வேதநாயகம் பிள்ளை வரலாறு

பிறப்பு

செந்தமிழ் நாடும், பைந்தமிழ் மொழியும், நந்தம் நனி நகரிக மும் சீரும் சிறப்பும் பெற்று முந்துநிலை எய்த அருளால் வந்து தோன்றிய மாபெரும் புலவர்கள் பலர். அவர்களுள் இப் பெரியாரும் ஒருவர்.

இவர் பிறந்த திருவூர், திருச்சிராப்பள்ளிக்கு அண்மையிலுள்ள குளத்தூர். அங்கு வேளாண் வாழ்க்கையும், தாளாண்மையும், நற்குடிப் பிறப்பும், பழியஞ்சிப் பாத்துண்டலும், வடுவஞ்சி வாய் மொழிதலும், நடுநிலை கோடாமையும், அன்பும் அறனும், இன்பு மீகையும் ஒருங்கமைந்த சவரிமுத்துப் பிள்ளை யென்னும் தக்கார் ஒருவர்க்கும், அவர்தம் கற்பிற் சிறந்த வளத்தக்க வாழ்க்கைத் துணையும், மனைமாண்பும், சோர்வின்மையும், தெய்வ நாட்டமும் வாய்ந்த ஆரோக்கிய மரியம்மாள் என்பவருக்கும் தவப்பேற்றால் உலகுய்ய அருளால் ஓர் ஆண்மகவு தோன்றிற்று. அம்மகவுதான் நம் அருமை வேதநாயகம் பிள்ளை யென்னும் செம்புலச் செல்வர். அவர் தோன்றிய நன்னாள், ஆயிரத்து எண்ணூற்றிருபத்தாறாம் ஆண்டு, அக்டோபர் பதினான்காம் நாள்.

கல்வி

இவர்கள் முன்னோர் கிறித்துவ நெறியைப் பின்பற்றுபவர்கள். ஆயினும், நம் பிள்ளையவர்கள் நெறிப் பிணக்கின்றி, 'ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்,' என்னும் திருமுறைக் கிணங்கப் பொது நோக்கு மிக்குடையவர். பழம்பிறப்பின் தொடர்ச்சியால் தம் பதினொன்றாம் அகவைக்குள், தமிழ் நூற்கள் பெரும்பான்மையும் கற்று வல்லாராயினர். இஃது,

"ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு

எழுமையும் ஏமாப் புடைத்து "

என்னும் பொதுமறை அருண்மொழியை விளங்கச் செய்கின்றது. பின் ஆங்கிலம் கற்க அளவிறந்த அவாக் கொண்டனர்.

அஞ்ஞான்று ஆங்கிலம் எல்லா ஊர்களிலும் பள்ளிகளமைத்துமிக்குப் பயிற்றுவிக்க-வில்லை. ஆங்கிலம் கற்றார் தொகையும் மிகக் குறைவு. அப்படியிருந்தும், வழக்குமன்ற மொழிபெயர்ப்பாளர் திரு. தியாகப்பிள்ளை என்பவர்களிடம் ஆங்கிலம் முறையாகக் கற்றுத் தேர்ந்தார். திரு. தியாகப் பிள்ளையவர்கள் தமிழிலும் வல்லவராக இருந்தமையால் மற்றும் பல தமிழ் நூல்களும் கற்றுத் தேர்ந்தார்.

அலுவல்

பிள்ளையவர்களின் நற்பண்பும், நுண்மாண் நுழைபுலமும், விடா முயற்சியும், முறையறிந்து ஒழுகும் திறமையும், 'நகையீகை இன் சொல் இகழாமை முதலிய சீலமும், பணிவும் இன்சொல்லும், வாய்மையும், தூய்மையும், உலகினருள்ளத்தைக் கொள்ளை கொண்ட டன. அவ்வாறே அரசினர் மனத்தையும் கவர்ந்தன. அதனால், அரசினர் திருச்சிராப்பள்ளி வழக்குமன்றம் ஒன்றில் 1848 - ஆம் ஆண்டில் பதிவுப் பொறுப்பாளர் (Record Keeper) என்னும் அலுவலில் அமர்த்தினர். அவ்வேலையைத் திறம்பட இரண்டாண்டுகள் செய்துவந்தனர். பின் மொழிபெயர்ப்பாளராம் விழுமியநிலை எய்தினர். 1857 - ஆம் ஆண்டில் தரங்கம்பாடியில் முறைமன்றத் தலைவர் (முனிசீப்) என்னும் நிறைபெறுநிலை எய்தினர். அவ் வேலையை நடுநிலை பிறழா நயத்துடன் உரை முடிவு கண்டு ஊரும் உலகமும் ஒப்ப, வழக்காளர் உளமும் நிறைய முறை செய்து வருவாராயினர். அங்கு நின்றும் சீகாழிக்கு மாற்றப்பெற்றனர்.

