முத்துக்குளிப்பு

ஒரு படைப்பாளி, தன்னுடைய நூலுக்கு முன்னுரை எழுதிக் கொள்வதைவிட, பிற படைப்பாளிகளின் நூலுக்கு முன்னுரை எழுதிக் கொடுப்பதில் உள்ள சுதந்திரமும், செளகரியமும் அதிகமானது.

தோழர் சமுத்திரம் அவர்கள், தனது சிறுகதைத் தொகுப்புக்கு முன்னுரை ஒன்று எழுதிக்கொடுக்கும்படி கேட்டதற்கு சற்றே தயக்கம் ஏற்பட்டது. அவர் கேட்பது சிறுகதைத் தொகுப்புக்கு. நான் சிறுகதையில் ஏதும் சாதனை புரிந்தவனில்லை. அடைமழைக்கு ஆட்டுக்குடிசையில் தங்கியது போன்ற அனுபவந்தான் என்னுடையது. இருந்தாலும், என்னால் மறுக்க முடியவில்லை.

வளரும் ஒரு படைப்பாளி, சாதனை புரிந்த படைப்பாளியிடம், தன்னுடைய நூலுக்கு முன்னுரை கேட்பது, அவருடைய வாக்குமூலத்தின் மூலம், தனக்கொரு அங்கீகார ஆறுதல் வார்த்தைக்காக வேண்டியிருக்கும். இங்கு, அது தலைகீழாகச் சம்பவித்துள்ளது. பரிசுகளும், பாராட்டுக்களும், புகழும் கொண்ட படைப்பாளி, ஒரு பட்டிக்காட்டுப் படைப்பாளிக்கு, இப்படியொரு வாய்ப்பை நல்கியிருப்பது, அவரது அகந்தையற்ற, உயர்ந்த உளப்பாங்கையே வெளிப்படுத்துவதாக, என்னால் உணரப்பட்டதால்தான், இதற்கான முன்னுரைக்கு நான் செவிமடுத்த காரணம்.

தத்துவார்த்தப் பின்னணி

சு. சமுத்திரத்தின் சிறுகதைகளுக்குள் செல்லும் முன், அது எழுப்பும் பொறுப்பு வாய்ந்த சமூக உணர்வுகளைப் பற்றி சுருக்கமாகப் பார்த்துவிட்டு நுழைவது உதவியாக இருக்குமெனக் கருதுகிறேன்.

சமுதாயப் போராட்டம் என்பதே, அதொரு தத்துவார்த்தப் போராட்டத்துடன் சம்பந்தப்பட்டதுதான். நிலப் பிரபுத்துவ சமுதாயத்தினை எதிர்த்த முதலாளித்துவத்துக்கு, ஒருத்துவக் கண்ணோட்டம் இருந்தது. அதுபோல, முதலாளித்துவத்தை எதிர்த்த சோசலிச மாறுதலுக்கான போராட்டத்திற்கும், ஒரு தத்துவப் பின்னணி இருக்கிறது. ஒவ்வொரு காலக் கட்டத்தின் சமுதாய மாற்றத்துக்கான தத்துவார்த்தப் போராட்டங்களூடே, இலக்கியக் கோட்பாடுகளும் பின்னிப்பிணைந்து விடுகின்றன. காலத்தின் ஊதுகுழலல்லவா இலக்கியம் என்பது?

