பதிப்புரை - வேதநாயகம் பிள்ளை (1826-1889)

பிரதாப முதலியார் சரித்திரம் என்னும் புதுமைக் கதையை எழுதிய வேதநாயகம் பிள்ளையே சுகுணசுந்தரி என்னும் இப் புதுமைக் கதையின் ஆசிரியரும் ஆவர். பிரதாப முதலியார் சரித்திரத்தில் கூறப்பெறாது விடுபட்ட பல அறநெறிகளையும் அறிவுரைகளையும் மக்களுக்கு எடுத்துக் கூறுதல் வேண்டும் என்னும் சிறந்த நோக்கத்துடன் தான் ஆசிரியர் இப்புதுமைக் கதையினை எழுதப் புகுந்திருக்கிறார்.

இக்கதை வெறும் பொழுதுபோக்கிற்காக மட்டும் அமைந்தது அன்று. மக்களுக்கு இன்றியமையாத பல செய்திகளையும் எடுத்துக் கூறுவதில் ஆசிரியர் அளவு கடந்த ஊக்கங் காட்டியுள்ளார். நாம் வேறு எந்தக் கதைகளிலும், இவ்வளவு அறவுரைகளையும் ஒழுக்க முறைகளையும் உடல்நல முறைகளையும் பிற அரிய செய்திகளையும் ஒருங்கே காணுதல் இயலாது. மக்கட்குக் கட்டாயம் கற்பிக்கப்பெற வேண்டுவனவாகிய அறம், ஒழுக்கம், உடல் நலம் ஆகிய செய்திகள் தனித்தனியே அமைந்த நூலினைப் படிக்க எவரும் மிகுதியாக விரும்புவது இல்லை. விரும்புவார் சிலரும் மனக்கிளர்ச்சி இன்றித் தளர்ச்சியுடனேயே படிப்பர். ஒழுக்கமுறை நூல்களைப் படிப்பதில் எவரும் ஊக்கங் காட்டுவதே இல்லை. எல்லோரும் ஊக்கத்துடனும் களிப்புடனும் நல்ல செய்திகள் எல்லாவற்றையும் ஒருங்கே உணர்ந்து கொள்ளும் பொருட்டே இக்கதையினுள் ஆசிரியர் அவற்றை இடம் நோக்கி அமைத்துள்ளார். மேலும், இக்கதையின் கருத்தும், பொருளும், நடையும் சிறக்கும்படி நூற்றுக்கணக்கான பழமொழிகளும், உவமைகளும், திருக்குறள் முதலிய நீதிநூற் கருத்துக்களும் எடுத்தாண்டிருப்பது கற்பார்க்குக் கழிபேருவகையினை ஊட்டுவதாகும்.

இந்நூலின்கண், "ஒவ்வொருவரும் தத்தமக்குரிய காரியங்களைத் தாங்களே செய்து கொள்வது மிகவுஞ் சிறந்தது ; சோம்பலுக்கு இடங்கொடுத்தால் உடல்நலம் கெடும். மக்கள் பழவினைப் பயனாகவே நல்லவர்களாகவோ அன்றிக் கெட்டவர்களாகவோ பிறக்கிறார்கள். தீயவர்களை எவராலும் திருத்துதல் இயலாது. நல்லவர்கள் பிறருக்கு நன்மை செய்தலையே தமது பிறவிப் பயனாகக் கொள்வர். தீயவர்களோ பிறருக்குத் தீமை புரிதலையே தமது பிறவிப் பயனாகக் கொள்வர்; தீயவர்கள் எக்காரணமும் இல்லாமலே பிறருக்குக் கேடு செய்வர். ஆண்மையும் பிறருக்குதவுதலும் நன்மக்கட்கு இயற்கைக் குணங்களாகும். பிறரை இழித்துரைத்தல் பொய் பேசுதல் முதலியன இழிவைத் தரும். இயற்கையாய் உலகில் நிகழுந் தீமைகள் மக்கட்குக் கடவுளால் அளிக்கப்பெறும் தண்டனைகளாகும்.