நல்லார் நட்பு

அப்பொழுது இயற்றமிழ் வல்லவராய்ச், செந்நாப்புலவராய் நூலாசிரியராய், உளங்கொள நுவலும் ஆசிரியராய்ப், பாவன்மையும் நாவன்மையும் ஒருங்கமைந்தவராய்க், காட்சிக்கெளிமையும் கடுஞ்சொல்லின்மையும், கைம்மாறு கருதாச் செம்மையும், தோலா நாவின் மேலாம் பண்பும் வாய்ந்தவராய்ச் , செம்பொருட்டுணிவும், சிவநெறி மாண்பும் தம் பெரும் தவமாக் கொண்டொழுகும் சீலராய், மாணாக்கர்களுக்கு உண்டி உறையுள் உடையும் நல்கிக் கற்பிக்கு நடையினராய்த் திகழ்ந்த மாபெரும்புலவர் திருசிரபுரம் மகாவித்துவான் திரு. மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் சீகாழிக்கு எழுந்தருளினர். இருவரும் பொருவரிய நண்பராயினர்.

நீதி நூல்

வேதநாயகம் பிள்ளையவர்கள் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களுடன் 'உணர்ச்சி-யொத்த' நண்பினராயின்மையின், பிள்ளையவர்களைக் கொண்டு சீகாழிக்கு ஒரு கோவை பாடுவித்தனர். அக்கோவை நூல் மிக்கார் கூடிய அவைக்கண் 1858-ஆம் ஆண்டில் அரங்கேற்றமும் செய்யப்பட்டது.

வேதநாயகம் பிள்ளையவர்கள் தாம் பாடிய எளிமையும், தெளிவும், இனிமையும், செறிவும், அறிவும், திட்ப நுட்பமும் ஒருங்கு திகழும் 'நீதி நூலை'ப் பிள்ளையவர்களைக் கொண்டு பார்வையிடச்செய்து, அவர்கள் சாற்றுக் கவியுடன் அரங்கேற்றுவித்தனர்.

சோறு வழங்கல்

பின்பு, திருமயிலாடுதுறை யென்னும் மாயூரத்துக்கு மாற்றப் பட்டனர். அங்கு அமர்ந்திருக்கும் நாளில் கொடிய வற்கடம் வந்தது. வற்கடமாகிய பஞ்சத்தால் மக்கள் உணவின்றி மாண்டனர். அருளுடையார் உள்ளம் மக்கள் உணவின்றி மாள்வதைக் கண்டு வாளாவிராது, மக்களுக்கு எந்த வகையிலும் உணவளித்து மாளாது வாழவைக்க வேண்டுமென்றே துணியும். அம்முறையில் வேத நாயகம் பிள்ளையவர்களும் பெருமுயற்சி செய்து, 'சொல்லாற் சாற்றிச் சோறு' வழங்கி மக்களை உய்வித்தனர். இச்செயல் திருவீழிமிழலையில் அரசும் பிள்ளையாரும் ஆண்டவன் அருளிய படிக்காசால் பஞ்ச காலத்து உணவூட்டி மக்களை உய்வித்த திருவருட் செயலை நினைவூட்டும்.

பெண்மதிமாலை

அகத்து வாழ் பெண்கள் அறிவு நிரம்பியவர்களாக இருந்தா லன்றிப், புறத்துச் செல்லும் ஆடவர்கள் புலமையும் ஆண்மையும் பொருளீட்டலும் அருள் கூட்டலும் நாடும் மொழியும் பீடுற வோங்கப் பாடுபடலும் பிறவும் வாய்ந்து திகழ்தல் முடியாதென்பது ஒருதலை. பட்டறை வாய்த்தாலன்றிப் பணி வாயாதல்லவா? துணை வாய்த்தாலன்றிச் சிறப்பு அணையாதல்லவா?

அதனால், பெண்கள் கற்று அகக்கண்கள் உடையராய்த் திகழ வேண்டுமென்னும் சீரிய நன்னோக்கம் கொண்டு பெண்மதிமாலை' யென்னும் நூலொன்று "உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுளாக" இயற்றி, 1869-ஆம் ஆண்டில் வெளியிட்டனர். அதன் பின்னரே பெண்ணுலகம் விழித்தெழுந்து நண்ணுங் கல்வி கற்று நலமுற்றது.

பிரதாப முதலியார் சரித்திரம்

1876- ஆம் ஆண்டில் கற்பனை நுட்பங்கள் பொற்புற அமைய, உலகியல் முறைகள் உள்ளங்கை நெல்லியென நிலவ, அறிவு ஆண்மை முறைமை உதவிசெய்தல் நன்றியறிதல் வறுமையிற் செம்மை கற்பு முதலிய பலவும் திகழ, கிளைக்கதைகள் பல செறிய, இன்சுவை நடைத்தாய்ப் பிரதாப முதலியார் என்னும் பெயர் பொறித்துக் கதை நூல் ஒன்று வெளிப்படுத்தினர். அந்நூல் அனைவர்களாலும் எந்நாளும் போற்றப்பட்டு வருகின்றது. இதன் சிறப்பு புணர்ந்த பலர் வேண்டுகோளின்படி இதனை ஆங்கிலத்திலும் மொழி பெயர்த்துள்ளார்.

