அன்னை

பொங்கல் விழா, திருவரசி, பொன்னம்மா, மின்னொளி ஆகியோர் அதிகாலையில் ஞாயிறு போற்றிப் பொங்கல் தொடங்குகிறார்கள்.

பால் பொங்குகிறது. மகிழ்ச்சியால், 'பொங்கலோ பொங்கல்!" என்று ஆரவாரம் செய்கிறார்கள்.

இலை போடப்படுகிறது. நல்லப்பன் வருகிறான். திருவரசியும் பொன்னம்மாவும் வரவேற்று உடன் உண்ணச் செய்கிறார்கள். அவன் கண்ணும் கருத்தும் மின்னொளி மேல்!

நல்லப்பன் வெளியில் செல்லுகையில் சன்னலில் மின்னொளியைப் பார்க்கிறான். பேச்சுக் கொடுக்கிறான். அவள் உள்ளே போய்விடுகிறாள்.

அன்று மாலை மின்னொளியும் மீனாள் முதலிய பெண்களும் ஊஞ்சலாடி முடித்து ஒளிந்து பிடிக்கிறார்கள்.

காணாமற் போன மாட்டைத்தேடி வந்த இளவழகன், அலரிப் புதரில் வெண்ணிறங் கண்டு, 'இச்சு இச்சு' என்று ஓட்டியதை அறிந்த மின்னொளி, இனி அவன் கையிலுள்ள கோலாலும், மாடென்றெண்ணி

அடிப்பான் என்று நினைத்தவளாய் எதிர்வந்து நிற்கிறாள்.

கண்ணொடு கண் கலக்கின்றன. அவன் இனிதாக வர்ணித்து அரிதில் பிரிகின்றான்.

இதைப் பார்த்து வந்த மீனாள் மின்னொளியின் உளப்பாங்கை அறிந்து. அவன் இன்னான் என்று கூறி, மின்னொளியிடம் கடிதம் பெற்றுப் போகிறாள்.

இளவழகன் திருமணம் செய்துகொள்ள ஒப்புவதாகக் கடிதம் எழுதித் தந்ததை, மின்னொளியிடம் சன்னலில் மீனாள் கொடுக்கிறாள்.

சன்னலில் மின்னொளி கடிதம் படிப்பதைத் தெருப்புறத்தி லிருந்து நல்லப்பன் பார்த்துக் கொள்ளுகிறான். இதற்குள் இளவழகன் அனுப்பிய சிறுமி தில்லையும் பதில் கடிதம் கேட்க - மின்னொளி பதில் கடிதம் எழுதித் தில்லையிடம் கொடுக்கிறாள்.

தெருவில் போகும் தில்லை எதிரில் நல்லப்பன் குந்தி, தலையில் என்ன? பார்!' என்ன, சிறுமி கவனிக்கையில், அவள் மடியிலிருந்த கடிதத்தை எடுத்துக் கொண்டு. அனுப்பி விடுகின்றான்.

பெரிய பண்ணையாகிய மணிமொழியாரும் அவர் மானேஜரான நச்சினார்க்கினியர் என்னும் நல்லப்பன் தந்தையும், மணிமொழியார் இளமனைவி தேனருவியும் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

மணிமொழியாரும், நச்சினார்க்கினியரும் மலேயாவுக்குப் போகவேண்டும். இங்கு நல்லப்பனுக்கு திருமணத்தை முடித்து, மானேஜராக அமர்த்திவிட்டு !

நச்சினார்க்கினியர், தன் மகன். தானே ஒரு பெண்ணை மணக்க ஏற்பாடு செய்து கொண்டு வருகிறான் என்கிறார்.

விரைவில் திருமணம் முடிய வேண்டுமென்று கவலைப் படுகிறார் மணிமொழியார்.

தனக்குப் பிடித்தமாகத் தானே தேடிக்கொள்ளும்படி விடுவதுதான் நல்லதென்கிறாள் தேனருவி.

