ஒர் அலிமகளின் கடிதம்
அன்பிற்குரிய அப்பா சு. சமுத்திரம் அவர்கட்கு,
வணக்கத்துடன் மகளாகிய Priya (மும்பை) எழுதும் மடல். தங்களின் நலத்திற்கும், சேவைகளின் உயர்விற்கும் எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டிக் கொள்கிறேன்.
தங்களை "அப்பா" என்றழைப்பதில் நான் பெருமிதம் அடைகிறேன். தங்களின் "வாடாமல்லி” நாவலில் “சுயம்பு" கதாப்பாத்திரம் மூலம் எங்களின் உணர்வுகளை மிக மிகத் துல்லியமாக எடுத்துக்காட்டி விட்டீர்கள். இந்த ஒடுக்கப்பட்ட சமூகத்திற்கு தாங்கள் செய்த தொண்டிற்கு ஒட்டு மொத்த அலி சமுதாயத்தின் சார்பாக தங்களுக்கு தலைவணங்கி, எங்கள் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். அப்பா ! இந்த நாவலை வெளியிட்டதற்கும், இந்த எளியவளின் வேண்டுகோளை ஏற்று, இந்நாவல் அனுப்பியமைக்காகவும் எனது இதயப்பூர்வமான நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அப்பா! சுயம்புவின் பாத்திரம் எனது வாழ்க்கையைப் பிரதி பலித்தது என்றால், அது மிகையில்லை. இந்த "சுயம்பு”ப் பாத்திரத்தினை வேறு யாரும் இவ்வாறு உணர்வுப் பூர்வமாக வடித்திருக்க இயலாது. மும்பை மண்ணில் உள்ள அலிகளின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 1 இலட்சத்து 60 ஆயிரம் ஆகும். இது மும்பை மக்கள் தொகையில் 15 சதவீதத்திற்கும் அதிகம் ஆகும். ஆனால் இவர்கட்கு என்று, தனிப்பட்ட குறியீடுகளோ, வேலை வாய்ப்புகளோ, சட்ட அங்கீகாரமோ, குறிப்பாக மரியாதை என்று எதுவும் இல்லை. இதனல் விபச்சாரம், பிச்சை, நடனம் என்ற இவற்றில் மட்டுமே இவர்களால் ஈடுபட முடிகின்றது.
இதனை போக்க துணிந்து, இரண்டு ஆண்டுகள் பல துயரங்களை எதிர்கொண்டு போராடியதன் விளைவாய் உருவானதுதான் 'DAI Welfare Society" என்ற அமைப்பு. இது முழுகக முழுக்க அலிகளை கொண்டே, அலிகளுக்காக, அலிகளே உருவாக்கிய அமைப்பு ஆகும். இதில் தற்போது, "Mumbai District Aids Control Society" உடன் இணைந்து ஒரு Project செய்வதுடன், சில தனியார் வேலை வாய்ப்புகளையும் ஏற்படுத்தி தந்து உள்ளோம். இன்னும் Education சம்பந்தமாக ஒரு Projectடை Try செய்து வருகிறோம்.
ஆயினும், என் கனவு, இலட்சியம் எல்லாம் இதுதான். என் வாழ்நாள் வரையிலும் அலிகளுக்காகப் பாடுபட்டு சமூகத்தில் அவர்களுக்கு ஓர் இடத்தைப் பெற்றுத்தர வேண்டும் என்பதே. இதற்கு முதலில் அலிகளுக்கும், மக்களுக்கும் இடையே உள்ள திரை விலகி அவர்கட்குள் ஒரு புரிந்து கொள்ளுதலை ஏற்படுத்த வேண்டும். இதற்கு அலிகளைப்பற்றிய ஓர் தெளிவு மக்களுக்கு வரவேண்டும். இதனை பத்திரிகை, சினிமா, தொலைக்காட்சி, போன்ற சாதனங்களே செய்ய இயலும். இதற்காக எனது முதல் முயற்சியாக அலிகள் பற்றிய ஒர் முழுமையான ஆய்வு நூலை (மருத்துவம், மதங்கள், வரலாறு, இலக்கியம், புராண இதிகாசம் மற்றும் இன்றைய அலிகளின் உண்மையான வாழ்வு) எழுதி வருகிறேன். இந்நூல் அலிகளின் பழம்பெருமையைப் உலகம் அறியச் செய்வதுடன், மக்களுக்கும் அலிகளுக்கும் இடையே ஓர் தொடர்பை ஏற்படுத்தும். இதற்காக என் இறுதிநாள் வரை, பாடுபடத் தயாராய் உள்ளேன். காரணம் அலி என்ற ஒரே காரணத்திற்காக என் தாய்த் தமிழகத்தைவிட்டு மட்டுமில்லாமல், என் பெற்றோர், உடன் பிறந்தோரைவிட்டு மும்பை மண்ணில் அநாதையாய் வாழும் என்னைப் போல் நிலை வருங்கால அலிகளுக்கு ஏற்படக்கூடாது.
அப்பா! ஒதுக்கப்பட்ட சமூகத்தில் இருந்து புறப்பட்ட முதல் வித்து நான். என்னை வழிநடத்தி, என் முயற்சிகள் வெற்றியடைய உங்களைப் போன்ற நல்ல உள்ளங்களின் உதவி என்றுமே தேவை. என் நூல் முழுமைப்பெற இதிகாச, இலக்கிய குறிப்புகள் தேவைப்படுகின்றது. அவைகள் எங்கு பெறலாம் என்றும், எனது மன உணர்வுகளை எவ்வாறு தொலைக்காட்சி மூலம் (தமிழ்நாட்டில்) வெளிப்படுத்தலாம் என்றும் எனக்கு வழிகாட்ட வேண்டுகிறேன். மேலும் தமிழ்நாட்டில் உள்ள "அரவாணிகள் சங்கத்தி”ன் முகவரியும், தாங்கள் நாவலில் குறிப்பிட்ட அறக்கட்டளைப் பற்றியும் விளக்க வேண்டுகிறேன்.
என் முயற்சிகள் வெற்றியடைய அப்பா, தங்களின் மேலான ஆசியும், ஆதரவும் தேவை. தங்களின் மேலானப் பதிலுரைக்காக ஆவலுடன் காத்திருப்பேன்.
நன்றி!
என்றென்றும் அன்புடன்,
S. Priya.
My Address:
S. Priya C/O Mr. Michel Antony,
No. 633, Annai Arts, Ambedkar Chawl, Kumbhar Wada Road,
Dharavi, Mumbai - 400 017.