சுகுணசுந்தரி சரித்திரம்

இவர் தம் முதற் புதினமாகிய 'பிரதாப முதலியார் சரித்திரத் திற்கு நாட்டிலளிக்கப்பட்ட நல் வரவேற்பின் பயனாக, சுகுணசுந்தரி சரித்திரம் என்னும் விழுமிய இவ்விரண்டாவது புதினத்தை எழுதி வெளியிட்டனர். முதற்கண் வரைந்த புதினத்தில் கூறப் பெறாது விடுபட்ட பல அறநெறிகளையும், அறிவுரைகளையும் இந்நூற்கண் சேர்த்துள்ளார். அன்றியும் உடலோம்பல் குழந்தை மணம் முதலிய வற்றின் நன்மை தீமைகளை இந்நூற்கண் இனிது விளக்கி, சமூகப் பழக்க வழக்கங்களின் தீமைகளையும், பிறவற்றையும் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். கற்பார்க்குக் கழிபேருவகையினை ஊட்டும் சிறப்புடைத்தென்று யாவராலும் இந்நூல் கருதப்படுகிறது.

தக்காரினத்தராதல்

மாபெரும் புலவர் மீனாட்சிசுந்தரம் பிள்ளை, திருவாவடுதுறை ஆதீனத் தலைவர் சுப்பிரமணிய தேசிகர், சி. வை. தாமோதரம் பிள்ளை, கோபாலகிருட்டின் பாரதியார், சென்னைச சுப்பராயச் செட்டியார், புதுவை வித்துவான் சவரிராயலு நாயகர் முதலிய தவலருந் தொல் கேள்வித் தன்மையுடைய தக்காரினத்தராய்த் தாம் ஒழுகினர். இக்காலத்தே மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் வேதநாயகம் பிள்ளையவர்கள் மீது குளத்தூர்க் கோவை என்னும் ஒரு நூல் பாடி நல்கினர்.

மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் இவ்வுலக வாழ்வை நீத்த பின்னர், அவர்கள் குடும்பத்தார் வறுமையுற்று வாடி நலிந்தமை கண்டு மனம் பொறாராய்த் திருவாவடுதுறை ஆதீனத் தலைவர் அவர்கள் அருட்கொடையால் அவ் வறுமையைப் போக்கி நலமுற்று வாழ வழிசெய்தனர்.

வேலை விடுதியும் பொது நலப் பணியும்

1872- ஆம் ஆண்டில் வேலை விடுதி பெற்றுப் பொதுநலப் பணியில் ஈடுபாடுற்றுத் தமிழப்பாய்த் தொண்டு பல புரிந்தனர். மாயூரம் நகராண்மைக் கழகத் தலைவராய் அமர்ந்து செயற்கருஞ் செயல் பல புரிந்தனர்.

பேராவியற்கை பெறுதல்

1881- ஆம் ஆண்டு, சூலைத்திங்கள் 21- ஆம் நாள் இரவு இறுதிக்காலத்து எய்தும் அலமரல் ஏதுமின்றி, இறை நினைவுடன் இவ்வுலக வாழ்வை நீத்துச் செம்பொருளின் திருவடியிணையைச் சேர்ந்தின்புற்றார்.

மாணவர் நண்பர் புலவர் உலகோர் அனைவரும் சொல்லொணாக் கையறுநிலை எய்திப் பாவாலும் நாவாலும் பாடியுரைத்து வருந்தினர். பின்பு, பிள்ளையவர்களின் ஆருயிர் இன்புற எண்ணி இறைவனை வழுத்தி அமைந்தனர்.

இயற்றிய நூல்கள்

இவர் இயற்றிய நூல்கள் :

1. நீதி நூல்

2. பெண்மதிமாலை

3. பிரதாப முதலியார் சரித்திரம்,

4. சுகுணசுந்தரி சரித்திரம்

5. தேவமாதா அந்தாதி

6. திருவருள் அந்தாதி

7. திருவருள் மாலை

8. சத்திய வேதக் கீர்த்தனை

9. சருவசமய சமரசக் கீர்த்தனை

10. தேவ தோத்திரமாலை

11. சித்தாந்த சங்கிரகம்

12. பெரிய நாயகி அம்மன் பதிகம்

13. பொம்மைக் கலியாணம்

எனப் பதின்மூன்றென்ப.

இவையன்றியும், காலத்துக்கும் இடத்துக்கும் ஏற்றவாறு அவ்வப்பொழுது ஆக்கிய அளவில்லாத சுவை மிக்க தனிப்பாடல்களும் சிறுசிறு நூல்களும் பலவாம்.