Chapter 13
செல்வா, குமைந்து கொண்டிருந்தான் இதயம் நெருப்பு பற்றியது போல் புகைந்து கொண்டிருந்தது. போர்வையால், உச்சி முதல் பாதம் வரை, அந்த வெயில் நேரத்திலும் இழுத்து மூடினான். இரு கரங்களையும் இடுப்போடு ஒடுக்கி, முடி களைந்தும், மூளை குழம்பியும் குப்புறப் படுத்துக் கிடந்தான் இந்நேரம், அவன், குழந்தைகளின் ஹோம் வொர்க்கிற்கு உதவி செய்திருக்க வேண்டும் ஆனாலும், அவன் உடல், அவர்களுக்கு உதவி செய்தது அவனுக்கு இரு பக்கமும் இருந்த குழந்தைகள், அவன் முதுகிலும், பிட்டத்திலும் நோட்டுப் புத்தகங்களை வைத்து, பென்சிலால் எழுதுவதும், ரப்பரால் அழிப்பதுமாய் இருந்தன அருண் சுபேதாவிற்கு திடீர் ஆசிரியரானான். அவள் தலையில் அடிக்கடி குட்டினான். இவளும் ஆசிரியை குட்டை விட, அது லேசாக இருந்ததால், அண்ணன் குட்டை பொறுத்துக் கொண்டாள்
செல்வாவிற்கும் ஒரு சுக உணர்வு. பசு மாட்டின் மேலிருந்தபடி, அதன் உண்ணிகளை கொத்தித் தின்னும் காகங்கள், அந்த மாட்டிற்கு கொடுப்பது போன்ற சுகம். ஆனாலும், மரக்கட்டையாய் கிடந்தான். உடல் இயங்கவில்லையானாலும், மனமும் மூளையும் ஒன்றோடொன்று போரிட்டுக் கொண்டன இருபக்கமும் அடிபட்டு, மனச்சாட்சி மௌனச் சாட்சியானது.
நேற்று, கவிதாவிடம் அவன் நடந்து கொண்ட முறை காட்டுமிராண்டித்தனம் என்பது அவனுக்கே தெரியும், ஆனால், அவனது, காட்டுமிராண்டியான, செல்லத்தனமான மோகனனை, அவனால் மறக்க முடியவில்லை. அண்ணன், தங்கை மாறி மாறி வந்தார்கள். முதல் தடவை வாந்தி எடுத்தவனுக்கு, அந்த வாசனை மிக்க டீலக்ஸ் உறை இப்போதும், கிளுகிளுப்பூட்டும் வாசனையாக வந்தது. உடலெங்கும், உடலை லேசாக்குகிறது. அதோடு, தான் பயன்படுத்திய அந்த செண்பக வாசனை டீலக்ஸையும் நினைத்துக் கொண்டான் தன்னைவிட உருவத்திலும், வயதிலும் பெரிய மோகனனை, பாசிவ் பார்ட்னராக - சும்மா கிடக்கும் பங்காளியாக ஆக்கிக் காட்டியதில் அவனுக்கு வெற்றிப் பெருமிதம் கூட ஏற்பட்டது. தாழ்வு மனப்பான்மை, உயர்வு மனப்பான்மையாகியது. அவனுக்கு கிடைத்த ஆண்சுகம், பெண்சுகம் போலவே தோன்றியது. தன்னுள் துடித்த ஏதோ ஒன்றிற்கு வடிகால் கிடைத்த ஒரு ஆனந்த அனுபவம். அதேசமயம், மோகனனை, இனிமேல் பார்க்க முடியாதே என்ற ஒரு பரிதவிப்பு. அவனை அப்போதே பார்க்கத் துடித்தான். அவன் கூட்டிச் சென்ற கிளப்பிற்கு போய், அவனது பம்பாய் முகவரியை வாங்கிக் கொண்டு தானும் பம்பாய்க்கு போய்விடலாமா என்ற சிந்தனை.
