Chapter 16
அண்ணன் அனுப்பிய அத்தனை பேரோடும், டாக்டர். சத்தியா, தனித்தனியாகப் பேசினாள் குழந்தைகளோடு பேசும்போது குழந்தை போலவே பேசினாள். இறுதியாக அவர்களில் யாராவது ஒருவர், வெளியே இருக்கலாம் என்று சொன்னாள். எல்லோருமே இருக்கப்போவதாக தர்ணா முறையில் பதிலளித்தார்கள். பிறகு, செல்வாவை கூப்பிட்டாள். சுமார் முக்கால் மணி நேரம் வரை அவனது பிரச்சினைகளை கேட்டறிந்தாள் கேள்விகளில் அளவுக்கு மீறாத அனுதாபம். அவன் பதில்களுக்கு தலையாட்டியதில், இது சகஜந்தான்... சாதாரணமானது என்று காட்டும் தோரணை சிற்சில சமயங்களில், லேசாய் அதிர்ந்த பார்வை.
டாக்டர். சத்தியா, அவன் சொன்னவற்றை தற்காலிகமாக ஒதுக்கி வைத்தது போல், செயல்பட்டாள். உடம்பையும், மனதையும் எப்படி ஆசுவாசப்படுத்திக் கொள்வது என்பதை நாற்காலியில் இருந்தபடியே செய்து காட்டினாள்.
பரந்து விரிந்த பெரிய அறை. சித்தப்பா வீட்டு படுக்கை அறையையும், செல்வா, குழந்தைகள் அறையையும் விழுங்கிவிட்டு, பாதி வயிறு நிறைந்தது போல் இருக்கும் அறை. தென் முனையில் சுவரோடு சுவராக ஒரு ஒற்றைப் படுக்கை. இருபக்கமும் தேக்குக் குமிழ்களைக் கொண்ட கட்டில். இதன் எதிர்ச்சுவரில், நம்முடைய அணுகுமுறையே நம்மை தீர்மானிக்கிறது என்ற வாசகப் பொறி பளபளப்பான மரப்பலகையில் இடம் பெற்றிருந்தது. கட்டிலின் வடமுனையில் கால்களுக்கு மேலே இன்னொரு பச்சை பலகை அதில், அஞ்சுவதும் இல்லை; அஞ்ச வருவதும் இல்லை' என்ற அப்பர் பிரானின் மேலாண்மை வரிகள், வெள்ளை வரிகள்.
மனோதத்துவ நிபுணர் டாக்டர் சத்தியாவின் வேண்டுகோள்படி, அவளிடம், செல்வா , எல்லாவற்றையும் ஒப்பித்துவிட்டான். அவளைப் பார்க்க பார்க்க, இவன் பதட்டம் பரவசமானது. சுமார் முப்பது வயதுக்காரி. அசல் கிராமத்து அக்காவின் நகர்ப்புற வார்ப்பு. மனிதச் சதையாலும், எலும்பு நரம்புகளாலும் கடைந்தெடுக்கப் பட்டது போன்ற உடல். நெற்றியில் உச்சிக்கு சிறிது கீழேயும், நடுவிலும் இரண்டு நிசமான குங்குமப் பொட்டுக்கள். புருவ மத்தியில் ஒளி சிந்தும் முத்துக்களால் ஆனது போன்ற அம்பு வடிவப் பொட்டு. அரவிந்தர் ஆசிரமத்தின், அந்த அன்னையின் லேமினேட்டட் புகைப்படம் மேஜையின் பின் சாய்வோடு இருந்தது. அன்னைக்கு தீட்சண்யமான பார்வை. திடப்படுத்தும் நோக்கு எல்லாமே அன்பு மயம் என்ற போக்கு.
செல்வா, அந்த கட்டிலில் மல்லாக்க படுத்திருந்தான். டாக்டர் சத்தியா, அவன் அருகே சென்றாள். டாக்டர் என்றால் ஸ்டெதாஸ்கோப் டாக்டர் அல்ல. மனோதத்துவத்தில் வாங்கிய டாக்டர் பட்டக்காரி. செல்வாவை சிறிது நேரம் பார்த்தாள்.
அவனோ, இதுவரை படுத்தறியாத சுகமான கட்டிலில், அதன் மெத்தையோடு பறப்பது போல், கிடந்தான். மயிலிறகால் செய்தது போன்ற மெத்தை. மேலேயும் கீழேயும் அவனை மென்மையாய் தாலாட்டியது. தானும் ஆடிக் கொண்டது சத்தியா, 'நான் சொன்னது மாதிரியே நீ செய்து காட்டணும்.' என்று சொல்லி விட்டு, அவன் தலைப்பக்கம் வந்தாள். அந்தக் குரல், ஆகாயத்து அசரீரி குரல் போல் செல்வாவிற்கு ஒலித்தது. மெல்லிய குரல் கொண்ட ஏ சி. வெள்ளை விளக்குகள் அணைந்து, பட்டும் படாமலும் எரியும் மஞ்சள் விளக்கு. சத்தியா, இப்போது அவன் கால்மாட்டு பக்கம் வந்து ஆணைபோல் பேசினாள்.
