Chapter 2

படித்துக் கிழித்தான் என்று இளக்காரமாக சொல்வார்களே, அந்த சொல்லடையை சிறிது மாற்றி, செல்வாவை, எழுதிக் கிழித்தான் என்று சொல்லலாம். எழுதுவதும், எழுதிய காகிதத்தை சுக்கு நூறாய் கிழித்துப் போடுவதுமாக இருந்தான். அந்த அறை முழுவதும், குப்பைத் தொட்டி போல் தோன்றியது. போதாக் குறைக்கு எழுதிக் கிழித்த காகிதக் கூறுகள், மேலே சுற்றிய மின்விசிறியினால், அவன் முகத்தில் அடிப்பது போல அரை குறை வார்த்தைகளோடு முட்டி மோதின. காகிதத்தைக் குத்திய பேனா முள், அவன் தலைக்குள் வண்டாக மாறி குடைந்து கொண் டிருந்தது. களைத்துப் போன தலையும், துடித்துப் போன கண்களும், வலித்துப் போன முன் நெற்றியும் அவனுக்கு எரிச்சலை கொடுத்தன. தலை, பூமியைப் போல் தன்னைத்தானே சுற்றிக் கொண்டிருந் தாலும், அதே பூமி சூரியனைச் சுற்றுவது போல், அடுத்த வீட்டிற்கு அடுத்த வீட்டிலுள்ள கவிதாவை, மானசீகமாகச் சுற்றிக் கொண்டிருந்தது.

கவிதை எழுதுவதற்காக, காகித கற்றைகளை அடுக்கி வைப்பதிலேயே அவனுக்கு அரைமணி நேரம் ஆகிவிட்டது. ஒரு கவிதையின் தரம், அதைத் தாங்கும் காகிதத்தில் இருப்பது போல், ஒரு மடிப்போ, பிடிப்போ, கரும்புள்ளியோ, செம்புள்ளியோ இல்லாத காகிதங்களை "பேடில்" சொருகினான். ஆனாலும் அவன் எழுதியவை "பேடாக' இருப்பது, அவனுக்கே துல்லியமாக தெரிந்தது கவிதையின் தரத்தை உயர்த்துவ-தற்காக, சித்தப்பா வைத்துவிட்டுப் போன கோப்பிலிருந்த கணிப்பொறி காகிதங்களை எடுத்தான். எவ்வளவுக்கு எவ்வளவு அவை லேசாய் இருந்தனவோ, அவ்வளவுக் அவ்வளவு பளபளப்பாக இருந்தன.

செல்வா, கவிதாவை மானசீகமாக முகத்திற்கு எதிராக முன்னிருத்திக் கொண்டே, எழுதப் போனான். மனதிற்குள் அந்த கவிதாதான் சுரந்தாளே தவிர, கவிதை சுரக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால் அவன் மனதிற்குள் அவள் வெள்ளப் பிரவாகமாக வந்து கொஞ்சம் நஞ்சம் உழைத்த கவிதைப் பயிர்களை அடித்துக் கொண்டு போய்விட்டாள்.

செல்வா, தன் தலையிலேயே அடித்துக் கொண்டான். ஒரு படைப்பாளியின் படைப்பை படிக்கும் பொழுது, 'நாமும் இப்படி எழுதலாம் போலிருக்கிறதே' என்று ஓர் உணர்வு வந்தால், அது படைப்பாளிக்கும் படைப்பிற்கும் கிடைத்த வெற்றி என்று எங்கேயோ ஒரு இலக்கியக் கூட்டத்தில் இவன் நிசமாகவே மழைக்கு ஒதுங்கிய போது, ஒரு பிரபல எழுத்தாளர் பேசியது நினைவுக்கு வந்தது. அப்படிச் சொன்னவர் கவிஞர்கள் பாரதி, பாரதிதாசன், கண்ணதாசன், உடுமலை நாராயணகவி, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், சுரதா, கே.சி.எஸ். அருணாசலம், டாக்டர் தயானந்தன் பிரான்ஸிஸ், தணிகைச் செல்வன், இன்குலாப், வைரமுத்து, வாலி, அப்துல் ரகுமான், ஈரோடு தமிழன்பன், மு. மேத்தா, அறிவுமதி, பழனிபாரதி ஆகியவர்களை மேற்கோள் காட்டினார். இவர்களுடைய கவிதைகளை இவன் படித்தானோ படிக்கவில்லையோ, அந்த எழுத்தாளர் மேற்கோள் காட்டிய வரிகளை தன்னாலும் எழுத முடியும் என்ற ஒரு நம்பிக்கை வந்தது. அப்போதே, தானும் ஒரு கவிஞன்தான் என்ற முடிவுக்கு வந்துவிட்டான் ஆனால், ஒரு வரிகூட கவித்துவ வரியாக வரவில்லை .

