Chapter 3
நீதிபதி முதல் கேள்வி முடிந்துவிட்ட திருப்தியோடு, அடுத்த கேள்வியைக் கேட்டார்.
"நீங்கள் உங்கள் கணவரோடு முதல் ஆறு மாதகாலம் வரைக்குந்தான் சந்தோசமாய் இருந்ததாகவும். உங்களுக்கு கருச்சிதைவு ஏற்பட்ட பிறகு, அவரோடு உடலுறவு வைத்துக் கொள்ளவில்லை, என்றும் உங்கள் மாமியார் அன்னம்மா சாட்சியம் அளித்திருக்கிறார். உண்மையா? பொய்யா?
சந்திரா இப்போது தனது புகுந்த வீட்டிற்குள் மானசீகமாகப் புகுந்து மாடி அறையில் கணவன் கோபாலோடு கட்டிப்புரண்டு கர்ப்பமாகிறாள். அந்த வயிற்றை அவன் தட்டிக் கொடுக்கும் போது பரவசப்படுகிறாள். பிரியப்போன அவன் கைகளை வயிற்றோடு சேர்த்து அணைத்துக் கொள்கிறாள். அதுவரை பட்டும்படாமலும் அவளிடம் பழகிய அன்னம்மா அவளை மகளாக பாவிக்கிறாள். கட்டி அணைக்கிறாள். கன்னத்தில் முத்தம் இடுகிறாள். பிறகு ஒரு கர்ப்பிணிப் பெண் என்னென்ன சாப்பிட வேண்டும்.... எப்படி இயங்கவேண்டும் என்று. சொல்லிக் கொடுக்கிறாள். அப்போதே. பாட்டியான மகிழ்ச்சியில், தனது மகன் கோபாலை பெருமிதமாகப் பார்க்கிறாள். வழக்கம் போல், தண்ணியடித்துவிட்டு வந்த கிழட்டுக் கணவனைப் பார்த்து வழக்கத்திற்கு மாறாக திட்டாமல் சிரிக்கிறாள்.
சந்திரா வாயில் சிரிப்போடும் வயிற்றில் குழந்தையோடும் வீட்டிற்குள் சுற்றிவருகிறாள். அம்மாவைப் பார்க்க ஆசைப்படுகிறாள். இதனால் அண்ணன் மாரியப்பன் அவளை, அடித்துப் போடுவான் என்ற அனுமானத்தில் மனதில் எழுந்த ஆசையை மனதிற்குள்ளேயே முடக்கிக்கொள்கிறாள். குழந்தை பிறந்ததும், தாய் மாமனான அண்ணனை வீட்டிற்கு கூட்டி வந்து. அவனோடு பிறந்த வீடு போக வேண்டும் என்று நினைத்துக் கொள்கிறாள். இப்போதே, அண்ணனை தாஜா செய்து அம்மாவைப் பார்க்கப் போகலாமா என்றும் ஆசைப் படுகிறாள். ஆனால், அந்த அண்ணன் ஆறுமாத சிறைவாசத்தில் மூன்று மாதத்தைத்தான் கழித்திருக்கிறான் என்ற உண்மை, அவளைத் திடுக்கிட வைக்கிறது. அவனை மீறி, அம்மாவை பார்த்தால் அவன் எதுவும் செய்வான். கோபம் வந்தால் கம்சன். அவனுக்கு. ஒரு கண்ண பரமாத்மா இனிமேல்தான் பிறக்க வேண்டும்.
இப்படியாக, அல்லாடிக் கொண்டு இருந்தவளுக்கு, ஒரு நாள் பெருத்த வயிற்றுவலி... அளவிற்கு மீறிய உதிரப் போக்கு... கோபால் டூரில் இருந்தான். மாமியார்தான். அலறியடித்து அவளை ஒரு வாடகைக் காரில் ஏற்றிக்கொண்டு மருத்துவமனையில் சேர்த்தாள். அனிதா எட்டிக்கூடப் பார்க்கவில்லை. என்றாலும், மாமியார், மகளுக்கும் சேர்த்து பணிவிடை செய்தாள். அந்த மருத்துவமனை அறைக்குள்ளேயே ஒரு துணைப்படுக்கையில் படுத்தாள். மருமகளைவிட அதிகமாக அழுதது மாமியார்தான். ஆனாலும்; அபார்சன் வந்தால் உடனடியாக கருத்தரிக்கும் என்று மருமகளுக்கு ஆறுதல் சொன்னாள்.