மின்னொளி தன் சன்னலின் ஒரு கடிதம் கிடக்கக் கண்டு எடுத்துப் படிக்க -

அன்புள்ள மின்னொளிக்கு,

நான் உன்னை நேரிற்காண விரும்புகிறேன். இன்றிரவு ஊரார் மாரியம்மன் கோயிலுக்கு மாவிளக்குக் கொண்டு போவார்கள். உன் பெற்றோர் போகட்டும். நீ போகாதே. இரவு 8 மணிக்கு நான் வருகிறேன்.

இங்ஙனம்,

இளவழகன்.

என்றிருப்பதை எண்ணி, மீனாவுடன் அன்று இரவு தன் வீட்டில், இளவழகனை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறாள்.

மீனா வேறு அறையில் இருக்கிறாள். மின்னொளி தன் வீடு நோக்கி வரும் இளவழகனை வரவேற்க வாயெடுக்கிறாள். நல்லப்பனைக் கண்டு வியப்பும் வருத்தமும் அடைகிறாள்.

நல்லப்பன் மின்னொளியைத் தனக்கு இணங்கும்படி முயலு கிறான்; முடியவில்லை. அச்சறுத்துகிறான்; அவள் அஞ்சவில்லை . சீழ்க்கை அடிக்க நால்வர் உள்ளே நுழைகிறார்கள்.

-மீனா கொல்லைப்புறமாக ஓடித் தெருக் கதவையும் மின்னொளி பின்னே ஓடிக் கொல்லைக் கதவையும் சாத்தித் தெருப்புறத்திலும் கொல்லைப்புறத்திலும் சங்கிலி போட்டுவிடுகிறார்கள்.

இதே நேரத்தில் மின்னொளியின் தாயான பொன்னம்மா கும்பலில் நெருக்குண்டு வீழ்ந்து கால் உடைந்து போக அவளை வண்டியில் ஏற்றிக்கொண்டு வருகிறான் தந்தை திருவரசு.

வீட்டில் ஏறிக்குதிக்கின்ற நல்லப்பன் மின்னொளியைத் தாவுகிறான்.

அவன் பிறகு குதிக்கின்ற நால்வரையும் மீனா தடியால் அடித்து வீழ்த்திய வண்ணமிருக்கிறாள்.

எதிர்த்து - பிடிக்கத் தாவிய - நல்லப்பனுக்கு மின்னொளி தன் இடையில் செருகியிருந்த கத்தியைக் காட்டி, 'என்னைக் காக்கும் இக்கத்தியை நீ எதிர்த்தால் குத்திக் கொல்லப்படுவாய்' என்று அவன் திடுக்கிட்டு நிற்கும்படி செய்கிறாள்.

தந்தை வந்துவிடுகின்றார்! வண்டியில் தாய் வந்துவிடுகின்றாள்! பின்னே தேனருவி, மணிமொழியாரின் கார் வந்துவிடுகின்றது,

செய்தி விளக்கம் அடைகிறது. தேனருவி, மின்னொளியின் திறத்தை வியந்து பேசுகிறாள்.

இதில் கோயில் விழாவை நம்பிய தாய்க்குக் கால் ஒடிவும், அன்னை தந்தையரே முன்னறி தெய்வம் என்று நம்பிய மின்னொளிக்கு புகழும் ஏற்பட்டதாகிறது.

முடிவில்,

தேனருவி. இளவழகனுக்கே மின்னொளி மனைவி திருமணம் விரைவில் முடித்துவிடுங்கள்' என்று கூறிச் செல்லுகிறார்கள்.

பெரிய பண்ணை மணிமொழியார் நச்சினார்க்கினியார் இருவரும். இரண்டாண்டுக்குப் பின்னர் இந்தியா வந்து திருமணம் முடிப்பதாகக் கூறி, நல்லப்பனை மானேஜர் ஆக்கிவிட்டு மலேயே செல்லுகிறார்கள்.

மணிமொழியார் முதலியவர்கள் போனபின் இளவழகன் - மின்னொளி திருமணம் (பதிவுத் திருமணம்) நடைபெறுகிறது.

இளவழகன் தன் மாமனாரின் புடைவை வாங்கும் தொழிலை மாமனார் வீட்டிலிருந்தே கவனித்துவருகிறான்.