சமுதாயத்துக்கும், மனிதனுக்கும் இடையே உள்ள முரண்பாடுகள், மனிதனுக்கும், மனிதனுக்குமிடையே உள்ள முரண்பாடுகள், தற்செயலானதல்ல. உடைமைக்கும் உழைப்புக்குமுள்ள பந்தங்களும், சொந்தங்களும் பிரிக்கப்பட்டு, துண்டிக்கப்பட்டுப் போன நிலையிலிருந்து இந்த முரண்பாடுகளின் மோதல்கள், காலம் நெடுகிலும் முணுப்போடோ, முறைப்போடோ, முழக்கங்களோடோ, அல்லது எதிர் வினைச் செயல்பாடுகளோடோ வளர்ந்துகொண்டே வந்து கொண்டிருக்கின்றன. இப்படி வளர்ந்து கொண்டு வரும் சமூக முரண்பாடுகளைப் புரிந்து கொள்ளாதவர்கள், புரிந்து கொண்டாலும், இதனால் விளையும் அவலங்களைக் கண்டு எதிர்த்துப் போராடும் வல்லமையற்றுப் போன படைப்பாளி என்பவர்கள், தனிமைப்பட்டுச் சுதந்திர எழுத்தாளர்கள் என்று மார்தட்ட ஆரம்பித்து விடுகிறார்கள். சமூகத்தை விட்டுத் தனிமைப்பட்டோ , அல்லது மேம்பட்டோ எந்தப் படைப்பாளியும், அறிவாளியும் இருந்து விட முடியாது என்ற மெய்மையை, இவர்கள் காணத்தவறி விடுகிறார்கள்.

வேதாந்த வெத்து வேட்டுக்கள்

"தற்போதைய அவல நிலைக்கு மாற்றுக் கூறுவதற்கு நான் யார்? என் வேலை படைப்பது. அது என் ஆத்மசாந்திக்கு எனது மனதின் அரிப்பைத் தீர்த்துக் கொள்வதற்கு" என்று ஆரம்பித்து, அதிலும், அவன் சுகம் காணமுடியாமல், தன்னைத்தானே சமூகத்திலிருந்து சுருக்கிக் கொண்டு, இனிப்பேராடிப் பயனில்லை என்று மனக்குகையில் சுருண்டுபடுத்து, சுகம் காண ஆரம்பித்து விடுகிறான். ஒன்று, சகலமும் காமத்திலிருந்தே என்றோ, அல்லது மதம் கூறும் நல்மார்க்கத்தில் இருந்தே என்றோ, அல்லது தன்னைத்தானே உணர்வது என்பதிலிருந்தோ, கற்பனார்த்த உலகில் சஞ்சரிக்கிறான். இந்தப் படைப்பாளி என்கிறவன், கற்பனார்த்தவாதி ; நம்பிக்கையிழந்த நரம்புத்தளர்ச்சி நோயாளி தனக்கும் புரியாமல் - தன் இலக்கியப் படைப்பைப் படிக்கும் வாசகனுக்கும் புரிய வைக்க முடியாமல், சமுதாயத்தின் மீது பழியைப் போட்டு சமுதாயத்திற்கு மேலானவன் போல, வேதாந்தம் பேசி வெற்றுச்சடலமாய் வீழ்ந்துபடுகிறான்.

சமுதாயப் பிரச்சினைகளுக்கு, தனி மனித அறிவாளிகளால் தீர்வு கண்டுவிட முடியாது. உழைக்கும் சகலபகுதி மக்களின் நெறியும், குறிக்கோளும் கொண்டு ஒன்று திரட்டப்பட்ட மக்கள் பேரியக்கத்தால்தான், முடியும். இந்தப் பரிணாமப் போக்குகளைப் புரிந்தும், தெளிந்தும் செயல்படும் படைப்பாளியே இச்சமூக மாறுதலெனும் நிகழ்வுகளுக்கு நெம்புகோலாக விளங்கமுடியும். இத்தகையதோர் படைப்பாளியே, காலத்தால் பேசப்படக் கூடியவன்.