சந்திராவுக்கு சாப்பாடு கொண்டுவருவதற்காக, அன்னம்மா வீட்டிற்குப் போன நேரத்தில், இவளின் கல்லூரித் தோழியான டாக்டர் காயத்திரி வந்தாள். பிரசவ இயலில் மருத்துவப் பட்டம் வாங்கியவள். இவள் அவளைப் பார்த்ததும் "ஏன் இவ்வளவு லேட்டுடி.. அப்போவே வந்தால் என்ன? என்று சந்திரா சிரித்தபடியே கேட்டாள். அவளைப் பார்த்ததில் இவளுக்கு, கருச்சிதைவுகூட பெரிதாகப் படவில்லை. ஆனால், டாக்டர். காயத்திரியின் முகமோ இறுகிப்போய் கிடந்தது. சந்திராவின் தோளில் கைபோட்டபடியே கேட்டாள்.
"ஏண்டி! ஒருவனைக் காதலிக்கும் முன்னால் அவனோட கேரக்டரை புரிஞ்சிக்க வேண்டாமா? சரியான இவள்டி... நீ கோபாலை காதலிக்கிறதை எனக்கு மட்டும் சொல்லி இருந்தால், நானே தடுத்து இருப்பேன்."
"என்னடி புதிர் போடுற? எங்கக்கிட்ட இருந்து பி.எஸ்.சி முதல் வருடத்திலேயே பிச்சிக்கிட்டு மருத்துவ கல்லூரியில் சேர்ந்துட்டே... உன்கிட்ட தேடிவந்து சொல்ல முடியுமா?"
"போடி.... அப்படியும் நாம் அடிக்கடி சந்திக்கத்தானே செய்தோம்? நீ என்கிட்ட வேணுமுன்னே சொல்லல... அதனோட பலனை இப்ப அனுபவிக்கிறே."
"நீ என்னடி சொல்ற ..."
உன்னோட காதல் கணவன் அசல் பொம்பளக் கள்ளன். அவன் வலையில் சிக்கிய பெண்கள் ஏராளம். இதனால்தான், ஒரு கட்டத்தில் அவன் வரும்போதெல்லாம் நான் விலகிக்குவேன். சரியான பெண் பித்தன்.'
"இதோபார்.... என் புருசன பற்றி இப்படி தாறுமாறா பேசினா எனக்கு கெட்ட கோபம் வரும்."
"அப்படின்னா.... நீதான் கண்டவன் கிட்டெல்லாம் போய், இந்த நோய வாங்கிட்டு வந்திருக்கியா?"
"என்னடி உளறுறே?"
"உண்மைக்கு மறுபெயர் உளறலாக இருந்தால், அது என் தப்பில்லை.......ஏண்டி.. அப்படி விழிக்கே? உன் புருஷன், கண்ட கண்ட பெண்களிடம் போயி நோய் வாங்கி இருக்கான். இதனால் தான் உனக்கு அபார்ஷன் வந்தது. வேறு எவளாக இருந்தாலும், நர்ஸ் மூலம் சொல்ல வைத்திருப்பேன். நீ என் தோழி என்கிறதுனால் ஒரு உரிமை கோபத்தோட சொல்றேன். உனக்கு இப்ப மட்டுமில்லை அடுத்து அடுத்தும் கருச்சிதைவு ஏற்படும், இதுவும் நல்லத்துக்குத்தான் இல்லாட்டி... பிறக்கிற குழந்தைகள் ஐந்தாறு வயசிலேயே முழு குருடாக போய்விடும். பொதுவாக கருச்சிதைவான பெண்களோட ரத்தத்தை நாங்க பரிசோதனை செய்வோம்.. அப்படிச் செய்ததில் உன்கிட்ட வந்திருக்கிற இந்த சிபிலிஸ்தான். அந்த பெண்லோலன் கிட்ட இருந்து உனக்கும் வந்திருக்கு. பென்சிலின் மருந்து கண்டுபிடிக்கும் வரைக்கும் இந்த சிபிலிஸ் நோய்தான் ஆட்கொல்லியாய் ஆடித்திரிந்து, உலகெங்கும் லட்சக்கணக்கான மக்களை பலி வாங்கிய நோய் என் கவல ஆதங்கம் எல்லாம், எந்த தப்பும் செய்யாத உனக்கு - ஒரு லோலாயி ஆணுக்கு மனைவியான ஒரே ஒரு தவறால் இந்த நோய் வந்துவிட்டதே என்பது தான்."
