவள் அந்தப்புரத்தில் இல்லை. அங்கிருந்தவர்களிடம் அவள் வந்தால் சுதந்தரம் நாளைக்கு என்பதை அவளிடம் கூறச் சொல்லி- அதோடு நில்லாமல் பின்னும் அவளைத் தேடித் தேசப் பொது மன்றில் ஓடி அங்கேயும் காணாமல் உத்யான வனத்தை நோக்கி ஓடுகிறான்.
பெருமாள் மாடு உடை உடுத்துகிறான். மனைவியிடம் சுதந்தரம் நாளைக்கு - கலியாணம் நாளை மறுநாள் என்று கூறுகிறான். அவள் கண்ணீர் விடுகிறாள். இவன் வெளியில் துணிகளோடு ஒடுகிறான்.
உப்பரிகையில் சுதந்தரப் பிரகடனம் தயாரித்துக் கொண்டிருந்த அரசர் தற்செயலாக ஜன்னல் வழியாகப் பார்க்கிறார். உத்தியான வனத்தில் சந்திரிகை, இரவற் சேலை, தோழிமார் நீராடியிருந்தார்கள். சோழன் சந்திரிகையின் அழகில் சிக்கிச் சேனாதிபதியை இவள் தான் சந்திரிகை நீ சொன்ன வனிதையோ? இவளை நான்
அடைய மார்க்கம் தேடு என்கிறான்.
அவள் முகுந்தன் மேல் காதல் கொண்டவள், அவள் மனம் உங்களிடம் திரும்புவது அருமை என்கிறான்.
நீராடித் துறை ஏறிய சந்திரிகையிடம் ஆவலோடு முகுந்தன் தோன்றி சுதந்தரம் உண்டு என்கிறான்.
அதே சமயம் சோழன் சேனாபதியிடம் சுதந்தரம் இல்லை என்கிறான்.
சந்திரிகை உப்பரிகை ஜன்னலில் அரசர் பார்ப்பதை இரவற்சேலைக்குக் காட்டு கிறாள். அனைவரும் ஓடி மறை கிறார்கள். முகுந்தனும் உடன் போகிறான்.
அன்று மாலை சோழன் சந்திரிகை சந்திப்பு. சோழன் எண்ணத்தைச் சந்திரிகை நிராகரித்தல்.
சோழன்-முகுந்தன் சந்திப்பு.
முகுந்தன் தன் காதலிக்குச் சோழனைப் பற்றிச் சிபாரிசு செய்ய மறுத்ததோடு, ஒருவர் கொடுத்து வாங்குவது சுதந்தரமாகாது. அது நிலைக்கவும் நிலைக்காது. தாமே பெறுவது தான் சுதந்தரம், நிலைப்பது என்று கூறிப் போகிறான்.
சந்திரிகை தன் அந்தப்புரத்தில் காவற் படுத்தப்படு கிறாள், சோழன் கட்டளைப்படி,
முகுந்தன் சிறையில் இடப்படுகிறான். ரகசியமாக. பெருமாள் மாடு தன் தங்கை இரவற்சேலையிடம் சோழன் யாரோ ஒருத்திமேல் ஆசைப்பட்டானாம்.
அவளைக் கொடுத்தால்தான் சுதந்தரம் கொடுப்பேன் என்று கூறுகிறானாம். இப்படி மாளிகையில் ரகசிமாகப் பேசிக் கொள்கிறார்கள் என்கிறான்.
இரவற் சேலை என் மேல் ஆசைப்பட்டான் அரசன். எனக்கு நல்ல சேலை ஒன்று இரவல் வாங்கிக் கொடுத்தால் நான் அரசனிடம் சென்று - கலியாணத்தை முடித்துக் கொள்வேன். அதன் பிறகு சுதந்தரம். அதன் பிறகு உனக்கும் சந்திரிகைக்கும் கலியாணம் என்கிறாள்.
சாரங்கன் (சந்திரிகை தமயன்) முதலிய தேசத் தொண்டர்கள் கூடி ஆலோசிக்கிறார்கள்.
அரசன் தன் தங்கையின் அந்தப்புரத்தில் காவல் நியமித்ததன் காரணம் தெரியவில்லை . முகுந்தன் ஏன் சிறைப்படுத்தப்பட்டான்.
இச்சமயம் பெருமாள் மாடு தோன்றுகிறான். தன் தங்கையாகிய இரவற்சேலை மேல் சோழன் காதல் கொண்ட தாயும், அவள் சேலை நல்லதாக இல்லாததால் சோழன் அவளைக் கலியாணம் செய்து கொள்ளத் தயக்கப் படுகிறது என்றும் ஒரு சேலை இரவல் வேண்டும் என்றும் கேட்கிறான்.
அனைவரும் சிரிக்கிறார்கள். சிலர் நம்புகிறார் கள். சந்திரிகை கட்டியிருந்த சேலையைச் சாரங்கன் கொண்டு வந்து கொடுக்கிறான்.