பொய்மான் மாரீசர்கள்

இதில், நாம் ஒரு கண்ணோட்டத்தைப் பார்க்க வேண்டும். வேர்பிடித்துப் போன சுயநல, சுரண்டல் வெறி கொண்ட சமூகத்தை மாற்ற வேண்டும் என்று கூறினாலே போதும். ஏதோ தங்களது குடலைப்பிடுங்கியெடுத்தது போல, ஒரு பகுதி படைப்பாளிகள் முகஞ்சுழிக்க ஆரம்பித்து விடுகிறார்கள். இப்படிப்பட்டவர்களில், மனிதாபிமானத்தைக் கொண்ட யதார்த்தவாதப் படைப்பாளிகளும் உண்டு. இவர்களுக்கு, சமூக வளர்ச்சியைப் பற்றி, விஞ்ஞான பூர்வக் கருத்துத் தெளிவு இருப்பதில்லை. இயற்கையாக நிகழும் இந்நிலைத்த சமூக அமைப்பை, யாரும் எதுவும் செய்துவிட முடியாது என்கிற பழமை வாதத்தில் ஈடுபட்டு, முற்றிலும் முடங்கிப் போய் விடுகிறார்கள். இன்னொரு சாராரோ, படைப்பாளி என்று மக்களால் கவர்ச்சிகரமாகப் பேசப்படவேண்டும். அதற்கேற்ப எழுதவேண்டும். இந்தச் சமூக மாறுதலுக்காக போராட்டத் சக்திகளை உற்சாகப்படுத்தி, ஊக்குவிக்கும் படைப்பாளிகளையும். அவர்கள் சார்ந்த தத்துவங்களையும் தரங்கெட்டுச் சாடி, சுரண்டல் அமைப்பை பாதுகாத்து நிற்கவேண்டும் என்று செயல்படக்கூடியவர்கள். இவர்களிடத்தில் நெறியோ, நேர்மையோ, பார்க்க முடியாது. சமூகத்தைப் பின்னுக்கிழுத்துச் செல்லும் மூடநம்பிக்கைகளுக்குத் தூபமிடுவது, சாதி, மத, இன தூசனைகளுக்கு வித்திடுவது, சமத்துவத்துக்கு தீராத் துரோகம் புரிவது போன்ற செயல்களை, நைந்துபோன அழுக்குகூடையில் நிரப்பி, சுகம்தேடும் எலும்புத்துண்டுகளாக, மூலதன மூட்டைகளுக்குச் சேவகம் புரியும் மாரீசர்கள் இவர்கள்.

இந்தச் சூழல், தமிழ் இலக்கியத்துக்கு நிரம்பவே பொருந்தும். மனிதநேயப் படைப்பாளிகளை, நாம் நேசிக்கவே வேண்டும். அதே வேளையில், அவர்களைப் பீடித்துள்ள் பழைய சிந்தாந்தப் பிடிப்பின் பீடைகளால் எழும் குழப்பங்களை, மென்மையாகவே விமர்சிக்கவும் வேண்டும். அவர்களை வென்றெடுப்பதும், நமது நோக்கமாக இருக்கவேண்டும். ஆனால் மாரீசர்களுடன் நாம் கடுமையாகச் சமர் புரிந்தேயாக வேண்டும்.

இன்று, எத்தனையோ வகை இலக்கியப்போக்குகள் சந்தைக்கடை விரித்துள்ளன. மனித வாழ்க்கைக்குச் சம்பந்தப்படாத எந்த இலக்கியப்போக்கும் நிலைக்கப் போவதில்லை. சந்தைக்கடை வியாபாரம் போல், கொஞ்ச நேரச் சலசலப்புத்தான். ஆனால் இவை விளைவிக்கும் தீங்குகளை, நாம் சாதாரணமாக எண்ணிவிடக்கூடாது.