நூல் கிடைக்கவில்லை. வியாபாரமில்லை. நிலுவை வசூலாக வில்லை . வருமான வரியாக 25,000 - க்கு நோட்டீஸ் வந்துவிட்டது.

தன் சொத்தையும் தன் மாமனார் சொத்தையும் விற்று கடன்களைப் பைசல் செய்கின்றான் இளவழகன்.

மின்னொளி ஆண் குழந்தை பெறுகிறாள். மூன்றாம் நாள் மாமனார் இறந்துவிடுகிறார்.

வெளியில் வரவேண்டியதை நம்பி, காலங் கழிக்கிறான். கொடுத்த கடனைக் கேட்டால் அடிக்க வருகிறார்கள் பலர்.

பெரிய பண்ணை வீட்டுக்காரியாகிய தேனருவி வீட்டுக்கு, அங்கு வேலை செய்யும் மேஸ்திரியைத் தேடிக்கொண்டு கொடுத்த கடனைக் கேட்க வருகிறான். இளவழகனைத் தேனருவி பார்க்கிறாள்.

நிலைமையை விசாரிக்கிறாள். கொய்யாப்பட்டுக் கிராமத்தின் மானேஜர் இடத்தைக் கொடுத்து, கார் கொடுத்து, அவ்வூரிலுள்ள கூரை வீட்டில் இருக்கச் சொல்லி, கையில் சிறிது தொகையும் தந்து அனுப்புகிறாள் இளவழகனை!

இந்த முடிவை மானேஜராகிய நல்லப்பன் மேலுக்கு ஒப்புகிறான்.

அவன், குடிசையில் தங்கும் இளவழகனைக் கொளுத்தி விடும்படி ஆட்களை அனுப்பிவிடுகிறான்.

தினமும், பிள்ளைக்குத் தாய்ப்பாலும், சோறும் பெற்றுப் போடும் செங்கோணி, மின்னொளியிடம் ஓடி வந்து அம்மா உங்கள் ஐயாவைக் கொளுத்த ஆட்கள் அனுப்பப் பட்டிருக்கிறார்கள். ஆட்களில் என் கணவனும் ஒருவன் என்கிறாள்.

மின்னொளி தாடியும் மீசையும் முண்டாசுமாகத் தேனருவியிடம் ஓடிக் கூறி, இதை மின்னொளி சொல்லச் சொன்னாள் என்று கூற,

- அவள் காரில் பலரை அனுப்புகிறாள். அப்பலரில் தாடிக்காரனும் உட்கார்ந்து கொள்கிறான். கார் போகிறது. அதை நல்லப்பன் இடையில் மறித்து நிறுத்தி, அங்குள்ள ஆட்களுடன் ஒத்திருங்கள் என்று கூறி அனுப்புகிறான். கார் பறக்கிறது.

இளவழகன் குண்டர்களால் கட்டிப் போடப்பட்டிருக்கும் குடிசை கொளுத்தப்படுகிறது. வேறுபுறமாக தாடி ஆள் இளவழகனை மீட்டுக் கொண்டு போகிறான்.

அதே நடு இரவில், இளவழகன் மீண்டு ஓடிய செய்தி நல்லப்ப னுக்கு எட்டுகிறது. இளவழகன் வீட்டைச் சூழ்ந்து இளவழகனையும் குழந்தையையும் மின்னொளியையும் கொன்று விடும்படி வந்த ஆட்களை ஏவுகிறான்.

இளவழகன் தேனருவி வீடு சென்றுவிடுகிறான். மின்னொளியும் வீட்டில் நுழைகிறாள். பலர் பின் தொடர்கிறார்கள். மின்னொளி அறையிற் புகுந்து தாளிட்டுக் கொள்கிறாள்.

ஆட்கள் மூன்று வயதுக் குழந்தையைத் தூணில் கட்டு கிறார்கள். வெளியில் வந்துவிடு மின்னொளியே என்கிறார்கள். அவள் வர மறுக்கிறாள். குழந்தையை வெட்டு என்கிறான் ஒருவன்.

