என்னுரை
'ஒஸ்கார் வொயில்டு' என்ற சிறந்த ஆங்கில அறிஞர் ஒரு நாள் முழுக்க எழுத்து வேலைகளில் மும்முரமாக இருந்தார். அவர் மதிய உணவு அருந்துவதற்காக வந்தபோது அவருடைய நண்பர் ஒருவர் 'நீங்கள் நிறைய எழுதி முடித்து விட்டீர்கள் போலிருக்கிறதே?' என்றார். அதற்கு ஓஸ்கார் வொயில்டு 'ஆமாம், ஒரு காமா போட்டேன்' என்று கூறினாராம். அன்று இரவு மறுபடியும் அதே நண்பர் அவரிடம் 'இரவு வந்தது கூடத் தெரியாமல் விழுந்து விழுந்து எழுதிக் கொண்டிருந்தீரே! என்ன? இன்னொரு காமா போட்டீரா?' என்று கிண்டலாகக் கேட்டார். அதற்கு ஓஸ்கார் வொயில்டு, மூச்சுவிடும்நேரம் கூட எடுக்காமல், 'இல்லை, ஏற்கனவே போட்ட காமாவை மீண்டும் அடித்துவிட்டேன்' என்று கூறினாராம்.
இந்த நிலைதான் அநேகமான எழுத்தாளர்களுக்கு. ஆனால் என்னுடைய நிலைமையோ இன்னும் மோசமானது. நான் தமிழ் பண்டிதன் அல்லன். என் அநுபவங்களையும், கருத்துக்களையும் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளவேண்டும் என்ற அடக்க முடியாத அவாவிலே புறப்பட்ட சாதாரணன். ஒவ்வொரு வார்த்தையாக பொறுக்கி எடுத்து அவற்றை நேர்த்தியாகக் கோத்து, நகாசு வேலை செய்து சிறுகதை வடிவங்களாக தருவதற்க பல மாதங்களாகிவிட்டன. இந்தக் கருக்கள் வடிவமின்றி என் மனதிலே தூங்கிக் கொண்டிருந்த காலமோ மிகப் பெரியது. ஆனால் அவற்றை எழுத்து வடிவத்திலே கொண்டு வருவதற்குத்தான் இவ்வளவு ஆக்கினைப் படவேண்டி வந்துவிட்டது.
முப்பது வருட அஞ்ஞாதவாசத்திற்குப் பிறகு திரும்பவும் இலக்கியம் படைக்க வந்தது ஏன்? இதுதான் பலருடைய கேள்வி? தமிழ்கூறும் நல்லுலகம் நட்டப்பட்டு போகாமல் மிகவும் ஆரோக்கியமாகத்தானே இருக்கிறது. அப்படியிருக்க, திடீரென்று எழுத வேண்டும் என்ற உத்வேகம் பிறந்தது எப்போது? சம்பந்தரைப்போல ஞானப்பால் குடித்து பிறக்கவில்லை என்பது நிச்சயம்; காளமேகப் கவியைப்போல எச்சில் தம்பலத்தை சுவைத்தபின் எழுந்த உற்சாகத்தில் எழுத்தாணியை எடுக்கவில்லையென்பதும் நிகம். பிரம்மாவே வந்து வால்மீகிக்கு சந்தம் எடுத்துக் கொடுத்தது போன்ற பாக்கியமும் எனக்கு கிட்டவில்லை; எனக்குக் கிடைத்ததெல்லாம் ஒரு நண்பருடைய முழங்கை இடிதான்.
தமிழ்நாட்டில் ஓர் இசைவிழாக் கச்சேரியை உன்னிப்பாக கேட்டுக் கொண்டிருந்தபோது பக்கத்திலிருந்த நண்பர் சள்ளையிலே ஒரு இடி இடித்து இதற்கு கால்கோள் விழா நாட்டினார். அவர் உசுப்பிவிட்டதைத் தொடர்ந்து மற்ற நண்பர்கள் கொடுத்த ஊக்கமும் உசாரும்தான் இதற்குக் காரணம்.