ஆனாலும், அந்த கற்பனையான பயணத்தை, கவிதா மானசீகமாக வழி மறித்தாள். டூப்ளிகேட் அம்மாவுடன் வாழவேண்டிய கட்டாயத்தில் உள்ள பாவப்பட்ட பெண்தான். ஆனாலும், பழிகாரி. அந்த அம்மா விசயத்தை, முன்பே அவனிடம் சொல்லி இருக்கலாம். எனினும், சுயமரியாதை விட்டுக் கொடுத்து, வீடு தேடி வந்தாள். அவள் விளக்கமளிப்பதற்கு ஒரு சந்தர்ப்பம் கொடுத்திருக்கலாம். ஆனால், நட்பாகத்தான் கொடுக்க முடியும். காதலாக கொடுக்க முடியாது. செல்வாவின் மனதிலிருந்து, அந்த மோகனன், அவளைத் துரத்திவிட்டு, தான் மட்டுமே தன்னந் தனியாய், தக்காரும் மிக்காரும் இல்லாமல் காலூன்றிவிட்டான்
அவன் நாட்டியத்திற்கு முன், இவள் நடை நொண்டியடிக்கிறது. அவன், கிறங்க வைக்கும் பார்வையில், இவள் பார்வை மங்கிப் போகிறது. அவன் மரகதப் பச்சை டையில், இவள் கழுத்துச் சங்கிலி, அந்த கழுத்தை சுற்றிய நாகம் போல் தோன்றுகிறது. அவன் தீண்டியதும், அவனைத் தீண்டியதும் ஒரு பெருஞ்சுகம். அவற்றின்
முன்னால், இவள் கொடுத்தவை சின்னஞ்சிறு சுகங்கள்.
அந்த மோகனனின் பாட்டுக்கு முன், இவள் கெஞ்சலும் - கொஞ்சலும், சிணுங்கலும் - குலுக்கலும் அற்பமாகின்றன. ஆனாலும், அவளையும் உதற முடியவில்லை . இவனுக்கு சுமை தாங்கியாக இருந்தவள். இவன் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் கொடுத்தவள். சிறுமையில் சுருங்கிப் போன இவனை, பெருமைப்படுத்திய அவளை, இவன் சிறுமைப் படுத்திவிட்டான். ஆனாலும், அவள் தான் அதற்குக் காரணம் நேற்று வந்ததுபோல், டூருக்கு போவதற்கு முன்பு, ஏதாவது ஒரு சாக்கில், தான் போகப்போவதை சொல்லியிருக்க முடியும். ஒருவேளை, அண்ணனுக்கு இவளே தன்னை கூட்டிக் கொடுத்தாளோ என்னமோ? இப்போதைய நிலமைக்கு இவளே காரணம்; இவளே வில்லி.
செல்வா, மல்லாந்து புரண்டான். இதனால், குழந்தைகளின் நோட்டு புத்தகங்கள், அவன் முதுகிற்குள் சிக்கின. சுபேதா, அவன் முதுகோர இடுக்குகளிலிருந்து, நோட்டை மீட்பதற்கு போராடியது போது, செல்வாவின் மனம் கிராமத்திற்கு போனது ஏரிக்கரையில் ஏழெட்டு நண்பர்களோடு சிரிப்பும் கும்மாளமுமாய் நடந்து, அந்த
ஏரியால் பெருக்கெடுத்த கிணறுகளில், அந்தர் பல்டி அடித்தது, குற்றாலத்திற்கு போன குளியல் நினைவுகள், மாலையில் நண்பர்களோடு சேர்ந்து விளையாடிய வாலிபால் விளையாட்டு, பம்பு செட் நீரில் அருவியாய், ஏகாந்தமாய் குளித்தது, வெட்டை வெளி பசும்புல் தரையில் ஏகாந்தமாய் படித்தது; படுத்தது, வகுப்புக்களில் முதலாவதாக வந்தது. இங்கே கூட கல்லூரியில் ஆங்கிலம் தவிர்த்த மற்ற பாடங்களில், ஏதோ ஒரு வகையில் ரேங்கில் வந்தது. இப்போது நான்கைந்து நாட்களாக கல்லூரிக்குப் போவது போல் போக்குக்காட்டி, அடையாறு, குழந்தைகள் பூங்காவிற்குப் போய், தன்னந்தனியாய், தனி மரமாய், மரங்களோடு மரமாய் நின்றது; படுத்தது; புரண்டது; எழுந்தது; அலைந்தது; கிராமத்தில் முறைப்பெண் ஒருத்தி அவனை வம்புக்கு இழுத்தது; இவன் தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடிப்போனது; ஊரில் கிடைத்த நல்ல பையன் பட்டம்.