தேசிய அவலம்

இன்று, நமது வாழ்க்கையில் என்றுமில்லாத அளவுக்கு சமூக நெருக்கடி உருவாகியுள்ளது. மனித வாழ்க்கை, துன்ப வேதனைகளில் மூழ்கியுள்ளது. வேலையின்மை, வறுமை, விபச்சாரம், திருட்டு, கொலை, பாலியல் பலாத்காரம் போன்ற சமூகக் கொடுமைகள் உருவாக்கிய தீமைகள் ஒருபக்கம்; மறுபக்கம், சுரண்டல், ஊழல், அதிகார வர்க்கக் கொடுங்கோன்மை, நாட்டின் வளத்தைக் கொள்ளையிடுதல் போன்ற ஆளும் வர்க்கத்தினரின் செயல்பாடுகள். இவற்றையெல்லாம் தேசிய அங்கீகாரம் போலவே நடத்திக்காட்ட விரும்புகிறார்கள்.

இந்தத் தேசிய அவலத்தை, முற்றாகத் துடைக்க வேண்டும் என்று கருத்தாலும், கரத்தாலும் உழைக்கும் மக்களின் வெகுண்ட போராட்டங்கள், அமைப்பு ரீதியாக கிளர்ந்தெழுவதையும், சுரண்டும் ஆளும் வர்க்கம் அடக்கி யொடுக்கிச் செயல்படுவதையும் , நாம் காண்கிறோம். இந்த அநியாய அக்கிரமங்களை, கலை இலக்கிய வடிவங்களில் படைத்தளிப்பது, சமூக நல்நோக்கு கொண்ட படைப்பாளிகளின் பங்காகிறது. நடப்பு யதார்த்த வாழ்வை, நேர்மையோடு சித்தரிப்பதும், அதற்குமேல், இந்தக் கேவலமான வாழ்வை மாற்றிக் காணத்துடிக்கும் போராட்ட சக்திகளை ஊக்குவிக்க முயலுவதும், இக்காலப் படைப்பாளியின் பணியாகிறது. ஆனால் போராட்ட குணாம்சங்களை தமிழில் இலக்கியப் படைப்பாக மாற்றுவது, இன்று பலவீனப்பட்டே இருக்கிறது. ஆனாலும் குணாம்சரீதியில் வலுவுடையதாகவே பிறப்பெடுத்திருக்கிறது.

இந்த வளர்ச்சிப் போக்கில், நான், தோழர் சமுத்திரம் அவர்களின் படைப்புகளையும், அவரையும் எப்படிப் பார்க்கிறேன் என்று உணர்த்த வேண்டும். இங்கே, நான் செய்யப்போவது ஆய்வல்ல. அதற்கான இடமுமல்ல. இச்சிறுகதைத் தொகுப்புக்குள், பொதுவாக நின்று, நான், அவரைப் பார்ப்பதும், வெளிப்படுத்துவதும் நிகழ வேண்டும்.

அகமும் புறமும்

சு. சமுத்திரத்தின் ஒட்டு மொத்த படைப்பின் மூலமும்-உள்ளும், புறமும், இவரை, நான் புரிந்த வகையிலும் , என்னுள் இவர் மிகச் சிறந்த மனிதாபிமானியாகவும், சமரசமற்ற போராளியாகவும் விசுவரூபம் எடுத்து நிற்கிறார். தோழர் சமுத்திரம் எழுத்தில் போலித்தனம் கிடையாது. பரிசுக்கும் பாராட்டுக்கும் எழுதும் பித்தலாட்டமும் கிடையாது. சமூகத்தின் குரூர அவலங்களை, நெருப்புப் பொறி சிதறுதல் போல் வெடிப்போடு சித்தரிப்பார். சில நேரங்களில், தன் இலக்கியக் கோட்பாடுகளின் எதிரிகளோடு வரிந்து கட்டிக்கொண்டு, தன் எழுத்தாயுதத்தால் சாடி, துவம்சம் செய்வார். அர்ச்சுனனின் வில்விசையில் அடங்கியிருக்கும் குறிக்கோள் முனை போல், இவரின் நோக்கும், நட்பு முறை பாராட்டப்படுவதில்லை. இந்த இடத்தில் எனக்கு உலகப் புகழ்வாய்ந்த எழுத்தாளர் மினகல் ஷோலகாங். கூறியதுதான் நினைவுக்கு வருகிறது.