மின்னொளி பிள்ளையைத் தன் இருகையால் மறைத்தபடி தன் மார்பை எதிரிகட்குக்காட்டி நிற்கிறாள். கத்தியை நீட்டுகிறான் செங்கோணி, கணவன். ஆயினும் கை ஓடவில்லை. பிள்ளைக்கு பால் தரும் மார்பு அள்ளி அள்ளிச் சோறிடும் அன்னையின் கை என்று கூறி கத்தியைக் கீழே வீசி மற்றவர்களையும் அழைத்துப் போய் விடுகிறான்.

அதே நேரம் அங்கு வந்த தேனருவியம் இளவழகனும் செய்தி யறிகிறார்கள்.

தேனருவி,

தற்காத்து தற்கொண்டான் பேணி தகைசான்ற

சொற்காத்துச் சோர்விலாள் பெண்

என்ற வள்ளுவர் உள்ளத்தை வையத்தில் மெய்ப்பித்தார்கள், அன்னை மின்னொளியார் என்று புகழ்கின்றாள்.

நல்லப்பன். தான் செய்த தீமைகளைத் தன் அந்தரங்க வேலைக் காரனாகிய செங்கோணி கணவன் ஆணைமுத்திடம் சொல்லுகிறான்.

அவன், 'நீங்கள் இனிமேல் அந்தவரயாய் நடந்துகொள்ள மாட்டீர்கள்' என்கிறான்.

தலைக்கு மேல் வெள்ளம், முழம் போனால் என்ன சாண் போனால் என்ன - தேனருவியை நெருங்குவதே சரி என்று உறுதி கொள்ளுகிறான்.

தேனருவிக்குத் தூக்கம் வரவில்லை. அவள் எண்ணமெல்லாம் இளவழகன்பால் விடுவித்திருந்தாள் 'ஆபத்து உதவிக்கு வா' என்று அழகனுக்கு அஞ்சல் அனுப்புகிறாள். அவன் ஓடி வருகிறான் தன் காதல் உள்ளத்தை காட்டுகிறாள். உதவி கோருகிறாள். அழகன் அவள் அன்பில் கட்டுப்படுகிறான்.

பஞ்சணையில் படுத்துள்ள இளவழகனுக்கு தேனருவி கால் பிடித் திருக்கையில், காமக் கனல் வெதுப்பக் கதவைத் திறந்து கொண்டு புகுந்த நல்லப்பன் இருவர் நிலைகண்டு பின் வாங்குகிறான். இவன் பார்த்து விட்டான் என்று தேனருவி மட்டும் தெரிந்துகொள்ளுகிறாள். நல்லப்ப னுக்குத் தேனருவியுடனிருந்தவன் இன்னான் என்பதும் தெரியாது.

தேனருவி, நடந்ததை இளவழகனிடம் கூறி. நீங்கள் என்னை விட்டு வெளியிலேயே போகக் கூடாது. போனால், இருவருக்கும் நல்லப்பனால் தீமை நடக்கும் என்று கூறிவிட்டு,

மின்னொளிக்கு உன் கணவனை அவசரமாக இலங்கை மானேஜ் மெண்டுக்கு அனுப்பி இருக்கிறேன் என்று கடிதம் எழுதியனுப்புகிறாள்.

விடிந்ததும். நல்லப்பன் தேனருவியைக் கண்டு, இரவு தேனருவியில் படிந்து கிடந்தவன் யாவன் என்று கேட்க,

அவள், நானும் என் தோழியுமான புண்ணியமும் சிவா பார்வதி நாடகம் நடித்தோம் என்கிறாள்.

அவன், அவளைத் தொடுகிறான். அவள் சீறி விலக்குகிறாள் உடனே நல்லப்பன் உங்கள் மனதைச் சோதித்தேன். உங்கள் கணவராகிய மணிமொழியாருக்கு உங்களைப் பற்றி அபிப்பிராயம்

தெரிவிக்க என்று மழுப்புகிறான்.