நான் சிறுவனாக இருந்தபோது அம்ம எனக்கு அடிக்கடி கதைகள் சொல்லுவார். அந்தக் கதைகளை 'கதையும் முடிந்தது, கத்தரிக்காயும் காய்த்தது' என்று சொல்லி முடிப்பார்கள். கதைக்கும், கத்தரிக்காய்க்கும் ஏதோ தொடர்பு இருப்பதாக நான் பல நாட்களாக கற்பனை செய்து வைத்திருந்தேன். கத்தரிக்காய் காய்த்தால் காய்த்துவிட்டு போகட்டும். ஆனால் என் கதைகள் 'முடிவது' எனக்கு சம்மதமில்லை. அவைகள் 'நிறைவு பெறுவதையே' நான் விரும்புகிறேன். தமிழ் வாசகர்களின் கற்பனை விலாசத்திலும், மதியூகத்திலும் எனக்கு நிறைய நம்பிக்கை இருக்கிறது. எனவே என் கதைகளின் கடைசி வரிகளைப் படித்த வாசகர்களின் கற்பனை ஓட்டத்திலே அந்தக் கதைகள் பூர்த்தியடைவதையே நான் இச்சிக்கிறேன். அவைதான் சிறப்பான கதைகளென்றும் எண்ணுகிறேன்.
நான் அளப்பரிய மரியாதை வைத்திருக்கும் ஓர் எழுத்தாளர், அண்மையில் ஒரு பத்திரிகையில் ஒரு சிறுகதை எழுதியிருந்தார். கதை படிக்க மிகவும் ரசமாக இருந்தது. நகைச்சுவை இழையோடி சில இடங்களில் வாய்விட்டுச் சிரிக்கக்கூடத் தோன்றியது. ஆனால் கடைசி வாக்கியம் முடிந்தபோது கதையும் 'முடிந்துவிட்டது'. ஒரு நீண்ட விகடத்துணுக்கை படித்தது போலத்தான் எனக்கு இருந்தது. வெங்காயத்தை உரித்து, உரித்து கடைசியிலே ஒன்றுமே இல்லாமல் ஆகியதுபோல எனக்கு பெரும் ஏமாற்றமாகப் போய்விட்டது. இவ்வளவுக்கும், அந்த கதையானது சிறுகதை இலக்கணத்துக்குள் மிகவும் கச்சிதமாகப் பொருந்தித்தான் இருந்தது.
இப்பவெல்லாம் அடிக்கடி அழகுப் போட்டிகள் நடப்பதைப் பார்க்கிறோம். உலக அழகுப் போட்டிகளெல்லாம் Beauty with a Purpose என்ற முறையில் நடைபெறுகின்றன. 'அழகுக்கு ஒரு குறிக்கோள்' என்று சொல்லிக் கொண்டு இந்த அழகிகள் பல்வேறு நாடுகளுக்கும் பயணம் செய்து மனிதவளத்தை மேம்படுத்தும் நற்பணிகளில் ஈடுபடுகிறார்கள். முன்புபோல் உடல் அழகையோ, முக லட்சணத்தையோ ஆராதித்த சகாப்தம் போய் திருவாதபூரரடிகள் போற்றிய 'சித்தம் அழகியவரை' உலக அழகியராக தேர்ந்தெடுக்கும் காலம் வந்துவிட்டது.
'இதுபோல நாங்கள் எழுதும் கதைகளிலும் ஏன் ஒரு 'குறிக்கோள்' இருக்கக்கூடாது? அது என்ன அப்படி ஒர்அபவித்திரமான வார்த்தையா? இப்படித்தான் ஒர் எண்ணம் எனக்கு அடிக்கடி வரலாயிற்று.
இதன் காரணமாகத்தான் இந்தத் தொகுதியில் நீங்கள் படிக்கும் கதைகள் சிறிது மாறுபட்டவையாக இருப்பதைக் காண்பீர்கள், இந்தியா, இலங்கை, அமெரிக்க, கனடா ஆகிய நாடுகள் எல்லாம் கதைக் களங்களாக அமைக்கப்பட்டு இருக்கின்றன. கதை மாந்தர்களும் அப்படியே. கதையின் கருப்பொருளும் சிறிது வித்தியாசமானதாகவே இருக்கும். நகைச் சுவைக்காகவோ, வாசகர்களை கிச்சுகிச்சுமூட்டவோ எழுதப்பட்டவையல்ல இந்தக் கதைகள். பொழுதுபோக்கிற்காக எத்தனையோ கதைகள் வெளிவருகின்றனவே! அந்தக் கணக்கில் இவை தவறியும் சேர்ந்துவிடக் கூடாது என்ற எச்சரிக்கையில் படைக்கப்பட்டவை.