"நமது இலக்கியத்தொழிலில், நமது சிந்தாந்தப் பணியில், கோட்பாடுகளும் உள்ளன. அவற்றில் இருந்து வழுவிச் செல்லும் செயலாக இருந்தால், உங்களது உயிருக்குயிரான நண்பருக்குங்கூட, அந்தச் செயலுக்காக மன்னிப்பு அளித்து விடக்கூடாது."

இது, நம் தோழர் சமுத்திரம் அவர்களுக்கு முற்றும் பொருந்தும். அவரின், இந்த நக்கீரக் குணாம்சம்தான் சமூகப் போராளிகளான எங்களைப் போன்றவர்களின் அன்புக்கும், பாசத்துக்கும், கனிவுக்கும் கொண்டுவந்து சேர்ந்திருக்கிறது.

யதார்த்தவாதப் பாரம்பரியம்

சிறுகதைத் துறை என்பது, புதுமைப்பித்தன் காலத்திலிருந்து, இன்று வரை, வடிவத்திலும், உள்ளடக்கத்திலும், எவ்வளவோ மாறிவந்திருக்கிறது. யதார்த்த வாதத்தைச் சிறுகதையில் துவக்கி வைத்த புதுமைப்பித்தன் வழியில் நின்று, விந்தன், சுரண்டும் வர்க்கத்தின் மீது கண்டனக்குரலோடு, சிறுகதைப் போக்கை சற்று நகர்த்தினார். அது, மேலும் பழம்பெரும் படைப்பாளிகளான தொ.மு.சி. ரகுநாதனாலும், கு. அழகிரிசாமியாலும், ஒரு கட்டம் வரை ஜெயகாந்தனாலும், தொடர்ந்து டி. செல்வராஜ் போன்ற படைப்பாளிகளாலும், அந்தப் பாரம்பரியம் உயர்த்தி எடுத்துச் செல்லப்பட்டு வருகிறது.

ஆனால், தமிழில் ரகுநாதனால் தொடங்கி வைக்கப்பட்ட சோசலிச யதார்த்தவாத நாவல் இலக்கியம், தொடர்ந்து மேலும் கிளைவிட்டுப்படருவது போல, சிறுகதைத் துறையில் சோசலிச யதார்த்தவாதம் வேர்பிடிக்காமல் இருப்பது துரதிஷ்ட வசமானது என்றே கூறவேண்டும்.

சோசலிச யதார்த்த வாதம் என்றால் என்ன?

ஏஞ்சல், இப்படிக் கூறுகிறார்:

“நடைமுறையில் உள்ள இந்த முதலாளித்துவச் சமூக அமைப்பு என்பது நிரந்தரமானது. மாற்றப் படமுடியாதது என்கிற நூற்றாண்டுக்கால நம்பிக்கையை, ஒரு இலக்கியப் படைப்பானது, இது மாற்றப்படக்கூடியதுதான், நிரந்தரமானது அல்ல என்கிற சிறு சலனத்தை, படிப்பவனின் மனதில் உருவாக்குமானால், அதுவே "SOCIALIST PROBLEM NOVEL".

சிறுகதைத் துறையில், அப்படியான நம்பிக்கை வைக்கும் படைப்புகள் உருவாகி இருக்கின்றனவா என்பது ஐயத்துக்கு உரியதாகவே இருக்கிறது. காரணம், சோசலிச யதார்த்தவாத இலக்கியப் படைப்பென்பது, மக்கள் இலக்கியத்தின் போராட்ட வழியில் ஈடுபாடுகொண்டு கற்றறிவதோடு, கலந்து உணர்வதிலிருந்தே, உருவாகுவதாகும். இதில், கற்றறிவதை, விட கலந்துபெறும் உணர்வே, மேலானதோர் வெற்றியளிக்கும் . இந்தியாவில் இத்துறை வழிப்படைப்புகளை, சிறப்பாகக் கொடுத்திருப்பவர்கள் என்று கிஷன் சந்தர், யஷ்பால், மணிக் பந்தோபாத்யாயா, தகழி ஆகியோரைக் குறிப்பிடலாம்.