இளவழகன் தேனருவியின் உள்கட்டில் தேனருவியிடம், சதா இன்பத்தை அனுபவித்தபடி தன் மனைவி பிள்ளையை மறந்தவனாய் இருக்கிறான். தன் மனைவி கருப்பந்தாங்கி இருந்தாள் என்பதையும் அவள் செலவுக்கு தொல்லைப்படுவாள் என்பதையும் தன் நினைவுக்கு கொண்டு வரும் சந்தர்ப்பமே அவனுக்கு இல்லாமல் செய்து வருகிறாள் தேனருவி.

நல்லப்பன், இளவழகன் ஊரில் இல்லாதிருத்தலை எண்ணு கிறான்; விசாரிக்கிறான். தேனருவியைக் கேட்கிறான். அவள், அவனை இலங்கைக்கு அனுப்பியிருப்பதாகக் கூறி விடுகிறாள்.

மலேயாவிலிருந்து நச்சினார்க்கினியர் எழுதிய கடிதம், தேனருவிக்குக் கிடைக்கிறது. அதில், மணிமொழியார் அங்கு மலாய் காரியை மணந்து குழந்தை பெற்றிருப்பதாயும், அவரை இந்தியாவுக்கு அழைத்துக் கொண்டால் நல்லதென்றும், காணப்படுகிறது.

தேனருவி ஓர் ஆண் குழந்தை பெறுகிறாள். பெற்ற குழந்தையை அவள் ஒருநாள் இரவு செங்கோணியிடம் கொடுத்து புதைத்துவிடு என்று கூறி ஒரு சரிகைப் புடவையில் சுருட்டித் தர அவள் வாங்கிச் சென்று கொல்ல மனம் வராமல் மின்னொளி, வீட்டுத் திண்ணையில் வைத்துவிட்டுப் போகிறாள்.

காலையில், மின்னொளி சாணியிட வந்தவள், குழந்தையை எடுத்து மார்போடணைத்துச் சரிகைச் சேலையைத் தூய்மை செய்து பெட்டியில் வைத்து குழந்தையைக் காத்து வருகிறாள்.

ஏணையில், அநாதைக் குழந்தையும் மடியில் தன் பிள்ளையும் ஆக உட்கார்ந்து நூல் உருண்டை சுற்றுகையில், தன் கணவன் நினைவு வரவே கண்ணீர்விட்டு கிடக்கிறாள் அதே நேரத்தில்,

இளவழகன் எதிரில், தேனருவி. அநாதைத் தாயின் சோகக் கதை பற்றிய அபிநயம் காட்டி ஆடுகிறாள். அநாதை தன் கையில் ஒரு பிள்ளையை வைத்துக்கொண்டு கதறுவதாகக் கண்ட இளவழகன், தன் மனைவி நினைவால் இரக்கமடைவதை. அவள் என்ன என்று கேட்க,

'என் மனைவி, செலவுக்கு என்ன செய்வாள்?' என்கிறான்.

அன்று முதல் புண்ணியத்தின் வசம் நாடோறும் பணம் அனுப்புவாள் ஆனாள்.

புண்ணியம் கொடுத்த ஐந்து ரூபாய்க்கு, நூல் தளைகள் வாங்கியது போக அரை ரூபாய் அரிசி அதிகம் வாங்கிச் சமைத்ததில் அன்று ஒருகை அளவு சோறு மீந்தது.

அவள் அந்த மீந்த சோற்றைக் கையில் ஏந்தியபடி ஒருபுறம் ஓவியம் போல் அசைவற்று நிற்கையில், புண்ணியம் சென்று, 'எதை நினைத்து இவ்வாறு சோறும் கையுமாக அசைவற்று நிற்கிறீர்கள்' என்ன,

அதற்கவள். 'இந்த மீந்த சோற்றை உண்ண இப்போது எனக்கு இன்னொரு குழந்தை இல்லையே' என்று கூறியதைக் கேட்ட புண்ணியம் மின்னொளியிடம் தாய்மை கண்டு, அவள் காலில் விழுந்து கும்பிட்டுச் செல்லுகிறாள்.