செல்வாவுக்குள் ஒரு பொறி.... எலிப்பொறி மாதிரியான திருட்டுப் பொறி. இந்தக் கவிஞர்களின் கவிதைகளையே திருடி அங்குமிங்குமாய் மாற்றி அசல் சினிமாக் கவிஞனாய் ஆகி விடலாமா என்று நினைத்தான். பள்ளிக்கூடத்தில் இவன் படித்த சங்ககால, இடைக்கால, சிற்றிலக்கிய கால கவிதைகளை கையாண்டு இப்போது பல சினிமாக் கவிஞர்கள் காரோடும், பேரோடும் இருப்பதை அறிவான். ஆனாலும், எழுத்தாளர் கோடி காட்டிய கவிஞர்களில் பலர் காதல் சுவை சொட்டச் சொட்ட எழுதவில்லை. "காடு விளைஞ்சென்ன மச்சான், நமக்கு கையும் காலும் தானே மிச்சம்." என்ற பட்டுக்கோட்டையார் பாடலை இப்படி மாற்றி எழுதலாமா? "கடற்கரை தனித்திருக்கு... கை காலு குறுகுறுக்கு.... கடலோரம் போய் கண்ணே கற்பனையை ஈடேற்ற வா பெண்ணே." என்று உல்டாவாக்கலமா...? 'வாவுக்கு இருபொருள் கொடுக்கலாமா...?

செல்வாவிற்கு மனசாட்சி உறுத்தியது. அதோடு கவிதா, அவன், தன்னை பற்றி புதுக் கவிதையில் வர்ணிக்க வேண்டும் என்றாள். மரபுக் கவிதை கூடவே கூடாது என்று ஆணையிட்டாள். இவன், இந்த இரண்டிற்கும் உள்ள வேறுபாட்டைக் கேட்டபோது, செல்வம் என்றால் மரபு. செல்வா என்றால் புதுக்கவிதை' என்று ஒரு ஆசிரியை போல் அச்சுறுத்திச் சொன்னாள். அவ்வப்போது பத்திரிகைகளில் புதுக்கவிதைகளை படித்து அனுபவத்தில், இம்புட்டுதானா' என்கிற அலட்சியத்தோடு, அவளிடம் ஒப்புக் கொண்டான். இப்போதுதான் புரிந்தது அனுபவத்தில் அவள் இடக்கு மடக்கில் மாட்ட வைத்து விட்டாள் என்பது; முதலில் கவிதையாம். அதற்கு பிறகுதான் குறைந்த பட்ச தீண்டலாம். அவளை சந்திக்க வேண்டும் என்றால் புதுக்கவிதையோடு வர-வேண்டுமாம்.

இன்று மாலையில், கடற்கரையில் அவளைச் சந்திப்பதாக ஏற்பாடு. இப்போதோ நள்ளிரவு. சித்தப்பாவின் குழந்தைகள் ஏழு வயது அருணும், மூன்று வயது சுபேதாவும் அவன் படுக்கைக்கு இருபுறமாக படுத்திருக்கிறார்கள். குறட்டைக்கூட விடுகிறார்கள். அந்த குறட்டை அளவிற்குக்கூட கவிதை வரவில்லை . ஒருவரி கிடக்கட்டும், ஒரு வார்த்தை கூட வரவில்லை.

இதற்குள் சித்திக்காரி பாத் ரூமுக்கு போய்விட்டு வந்தாளோ என்னமோ, விளக்கு எரிவதைப் பார்த்துவிட்டு ஷாக் அடிப்பது மாதிரி கத்தினாள்.

"இப்படி விளக்கெரிஞ்சா கரண்ட் பில் யார் கொடுக்கிறது? கொஞ்சமாவது பொறுப்பு வேண்டாம்? பெரிய படிப்பு படிக்காராம் பொல்லாத படிப்பு. லைட் ஆப் பண்ணுடா! குழந்தைங்க தூக்கம் கெடும் என்கிற எண்ணமாவது வேண்டாம்? அற்பனுக்கு பவுசு வந்தா அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பானாம்! தூங்குற ராத்திரியிலுமா லைட்டு."

செல்வாவின் முகம் சுண்டிப் போயிற்று. சித்திக்காரி, இப்படி குத்திக் காட்டுவது வழக்கம்தான். அந்த வழக்கமான ஏச்சை வாங்கிக் கொள்வதை, இவன் ஒரு பழக்கமாக்கிக் கொண்டவன்தான். ஆனாலும், கவிதா உள்ளத்தில் இருக்கும் இந்த சமயத்தில், சித்தி அப்படிக் கத்தியது சுய அனுதாபத்தை கொடுத்தது. விளக்கை அணைக்க மறந்தவனாய், தனது வருத்தத்திற்கு அடைக்கலம் தேடுவதுபோல், கவிதாவின் காதலையும், கடற்கரையையும் நினைத்துக் கொண்டான். அவன் கண் முன்னால் கடற்கரை தோன்றியது. கவிதா தோன்றினாள். மற்ற யாரும் தோன்றவில்லை அந்தச் சந்திப்பு நிகழ்ச்சி பிம்பங்களாய் வந்து கொண்டிருந்தன.