Chapter 6
அந்த நீதிமன்றம் நீதி கலைந்து அம்மணமாகத் தோன்றியது. நீதிமன்ற அலுவலர்கள் சாப்பிடப் போய்விட்டார்கள். காவலர்களில் பெரும்பாலோர் மாமூல் கைதிகளோடு பேசிக் கொண்டு வெளியே போய்விட்டார்கள். மிச்சம் மீதியாக சந்திராவும், அவளுக்கு பாதுகாப்பாக அல்லது பாதுகாப்பை மீறாமல் இருப்பதற்காக ஒரு பெண் போலீஸ். சப்-இன்ஸ்பெக்டர், பெண் காவலர்களை சாப்பிடுவதற்கு எதையாவது வாங்கி வரச் சொல்லிவிட்டு இவள் சந்திராவின் அருகே எரிச்சலோடு உட்கார்ந்து இருந்தாள்.
இவர்களின் எதிர்ப்பக்கம் சந்திராவின் தாய்க்காரி எழுந்து நின்றாள். மார்த்தாண்டன், ஒரு போலீஸ் காவலோடு, ஒரு டெஸ்க் பெஞ்சில் தலை கவிழ்ந்து கிடந்தான்.
நீதி பரிபாலன மேடையின் பின்புறச் சுவரின் மேல்பக்கம் பொருத்தப்பட்ட கடிகாரத்தின் அடிவாரத்தில் பதுங்கிக் கிடந்த ஒரு பல்லி வெளிப்பட்டது. சரியாக எதிர்ப்பக்கம் வலைகட்டி அதன் மையப் புள்ளியாகக் கிடந்த சிலந்தியைப் பார்த்தோ அல்லது தற்செயலாகவோ அந்தத் திசையை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது. பெண் சப்- இன்ஸ்பெக்டருக்கு ஓரே கொண்டாட்டம். பல்லி, கரப்பான் பூச்சியைப் பிடித்து உயிரோடு தின்பதைப் பார்த்து இருக்கிறாள். இப்பொழுதுதான் ஒரு பல்லி பூச்சி கொல்லியான சிலந்தியின் பக்கம் போவதைப் பார்க்கிறாள். சிலந்தி வலைக்குள் பல்லி சிக்குமா அல்லது பல்லியின் வாய்க்குள் சிலந்தி சிக்குமா?
அந்தச் சமயத்தில் சந்திராவும் அவளது தாயும் நீதி மேடைக்கு முன்னால் நட்ட நடுவில் மோதிக் கொள்வது போல். ஒருவரை ஒருவர் அணைத்துக் கொண்டார்கள். நீதி செயல்பாட்டுச் சமயத்தில் இந்த வழியாக நடந்திருந்தால் நடந்தவருக்கு நீதிமன்ற அவமதிப்பின் கீழ் சிறைவாசம் கிடைத்திருக்கும். இது தெரியாமலேயே, தாயும் மகளும்
ஒருவரை ஒருவர் பற்றிக் கொண்டனர். ஒருகாலத்தில் குமிழ்ச் சிரிப்போடும் மரியாதையான பார்வையோடும் தோன்றிய தன் மகளின் கண்களையும் அந்த சிரிப்புக் குமிழிகளையும் காணாமல் தவித்த தாய், தனது கண்களை நீரில் மூழ்க வைத்து புலம்பினாள்.
"நான் பெத்த மவளே ஒரு புழுவை வழியில் பார்த்தாக் கூட விலகி நடப்பியே உன்னை இந்தக் கோலத்திலே பார்க்கேனே..."
சந்திரா, எதுவும் பேசவில்லை. தாயை இடுப்போடு சேர்த்து சிக்கென்று பிடித்துக் கொண்டாள். அவள் தோளில் முகம் சாய்த்து மெய்மறந்தாள். இருவரும், நீதிமன்ற வாசலைத் தாண்டி, அறைச் சுவரில் சாய்ந்து கொண்டு அரைவட்டமாக நின்று கொண்டார்கள். உள்ளொடுங்கிய இரண்டு ஜோடிக் கண்களும் வெளிவரப் போவது போல் துடித்தன. உதடுகள் மேலும், கீழுமாக அசைந்தன. அப்போதுதான் பெற்றுப் போட்டது போல், தாய், மகளைப் பார்க்கிறாள். அப்போதுதான் பிறந்தது போல் மகள் மழலையாகிறாள்.