இப்போது அந்த அறைக்குள், பழையதையும் புதியதையும் ஒப்பிட்டு ஒப்பிட்டு இறுதியில் செல்வா மனதளவில் செத்துப் போய்க் கிடந்தான். ஒரு வாலிபனுக்குரிய ஆண்மை , நூலறுந்த காற்றாடியாய் சுற்றுகிறது. இப்போது காதலனும், காதலியும் இவனே. இவன் காதலனாகும் போது, மோகனன் காதலி ஆகிறான். இவன் காதலியாகும் போது, மோகனன் காதலனாகிறான். 'போயிற்று... எல்லாம் போயிற்று. தந்தையின் குனிந்த தலையை நிமிர்த்துவதற்குப் பதிலாய், தன் பங்கிற்கும் இவன் தாழ்த்தியாயிற்று. சித்தப்பாவிற்கு நம்பிக்கைத் துரோகம் செய்தாகிவிட்டது. இப்போது, வெறும் சதைப் பிண்டம். உயிர் இருப்பதால் மட்டுமே உலாவும் நடைப்பிணம். சண்டாளி; சதிகாரி நீ மட்டும் என்னை வம்புக்கு இழுத்து காதலிக்காமல் இருந்திருந்தால், இந்நேரம் நான் முழுமையான மாணவனாய், பாசமிக்க சித்தப்பாவிற்கு, நன்றி மறக்காத அண்ணன் பிள்ளையாய், குழந்தைகளுக்கு தோழனாய், ஒரு முழுமையான மனிதனாய் தலை நிமர்ந்து நடந்திருப்பேன். என்னை கெடுத்துட்டியேடி! அர்த்த நாரீஸ்வரனாய் என்னை ஆக்கிட்டியேடியடி! நீ வஞ்சகி.... உன்னிடம், நானே நினைத்துப் பார்க்க கூசும் என் சம்பந்தப்பட்ட விவகாரங்களை சொல்லி இருக்கிறேன். ஆனால் நீயோ , உனக்கு ஒரு டூப்ளிகேட் அம்மா இருப்பதைப் பற்றியோ, உன் அண்ணன், ஓரினச் சேர்க்கைக்காரன் என்றோ சொல்லல... சொல்லியிருந்தால் பிழைத்திருப்பேன். இப்போ சாகாமல் செத்துட்டேனடி..'
செல்வா, வெந்து தணியாமல் வெந்து கொண்டே கிடந்தான். இதற்குள் அருண், இவன் மார்பில் நோட்டுப் புத்தகத்தை நகர்த்தி, கண்ணுக்கு கீழே கொண்டுவந்து, 'அண்ணா ! வாட் ஈஸ் திஸ் சர்க்கிள்' என்றான். சுபேதாவோ, அண்ணா நான் வேன்ல போகமாட்டேன். அண்ணனோட ஸ்கூட்டர்லதான்... போவேன் என்று தான் என்பதற்கும், போவேன் என்பதற்கும் அழுத்தம் கொடுத்தாள். செல்வாவால் எரிச்சலை அடக்க முடியவில்லை. சுபேதாவின் காதை வலது கையால் திருகிக் கொண்டே, அருணின் கன்னத்தை இடது கையால் பிதுக்கிக் கொண்டு கத்தினான். "சனியங்களா... ஒங்கம்மா கிட்டப் போய் பாடம் கேளுங்க..." என்று சொன்னபடியே, அருணின் நோட்டுப் புத்தகத்தை கீழே வீசியடித்தான். அந்த வீச்சில், அந்த நோட்டு, தாள் கிழிந்து,
அட்டை விலகி, அலங்கோலமாய் கிடந்தது
செல்வா, தனது முட்டாள் தனத்தை உணர்ந்தது போல், இரண்டு குழந்தைகளையும் விடுவித்துவிட்டு, அந்த நோட்டுப் புத்தகத்தை எடுப்பதற்காக எழுந்தபோது –
வாசலில், சித்தப்பா!
மனைவி, ஏற்னெவே குழந்தைகளிடம் இவன் நடந்து கொள்ளும் விதம் குறித்து சொல்லியிருக்கிறாள். அதனால்தான், குழந்தைகளை, வேனில் அனுப்ப சம்மதித்தார். இப்போது, அருணும், சுபேதாவும், கேவியபடியே அப்பாவின் கைகளை பிடித்துக் கொண்டு நின்றனர். "இனிமேல் அண்ணாகிட்ட இருக்க மாட்டேம் டாடி..." என்றான் அருண். சுபேதா, அவன் பேச்சுக்கு வக்காலத்து வாங்குவதுபோல், அப்பாவின் கையை விட்டுவிட்டு, அருணின் கையை பிடித்தாள்.