"நாம் நம்முடைய உடலைப் பாதுகாத்துக்கொள்ளுதல் வேண்டும். உடல் நலத்துக்கு இன்றியமையாதனவாகிய காற்று நீர் முதலியன தூய்மையுடையனவாக இருத்தல் வேண்டும். உடல்நலம் இன்றேல் ஒருநலமும் இல்லை. சிற்றூர் மக்கள் தண்ணீரைக் கெடுத்துப் பயன்படுத்துதல் தக்கதன்று. எளியவர்களுக்குப் பேருலகமே வீடு வாசலாக அமைந்திருக்கிறது. திக்கற்றவர்களுக்குத் தெய்வந்தான் துணை. நம் நாட்டில் இகழும் இளமை மணம் நல்லதன்று. அதனால் பல தீமைகள் ஏற்படுகின்றன. நம் நாட்டு மங்கையர் தாய் தந்தையர்களின் குறிப்பு வழியே நடப்பவர்கள், நேர்மை உள்ளவர்கள்; எக்காலத்தினும் நேர்மை உள்ளவர்களாகவே நடந்து கொள்வார்கள். உலகில் ஆண் பெண் இருவரும் ஒரே படியாகச் சிறப்பினை அடைதற்கு உரியவர் ஆவர். பிறப்பினால் மக்களுக்கு உயர்வு தாழ்வு இல்லை." என்பன போன்ற அரிய செய்திகள் பல ஆங்காங்கு நிறைந்துள்ளன. கதையின் பொருட்டு இந்நூலைப் படிக்காமல், நல்லொழுக்க முறைகளை உணர்ந்து கொள்ளும் பொருட்டே படித்துப் பயனடைதல் வேண்டும்.

படிப்பவர்கட்கு எளிதில் பொருள் விளங்காமல் எழுதப்பெற்றிருந்த அகத்தியம், அதிலிருஷ்டி, அத்தி யந்தம், ஆபாசம், ஆஸ்பதம், ஆகாத்தியம், இராஜகிருஹம், உச்சிஷ்டம், உஜ்ஜீவித்தல், குலாங்ஷம், சிரேஷ்டர், க்ஷாத்திரம், நிர்த்தோஷம், நிக்ஷேபம், நிஷித்தம், சிந்தாக் கிராந்தன், ஸ்கந்தம், சந்துஷ்டி, துர்ப்பிக்ஷம், வாசா மகோசரம், பிரசக்தி முதலிய எண்ணற்ற வடசொற்கள் இப்பதிப்பில் முற்றும் நீக்கப்பெற்று அவைகட்கு ஏற்ற தூய தமிழ்ச்சொற்கள் அமைக்கப்பெற்றுள்ளன. இவ்வாறு காலப்போக்கிற்கு ஏற்றவாறு சீர்திருத்தம் செய்து உரைநடை நூல்களை வெளியிடாமற் போனால் நூல்கள் அடியோடு அழிந்து ஒழிந்து போகும். இத் திருத்தமுறை ஆசிரியருக்குப் புகழைத் தருமேயன்றித் தீமை செய்வதாகாது. ஆகவே, இத்தகைய மாறுபாடுகளை அனைவரும் முழுமனதுடன் வரவேற்பார்கள் என்பது திண்ணம். ஒவ்வோர் அதிகாரத்தின் தலைப்பும் அதிகாரப் பொருளைப் பெயராகப் பெற்றிருக்கிறது. இப்புதுப் பதிப்புத் தன் அகத்துட்கொண்ட செய்திக்குத் தக்கவாறு உயரிய முறையில் பதிப்பிக்கப் பெற்றுள்ளதென்பதை, இதனைக் கற்பவர் எளிதில் உணர்ந்து மகிழ்வர் என்பது திண்ணம்.

சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார்.