Chapter 1

அந்தக் கூண்டில், சந்திரா, கழுத்தில் தலையை மடித்துப் போட்டபடி நின்றாள்.

ஆரம்பத்தில், தனது அருகே நின்றவனையோ, அல்லது அப்படி நிறுத்தப்-பட்டவனையோ வழக்கம்போல் யந்திர மயமாகத்தான் பார்த்தாள். பார்க்கக்கூடவில்லை. அவளுடைய நேர்பார்வையில் கண்ணின் விளிம்பில் அவள் தற்செயலாகத்தான் பட்டான். வாய்தா வாய்தாவாக வளர்ந்து போன அவன் தாடியைப் பற்றி இவளுக்கு எந்த சிந்தனையும் இல்லைதான். அந்த தாடி மறைத்த குழந்தைத்-தனமும் முதிர்ச்சியும் பின்னிப்பிணைந்த அவன் முகம், இவள் மனதில் பதியவில்லை. ஒன்றில் இருந்து இன்னொன்றிற்கு கொண்டு செல்லும் மூளையின் ஒரு பகுதி மரத்துப்போனதோ என்னமோ..

அந்த நீதிமன்றத்தின் இருபக்கச் சுவர்களிலும் ஒட்டிப்போடப்பட்ட முதுகில்லாத பெஞ்சுகளில் நிரம்பி வழிந்த வாதிகளும், பிரதிவாதிகளும் கருப்பு கோட்டுக்காரர்களும் நீதிபரிபாலன மேடையில் நிற்பதுபோல் உட்கார்ந்தபடி, துவார பாலக, பாலகியாய் தோன்றிய பெஞ்ச் கிளார்க்கும். ரிக்கார்ட் கிளார்க்கும். ஒட்டுமொத்தமாக அவளையும், அவனையும் உற்றுப் பார்த்தார்கள். பல ஆண்டுகளுக்குப் பிறகு இப்பொழுதுதான் இப்படிப்பட்ட அழுத்தமான பார்வை. முன்பெல்லாம், கூண்டில் நிற்பவர்களை ஒரு தடவை பார்த்துவிட்டு, மறுதடவை முகம் திருப்பும் அத்தனை பேரும் அவர்கள் இருவரையும் ஜோடி சேர்த்து, பார்த்து ரசித்தார்கள். இவளுக்கு வலது பக்கம் உள்ள டெஸ்க் பெஞ்சுகளில் பால் பாயின்ட் பேனாக்களும் குறிப்பேடுகளுமாய் உள்ள செய்தியாளர்கள். எழுதுகோல் மூடிகளை கழற்றிப் போட்டார்கள். அவர்கள் போட்ட வழக்குச் செய்திதான். இப்போது அவர்களுக்கே மறந்துவிட்டது.

சந்திரா. மனிதவடிவ கணினிபோலவே நின்றாள் அவளுக்குள் பதிவான நிகழ்ச்சிகள் வைரஸ்களால் பழுதுப்பட்டு போனது போன்ற மங்கலான பார்வை. நீதிமன்ற பெஞ்ச் கிளார்க் அதட்டியதில், அவள் லேசாக நிமிர்ந்தாள்... லேசாகத்தான்.

"இது கோர்ட்டு... சாய்ந்தோ ... கோணிக்கிட்டோ நிற்கப்படாது... நேரா நில்லு "

ஒலிப்பதிவு தகட்டின் மெல்லிய கீறல் போன்ற நீதிபதியின் முணுமுணுப்பை கட்டளை ஒலிபெருக்கியாக மாற்றிய பெஞ்ச் கிளார்க்கின் சிடுசிடுப்பான வார்த்தைகளால் எந்தத் தாக்கமும் ஏற்படாமல் சந்திரா சரித்துப்போட்ட மேனியில் மடித்துப்போட்ட தலையோடு, வலது பக்கம் விழப்போகிறவள் போல் நின்றாள். உடனே, மறுமுனையில் நின்று அவளை. காக்கி யூனிபாரச் சேவகர், ஓடோடி வந்து, கண்களை உருட்டியபடியே கூண்டில் நின்ற மார்த்தாண்டன் அருகே சேர்ந்து நில்லு' என்று சொன்னபடியே நகர்த்தினார். நீதிமன்றமாக இல்லாமல் வேறு எந்த இடமாக இருந்தாலும், அவர் சொன்ன வார்த்தைக்கு முன் ஏய்' என்ற சொல்லையும் இரண்டாவது சொல்லோடு 'டீ' என்ற சொல்லையும் சேர்த்திருப்பார். அவருக்கும் காவல் நிலையத்தில் வேலை பார்த்த அனுபவம் உண்டு.