அண்ணன் மகனை, புனல் ததும்பப் பார்க்கும் சித்தப்பா, இப்போது கனல் கக்கப் பார்த்தார் குழந்தைகளை, அவன் அடிப்பதாக, தன்னிடம் குற்றஞ்சாட்டிய மனைவியிடம் அடிக்கிற கைதான் அணைக்கும்' என்று அவனுக்கு வக்காலத்து வாங்கியவர், இப்போது அதிர்ந்து போய் நின்றார் அப்போதே நேர்கோட்டுச் சிந்தனையில் இருந்து விலகி, பக்கவாட்டில் சிந்தித்தார். "உங்க அண்ணன் மகனை, நம்ப அம்மா லேசா கஷ்டப்படுத்துறாங்க அய்யா. நான் சொன்னேன்னு சொல்லாம, சாடை மாடையா சொல்லுங்கையா" என்று சொன்ன அதே வேலைக்காரம்மா, நேற்று, “இந்த பிள்ளாண்டான் போக்கும் சரியில்லை அய்யா." என்றாள். அவனுடைய பிரச்சினையை கண்டறிய, அலுவலகம் போகிற வழியில், செல்வா படிக்கும் கல்லூரியிலும் விசாரித்தார். கல்லூரிக்கு அவன் நான்கைந்து நாட்களாக போகவில்லை என்கிற அதிர்ச்சி செய்தி கிடைத்தது. செல்வாவை அழுத்தம் திருத்தமாய் பார்த்தார். அவன் தலை தாழ்த்திவிட்டு, மீண்டும் நிமிர்ந்தபோது –
“உன்னோட பிரச்சினை என்னடா?"
"ஒண்ணுமில்ல சித்தப்பா. நல்லாத்தான் இருக்கேன்"
"அதை நான் சொல்லணும். காலேஜ் போறீயா?"
"போறன் சித்தப்பா, சித்தி புளுகிறாங்க."
"பொய் பேசவும், பழி போடவும் கத்துக்கிட்டே இன்னும் என்னல்லாம் கத்துக்கிட்டியோ. சொல்லுங்க ஸார். நானே காலேஜ்ல போய் விசாரித்து வந்தேன் ஸார்."
செல்வா, தலை கவிழ்ந்தபடியே, தனக்குள்ளேயே முணுமுணுத்தான். பிறகு, அவரது காலில் விழுந்து கதறப் போனான். இதற்குள் சித்தப்பா முந்திக் கொண்டார்
"இந்தா பாருடா! பளுவிலேயே பெரிய பளு, நன்றிப் பளு. உங்கப்பா. அதான் எங்கண்ணன், காய் கறிகளையும், என்னையும் வண்டியில் ஏற்றிக்கிட்டு, புளியரை சந்தைக்கு வண்டி அடிப்பார். ஒரு சந்தர்ப்பத்துல, ஒரு மாடு , தவழ ஆரம்பிச்சுட்டுது. உடனே, அந்த மாட்டை அவிழ்த்து வண்டியில் பின் பக்கமா கட்டிட்டு, இறங்கப் போன என்னையும் இறங்கவிடாமல் தடுத்துட்டு, அந்த மாட்டுக்குப் பதிலாய் ஒரு மாடாய் வண்டி இழுத்தார். எத்தனையோ கஷ்டத்திலயும் என்னை படிக்க வைத்தார் நானும் வட்டியும் முதலுமாய் நன்றிக் கடன் செலுத்திட்டேன், வாங்குன வரதட்சணை பணத்தை அப்படியே அண்ணன் கிட்ட ஒப்படைத்தேன். உன் பெரிய அக்காவுக்கு, நானே நகை போட்டு மதுரையில் கல்யாணம் செய்து வச்சன். சின்னக்காவுக்கும் கொஞ்சம் உதவுனேன். இதையெல்லாம் எதுக்குச் சொல்றேன்னா, கணக்கு சரியாயிட்டு. நீ, எங்கப்பா சித்தப்பாவ படிக்க வச்சாரு. அதனால் சித்தப்பா, 'நம்மள படிக்க வைக்க வேண்டியது அவரோட கடமை.' அப்படின்னு, நீ நினைக்கக் கூடாதுன்னு சொல்றேன். இந்த வீட்ல இருந்து படிக்கக்கூடாதுன்னு சொல்லல. உன்னை தர்மத்துக்காக படிக்க வைக்கேன். இதை நீ புரிஞ்சுக்கணும்."
இடையிலே, ஒரு இடைச்செருகலாக சித்தியின் குரல்.
"எம்மாடியோ - எனக்குத் தெரியாம், இவ்வளவும் நடந்திருக்கா? உங்க அண்ணன், உங்கள நல்லாத்தான் மயக்கி ஓட்டாண்டி ஆக்கிவிட்டிருக்கார். பெரிய குடும்பமாயிருக்கு . யோசித்து செய்யுங்கன்னு, எங்கம்மா, எங்கப்பாகிட்ட சொன்னது சரியாப் போச்சு."