"கமான் யங்மேன். இப்போ நான் சொல்லிக் கொடுத்த பதினெட்டு உடல் மையங்களில் ஒவ்வொன்றாக உங்கள் பதட்டத்தை ஏற்றப் போறீங்க. அப்புறம் ரிலாக்ஸ் பண்ணப் போறீங்க..... முதலாவதாக, இரண்டு கைகளையும் முஷ்டியாக்குங்கள். இந்த இரண்டு முஷ்டிகளிலும், உங்கள் உடம்பிலும் உள்ளத்திலும் உள்ள அத்தனை பதட்டங்களையும் முஷ்டிகளுக்கு கொண்டு வாருங்கள்."
செல்வா, இரண்டு கைகளையும், மூடிக்கொண்டு, பெருவிரல்கள் மட்டும் நீட்டிக் கொண்டிருக்க, உச்சி முதல் பாதம் வரை உள்ளும் - புறமுமான பதட்டங்களையும், பயங்களையும், நடுக்கங்களையும் அங்கே கொண்டு வந்தான். முஷ்டிகள் வலித்தன. வெளியேறப்போன விரல்களை உள்ளங்கைகளோடு அழுத்தினான். இந்த முஷ்டிகள் தவிர உடம்பில் உள்ள அத்தனை உறுப்புகளும், நாடி நரம்புகளும் லேசானது போன்ற உணர்வு. இரண்டு நிமிடம் ஆனது. சத்தியா, ஒரு தோழனிடம் சொல்வதுபோல் சொன்னாள்.
"இப்போது முஷ்டிகளை விரல்களாக்குங்கள். விரல்களுக்கு இடைவெளி கொடுத்து, உள்ளங்கையோடு சேர்த்து, ரிலாக்ஸ்... ரிலாக்ஸ் மை பாய்.... ரிலாக்ஸ்...''
செல்வா, விரல்களை விரித்து, அவற்றையும் உள்ளங் கைகளையும் மென்மையாய் விரிவாக்கி, ஆசுவாசப்படுத்தினான். கைகளில் கட்டிப் போட்டிருந்த ஏதோ ஒரு கல் கீழே விழுந்தது போன்ற உணர்வு.
"எப்படி இருக்கிறது பிரதர்."
"கைகள் பஞ்சு மாதிரி மென்மையாய் இருக்குதும்மா."
"ரொம்ப நல்லதாப் போச்சு. நீங்கள் ஓரினச்சேர்க்கை என்கிற புதை மண்ணிலிருந்து நிச்சயம் விடுதலை ஆவீர்கள். இப்போ அந்த மண்ணிலிருந்து கைகள் வெளிப்பட்டு விட்டன. இனிமேல் முழங்கைகள், மேற் கைகள் ஆகிய நான்கு மையங்கள், நெற்றி, கண், வாய், கழுத்து, மார்பு, வயிறு ஆகிய ஆறு மையங்கள், இரண்டு தொடைகள், இரண்டு முழங்கால்கள், இரண்டு பாதங்கள் ஆகமொத்தம் பதினாறு இடங்களில் உடற்பாரத்தையும், மனப்பாரத்தையும் ஒவ்வொன்றுக்கு இரண்டு நிமிட நேரம் கொடுத்து ஏற்றுங்கள். மூன்று நிமிடம் ஒவ்வொரு உறுப்பையும் ஆசுவாசப் படுத்துங்கள். இரண்டு மையங்களாக உள்ளங்கைகளில் செய்தாயிற்று. இனிமேல் இதர பதினாறு மையங்களில் பாரத்தை ஒப்படையுங்கள்."
செல்வா, அந்த அம்மா, முன்னர் சொல்லிக் கொடுத்தது போல், தனது அத்தனை பாரங்களையும் பதினாறு மையங்களில் ஒற்றையாகவும், ரெட்டையாகவும் ஏற்றி, அவற்றை கனக்க வைத்தான். பிறகு, அந்த பாரங்களை இறக்கி, அவற்றை லகுவாக்கினான். கிட்டத்தட்ட அரைமணி நேரம் ஆயிற்று. சத்தியா, கேட்டாள்.
"இப்போ எப்படி இருக்குதுப்பா?"
"உடல் காற்றில் மிதப்பது போல் இருக்கிறது மேடம். மனம் என்ற ஒன்று இல்லாதது போல் தோணுது மேடம் ."
"நல்ல அறிகுறி. ஆனால், ஒரு எச்சரிக்கை. கவிதாவோடு, நான் சொல்வது வரைக்கும், பழகவேண்டாம். அப்புறம், வட்டியும் முதலுமாய் பழகலாம்."
"பழகவே முடியாது மேடம்..."
"முடிய வைக்கிறேன். சரி... அடுத்த வாரம் இதேநாள், இதே நேரம் வாங்க... நான் சொல்லிக் கொடுத்த பயிற்சியை, அன்றாடம் செய்யுங்க... நீங்க போய்ட்டு, கவிதாவை வரச்சொல்லுங்க..."
செல்வா, சிறிது மிடுக்கோடு எழுந்தான். அந்த அம்மாவை, தன் அம்மாவைப் பார்ப்பதுபோல் பார்த்தபடியே, வெளியேறினான்.