புண்ணியம், தேனருவி தனக்குப் பிள்ளை வேண்டாம் என்று நினைத்துக் காரியம் செய்வதையும், இளவழகனை அவள் மனைவி யிடம் அனுப்பாமல் உள்ளடக்கி வைத்திருப்பதையும் சகிக்காமல், நல்லப்பனிடம், உள்ளே இளவழகனிருப்பதையும், தேனருவி பெற்ற குழந்தை செங்கோணி இரக்கத்தால் மின்னொளியிடம் வளர்வதையும் கூறி இதற்கெல்லாம் நல்ல ஏற்பாடு செய்தால் நலம் என்று கூறுகிறாள்.

அதற்கு நல்லப்பன். மணிமொழியார் இந்தியாவுக்கு வரும்படி செய்துவிட்டால் எல்லாம் நேராகிவிடும் என்று கூறி.

மணிமொழியாருக்கு, கடிதம் எழுதுகிறான். அதில், நீங்கள் உடனே வராவிட்டால் தேனருவி சொத்தெல்லாம் இளவழகனுக்குப் பலவகையில் போய்ச் சேர்ந்துவிடும் என்று எழுதிவிடுகிறான்.

மின்னொளி குழந்தை பெறுகிறாள். (பெண்) சந்நியாசி ஒருவர் தேனருவி வீட்டில் குந்தியிருந்து, உதவி பெற்றுப் போகிறார். அவர் அடிக்கடி கூறும், "ஊரும் சதமல்ல உற்றார் சதமல்ல உற்றுப் பெற்ற பேரும் சதமல்ல பெண்டிர் சதமல்ல” என்பதில் பெண்டிர் சதமல்ல' என்ற வரியைத் தனக்கு அனுகூலமாகக் கொண்டு - இளவழகன் தன் மனைவியை மறந்திருக்க வேண்டிய அவசியத்தைக் கூறுவாள் தேனருவி.

தேனருவி ஒரு நாள் இளவழகனை அறையில் பூட்டிவிட்டு, கருத்தடை மருத்துவச்சியிடம் போகிறாள் அங்கு, சந்நியாசி. தன் மனைவிக்குக் கருத்தடைச் சிகிச்சையின் பொருட்டு வீட்டுக்கு

அழைத்துக் கொண்டிருக்கிறார்.

ஆயிரம் ரூபாய் கொடுப்பதாகவும் கூறுகிறார். இதைக் கேட்டுக் கொண்டு வெளியில் உட்கார்ந்திருந்த தேனருவி, சந்நியாசி போனபின். அவர் யார் என்று கேட்க, அவர் பெரிய பணக்காரர், இங்கு ஒரு பெரிய பங்களா வாங்கவும் முயன்று கொண்டிருக்கிறார் என்கிறாள் மருத்துவச்சி!

காரில் தேனருவி வந்து கொண்டு இருக்கிறாள். புண்ணியம் கடிதத்தைத் தபால் பெட்டியில் போட நெருங்குகிறாள், தேனருவி மறித்துப் பிரித்துப் படிக்கிறாள்.

தந்தையே, மணிமொழியார் இந்தியாவுக்கு வந்து விட்டதாகக் கூறியிருக்கிறீர் உங்கள் கடிதத்தில்! வரவில்லையே. தகவல் தெரிவியுங்கள்.

இங்ஙனம்,

ந. நல்லப்பன்

என்று இருந்ததைப் பார்த்துப் புண்ணியத்தை அதட்டிக் கேட்க - அவள் முன் மணிமொழியார்க்கு நல்லப்பன் எழுதிய அனைத்தையும் சொல்லிவிடுகிறாள். அவளைப் பணங் கொடுப்பதாயும், நயத்தாலும் பயத்தாலும் இனித் தன்னையே ஆதரிக்கச் செய்து கொள்கிறாள். பண்ணியம் இனி வீட்டின் உட்கட்டை விட்டு வெளியே போகக் கூடாதாம்.

இளவழகன் கொல்லையில் ஒரு புறம் உட்கார்ந்திருக்கிறான். இருபுறாக்கள் காதல் களிப்பில் இருப்பதைக் காணுகிறான். அங்கு வந்த செங்கோணியை எங்கே தேனருவி என்கிறான். மஞ்சத்தில் போய்ப் படுக்கிறான். மீண்டும் எழுந்து அவள் வருகை பார்க்கிறான்.