அறநெறிச் சீற்றம்

இந்தியாவின் எந்தப் பகுதியிலாவது, மக்கள் இயக்கத்தின் போராட்ட எழுச்சியோ, மதக்கலவரத்தின் மனிதநேய அழிவோ, ஆளும் வர்க்கத்தின் அரசு யந்திரத்தின் வன்மத் தாக்குதலுக்குள்ளாகி, மக்கள் அநியாயமாகக் கொல்லப்பட்டு, கொடுமைக்காளாகும் சம்பவங்கள் நிகழ்ந்தால், இந்தப் படைப்பாளிகள் நேரில் சென்று இரண்டறக் கலந்து கொள்வார்கள். இந்த உணர்வுகளிலிருந்து, அவர்கள் பெறும் அறநெறிச் சீற்றத்தின் மூலம், அநியாயத்திற்கெதிரான மக்களின் போராட்ட எழுச்சிக்கு, சிறுகதை இலக்கியம் என்ற ஆயுதத்தை, அனுபவப்பட்டரையின் வாயிலாகக் கூர்மைப்படுத்திக் கொடுக்கிறார்கள்.

இப்படியான அனுபவங்கள், நம் தமிழ் மண்ணில் எவ்வளவு நிகழ்ந்திருக்கின்றன? சிறுகதைப் படைப்பாளிகள் யாரேனும் அக்கரைகாட்டி, மக்களின் ஒன்றுபட்ட போராட்ட உணர்வுகளான உந்து சக்தியை உருவாக்கிட முனைந்திருக்கிறார்களா? ஏதேனும் நடந்திருப்பின், வெற்றி கண்டுள்ளார்களா? அப்படியான வெற்றிப் படைப்புகள், என் கவனத்தில் படவில்லை. அப்படி என் கவனத்துக்கு மீறி வெளிப்பட்டிருப்பின் அவர்கள் இதன் முன்னோடிகள்; வாழ்த்துக்கு உரியவர்கள்.

இப்போது தோழர் சமுத்திரம் அவர்களின் கதைகளுக்கு வருவோம்:

இவரின் கதைகள் அனைத்தும், துன்பப்படும் ஏழைமக்களைப் பற்றியும், அதிகார வர்க்கத்தின் கெடுபிடிக்குள் சிக்கித்தவித்து வதை படும் அரசு ஊழியர்களைப்பற்றியும், அதிகார வர்க்கத்தின் லஞ்ச ஊழல் அசிங்கத்தைப் பற்றியும், முதலாளித்துவக் கட்சிகளின் அரசியல்வாதிகள், அமைச்சர்களின் ஊழல், ஒழுங்கீனம் பற்றியும், கண்டன விமர்சனத்தோடு, கலையழகு மிளிரச் சித்தரிக்கப்பட்டிருப்பவை.

இவரின் எழுத்துநடை, எளிமையும், வீண் மினுக்கித்தனம் இன்றியும், சுருக்கென்று தைக்கும் ஈட்டி முனை போன்ற கூர்மையும் உடையது. எல்லாவற்றுக்கும் மேலாக, போலித்தனங்களை அம்பலப்படுத்தும் நகைச்சுவை சொற்பிரயோகங்களும் இவருக்குக் கைவந்த கலையாக மிளிர்கிறது. இந்த அணுகுமுறையை, விந்தனுக்குப் பிறகு, இலக்கியப்படைப்பில் தோழர் சமுத்திரம் அவர்கள்தான் வெற்றிகரமாகக் கையாண்டு இருப்பதாகப் படுகிறது.

