பதிப்பரை
'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்பது சங்க காலத்து செந்நாப் புலவன் ஒருவன் கற்பித்த இனிய உலகம். அந்த உலகளாவிய மனித நேயம் போற்றப்பட்ட சங்கச் சான்றோர்ன் ஈழத்து பூதன் தேவனார். இவர் ஈழத் தமிழரின் தாய்மொழி நேசிப்பை நாட்டினார் என ஈழத் தமிழர் கொண்டாடுவர். இது வரலாறல்ல; ஐதிகமே என்று சொல்வாரும் உளர். ஆனால், சென்ற நூற்றாண்டில் ஆறுமுகன் என்னும் இளைஞன் தமிழ்நாடு சென்றான். தனது சொல் வன்மையினால் 'நாவலர்' என்று மகிமை பெற்றார். அவருடைய தமிழ் வசன ஆளுமையைத் தமிழ்நாடு ஏற்றது. இந்த நூற்றாண்டில் விபுலாந்த அடிகளாரை, அண்ணாமலைப் பல்கலைக் கழகம் தனது முதலாவது தமிழ் பேராசிரியராய் சிறப்பித்தது, ஆஹா, தமிழகத்திற்கம் ஈழத்துக்கும் இடையில், எத்தகைய நாகரிகமான புரிந்துணர்வும், பரஸ்பர வித்துவ அங்கீகரிப்பும் நிகழ்ந்தது!
பிறகு, சமன்பாடுகள் மாறின. தமிழகத்திலே, வியாபாரத்திலே முதன்மை பெற்ற சஞ்சிகைகள் சில, தமிழ் இலக்கியப் படைப்புத் தங்களுடைய ஏகபோகம் என்று சத்தம் போட்டன. இலங்கை அரசியலில் 'காலாள்கள்' போல நகர்த்தப்பட்ட ஈழத்தமிழர் சிலர், 'தமிழகச் சஞ்சிகைகளுக்குத் தடை விதியுங்கள்' என்ற கோஷங்கள் வைத்து ஆர்ப்பரித்தனர். இரண்டு தவறுகள் இணைத்து ஒரு சரியாகி விடுமா? இல்லை என்பது தான் உண்மை.
இப்பொழுது மீண்டும் சமன்பாடுகள் மாறியுள்ளன. தமிழ்நாடு - ஈழம் ஆகிய இரு நாடுகளின் எல்லைகளுக்கு அப்பாலும், தமிழ் இலக்கியப் படைப்பும் பகிர்வும் நடைபெறும் நிதர்சனம் விடிந்துள்ளது. உலகளாவிய இந்தத் தமிழ் இலக்கிய வியாபித்தலினால், தமிழே செழிப்பும் சேமமும் பெறும் என்கிற இதம் தமிழ் நாட்டில் கனிந்துள்ளது. இத்தகைய ஒரு சகாயச் சூழலிலே, புலம் பெயர்ந்த ஈழத் தமிழருடைய இலக்கியப் படைப்புகள் உரிய வகையிலே தமிழ் நாட்டில் பிரசித்தமாகுதல் வேண்டும். அவ்வாறே தமிழ் நாட்டின் ஆதர்சமான படைப்புகள் புலம் பெயர்ந்த ஈழத்தமிழ் வாசகர்களைச் சென்றடைதல் வேண்டும். இந்தப் பணியினை முன்னெடுத்துச் செல்வதையும் மித்ர வெளியீடு தனது இலக்கிய ஊழியமாக வரித்துள்ளது.
'வம்ச விருத்தி'யில் உள்ள கதைகள் பல, தமிழுக்குப் புதிது. இதுவரை தமிழ் எழுத்தாளர்கள் அறிமுகப்படுத்தாத புதிய கதைக் களங்களையும், கதைப் பொருளுக்கான புதிய அக்கறைகளையும் இத்தொகுதியின் மூலம் தமிழ் இலக்கியத்திற்கு அ. முத்துலிங்கம் அறிமுகப்படுத்தியுள்ளார். தமிழ்ச் சுவைஞர்கள் மட்டுமன்றி, தமிழ்க்கதைப் படைப்பாளிகளும் 'வம்சவிருத்தி' யினாலேயே பயனடைவார்களென்று நம்புகின்றேன்.
டாக்டர் பொன். அநுர