சித்தப்பா சிவனுப்பாண்டி, அண்ணன் மகனிடம் தொடர்ந்து பேசுவதா... அல்லது மனைவியை அடக்குவதா, என்று புரியாமல் தவித்தபோது, சித்திக்காரி தொடர்ந்தாள்.
"உங்க அண்ணனுக்காவது புத்தி வேணும். உன்ன நம்பி வந்திருக்கிற பெரிய இடத்து பெண்டாட்டிய பூ மாதிரி நடத்துணுன்டான்னு' புத்தி கெட்ட உங்களுக்கு புத்தி சொல்லியிருக்கணும். அந்த மனுஷன் பெரிய மனுஷனாம், பெரிய மனுஷன். ஒரே அடியா மொட்டை அடிச்சுட்டார்."
சிவனுப்பாண்டி, முதல் தடவையாக மனைவியை நோக்கி, கையை ஓங்கினார். பிள்கைள் மட்டும் அந்த கையை எம்பிக் குதித்து பிடிக்கவில்லை என்றால், இந்நேரம் அவள், இந்த சாதுவின் கோபத்தை தாங்க முடியாத, காடாய் சரிந்திருப்பாள். அதற்குள், செல்வா துள்ளி எழுந்தான். மிரட்டல் பார்வையோடு சித்தி அருகே சென்றான்.
"சித்தி... எங்கப்பா பற்றி இதுக்குமேல் ஏதாவது சொன்னீங்க.... நான் என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது."
"ஓஹோ - அந்த அளவுக்கு வந்துட்டியா - ஒரு நாளும், கை நீட்டி அறியாத மனுஷன, கையை ஓங்க வச்சுட்டே... இப்போ நீ வேற, அடிப்பேன் என்கிற அர்த்தத்துல சொல்றியா... வேணுமுன்னா அடிச்சுட்டுப் போப்பா."
சித்தப்பா, மனைவியை கையமர்த்திவிட்டு, செல்வாவை பார்த்து நடந்தார். இடையே குறுக்கிட்ட பிள்ளைகளின் முதுகுகளில் இரண்டு சாத்து சாத்திவிட்டு, அவர்களை மனைவியின் பக்கமாய் தள்ளிவிட்டார். ஆவேசமாய் பேசினார்.
"இந்த அளவுக்கு பேச வந்துட்டியாடா - அண்ணன் பிள்ளைய வளர்க்கிறதைவிட, தென்னம் பிள்ளைய வளர்க்கலாம்' என்கிறது சரியாப் போச்சு. ஆனாலும், உன் படிப்ப கெடுத்துட்டேன் என்கிற பழி பாவத்திற்கு நான் ஆளாக விரும்பல. இன்னும் ரெண்டு மாசம்தான் இருக்குது. எப்படியாவது காலேஜுக்குப் போ. அடுத்த வருஷம் நம்ம ஊர்ப்பக்கம் இருக்கிற டவுனுல உன்னை சேர்த்துடுறேன். நடந்தது நடந்ததாய் இருக்கட்டும். எம்மா.... உன்னத்தாம்மா லட்சுமி.... உன்னை கையெடுத்து கும்பிடுறன்.. ரெண்டே ரெண்டு மாசம் பொறுத்துக்கம்மா.... ஒனக்கும் எனக்கும் ஊருக்குப் போகும் போதெல்லாம், தென்னை மரத்துல ஏறி, இளநீர் பறித்து கொடுத்த பிள்ளம்மா - அப்படிப்பட்ட இவன் இப்ப எப்படி இந்த நிலைமைக்கு ஆளானான்னு புரியல. டேய் செல்வா! நாளையிலிருந்து காலேஜ் போகணும்."
"போமாட்டேன்."
“ஏன் போகமாட்டே ?”
"போகப் பிடிக்கல."
"சித்தப்பா சொல்றத கேளுடா. எதை இடையில் விட்டாலும் படிப்பை விடக்கூடாதுடா...”
"நீங்க என்ன சொன்னாலும் கேக்கறேன்.... ஆனால் காலேஜுக்கு மட்டும் போகமாட்டேன்."
"அப்போ ... நீ இந்த வீட்ல இருக்கிறதுல என்னடா அர்த்தம்?"
செல்வா, அந்த அறைவாசல் இடைவெளியில், சித்தப்பா வையும், சித்தியையும் தன்னை அறியாமலே மோதித் தள்ளியபடி, கட்டிய லுங்கியோடு, போட்டிருந்த சட்டையோடு வாசல்வரை நடந்தான். வாசல் வரை நடந்தவன், வீதிக்கு வந்ததும், ஓட்டமும் நடையுமாகப் போனான். பின்னர் ஒரேயடியாய் ஓடுவதுபோல் ஓடினான்.