"பால் பயணம்" - "திருப்பம்" - இந்த இரண்டு கதைகளும், அற்புதமான நகைச்சுவை நிறைந்த கதைகள். இப்படியான கதைகளைப் படித்து, வாய்விட்டு வயிறு குலுங்கச் சிரித்து நீண்டகாலமாயிற்று. ஆண்டன் செகாவின் எழுத்தையும், கிஷன் சந்தர் எழுத்தையும் படிக்கும்போது, இந்த உணர்வு நிறையவே கிடைக்கும். தோழர் சமுத்திரம் அவர்களிடமும் நகைக்சுவை நிறையவே ஊற்றெடுக்கிறது. பொதுவாக எழுத்தாளர்களுக்குக் கிடைக்காத அற்புத வரமிது.

வார்த்தை ஜாலமற்று, அர்த்த ஜாலம் புனைவதில் நிகரற்று விளங்குவதை, இவரின் சொற்றொடர்கள் படிப்போரை வியப்படைய வைக்கும். அவற்றில் சில:

"சம்பந்தத்தைச் சம்மதமாய் பார்த்தபடி நடந்தாள்"

"அந்த ஓட்டம், உயிரோட்டமாகி விட்டது”

"அடித்ததில் களைப்பும். உதைத்ததில் இளைப்பும்…"

“நெருப்பாய் வந்தவர், நீராய்ச் சொட்டினார்”

இப்படி கதைக்குக் கதை, இவரின் பொருள்மிக்க சொல்லாட்சியை பரந்துபடக் காணலாம்.

"பாம்புக் கயிறு" - பந்தாவும், போலிக் கெளரவமும் கொண்ட “ஏ-ஒன்" ஆபிசரின் அகம்பாவ குணத்தைத் தோலுரித்துக் காட்டும் கதை கூடவே அந்த முரடருக்குள் இருக்கும் மனிதாபிமானத்தையும் சமுத்திரம் சுட்டிக்காட்ட தவறவில்லை. அதேபோல் "உப்பைத் தின்னாதவன்”, "ஒருவழிப்பாதை" ஆகிய கதைகள் அதிகார வர்க்க ஊழலையும் , அடா வடித்தனத்தையும் வெளிச்சம் போட்டுக் காட்டும் கதைகளாகும். இதேவகையில், "நான்காவது குற்றச்சாட்டு” எனும் கதை நேர்மையான, நிரபராதியான அலுவலர் மீது, பொய்யான குற்றச்சாட்டு. அது விசாரணையின் போது, பொய்யென நிரூபிக்கப்படுகிறது. ஆனால், அந்தத் துறை செயலரோ மோசமான அதிகாரவர்க்கத் திமிரோடு, அறிவிலி போல விசாரணைத் தீர்ப்பை புறந்தள்ளுகிறார். இதன்வழியாக ஒரு நேர்மையான அலுவலருக்கு , அநீதியாய் இழைக்கப்படும் தண்டனை, நம் மனதை நோகவைக்கவும், நொறுங்கிப் போகவும் செய்கிறது. இதொரு அற்புதமான படைப்பு.

வாழ்க்கைப் பாக்கி.