சந்திரா, தனது இடது பக்கம் ஏதோ தட்டுப்படுவதைக் கண்டு முகம் திருப்பினாள். மார்த்தாண்டன்! அவள் அங்கே இல்லை என்பது போல் அசைவற்று நின்றான். அவன் வழியாக அவள் பார்வை, தெற்குப்பக்க சுவரோர பெஞ்சின் நடுப்பக்கம், சுவரில், தலை சாய்த்துக் கிடந்தவள் மேல் பட்டது. ஏதோ ஒரு குச்சியில் தொங்கப் போடப்பட்ட புடவை போல் அவள் குமைந்து கிடந்தாள். இவள் பார்வை பட்டதும், அந்த புடவை நெளிந்தது. உச்சி முதல் உள்ளங்கால் வரை வெள்ளை சேலையால் மூடிக்கிடந்த உருவத்தில் இரண்டு கண்கள் மட்டும் மகளை துருத்திப் பார்த்தன. அவற்றில் இருந்து நீர் கொட்டி கன்னங்களை மூடிய புடவை குகைக்குள் சங்கமித்தது. தலை பின்பக்கமாய் சுவரில் மோதி மோதி அல்லாடிக் கொண்டிருந்தது.

இந்த சந்திரா. இதே நீதிமன்றத்திற்கு வரும்போதெல்லாம். அம்மா அகப்படுவாளா என்று கண்களை ஏவிவிடுவாள். பிறகு. வெறுமையாக கைகளைப் பிசைவாள். கடந்த நான்கு ஆண்டுகளில் எட்டிப்பார்க்காத தாய்க்காரியை பார்த்ததும் அந்த எந்திர உடம்புக்குள் லேசாய் ஒரு சத்தம் ஏற்பட்டது. இதுவரை ஏன் அம்மா வரவில்லை? அம்மா வந்து இருப்பாள். அண்ணன் தடுத்திருப்பான். இப்போது அவன் குண்டர் சட்டத்தில் சிறையில் இருப்பதாகக் கேள்வி. அதனால்தான். அம்மா வந்திருக்காள்.

சந்திராவுக்கு . அம்மாவை விலைகொடுத்து வாங்க முடியுமா! என்று ஒலிக்கும் ஒரு கிராமிய இசையிலான கவிஞர். பரிணாமனின் நவீனப் பாட்டு அவளுக்காகவே எழுதப்பட்டது போல் தோன்றியது. ஆனாலும் அம்மாவின் அவலம் தாங்கமுடியாமல் அவள் மறுபக்கம் கண்களை நிமிர்த்தினாள். மாமியார் அன்னம்மா அவளை பத்திரகாளித்தனமாக பார்த்தாள். இவளுக்கு முன்னாள்' தாயாக இருந்தவள் தான். இவளருகே உள்ள முன்னாள் தோழியும் இன்னாள் நாத்தியுமான அனிதா, இவளை வெளியே... வா கொன்னுடுவேன் பார்..." என்பது மாதிரி தற்செயலாக வலதுகையை தலைக்கு கொண்டு போவதுபோல் போக்குக் காட்டி, அந்த கையை ஐந்து தலை நாகம் போல் ஆக்கி மைத்துனியை நோக்கி ஆட்டினாள்.