சந்திரா, மாமியார் வந்து விடக்கூடாதே என்பதற்காக அறைக்கதவை தாழிட்டுவிட்டு, டாக்டர். காயத்திரியின் கைகளைப் பிடித்துக் கொண்டாள். இவளது ஆடிய கைகள், காயத்திரியின் கைகளையும் ஆட்டின. கணவனின் நம்பிக்கை மோசடி ஒரு பக்கம்... அதனால் ஏற்பட்ட விளைவோ இன்னொரு பக்கம்... இந்த பக்கங்களில் எந்த பக்கம் அவளை அதிகமாக நெருக்கியது என்பது அவளுக்கே தெரியாது உடலும் உள்ளமும் ஒன்றோடு ஒன்று மல்லிட அவள் தட்டுத் தடுமாறிக் கேட்டாள். காயத்திரியை டி போடும் தோழியாகப் பார்க்காமல் ஒரு டாக்டராகவே பார்த்துக் கேட்டாள். ஆரம்பத்தில் நாக்கு வாய்க்குள் வளைய வளைய வந்ததே தவிர வார்த்தைகளை பிரசவிக்கவில்லை. ஆனாலும், அவள் கேள்வி குறை பிரசவமாய் வாய்க்கு வெளியே வந்து விழுந்தது.
"இது.... அதான் அந்த நோய் வந்தால் என்ன செய்யும்?"
"நானாய் சொல்லாமல் படக்கதையாய் சொல்ல வைக்கேன் என்னோடு வாடி."
டாக்டர் காயத்ரி, சந்திராவைக் கூட்டிக்கொண்டு லிப்டிற்கு முன்னால் வந்தாள். அவர்களோடு சேர்ந்து, அது கீழே போன போது சந்திராவிற்கு அதுவே பாடை போலவும் பாதாள புதைகுழிக்குள் தன்னை புதைக்கப் போவது போலவும் தோன்றியது.
இருவரும் இரண்டாவது மாடித்தளத்தில் இறங்குகிறார்கள். திரை அரங்கின் உள் வளாகம் போன்ற திறந்தவெளி அறையைப் பார்த்தபடியே நடக்கிறார்கள்.... அங்கே ஒரு ஓரமாக உட்கார்ந்திருந்த வரவேற்பு பெண்ணைத் தவிர, அத்தனை பேரும் நோயறைந்து காணப்படுகிறார்கள். ஒவ்வொருவரும் ஈ.சி.ஜி., ஈ.ஈஜி, ஸ்கேனிங். எக்கோ என்று பல்வேறு சோதனைக் கருவிகளை எட்டி எட்டிப் பார்க்கிறார்கள்... நேற்று வரை ஆரோக்கியனாக தன்னை அனுமானித்து கொண்டவர். இப்போது அவரை இருதய நோயாளி என்று அடையாள படுத்தும் ஒரு சதுர காகிதத்தை வெறித்துப் பார்க்கிறார். ஒருவேளை இன்னொருவர் பெயர் தனது பெயர் என்று தவறாக போடப்பட்டிருக்குமோ என்று நினைத்தது போல அந்த காகிதத்தில் தனது பெயர் பதிவையே உற்றுப் பார்க்கிறார். இன்னொருத்தி - படித்தவள். தனது கையில் உள்ள காகிதத்தோடு மேலே கை தூக்கி கும்பிடுகிறாள் உடனே. உடனடி பலனாய் எழுத்துக்கள் மாறி இருக்குமோ என்பது போல் அந்த காகிதத்தின் மேல் கண் போடுகிறாள். மற்றபடி எல்லாமே மயான அமைதி.