'உங்களைத்தான்' என்று ஒற்றைக் குரல் கேட்டு சந்திரா திரும்புகிறாள். அவளுக்கு மரியாதையான இடைவெளி கொடுத்து மார்த்தாண்டன் நிற்கிறான். தாய்ச் சிலுவையில் இருந்து மரித்தெழுந்தவள் போல், சந்திரா நிமிர்ந்து சீறினாள்.
"உங்களுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்? நம்மைப் பற்றிப் பேசுறதை நிருபிக்கிறதுக்காக வந்தீங்களா.... உங்க வேலையை பார்த்துகிட்டு போங்களேன்...."
வந்தவன், அசையவில்லை. உள்முகமாய் ஏற்பட்ட அதிர்ச்சியை வெளிமுகப் படுத்தவில்லை . ஆணி அடித்தது போல் பேசுகிறான்.
"நான் ஒரு பாவமும் அறியாத நிரபராதி என்று உங்களுக்கே தெரியும். நீங்க சிறைக்கு போறதிலே நியாயம் இருக்கலாம். உங்களுக்காக நானும் சிறைக்கு போகணும் என்கிறதில் என்ன நியாயம்."
சந்திரா, ஓரடி முன்னால் நடந்து, அவனை அருகாமையில் பார்த்தாள். அந்த ஆறுதலில் அவன் கோபத்தைக் குறைத்து குரல் தாழ்த்திப் பேசினான்.
உங்களுக்கும் உங்க கணவருக்கும் இடையே இருந்த பிரச்சனை எனக்கு இன்னும் தெரியாது. அதே சமயம் நீங்கள் சுயசாட்சி சொல்லாமலும் உங்கள் தரப்பு சாட்சிகள் பட்டியலை கொடுக்காமலும் இருப்பதிலிருந்து ஒங்களுடைய பிரச்சனையின் ஆழம் எனக்கு புரியுது. போன வாய்தா வரைக்கும் உங்க நிலைமைதான் என் நிலைமையும். என் பணக்கார நண்பர்களோட நடத்தின் நிறுவனத்தில் நான் மூலதனம் போடாத வொர்க்கிங் பாட்னராதான் இருந்தேன். அம்மாவோட பென்சனில்தான் படித்தேன். என்னை கைது செய்த அதிர்ச்சியில் ஏற்கனவே நோயாளியான என் அம்மாவிற்கு நோய் அடியோடு தீர்ந்து போச்சு. ஜுரம் அவங்க உடம்பில் உறைபனியாகி விட்டது. இது போதாதுன்னு நான் கொலை குற்றத்திற்காக கைது செய்யப்பட்டதை சாக்காக வைத்து பங்காளியாகிப் போன நண்பர்கள் என்னை கம்பெனியில் இருந்து நீக்கிட்டாங்களாம். ஒருவன் கூட எட்டிப் பார்க்கல. அம்மாவுடைய ஈமச்சடங்கை பரோலில் போய் நடத்திவிட்டு வாழ்க்கையில் பிடிப்பு இல்லாமல் நானும் உங்களை மாதிரிதான் இருந்தேன்."
"ஆனா சிறைக் கொடுமையை என்னால தாங்க முடியலை. கொசுக்கடிகளை விட மனுஷங்கடி பலமா இருக்கு. ஒரு அறைக்குள்ளேயே ராத்திரி கடன்களை ஒரு சட்டியில் கழிக்கிறதை நினைத்தால் தாங்க முடியலை. நரகம் என்று ஒன்று இருந்தால் அது நான் இருக்கிற சிறையாகத்தான் இருக்கும். இந்த நரகத்திலிருந்து மீண்டாகனும். இது உங்க கையில் தான் இருக்குது. இப்ப கோர்ட் மீண்டும் கூடும் போது நீதிபதி உங்களைப் பார்த்து கடைசியா நீங்க என்ன சொல்ல விரும்புறீங்க என்று கேட்பார். அப்போ நீங்க நடந்ததை நடந்தபடி சொன்னா, உங்க தரப்பு சாட்சிகளை விசாரிக்க வேண்டு முன்னு கேட்டால் தீர்ப்பின் போக்கு வேற மாதிரி இருக்கலாம். இதனால் உங்களுக்கு சீக்கிரமாய் விடுதலையும் கிடைக்கலாம். தயவு செய்து உங்களைக் காப்பாற்றி
என்னையும் காப்பாற்றணும்.