இந்தப் பின்னணியில், அரசாங்க வழக்கறிஞரும், இலவச சட்ட ஆலோசனைக் கமிட்டி வழங்கிய இவளது வழக்கறிஞரும் மரப்பலகையால் போடப்பட்ட தளத்தில் பழைய நாற்காலியில் உட்கார்ந்தபடி, முகம் குவித்த நீதிபதியிடம் மாறிமாறிப் பேசினார்கள். டக்பிடித்த கருப்புக் கோர்ட்டு, பின்பக்கமாய் விரிந்து பிட்டத்தை காட்ட நின்ற அரசு வழக்கறிஞர், நீதிபதி அமர்ந்து இருக்கும் மேடைதளத்தில் ஒரு காலை ஊன்றி, மேசையில் ஒரு கையை மடித்துப் போட்டு பேசினார். இலவச வக்கீலோ, உடம்பை இரண்டாக மடித்துவைத்துக்கொண்டு 'யுவர் ஆனர் ..... யுவர் ஆனர்' என்று ஆனரில்லாத குரலில் குளறுபடி செய்துகொண்டிருந்தார்.

நீதிபதி, அவர்களை பின்னோக்கி அனுப்பிவிட்டு, தன்பக்கமாய் எழுந்து நின்று தலையை நீட்டிய பெஞ்ச் கிளார்க்கிடம், ரகசியம் பேசுவதுபோல் பேசினார். உடனே அந்த கிளார்க் சந்திராவைப் பார்த்து, முகத்தை மேல்வாக்காய் உயர்த்திக்கொண்டு ஆணையிட்டார்.

"இந்தாம்மா... சந்திரா...! இந்த கூண்டில் வந்து ஏறி நில்லு..."

சந்திரா, எதிர்முனை கூண்டிலிருந்து இறங்கினாள். இடது பக்கமாக நடக்கப்போனவள் அம்மாவை பார்த்து விழுந்து விடக்கூடாதே என்ற அச்சத்தில் வலது பக்கமாக நடக்கப்போனாள். மைத்துனியைப் பார்த்துவிட்டு சிறிது தயங்கினாள். இதற்குள் பெஞ்ச் கிளார்கின் அதட்டல் கேட்டது. உடனே அவள் மாமியாரைச் சுமந்த சுவரோர பெஞ்சுக்கும் கருப்பு கோட்டுகள் படர்ந்த நாற்காலி வரிசைகளுக்கும் இடையே உள்ள திடீர் பாதையில் நடந்தாள். புடவைக்குள் சிக்கிய கால்கள் அவளை இலக்கு அறியாமல் தடுமாறவைத்தன. இதையே அவள் நீதிபதி மேல் பாயப்போவதாக அனுமானித்து. இரண்டு பெண் போலீஸ்காரிகள் அவளை பிடித்திழுத்துக்கொண்டு போனார்கள். அந்த சமயத்திலும் இவளுடைய நாத்தி அனிதா , இவள் தன்னை கடக்கும் போது. ஆணிபதித்த காலணியால் அவளுடைய குதிகாலை மிதித்தாள். வெளியே தெரியாமல் இருப்பதற்காக, குடும்ப பெண்ணாய் புடவையை பாதம் வரை இழுத்துப் பரப்பிக் கொண்டாள்.

தேக்கு மரத்தால் கடைந்தெடுத்த கூண்டு . நீதிபதிக்கு அருகேயுள்ள நீளவாக்கிலான கூண்டு. மரப்பலகை ஏணிப்படிகளையும், நான்கடி உயரத்திலான மேல்தளத்தையும் உள்ளடக்கிய அந்தக் கூண்டு வெள்ளைக்காரன் காலத்திலிருந்தே நீதிமன்றமாக செயல்படுகிறது. தப்பித்த கொலையாளிகளையும் தப்பிக்கமுடியாத அப்பாவிகளையும் சட்டத்தைச் செப்படியாக்கிய அரசு தரப்புக்களையும் - எல்லாவற்றிக்கும் மேலாக விடுதலை போராட்ட வீரர்களையும் கிரிமினல்களாய் தாங்கிய கூண்டு. இதில் ஏறுகின்றவர்களுக்கும் இவர்களை குறுக்கு விசாரணை செய்பவர்களுக்கும் வாதி, பிரதிவாதிகளுக்கும் இந்த கூண்டின் பழைமையோ அல்லது அதன் அருமையோ தெரிந்திருக்க நியாமில்லை. நினைத்துப் பார்க்கக்கூட நேரமில்லாதவர்கள். தாமத்தை புறந்தள்ளி எதிராளிகளை எப்படி மடக்குவது என்பதிலேயே குறியாக இருப்பவர்கள். இந்தக் கூண்டு தொல்பொருள் காட்சியகத்தில் இருக்க வேண்டும் என்பதை உணராதவர்கள்.