அமெரிக்காவில் ஒரு தலைசிறந்த நாவிதரிடம் ஒருவர் தலை அலங்காரம் செய்து கொள்ளப் போனாராம். அந்த நாவிதர் ஐந்து நிமிடங்களிலேயே காரியத்தை முடித்து விட்டு நூறு டொலர் கேட்டாராம். திடுக்கிட்டுப் போன அந்த வாடிக்கையாளர் 'என்ன இது? நாலு முடியை வெட்டியதற்கு நூறு டொலரா?' என்று கேட்டார். அதற்கு அந்த நாவிதர் 'ஐயா, இந்த சன்மானம் வெட்டிய தலைமுடியின் அளவை வைத்து தீர்மானிக்கப்படவில்லை; வெட்டாமல் தலையிலே விட்டுவைத்த சிகையை வைத்தல்லவோ நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது' என்று கூறினாராம்.
நான் இந்தக் கதைகளை அந்தக் கண்ணோட்டத்தில்தான் பார்க்கிறேன். சொல்ல வந்த விஷயத்தை தெம்பாகப் பிடித்துக்கொண்டு மீதியைத் தயவு தாட்சண்யம் இன்றி நீக்கிவிட்டிருக்கிறேன். இதன் காரணமாக, என் மனதிற்கு வெகு பிரியமாயும், இதயத்திற்கு கிட்டவுமுள்ள 'உயிர் நேயம், பிரபஞ்சநேயம்' ஆகியவை இந்தக் கதைகளில் கொஞ்சம் தூக்கலாக இருந்தால் அதற்கு என் பேராசை தான் காரணம். வாசகர்களுடைய மன்னிப்பை அச்சாரமாக இப்பவே கேட்டுக் கொள்கிறேன்.
சமீபத்தில் ஒரு தமிழ்நாட்டு நண்பருடன் கதைத்த போது அவர் 'உங்கள் கதைகளை படித்தேன்; மிகவும் நன்றாக இருந்தன. யாழ்ப்பாணத் தமிழ் தொல்லை கொடுக்கவில்லை' என்று கூறினார். எனக்கு சிரிப்பாக வந்தது. யாழ்ப்பாணத் தமிழ் இப்படி தமிழ்நாட்டு வாசகர்களை 'ஆட்டி வைக்கும்' விஷயம் எனக்கு அன்றுவரை தெரியாது. இந்தத் தொகுப்பில் வரும் கதைக்களங்கள் அநேகமாக அந்நிய நாடுகளில் ஊன்றியிருந்தாலும், 'கதை சொல்லி' மாத்திரம் ஒரு யாழ்ப்பாணத்தவன் என்றபடியால் இடைக்கிடை ஓர் உண்மைத் தன்மையை நிலைநாட்ட 'அந்தத் தமிழ்' தலைகாட்டும். கதையில் உண்மைக்கும், அழகுக்கும் சத்தியத்துக்கும் அவை உதவும் என்றே நம்புகிறேன்.
சிறுகதையின் உருவம் மாறிக்கொண்டே வருகிறது. அதில் சந்தேகமே இல்லை. ஆனால் 'இதுதான் சிறுகதையின் வடிவம்' என்று யாரால்தான் திட்டவட்டமாகக் கூற முடியும்? ஒரு 'கதைசொல்லி' தான் சொல்லவந்த கதையை வாசகனுக்கு நேரடியாகப் போய்ச் சேர வேண்டிய முறையில் சொல்ல வேண்டும். சொல்ல வந்த விஷயத்தைப் பொறுத்து வடிவம் சில வேளைகளில் சிறிது மாறுபடலாம். கதைப்பொருள்தான் முக்கியம். உருவத்துக்காக வில்லுக்கத்தியை மடக்குவதுபோல கதையை மடித்துப் போட்டுவிட்டால் கதையின் யோக்கியத் தன்மை கெட்டு விடும்.