இருவரும். இந்த அறைக்கு அருகே, உள்ளே பார்க்க முடியாத பச்சைக் கண்ணாடி தள்ளுகதவை திறந்தபடியே போகிறார்கள். உள்வளைந்த மேஜைக்கு மத்தியில் போடப்பட்ட சுழல் நாற்காலியில் அமர்ந்திருக்கும் டாக்டர். முத்துராஜ், தனது முன்னாள் மாணவியான காயத்ரியைப் பரிவோடு பார்க்கிறார். அந்த மருத்துவமனையில் இவள் பாலியல் நோய் நிபுணர்... தூக்கலான சிகப்பு முகம். அந்த முகம் பார்க்கும் பார்வையிலும், ஆறுதலான பேச்சிலும், பாதி நோய் போய்விடும். "யாம் இருக்க பயமேன்" என்று அபாயத்திலிருந்து அபயமளிக்கும் பார்வை. தோள் சுமக்கும் ஸ்டேத்தாஸ்கோப்.... டாக்டர். காயத்ரி 'ஹலோ புரபஸர்' என்கிறாள், உடனே அவர் சிரிப்பும் கும்மாளமுமாய் பதிலளிக்கிறார்.
"இந்தா பாரு.... சும்மா சும்மா என்னை புரோபோஸர் என்று சொல்லாதே... இல்லாட்டி... வருகிற நோயாளிங்க நான் டாக்டரே இல்லை உதவாக்கரை பேராசிரியருன்னு நினைத்து ஓடிப் போயிடுவாங்க. போகட்டும் என்ன விஷயம்?"
உங்ககிட்ட எந்த விஷயத்திற்கு வரணுமோ அந்த விஷயத்திற்கு வந்திருக்கேன்... இவள் என் தோழி... இவளோட கணவன், தன்கிட்ட இருந்தது எல்லாத்தையும் இவள் கிட்ட தானமாக - பாசமாக் கொடுத்துட்டான்.... இவள் அபார்ஷனுக்கு வந்திருக்கும் போது ரத்த பரிசோதனை செய்தேன். ஸ்பேக்குலம் போட்டு பார்த்தேன். சிபிலிஸ் நோய் வந்திருக்கு. உள்ளேயும் சதைகள் சிதைந்து துருத்திருக்கு."
"ஊசி போட்டு அனுப்ப வேண்டியது தானே... இங்கு ஏன் வந்தே.."
"நோயாளியே இல்லை... இதில வேற உங்களுக்கு அவசர பாவலாவா? இவளுக்கு சிபிலிஸ் நோயோட உண்மை சொரூபத்தை விளக்கியாகணும். ஸ்லைடு போட்டுக் காட்டுங்க."
"டாக்டர் காயத்திரி, உட்கார்ந்தாள். நின்று கொண்டிருந்த சந்திராவை "உட்காரும்மா நான் இருக்கேன் கவலைப்படாதே" என்று சொல்லி விட்டு. டாக்டர். முத்துராஜ் . சுழல் நாற்காலியை நகர்த்திப் போட்டு. அந்தப் பெண்களுக்கு சாய்வாய் முகம் காட்டி, சட்டைப் பைக்குள் தயாராக வைத்திருந்த அடுக்கடுக்கான ஸ்லைடுகளை எடுத்தார். சதுரமான காகித வேலி இடுக்குகளுக்குள் கரும்பச்சை திரைச்சுருள் சொருகப் பட்டிருந்தது. அதில் ஒன்றை எடுத்து கருவண்டு மாதிரியான ஒரு யந்திரத்தின் வாயில் சொருகினார் உடனே எதிர்ப்புற தொலைக்காட்சி மாதிரியான திரையில் உடல் விளிம்புகளில் சதை முட்களோடு ஒரு கிருமி நிழலாடியது...
டாக்டர் காந்தராஜ் விளக்கமளித்தார்:
இதுதான் லட்சக்கணக்கான பேரை ஒழித்துக் கட்டிய பொம்பள சீக்கை தரும் கிருமி... முறைக்காதே காயத்திரி... இனிமே வேணுமின்னா ஆம்பள சீக்கை தரும் கிருமின்னு சொல்லலாம்.'