சந்திராவும், மார்த்தாண்டனும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்கிறார்கள். தோழமை பகிர்வோ , துயரப் பகிர்வோ ....
இதற்குள் உடை போட்ட பொம்மை போல் இருந்த சந்திராவின் மோவாயை தாய்க்காரி உள்ளங்கையில் ஏந்தியபடியே கெஞ்சினாள்.
"நடந்ததை சொல்லும்மா.... அப்புறம் ஆண்டவன் இருக்கான்".
ஆரம்பத்தில் அந்த ஜோடியை வேடிக்கை பார்ப்பதற்காக சுற்றி நின்ற நான்கைந்து பேர், நோக்கத்தை மாற்றுகிறார்கள். ஒரே சமயத்தில் பலர் பேசுகிறார்கள். பேசப்போனவர். அடுத்தவர் பேசப் போகிறார் என்று மவுனம் காத்திருக்கிறார். பேசிக் கொண்டிருந்தவர். ஓர் உரத்த குரலுக்கு வழிவிடுகிறார். அந்த உரத்த குரல் இடைச் செறுகலாக வந்த இன்னொரு குரலைக் கையாட்டி தடுத்து ஒலிக்கிறது. அந்த மூவராலும் அந்த கூட்டத்திற்கே ஒரு தோழமை பண்பு ஏற்படுகிறது. அந்தத் தோழமை சொன்னது இப்படித்தான்.
அவமானப் படுத்தப் பட்டது அவமானம் ஆகாது. எதேச்சையானதோ. தற்காப்போ கொலை ஆகாது.... நடந்ததை நடந்தபடி சொல்லும்மா... இன்னும் நீதி இருக்கத்தாம்மா செய்யுது. உனனை மாய்க்க உனக்கு உரிமை இருக்கலாம். ஆனால் அந்த அறியாப் பையனை மாய்க்க உனக்கு உரிமையில்லை."
இதற்குள் பல்லி - சிலந்தி தாவாவை, பார்ப்பதை பாதியில் விட்டு விட்டு அந்த பெண்போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெளியே ஓடி வந்து சந்திராவை அடிப்பது போல கையைக் கம்பு போல் வைத்துக்கொண்டு திட்டினார்.
"என் கிட்ட சொல்லாம் எப்படி நீ வெளியில் வரலாம். கூண்டுல பதிவிரதை மாதிரி இருந்துட்டு. இப்ப என்னடான்னா.... கோர்ட் கூடப் போகுது உள்ள வாடி."
அந்தப் பெண், போலீஸ்காரி, மார்த்தாண்டனையும், அவனை தோழமையோடு பார்த்துக் கொண்டு நின்ற கூட்டத்தையும் எரிச்சலோடு பார்த்துவிட்டு சந்திராவின் கையைப் பிடித்து மீண்டும் வாடி' என்றாள். கூட்டத்தினர் கோபப்பட போனார்கள். சந்திரா முந்திக் கொண்டாள். முதல் தடவையாக முழுமையான விடுதலை அடைந்தவள் போல் பேசினாள்.
"மரியாதை கொடுத்து மரியாதை வாங்கும்மா. உங்க வாடி, போடியை சாராயக்காரிகள் கிட்ட வைத்துக்கோ."
சந்திரா, அந்த போலீஸம்மாவின் கையை உதறிவிட்டு, நீதிமன்ற வாசலுக்குள் அழுத்தமாக நுழைகிறாள். அசந்து போன அந்தப் பெண் போலீஸ்காரம்மா , அவளைப் பின் தொடர்கிறாள். சந்திராவோ சிலுவையிலிருந்து உயிர்த்தெழுந்த இயேசு பிரானின் இன்றையப் பெண்ணியப் போராளியாக நீதிமன்ற உள் வளாகத்திற்குள் நடைமேல் நடையாய் நடக்கிறாள்.
நீதி மன்ற மேல் சுவரில் வலைக்குள் மையமாக இருந்த சிலந்தி அந்த வலைக்குள் நுழைந்த பல்லியை பார்த்து பயந்துவிட்டது. வலையை சிதைத்து விட்டு எதிர் திசையில் ஓடியது.