அவள் அவனை விட்டு வெளியிற் சென்றது. அவனுக்கு பலவகையிலும் துன்பத்தை உண்டாக்குகிறது.

அவள் வருகிறாள், 'என் மணவாளர் வந்துவிடக்கூடும். அவர் நான் நடந்து கொண்டு வந்துள்ளதை யெல்லாம் அறியக்கூடாது. அதற்காக நான் இனிச் செய்யப்போவது உங்கட்குத் துன்பத்தைத் தரலாம். என் நிலை கருதி நீங்கள் வருந்தலாகாது' என்று பதறுகிறாள். 'தேனருவி நீ எனக்கு இப்போது நன்மையே செய்தாய் நீ என் மனைவி அல்ல என்பதை எனக்கு உணர்த்தினாய். இனி எனக்கு செய்யப் போவதும் அப்படியே என்கிறான். அவள் ஓடுகிறாள். எங்கேயோ!

அவ்வூர்,

வடக்குத் தெரு மைதானத்தில் அறிஞர் ஒருவர் மாலை, "அரிசி எப்போது கிடைக்கும் என்பது பற்றிச் சொற்பொழிவு ஆற்றத் தொடங்குகிறார். ஊர் மக்கள் குழுமியிருக்கிறார்கள் சொற்பொழிவு நடந்து கொண்டிருக்கிறது!

இளவழகன் தான் படுக்கும் பஞ்சணையில் தான் படுத்திருப்பது போல் தோன்றும் தலையணை அடுக்கித் துணிபோர்த்து வைத்துவிட்டு வேறுபுறம் போய்க் காத்திருக்கிறான்.

சில கறுப்புடைக் காரர்கள் நுழைந்து பஞ்சணையில் தூங்குகிறான் இளவழகன் என்று எண்ணிக் குத்துவாளால் குத்துகிறார்கள்.

மின்னொளி! மக்களே! உங்கள் நிலை என்ன? - என்று கூவிக் கொண்டு தன் வீட்டை நோக்கி ஓடுகிறான். அதே நேரம்,

உடல்நலமில்லாத மின்னொளி தள்ளாடி நடந்து கைப் பிள்ளையை ஏணையிலும், அநாதைப் பிள்ளையைச் சரிகைப் புடைவையிலும், பெரிய பிள்ளையைப் பாயிலும் படுக்கவைத்து ஒருபுறம் விளக்கைச் சிறிதாக்கிக் கண்ணயர, ஓர் ஆள் வீடேறிக் குதித்து, அநாதைப் பிள்ளையைத் தூக்கிக் கொண்டு, தெருக்கதவைத் திறந்து கொண்டு ஓடுகிறான், சரிகைச் சேலையுடன், அடுத்த இரண்டே நிமிஷத்தில் திடுக்கிட்டெழுந்த மின்னொளி, அநாதைக் குழந்தை இல்லாதது கண்டு, ஏணைக்குழந்தையை ஏணையுடன் கழுத்தில் மாட்டிக்கொண்டும், மற்றப் பிள்ளையை இடுப்பில் இடுக்கிக் கொண்டும் வெளியில் பதைபதைக்கத் தோடுகிறாள். பிள்ளையைத் தூக்கி ஓடுகிறான் என்று கண்ட அவள், குழந்தையைக் காப்பாற்றுங்கள், ஐயையோ என்று கூச்சலிடுகிறாள். பன்முறை!

அதே நேரத்தில்,

சொற் பொழிவாளர் ".... .... ஆதலால் சாதி சமய வேற்றுமை இந்நாட்டை விட்டு ஒழிந்து போக வேண்டும் என்று முடிக்க -

அங்கு கேட்டிருந்த மக்களில் பலர் சாதி சமய வேற்றுமை ஒழிய என்ன செய்ய வேண்டும்? - என்று கேட்கிறார்கள்.

சொற் பொழிவாளர் விடை தேடி விழிக்கிறார் நிசப்தம்...