சுதந்தரந்தான் இரவற் சேலையில் வந்து நிற்கிறதா என்று அனைவரும் நகைக்கிறார்கள்.
எனினும் இச்சேதி காட்டுத்தீப் போல் பரவுகிறது . இரவற் புடவையின் அழகைப் பார்க்க ஊர் ஜனங்கள் அவள் வீட்டில் கூடி விடுகிறார்கள்.
இரவற்சேலை கவியாணப்பெண் ஜாடையில் காட்சி கொடுக்கிறாள். சாரங்கனும் கண்டு பரிகசித்துப் போகிறான்.
சோழனும் சாரங்கனும் சந்திக்கிறார்கள். சோழன் அவளை நான் மணந்தால் - மணக்கும்படி - நீங்கள் துணை செய்தால் சுதந்தரம் கிடைக்கும் என்கிறான்.
சாரங்கன் அவள்தான் சம்மதிக்கிறாளே என்று கூறு கிறான். அரசன் ஆச்சரியப்பட்டு, அப்படியா இதை மெய்ப் பிக்கிறீரா?' என்கிறான். இதோ என்று திரும்புகிறான் சாரங்கன்.
இரவற்சேலை திருணக் கோலத்துடன் பரிஜனங்கள் புடை குழ வாத்திய சகிதம் சோழனிருந்த இடம் நோக்கி அழைத்துப் போகப்படுகிறாள். இரவற் புடவையில் இருந்து கிடைக்கிறது சுதந்தரம் என்கிறார்கள்.
அதே நேரத்தில் தனக்கும் சந்திரிகைக்கும் திருமணம் என்றும் - இந்த ராஜ்ஜியத்திற்கு நான் தான் அரசன் என்றும், என் தங்கைதான் சோழ நாட்டின் ராணியென்றும் கூறிக் கம்பீரமாக நடக்கிறான் பெருமாள் மாடு.
சோழனும் ராஜதானியும் சேனாதிபதியும் பேசியிருக் சிறார்கள். சோழன் தனக்குச் சந்திரிகை வாழ்க்கைப்படப் போவதை அவர்களிடம் சொல்லிப் பெருமை பேசுகிறான். தன் உடை நன்றாக இருக்கிறதா என்று தன்னைத்தானே பார்த்துக் கொள்கிறான். மற்றவர்களை எல்லாம் போகும் படி கேட்டுக் கொள்கிறான்.
இரவற்சேலை வந்து தலை குவிந்து ஒருபுறம் அமர்த்தப் படுகிறாள். அனைவரும் வெளியே போகிறார்கள். அரசன் அணுகி - கடைசியில் இரவற் சேலையென்று அறிந்து அளவற்ற கோபமும் நாணமும் அடைகிறான். அவளைப் போம்படி கூறுகிறான். அவள் எழுந்தோடுகிறாள். வாசலில் ஜனங்கள் நிற்கிறார்கள். விஷயத் தெரிந்து நகைக்கிறார்கள். பெருமாள் மாடு என் தங்கை கலியாணம் நிச்சயமாய் விட்டது. இனி என் கலியாணம்தான் பாக்கி என்று கூறுகிறான்.
அனைவரும் பரிகசிக்கிறார்கள்,
சோழன் சேனாபதிக்கு ஆக்ஞையிடுகிறான், தேசத் தொண்டர்களையும் பிரதான குடிகளையும் சிறைப் படுத்தித் துன்பம் இழைக்கும்படி,
அவ்வாறே நடைபெறுகிறது. நாடு துன்பத்தை அடைகிறது. ஜனங்கள் அலறுகிறார் கள்.
நகர வீதியில் ஒன்று தீக்கிரை ஆக்கப்படுகிறது. சந்திரிகை உள்ளத்தைத் தன்பக்கம் திருப்பச் சொல்லி அவளிடம் அனுப்புகிறாள்.
ஜனங்கள் சந்திரிகையை அணுகி அவளைச் சபிக் கிறார்கள். அவள் துன்பம் அடைகிறாள். காதல்? தேசம்?
ஒருவன் மேல் சென்ற உள்ளம் பிறரை நினைப்பதும் கற்புத்தவறு என்று கூறுகிறாள்,
கற்பா? தேசமா? எது பிரதானம்?
மீண்டும் ஜனங்கள் முகுந்தனிடம் வந்து அவனை நிந்திக்கிறார்கள். முகுந்தன் அவள் பிறரை மணப்பதில் எனக்குத் தடையில்லை. தேசத்தின் பொருட்டு. எனினும் அவள் கற்புடையவள்; உண்மைக் காதலுள்ள அவள் அப் படிச் செய்யாள் என்று கூறித் துடிக்கிறாள்.
ஊரின் மக்கள் ஐயோ என்று கூக்குரலிடுவது சந்திரிகை காதில் நாராசமாகிறது.
