--- நன்றி ---
எத்தனை முறை ஜப்பானைப் பார்த்தாலும் எனக்குத் திருப்தி ஏற்படுவதில்லை. அந்த நாட்டின் வசீகரம் என்னைத் திரும்பத் திரும்ப அழைக்கிறது!
'வடம் பிடிக்க வாங்க தொடர் எழுதுமுன் அந்நாட்டை இன்னொரு முறை போய்ப் பார்த்துவிட்டு வந்தேன். புறப்படு முன் தமிழக முதல்வர் கலைஞர் அவர்களைச் சந்தித்து திருவாரூர்த் தேர் போல் ஒன்றைச் செய்து, அதில் வள்ளுவர் சிலையை வைத்து, டோக்கியோ நகரில் விடப் போகிறேன். கற்பனை யில்தான் 'வடம் பிடிக்க வாங்க' என்பது தலைப்பு. இதற்காக இப்போது ஒரு முறை ஜப்பான் போய் வரப் போகிறேன்" என்றேன்.
கலைஞர் சிரித்தார். ஏதாவது ஒரு சாக்கு கிடைத்தால் போதும்; நான் ஜப்பான் போய் வந்துவிடுவேன் என்பது அவருக்குத் தெரியும்!
”சரி கதைக்கு என்ன தலைப்பு சொன்னீர்கள்? வடம் பிடிக்க வாங்க...' என்றா? தேரோட்டம் ஜப்பானில் நடக்கிறது என்று தெரிய வேண்டாமா? ஆகவே, 'வடம் பிடிக்க வாங்க. ஜப்பானுக்கு' என்று தலைப்பைக் கொஞ்சம் நீட்டி விடுங்கள்' என்றார். அவர் யோசனைப்படியே செய்துவிட்டேன்.
கலைஞர் அத்தோடு நின்றுவிடவில்லை. ஜப்பானுக்கே நேரில் வந்து (கற்பனையில்தான்) 'வடம் பிடித்து ' விழாவைத் தொடங்கியும் வைத்தார்.
அந்தத் தொடக்க விழாவில் தாங்கள் என்ன பேசுவீர்களோ அதை எழுதித் தர வேண்டும்' என்று கலைஞரிடம் கேட்டுக் கொண்டேன்.
அன்றிரவே அக்கட்டுரைத் தொடர் வந்திருந்த சாவி இதழ்கள் அனைத்தையும் ஒரே மூச்சில் படித்துவிட்டு என்னைப் போனில் அழைத்துப் பாராட்டியதோடு தம் சொற்பொழிவையும் எழுதி அனுப்பி வைத்துவிட்டார்!
மறுநாள் கலைஞரைக் கோட்டையில் சந்தித்தேன். "இவ்வளவு பிரச்னைகளுக்கும் இடையறா வேலைகளுக்கும் ஈடு கொடுத்து ஓய்வு ஒழிவு இல்லாமல் உழைத்துக் கொண்டிருக்கும் தங்களால் எப்படித்தான் இதையும் எழுதித்தர முடிந்ததோ! இத்தனைக்கும் இது உங்களுடைய வேலை அல்லவே! எனக்குச் செய்யும் உதவி அவ்லவா?" என்றேன்.
"இல்லை, இல்லை இது என்னுடைய வேலைதான்!" என்று அழுத்தமாகச் சொன்னார்.
என் கட்டுரைச் சிப்பிக்குள் கலைஞரின் சொற்பொழிவு எனும் முத்து கடந்த இதழில் ஒளிவீசிப் பிரகாசித்ததை வாசகர்கள் பார்த்திருப்பார்கள். அதில் அவர் குறிப்பிட்டுள்ள கருவாட்டுக் கதை நகைச்சுவையோடு மணம் வீசி மகிழ்விக்கிறது! அவருக்கு என் இதயபூர்வமான நன்றி.
இந்தியன் வங்கி சேர்மன் திரு கோபாலகிருஷ்ணன் அவர்கள் இந்த விழாவைச் சிறப்பாக நடத்தி வைக்கத் தேவையான அத்தனை உதவிகளையும் செய்ததோடு ஜப்பானுக்கே வந்திருந்து தம்முடைய முழு ஒத்துழைப்பையும் நல்கி இந்தத் தேரோட்ட விழாவைச் சிறப்பாகவும் வெற்றிகரமாகவும் நடத்திக் கொடுத் துள்ளார். அவருக்கும் என் நன்றி.
கதைக்கு ஏற்ப, உயிரோட்டமான கதாபாத்திரங்களை உருவகப்படுத்தி வாசகர்களை மகிழ்விப்பதில் ஓவியர் கோபுலுவை யாரும் மிஞ்சிவிட முடியாது. இந்தக் கதையில் பங்கு பெற்றுள்ள இந்தியன் வங்கி கோபாலகிருஷ்ணன், விழா வேந்தன், நன்னன், மனோரமா, புள்ளி சுப்புடு ஆகியவர்களை கோபுலு எவ்வளவு சிறப்பாக ஜொலிக்க வைத்திருக்கிறார் என்பதை நான் சொல்லத் தேவையில்லை. அவருக்கும் என் நன்றி.
- சாவி