அமைச்சர்கள், சினிமா நடிகர்கள் போலீஸ்காரர்கள், விபச்சாரிகள், ஆட்டோ ஒட்டுநர்கள் இப்படி வகைவகையான பாத்திரங்கள் இக்கதைகளில் படைக்கப்-பட்டுள்ளன. அவற்றை விளக்கிப் பேசுவதற்கு இம்முன்னுரையில் இடமில்லை. இருந்தாலும், இவற்றில் மூன்று கதைகளை சிறிதே சொல்லியாகவேண்டும். ‘வாழ்க்கைப் பாக்கி' என்னும் கதை, சிற்பம் செதுக்கப்பட்டது போன்ற சொற்கட்டமைப்பும், பனி நீரில் மலர்ந்து சிலிர்ப்பூட்டும் ரோஜாவைப் போன்ற உருவ அழகும், கருத்தழகும் பெற்று, நம் மனதில் அதிர்ச்சியையும், அலைக்கழிப்பையும் ஏற்படுத்தி, "அடச்சீ. இப்படியுமா பணத்தை முன்னிலைப் படுத்தி, தாய்க்கும் , பிள்ளைகளுக்குமான பந்தபாசம் உருப்பெறவேண்டும்?" என்ற கேள்வியை முன்னிறுத்துகிறது. தமிழ்ச் சிறுகதைத் துறைக்கு கிடைத்த பொக்கிசம் இது. பிற மொழிகளுக்கு அறிமுகப்படுத்த ஒரு பத்து கதைகளைத் தேர்வு செய்தால் "வாழ்க்கைப் பாக்கி” அதில் ஒன்றாக இருக்க முடியும்.

சோசலிச யதார்த்தவாத கதைகள்

"வைராக்கிய வைரி" - "சிக்கிமுக்கி கற்கள்" - இந்த இரண்டு கதைகளும் நான் விழையும் ஒன்றுபட்ட உழைக்கும் மக்களின் போராட்ட உணர்வை வெளிப்-படுத்துவதாகும். இரண்டிலும் பெண்களே வெளிப்படுகிறார்கள். தமிழில் சோசலிச யதார்த்தவாதக் சிறு கதைப் படைப்பு , இதற்கு முன் ஏதேனும் உருவாக்கியிருந்தாலோ அல்லது இதுவாக இருந்தாலோ அத்துறையின் முன்னோடிகளில் மூலவராகிறார் சமுத்திரம். அப்படியான ஒரு சிறப்பு, இவ்விருகதைகளுக்கும் கிடைத்திருக்கிறது எனலாம். இத்துவக்கம், கொப்பும், கிளையுமாகப் படருமானால், தமிழ்ச் சிறுகதை இயக்கம் புரட்சிகரமான, சமூக மாறுதலுக்கான பங்களிப்பை ஆற்றும் பெருமையை பெற்றளித்திருக்கிறது என்று பூரிப்படையலாம். அப்பூரிப்பில், சமுத்திரம் பொங்கும்.

இத்தொகுப்பிலுள்ள முழுக்கதைகளையும் விலாவாரியாகப் பேச முடியவில்லை. முன்னுரைக்கான பக்கக் கட்டுப்பாடு கருதி, சுருக்கிக்கொள்ள வேண்டிய அவசியம் நேர்ந்துவிட்டது.

தோழர் சமுத்திரம் அவர்களின் சிறுகதைத் தொகுப்புகளில், இத்தொகுப்பு, வளர்ச்சியும், முதிர்ச்சியும் கொண்டு விளங்குகிறது. மேலும் பல தொகுப்புகளைத் தமிழுக்கும், உலகத் தொகுப்புக்கும் வழங்க வாசகர்கள் சார்பில் வாழ்த்துகிறேன்.

இறுதியாக சோசலிச யதார்த்தவாத இலக்கியத்தின் தந்தையான மார்க்சிம் கார்க்கி அவர்களின் முத்திரை வாக்கியத்தோடு முடிக்க விரும்பிகிறேன்.

”ஒரு படைப்பை விட படைப் பாளி மேலானவனாக இருக்கவேண்டும்."

இன்றைய சமுத்திரம், எனக்கு அப்படித்தான் புலப்படுகிறார். இலக்கியப் படைப்பின் நீண்ட நெடும்பயணத்தில், கடைசிவரை இக்கோட்பாட்டிற்கு விசுவாசத்தோடு நிற்பார்; நிற்க வேண்டுமென வாழ்த்துகிறேன்.

நாமக்கல், அன்புடன்,

1-12-1999. கு. சின்னப்பபாரதி.