அவ்வாறே முகுந்தன் காதில் வீழ்வதால் அவன் நடுக்கம் அடைகிறான். இரக்கத்தால் சோர்ந்து விழுகிறான்.
-முகுந்தன் அன்றிரவு தூக்கமில்லாமல் சிறையில் உலாவுகின்றான். ராஜதானி அங்கு வருகிறான். ராஜதானி, தனக்கு இடை நாட்டின் நன்மையில் அக்கறை உண்டு என்பதை ஞாபகப் படுத்துகிறான். முகுந்தா இந்தத் தர்மசங்கடத்தை நீ எவ்வாறு தாங்குவாய் என்கிறான்.
கடைசியாக, "நீயே உன் கையால் உன் உயிர் போன்ற காதலியைக் கொன்றுவிடு. அதனால் அவள் கற்புக்கும் காதலுக்கும் பழுது ஏற்படாததோடு நாடும் சுதந்தரமடை யும், மக்கள் படும் தொல்லை தீரும்'' என்கிறான்.
முகுந்தன் சரி என்ற முடிவுக்கு வருகிறான் சிரமசாத்ய மாக. முகுந்தன் சந்திரிகையை நோக்கிப் போகிறான். ராஜதானி சந்திரிகையின் காவற்காரரை யெல்லாம் அப்புறப்படுத்துகிறான்.
பெருமாள் மாடும், இரவற்சேலையும் பேசிக்கொண்டு தெருவில் நடக்கிறார்கள். அதே இரவில் .
சேனாதிபதி அடுத்த தெருவைத் தீக்கிரையாக்க ஆட்களோடு நிற்கிறான். பெருமாள் மாடு இரவற்சேலை இருவரோடு சேனாதிபதி சம்பாஷிக்கிறார். கேலியாகவும் தான் நிற்பதன் நோக்கத்தை அவர்கள் அறியாமல் இருக்க வும் பெருமாள் மாடு இரவற்சேலை இருவர்க்கும் தெரிந்து விடுகிறது மக்களோடு தெருவைக் கொளுத்தப் போவது! அவ்விருவரும் பதுங்கியிருந்து பார்க்கிறார்கள் - கொளுத்தப் போவது உண்மை என்று தெரிந்தால் இரவற்சேலையும், பெருமாள்மாடும் கூச்சலிட்டு தெரு வீடுகளில் உறங்கும் மக்களை எழுப்பிவிடலாம் என்ற நோக்கத்தோடு பதுங்கியிருக்கிறார்கள்.
முகுந்தன் சந்திரிகையை அடைகிறான். அவள் நித்திரை செய்கிறாள். அவளைக் குத்திக் கொல்ல முயலு கிறான் அவன். கை துணியவில்லை, துடிக்கிறான், தேசத்தை நினைக்கிறான், பின்னும் முயற்சி...
அவள் நாதா! என்று வாய் பிதற்றிப் புரண்டு படுக் கிறாள். முகுந்தன் பதைத்துக் கத்தியை விட்டெறிகிறான். அவள் விழிக்கிறாள். அவனைத் தழுவிக்கொள்கிறாள் ஆவலாக. அவன் முகத்தில் ஒளியில்லை. கண்ணில் காதல் இல்லை. காரணம் கேட்கிறாள். அவன் மறைத்துக் கூறுகிறான். அவள் தழுவிய கைகளை விலக்கிச் சிறிது வெளிப்புறம் வந்து உலாவுகிறான்.
அதற்குள் கூச்சல். ஐயோ தெருவோரே எழுந்தோடுங் கள். தெருவைக் கொளுத்துகிறார்கள்.
ஐயோ பற்றி எரிகிறது நாடு. அந்த முகுந்தனாலும் சந்திரிகையாலும்.........
ஐயோ ......! ஐயோ ......! என்ற மக்கள் கூச்சல்... அலறல்! இதை முகுந்தன் கேட்கிறான். பதைத்து உள்ளே போகிறான், கீழே விழுந்த கத்தியை எடுக்கிறான். அவள அவனைத் தழுவிக் கொள்கிறாள் காதலால்.
தன்மேல் படர்ந்த வஞ்சிக் கொடியை அந்த முகுந்த விருக்ஷத்தின் விளக்கை-குத்திக் கீழே போட்டது நாட்டுக் காக?
உடனே முகுந்தன் அதே வாளால் தன்னைத் தன் காதலியுடன் சேர்த்தான்.
மரண பூமியில் இருவரும் ஒன்றுபட்டார்கள்.
நாட்டு மக்கள் தலைவர்கள் எதிரில்: சோழன் முகுந்தனின் கிழத்தாய் தந்தையிடம், 'பெரியோரே உம் உயிர் போன்ற மகனை இழந்தீர். இந்தாரும் சுதந்தரப் பிரகடனம்!'
கிழத் தந்தை, சுதந்திரம் கிடைத்தது! நான் என் பிள்ளையை மீண்டும் பெற்றேன். நலம்!