டாக்டர். முத்துராஜ் இன்னொரு ஸ்லைடை போட்டு அதன் காட்சியை விளக்கினார்.
"இது என்னது என்று சொல்ல வேண்டியது இல்லை. இதிலே சிகப்பு வட்டத்துக்குள்ளே வெள்ளை தழும்பு மாதிரி இருக்குதே.... இது உன் வீட்டுக்காரனுக்கு இருந்துதா? ஆபத்திற்கு வெட்கம் தோசமில்லை.... சொல்லும்மா"
“எனக்கு தெரிந்த வரை அப்படி எதுவுமில்லை டாக்டரய்யா."
அவசரத்தில் நீ பார்த்து இருக்க மாட்டே. இது, வந்து வந்து போகிற வட்டம். வலியோ. நமச்சலோ கொடுக்காது. இதுதான் இந்த கிருமியோட நரித்தனம். இதனால் உன் கணவன் கூட கவலைப்பட்டிருக்க மாட்டான். நெக்ஸ்ட்... பாரு காயத்திரி! இது வகுப்பு மாதிரியும் எனக்கு அஸிஸ்டன்ட் இருக்கிறது மாதிரியும் பேசுறேன் பார். சரி இந்த ஸ்லைடை பாரும்மா... இதுல அந்த உறுப்பு எங்கே இருக்குதுன்னு கண்டுபிடிக்க முடியுமா? எப்படி வெள்ளைக் காளான் மாதிரி கொழுப்புக் கட்டியாகவும், கேரட் மாதிரி ரத்தக் கட்டியாகவும் சதைப் புதராக இருக்குது பாரு. இதுவும் உன் கணவனுக்கு வந்துட்டு வந்துட்டு போயிருக்கும். இப்படிப்பட்ட ஒருத்தனோடு உறவு கொள்கிற எவளுக்கும் இந்த நோய் வரும். உனக்கும் வந்திருக்கு."
"எனக்கு பயமா இருக்குடி....... '
சந்திரா காயத்திரியுடன் உச்சி முதல் பாதம் வரையில் ஒட்டிக்கொண்டாள். இதற்குள் இன்னொரு ஸ்லைடு வெண்திரையில் நிழல் உருவமாய் பதிந்தது. நிர்வாணமான உருவம்... ஆண் என்றோ, பெண் என்றோ அடையாளப்படுத்த முடியாத சதைப் பிண்டங்கள் செஞ்சிவப்பான ரத்த வட்டங்கள். அவற்றுக்குள் ஆழம் காண முடியாதது போன்ற வெள்ளை வெள்ளையான சதைப் பாளங்கள்... ஆபாசத்தின் உச்சம். மிச்சம் மீதி வைக்காத அசிங்கம். இப்படித்தான் சந்திராவிற்குத் தோன்றியது. கண்களை மூடிக்கொண்டாள். டாக்டர். முத்துராஜ் ஒரு லெக்சரே அடித்தார்.
"என்றைக்கும் பிரச்சனையை சாய்வா பார்த்தால், அது நம்மைச் சாய்த்திடும். நேராய் கண்ணைத் திறந்து பாரும்மா இதுதான் மூன்றாவது கட்டம் நம்ம புராண பொய்களில் சில உண்மைகளும் கலப்படமாக கிடக்குது. உதாரணமாக. அகலிகையை கற்பழித்த இந்திரனுக்கு. அவன் உடம்பு எங்கும் பெண் குறிகளாகும்படி அகலிகையின் கணவரான முனிவர் சாபம் கொடுத்தாராம். அந்தச் சாபத்தில் இந்திரனும் இப்படித்தான் இருந்திருப்பான். நீயும் உன் புருஷனும்.... இப்படித்தான் ஆகப்போறீங்க... அப்புறம் வாயில மேல்பக்கம் ஓட்டை விழும்... குடிப்பதும், சாப்பிடுவதும் மூக்கு வழியாக வெளியில் வரும். அதற்குப் பிறகு, இந்த கிருமி மூளைக்குள்ளே போயி, உங்களுக்கு பைத்தியத்தை கொடுக்கும். கை, கால்களை முடக்கிப் போடும்.