சந்திரா, கடந்த நான்காண்டுகளில், இப்பொழுதுதான் இந்தக் கூண்டில் ஏறுகிறாள். இதுவரை முன்னால் நின்ற பழைய கூண்டில் ஒரு நிமிடம் நின்று வாய்தா கிடைத்ததும் பெண் போலீஸால் வாரிக்கொண்டு போகப்பட்டவள். நீதிபதியையும், இப்போதுதான் முழுமையாகப் பார்க்கிறாள். இவர், இந்த வழக்கிற்கு வந்த நான்காவது நீதிபதி என்பது இவளுக்குத் தெரியாது. கடந்த நான்காண்டுகளில் தவணை முறையிலான தொடர்-கதையை எழுதுவதுபோல் மூவர் இந்த இருக்கையை அலங்கரித்துவிட்டு போய்-விட்டார்கள் என்பதும், இவளுக்குத் தெரியாது. எனவே வாய்தா . வாய்தாவாக இவள் அலைக்கழிக்கப்பட்டது. இந்த நீதிபதிக்கு கண்காட்சியாய் தெரியாது என்பதும் தெரியாது. முன்பு மறுமுனைக் கூண்டில் நிற்பவனோடு நிற்கவேண்டும் என்று இவளுக்கு ஆணையிட்டபோது. இவள் அலறியடித்து, அப்படி நிற்கமறுத்ததும், அவன் கூண்டுக்குள் நின்றால் வெளியே நிற்பதும், இவள் உள்ளே நிற்கவேண்டும் என்பதற்காக அந்த மார்த்தாண்டன் வெளியே நிற்பதும் கடைசியில் நீதிமன்ற காவலர்கள். இவர்கள் இருவரையும் உருட்டி மிரட்டி கூண்டுக்குள் ஜோடி சேர்த்ததும். இந்த நீதிபதிக்கு தெரியாது. ஆரம்ப காலத்தில் என்னை சீக்கிரமாக தூக்கில் போடுங்க நான் இருக்கப்படாது. இருக்கப்படாது என்று இவள் வாயிலும் வயிற்றிலும் அடித்துக்

கொண்டதும், இந்த புதியவருக்கு தெரியாது.

இதற்குள். தட்டெழுத்துப்பெண் எங்கிருந்தோ வந்தவள் போல் வந்து மேசையில் அப்போதுதான் போடப்பட்ட நாற்காலியில் உட்கார்ந்தாள். தட்டெழுத்து யந்திரத்தை ஆர்மோனிய பெட்டிமாதிரி விரல்களால் நோன்டினாள். காகிதங்களுக்கிடையே கார்ப்பன் பேப்பர்களை சொருகினாள். அவள் ஆயத்த வேலைகளை எரிச்சலோடு கவனித்த நீதிபதி, அது முடிந்ததும், மேசைக் கண்ணாடியில் படரவிடப்பட்ட வழக்குக் கோப்பைப் பார்த்தபடியே. இந்தச் சந்திராவையும் அவ்வப்போது அரைக்கண்ணால் நோக்கியபடியே முதல் கேள்வியைக் கேட்டார்.

"உங்கள் கணவர் கோபாலை, அவருடைய சொத்துக்கு ஆசைப்பட்டு, கல்யாணத்திற்கு முன்னால் காதலிப்பது போல் நடித்து அவரை கைப்பற்றியதாக உங்கள் மைத்துனி அனிதா சாட்சி சொல்லி இருப்பது உண்மையா? பொய்யா? ஒரே வார்த்தையில் பதில் சொல்."