"குழந்தையைக் காப்பாற்றுங்கள்” என்ற ஒரு சொல் அனைவர் காதிலும் விழுகின்றது. அத்தொடரில் இங்கு எழுந்த கேள்விக்கும் விடை இருப்பதாகச் சொற்பொழிவாளர் முதலியவர்கட்குத் தோன்றுகிறது. ஆயினும் அடுத்த சொல்லாகிய 'ஐயோ' காதில் விழவே, சொல் வந்த திசை நோக்கிச் சொற்பொழிவாளர் ஓட, மற்றும் பெரும்பாலோரும் ஓடுகின்றார்கள்.

பிள்ளையைத் தூக்கி வந்தவன், பிள்ளையைக் கிணற்றில் போடுகிறான். பின்னே ஓடிவந்த மின்னொளி. கையிலுள்ள குழந்தைகளைக் கிணற்றடியில் கிடத்திவிட்டு, கிணற்றில் குதிக்கிறாள். குதிப்பவள் முதுகில் அருகிலிருந்த ஒருவன் கத்தியால் குத்துகிறான். குத்திய கத்தி - அவள் முதுகில் பதிந்ததை, கத்தியின் குருதி ஈரம் காட்டுகிறது. சூழ்ந்திருப்பவர்கள் இரக்கத்தால் துடித்து அலறுகிறார்கள். சிலர் அவளை மீட்கக் கிணற்றில் இறங்க முயலுகிறார்கள்.

அவர்கள் முயற்சி தேவைப்படவில்லை. மின்னொளி தன் கழுத்தில் தொங்கும் ஏணையில் பிள்ளையை இட்டுத் தூக்கி வெளி வருகின்றாள். அவள் ஏணையில் இருந்த பிள்ளையை எடுத்துப் பார்த்து மார்போடனைத்துக் கொள்ளுகிறாள். சுற்றியிருந்த சரிகைப் புடைவையைக் கீழே போட்டு.

தேனருவி தன் முகத்தைக் கையால் மூடிக்கொண்டு ஓ என்று அழுகிறாள். அங்கிருந்த சந்நியாசி அழுகிறான். ஒருபுறமிருக்கும் இளவழகன் அழுது துடிக்கிறான்.

மின்னொளி,

பிழைக்க மாட்டேன்

சாகின்றேன்.

சாக அஞ்சவில்லை

இந்த மக்களை

யார் காப்பாற்றுவார்கள்?

........ .......... ......

......... ............ ...........

............ ........... ....

நாட்டாட்சியின் கீழ்

பிள்ளை வளர்ப்புச் சாலைகள் தெருத் தோறும்

தேவை -

அதனால்,

சாதி, மதம், உயர்வு, தாழ்வு நீங்கும்.

எல்லார்க்கும் உணவு உடை உறையுள் கிடைக்கும்! இந்நாட்டில் வீடுதோறும் ஏங்கிக் கிடக்கும் திக்கற்ற பிள்ளைகள் வாழ்க! - உயிரற்று நிலத்தில் சாய்கிறாள்.

தேனருவி தன் குழந்தையைத் தாவி எடுக்கிறாள். அதே நேரம், அங்கிருந்த சந்நியாசியிடமிருந்து குழந்தையை மலாய்ப்பெண் வாங்குகிறாள். சந்நியாசி, மணிமொழியாராகக் காட்சி தருகிறார். தன்

சொற்பெருக்காளர் -

வேற்றுமை ஒழிய அரிசி கிடைக்க - பிள்ளை வளர்ப்புச் சாலைகள் நிறுவப்பட வேண்டும்.!

அறிவைச் செய்பவள் அன்னை .

ஆற்றலுடையவள் அன்னை .

வாழ்க அன்னையின் நாமம்.

மணிமொழியார் தன் சொத்தையெல்லாம், தேனருவி தன் சொத்தை யெல்லாம் பிள்ளை வளர்ப்புச் சாலைக்கு ஆக்குவதாக உறுதி கூறுகிறார்கள்.

- பாரதிதாசன் புதினங்கள், 1994