இது பற்றி நான் மிகவும் மதித்து போற்றும் இந்தியாவின் தலைசிறந்த எழுத்தாளர்களுள் ஒருவரான திரு. கி.ராஜநாராயணன் என்ன கூறுகிறார் என்று பார்ப்போம். "ஒரு சம்பவத்தை (நடப்பை) அப்படியே சொகமாக வர்ணித்து முடிக்கிறீர்கள். விமர்சகர்கள் இதைச் சிறுகதை வடிவம் இல்லை என்று சொல்வார்கள். 'இப்படியும் எழுதலாம்' என்பதே என் கருத்து. சிறுகதை வடிவம் உடைந்து மறுவடிவம் எடுப்பது என்பது இப்படித்தான்; புதுக்கவிதைபோல. மரத்திலிருந்து வித்தியாசமான ஒரு கிளையை வெட்டி எடுத்து முன்னும் பின்னும் தறித்துவிட்டு அதை வரவேற்பு அறையில் நிறுத்தி வைக்கிறோம். அதில் செதுக்கல் இல்லை; சிறப்மில்லை; என்றாலும் அதில் ஒரு அபூர்வ வடிவம் தெரியும்; அதுபோல."
பூக்களைத் தொடுத்துக் கொண்டு நிற்கும் நார்போல ஓர் ஒருமைத் தன்மையுடன் கதையிருக்க வேண்டும். நானூறு வருடங்கள் நடந்த ஒரு கதையை நாலு வரியில் சொல்லலாம்; நாலு நிமிடங்களில் நேர்ந்த ஒரு சம்பவத்தை நாற்பது பக்க கதையாகவும் விரிக்கலாம். ஆனால் கதையினுடைய 'தொணி' மாத்திரம் மாறாமல் கதையை ஊடுருவி நிற்கவேண்டும். இப்படித்தான் நான் அர்த்தம் பண்ணிக் கொண்டிருக்கிறேன்.
காகித விரயத்தில் எனக்கு உவப்பில்லை. ஒரு காகிதத்தை கசக்கி எறியும்போது ஒரு மரத்தின் இலை கண்ர் வடிக்கிறது என்று நிச்சயமாக நம்புகிறவன் நான். இந்தத் தாள்களில் அச்சாகி வரும் கதைகளால் ஒரு வித பயனுமில்லை என்றால் இந்தக் காகிதங்களைத் தருவதற்காக அழிக்கப்பட்ட மரங்களுக்காக நான் கண்ர் வடிக்கிறேன். ஓ மரங்களே! என்னை மன்னிப்பீர்களாக!
இந்தப் புத்தகத்தை வெளிக்கொண்டு வருவதற்க உறுதுணையாக இருந்த அன்புள்ளங்களை நான் மறக்க முடியாது. தலைக்குமேல் இருந்த வேலைத் தொல்லைகளுக்கிடையிலும் இந்தத் தொகுப்பில் இடம் பெற்ற கதைகள் ஒவ்வொன்றையும் படித்து அருமையான முறையில் முன்னுரை வழங்கிய பெருமதிப்பிற்குரிய திரு.மாலன் அவர்களக்கும், நண்பனாய், வழிகாட்டியாய் என்னை உற்சாகப்படுத்தி, ஆலோசனைகள் தந்து இந்தப் புத்தகத்தை சிறப்பாக வெளியிடுவதற்க தூண்டுகோளாக இருந்த என் நெடுநாளைய நண்பர் எஸ் பொன்னுத்துரைக்கும், தக்க படங்கள் வரைந்துதவிய ஓவியர் மருதுவுக்கம், என் பளுவைத் தன் பளுபோல் சுமந்த நண்பர் வி.சுந்தரலிங்கத்துக்கும், தன்னலம் கருதாது ஓயாது உழைத்துதவிய கவிஞர் எஸ்.வைதீஸ்வரனுக்கும், அச்சிடும் வேலைகளை அககறையுடன் கவனித்த இளம்பிறை எம்.ஏ.ரஹ்மானுக்கும், புத்தகத்தை செம்மையாக பதிப்பித்த மித்ர நிறுவனத்தாருக்கும் எனது மனமார்ந்த நன்றி.
அ.முத்துலிங்கம் 19ம் நாள், தை மாதம், 1996.
House no.32 street 4 F 8/3. Islamabad PAKISTAN.