டாக்டர் காயத்ரி கோபம் கோபமாகக் குறுக்கிட்டாள்.
"ஏன் இப்படி ஒரேயடியா பயமுறுத்துறீங்க?"
"மனசுப் பதியுறதுக்காக அப்படிப் பேசினேன். இந்தா பாரும்மா.... ஏன் கண் கலங்குற? ஒனக்கு இன்னும் அந்த ஸ்டேஜ் வரல. இப்போ ஒரே ஒரு ஊசியாலக் குணப்படுத்த முடியும். செலவு வெறும் நூறு ரூபாய் தான்."
"நிசமாகவா டாக்டர் அய்யா ..."
"நிசமாகவேதான்.... காய்த்திரி! இந்தப் பெண்ணுக்கு இருபத்திநாலு லட்ச யூனிட் பென்சனைட் பென்சிலின் ஊசி போடு."
"ஏன் புரோபஸர்... இருபத்துநாலு லட்ச யூனிட்டையும் ஆறுலட்ச யூனிட்டா நாலுதடவை போட்டா என்ன?"
"செய்வன திருந்தச் செய் நாலு தடவையாகப் போட்டால் அந்த இடைவேளைக்குள், கிருமிகளோட ஊடுருவல் ஏற்பட்டுக்கிட்டே இருக்கும். அதனால் ஒரே தடவையாப் போடணும்.... கத்துக்குட்டி டாக்டர் மாதிரி பேசுறே பாடம் நடத்தும் போது ஒழுங்கா கேட்டால் தானே?"
"நீங்கள் ஒழுங்கா நடத்தினா தானே? சந்திரா! இவரு யாருன்னு தெரியுமா?"
"இதுதானே வேண்டாங்கிறது. நான் என் அண்ணனோட நிழலுல வாழுகிறவன் இல்ல. பழம் பெருமையை, திறமை என்று நம்ப வைக்கிறவனுமில்ல.... போகட்டும் இந்த பெண்ணோட கணவனுக்கும் சிகிச்சை கொடுக்கணும். இரண்டு பேரும் நாம் கிளியரன்ஸ் கொடுக்கும் முன்பே , உடலுறவு வச்சிக்கக் கூடாது. புரியுதாம்மா... சும்மா பிரசவ வைராக்கியம் மாதிரி ஆக்கிடாதே. அவர் தொடும் போது... நாங்க சொன்னது கூட உனக்கு பொய்யாத் தெரியலாம். நம்ம மனம் இருக்கே.... அது ஒரு பக்கம் சகுனியாகவும், மறுபக்கம் தர்மராகவும் இருக்கக்கூடியது.'
"இனிமேல் அவர்கூட வாழ்வது இல்லை என்று தீர்மானம் செய்துட்டேன் டாக்டரய்யா."
"சினிமா வசனம் பேசாதேம்மா.... எந்த சிக்கலையும் அதன் எல்லை வரை போயும். எல்லை தாண்டியும் பார்க்கணும்... இதுல யதார்த்தம் முக்கியமே தவிர கற்பனைகள் இல்லை. நீ வேலை பார்க்கிறியா? இல்லையா? பிறகு எப்படி பிழைப்பே?"
"பிச்சை எடுப்பேன்...... பிளாட்பாரத்தில் படுப்பேன்.'
அப்படின்னா போலீஸ் முதல் தெருவோர தாதா வரைக்கும் உனக்கு சிபிலிஸ் நோயோடு, எய்ட்ஸ் நோயையும் கொடுப்பாங்க. ரயில்வே ஸ்டேஷனில் படுத்தால், புரோக்கர்கள் வந்து தூக்கிட்டு போவான். கணவன்கிட்ட இருந்து இப்போதைக்கு விடுபட விரும்பாதே.... உன்னால சுயமா நிற்க முடியாது... முடியுறது வரைக்கும் அவனோடு இரு... அதோட இந்திரனுக்கே சாபவிமோசனம் கிடைத்தது. உன் புருஷனுக்கு கிடைக்கக் கூடாதா என்ன!"
"ஒரு ஊசியிலே சரியாகிவிடுமுன்னு அந்த ஆளு பழையபடியும் திரிய ஆரம்பிச்சா?”
