முன்னுரை — மாலன்

இன்றைக்கு வந்த தபால்களை உடைத்து மேசையில் கொண்டு வந்து வைத்தார்கள்.

"இன்டர் நெட் போன்ற வசதிகள் வந்துவிட்டனவே அவை நமது கற்பனைக்குச் சமாதி கட்டிவிடுமோ, புதினம் என்பதே அழிந்து போகுமோ?" என்றொரு வாசகர் கேள்வி எழுப்பியிருந்தார்.

யோசிக்க வைத்த கேள்வி.

தமிழன் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், தொழில் நுட்ப அதிசயங்கள், புலம்பெயரும் நிர்ப்பந்தங்கள், அவனது கலையாத கல்விக்கும் குலையாத திறமைக்கும் பரிசுகளாகக் கிடைத்த அயல் கலாசார சிநேகங்கள், இவையெல்லாம் தமிழனது பழைய வாழ்க்கையை மெல்ல மெல்லத் தூர்த்து வருகின்றன. அவனது வாழ்க்கை இனி யாழ்ப்பாணத்துப் பனங்காட்டிலும், கொழும்பு திணைக்களத்துக் கதிரைகளிலும், சென்னைப் புழுதியிலும், கரிசல் காட்டு வெக்கையிலும் மட்டும் விரிந்து கிடக்கவில்லை. அது நார்வேப் பனியில் உறைந்து கிடக்கிறது; நீயு ஜெர்சி ஷாப்பிங் மால் ட்ராலிகளில் நகர்ந்து வருகிறது; ஆப்ரிக்க நுளம்புகளின் ரீங்காரத்தில் எதிரொலிக்கிறது. இனி நமக்குள்ளே பழங்கதைகள் சொல்வதிலோர் மகிமையில்லை.

களங்களும், தளங்களும், மனங்களும்கூட மாறிவிட்ட இந்தப் புதுத் தமிழனைப் பதிவு செய்ய யார் இருக்கிறார்கள்?

இந்தக் கதைகளைப் படித்தபோது அலுத்துக் கொள்ள அவசியமில்லை என்றுதான் தோன்றியது.

இந்தத் தொகுதியில் உள்ள கதைகள் தமிழுக்குப் புதிது. தமிழனுக்குப் புதிய அனுபவம் தருபவை.

தாழ்வுற்ற வறுமை மிஞ்சிய சியாரா லியோனை வாழ்விக்க வந்த இத்தாலியனைப் பற்றி, மீந்த பழங்களை நடுச்சாமத்தில் நீரில் அலம்பித் தின்னும் ரக்கூன் என்ற மிருகத்தைப் பற்றி, இடருற்ற உயிரினம் என்ற அறிவிக்கப்பட்டு விட்ட மலை ஆட்டைப் பிடிக்க பாகிஸ்தானின் வடக்கு மலைப் பிராந்தியத்தில் அலைகிறவனின் வம்ச விருத்தியைப் பற்றித் தமிழில் எத்தனை கதை வந்திருக்கும்?

பொருள் புதிது. தமிழ்நாட்டுப் பத்திரிகை வாசகனுக்கு சொல்லும் புதிதாகத்தான் இருக்கம் ("இந்த நேரத்தில்தான் அவள் ஆத்தாமல் போய் கீழிறங்கி வந்து சங்கை கெட்ட ஹவுஸ் மெய்ட் வேலைக்க மனுப் போட்டாள்.")

எனக்கு நடை மிகவும் பிடித்திருந்தது. கடலோர வீட்டில் காற்று உலவுவது போலச் சுகமான, லகுவான நடை. ஒரு சாம்பிள் பாருங்களேன். "புதுக்கப் புதுக்க அவளைப் பார்ப்பது போலிருந்தது அவருக்கு - இவர் அவளுடைய கண்களையே பார்த்தார். அவள் துணுக்குறவும் இல்லை. கீழே பார்க்கவும் இல்லை. திருப்பி அவர் கண்களை நிதானமாகப் பார்த்தாள். நல்லூர் சப்பரம் போல மெள்ள மெள்ள நகர்ந்து இவர் இருக்கைக்குக் கிட்டே வந்தாள்."

புதுமைப் பித்தன் தன்னுடைய நடையைத் தவளைப் பாய்ச்சல் நடை என்று சொல்லிக் கொள்வதுண்டு. முத்துலிங்கத்தின் நடையும் அப்படித்தான், மேலே உள்ள விபரணைக்கு அடுத்த பத்தி எப்படி ஆரம்பிக்கிறது தெரியுமா? "அவர்களுடைய திருமணம் ஆடம்பரமின்றி ஓரு கிராமத்துச் சர்ச்சில் நடைபெற்றது."

கிண்டலும்கூட புதுமைப்பித்தன் ஜாடையில் இருக்கிறது. குழந்தையோடு, கணவனால் கைவிடப்பட்ட பெண் மதுக் கடையில் நடனமாடும் வேலையில் சேர்கிறாள். "அப்பொழுதுதான் அவளுக்கு இரண்டாவது பிள்ளை பிறந்தது. இது எப்படி என்று சமத்காரமான கேள்விகள் கேட்கக்கூடாது. கற்பு பற்றித் திருக்குறளையும் சிலப்பதிகாரத்தையும் மேற்கோள்கள் காட்டி வியாக்கியானங்கள் இல்லாத ஆப்ரிக்காவில் அப்படித்தான்."

இதழியலில் show. don't tell என்று ஒரு உத்தி உண்டு. இப்படி நடந்தது, அப்படி நடந்தது என்று வார்த்தைகளைக் கொட்டி அளந்து கொண்டிராமல், நடந்ததைக் காட்சியாகத் தீட்டிக் காண்பிப்பது வலுவான தாக்கம் ஏற்படுத்தும் என்பது அதன் பின்னுள்ள நம்பிக்கை. வார்த்தைகளை அளந்தெடுத்துக் கச்சிதமாகப் பயன்படுத்தினாலும் முத்துலிங்கம் வார்த்தைகளை மட்டுமே நம்புவதில்லை. சின்னச்சின்ன காட்சிகளைக் கூர்மையாகத் தீட்டிக் கதை நடுவில் செருகிவிடுகிறார். விழுக்காட்டில், இலையான் புழு எடுக்கும் காட்சி, துரியில் காருக்குள் துரியோதனன் தவிக்கும் காட்சி, வம்சவிருத்தியில், மிர்ஸாவை இப்ராஹ’ம் சுட்டுக் கொல்லும் காட்சி எல்லாவற்றிலும் தனியொரு சிறுகதை மட்டுமல்ல, கொஞ்சம் டிராமாவும் இருக்கிறது.

இலங்கை எழுத்துக்களின் வாசனையை நான் கொஞ்சம் லேசாக அறிவேன் என்ற போதிலும், இந்த நூலாசிரியரின் பிற நூல்களைப் புதினங்களை இதற்கு முன்பு நான் படித்ததில்லை, அவரைச் சந்தித்ததோ, அவரது பொழிவு எதனையும் கேட்டதோகூட இல்லை. அவரது பெயரைத் தவிர வேறெதுவும் அறியேன். ஆனால், நூலாசிரியரின் படிப்பிற்கும், இலக்கிய ரசனைக்கும் மனித நேசத்திற்கும் கூட இந்தப் புத்தகம் சாட்சியளிக்கிறது. ஒரு பிரமிப்போடு இந்தப் புத்தகத்தைப் படித்தேன். நீங்களும் அப்படித்தான் படிக்கப் போகிறீர்கள்.

சென்னை -41 மாலன் 18 மார்ச் 96