இப்படிக் கேளு... இதுதான் நியாயம். உன் புருஷனை என்கிட்ட கூட்டிட்டு வா. நோயையும் குணப்படுத்தி வேப்பிலையும் அடிக்கிறேன். அதே சமயம் இப்பவே டிடிபி மாதிரி ஏதாவது ஒரு கம்ப்யூட்டர் கோர்ஸில் சேரு. ஒரு பெண்ணுக்கு நிசமான கால்கள் பொய்யானவை... பொருளாதார கால்கள் தான் மெய்யானவை.... "
டாக்டர் காய்த்திரியும், சந்திராவும் டாக்டர் முத்துராஜை நன்றியோடு நோக்கிவிட்டு, வாசல் வரை போய்விட்டார்கள். சந்திராவிற்கு மனம் லேசுப்பட்டது. தாம்பத்தியப் பிரச்சனைக்கும் தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. அப்போது டாக்டர். முத்துராஜ் இந்தாங்கம்மா என்று அவர்களை திரும்ப அழைத்துப் பேசினார்.
"சிபிலிஸ் நோய் இருந்தால் எய்ட்ஸ் நோய் வர வாய்ப்புண்டு... அதனால் இவங்களுக்கும், இவங்க கணவருக்கும் எச்.ஐ.வி. டெஸ்ட் எடுக்கணும். இந்தாம்மா... நாங்க சொல்றது வரைக்கும் நீங்க இரண்டு பேரும் காண்டம் இல்லாமல் உடலுறவு வைத்துக்கொள்ளக் கூடாது.'
"இவளோட ரத்தத்தை ஹெச்.ஐ.வி. டெஸ்ட்டுக்கு கொடுத்துட்டேன்'
அய்யய்யோ எனக்கு இருக்குமோ'
சந்திரா. அவர்கள் மீது யாசகப் பார்வையை வீசினாள். அந்த நோயின் பெயரை வாயால் சொல்வதற்குக்கூட பயந்தாள். அவளைப் பொறுத்த அளவில் பூமி பிளந்தது ... ஆகாயம் தலையில் விழுந்தது.....
சந்திரா. எதிர்பாராத வகையில் டாக்டர் காய்த்திரியின் கால்களில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து. என்னை உன்னோடு வச்சிக்கடி வச்சிக்குவியாடி என்று கண்ணீர் முழுக்கு செய்தாள்.
அமெரிக்காவில் வேலையில் சேரப் போக இருக்கும் டாக்டர் காய்த்திரிக்கு தனது தோழியை எப்படி ஆற்றுப்படுத்துவது என்று தெரியவில்லை. அவளைத் தூக்கி நிறுத்தி மார்போடு அணைத்துக் கொண்டாள்.
வள்ளலார் பாணியில் அரைக்கணத்தில் அண்டம் எல்லாம் ஏகியது போல். சந்திரா, நான்காண்டு கால நினைவு நெருப்பில் நாற்பது வினாடிகள் எரிந்து இருப்பாள். அந்த சூடு தாங்க முடியாமல் அவள் நிமிர்ந்தபோது, பெஞ்சு கிளார்க் நீதிபதி முணுமுணுத்துப் பேசியதை வெளிப்படையாக்கினார்.
"உனக்கு அபார்ஷன் ஆன பிறகு உன் கணவனோடு தாம்பத்திய உறவுக்கு மறுத்ததாக சாட்சி சொன்னதுக்கு உண்டா... இல்லையா... ஒரே வரியில் பதில் சொல்!".
சந்திரா மேலும், கீழுமாய் தலையாட்டினாள். அப்படியும் பெஞ்சு கிளார்க் ஆமாவா' என்று கேட்ட போது அவள் உதடுகள் ஒன்றின் மேல் ஒன்று அடித்துக் கொண்டு கீழ் உதடு மேல் உதட்டில் இருந்து விலகி சிறிது முன்னால் வந்ததை கணக்கில் எடுத்தால், அவள் வாயில் இருந்து ஆமாம் என்ற வார்த்தை வெளிப்பட்டதாக அனுமானித்துக் கொள்ளலாம்.

