Chapter 14
சங்கரி , மீண்டும் நகங்களைக் கடித்தாள். விரல்களுக்குச் சொடுக்குப் போட்டாள். வாசல் பக்கம், பட்டும் படாமலும் கண் போட்டாள். அது பயத்தாலா, பாசத்தாலா என்பது அவளுக்கே புரியவில்லை. அவன் கேட்ட, கேட்கத்தகாத கேள்விகள் இன்னும் மனதைக் குத்தின. இத்தனை கேள்விகளுக்குப் பிறகும், அவனுடன் வாழ வேண்டியது தேவையா என்று ஒரு கேள்வி. அதே சமயம், பெற்றோரைத் திட்டிய அம்மாவை, அவன் அதட்டியதும், அவர்களைத் தனது சிகிச்சைக்குப் பணம் கொடுக்க வேண்டாம் என்று தடுத்து, தானே அத்தனை செலவுகளையும் ஏற்றுக் கொண்டதாகக் கூறப்பட்டதும், அவளுக்கு ஒரு இனிமையான நினைவாக வந்தது. இரு வித நினைவுகளும், அவளை இருபக்கமாக இழுத்தன. பழைய நரகம் மீளுமோ, புதிய சொர்க்கம் கிடைக்குமோ .......
இப்போது, அவள், அந்த அறை வாசலை நேருக்கு நேராய்ப் பார்த்தாள். மனோகரைக் காணவில்லை. மனம் பட படத்தது. எழுந்து அறையில் உலாவினாள். டீப்பாயிலிருந்து கீழே விழுந்த ஒரு வெண்கல டம்ளரை, எடுத்து மேஜையில் வைத்துவிட்டுத் திரும்பிய போது....
மனோகர், அவள் எதிரே நின்றான். கைகளைக் குறுக்காய்க் கட்டி, அவளை அவ்வப்போது பார்த்துப் பார்த்து தலை கவிழ்ந்தான். ஏதோ பேசுவதற்காக, முகத்தை முன்னோக்கி நிமிர்த்தப் போனான். முடியவில்லை. முயன்று, முயன்று பார்த்தான். கண்கள் தான், கசிந்தன. அவள், எடுத்த எடுப்பிலேயே தன்மீது தாவி, விழுந்து அழுவாள் என்று எதிர்பார்த்த அவனுக்கு, ஒரு ஏமாற்றம். அந்த ஏமாற்றமே, அவன் மனதை வைரப்படுத்தியது. அவளது எந்த முடிவையும் மரியாதையுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று மனம் சொல்லிக் கொடுத்தது.
சங்கரி, இன்னும் அவனை நிமிர்ந்து பார்க்கவில்லை. அழுகையும், ஆத்திரமும், நீரும் நெருப்பும் போல் ஒருங்கே வந்தன. படுக்கையில் உட்கார்ந்து முட்டிக் கால்களைக் கட்டிக் கொண்டு முகம் புதைத்தாள். இடையிடையே அவனைப் பார்த்தாள். அவனைப் போலவே, பார்க்க நினைத்து, பார்க்க முடியாமல், முகம் நீட்டியும் தலை கவிழ்த்தும் அல்லாடினாள்.
இதற்குள், ஒரு உறுதியனான முடிவுக்கு வந்த மனோகர், கட்டிலின் எதிரே உள்ள பிளாஸ்டிக் நாற்காலியில் உட்கார்ந்தான். சட்டைப் பைக்குள் இரு மடிப்பாய் இருந்த ஒரு அரசாங்க முத்திரையிட்ட கவரை, ஒரு கையால் எடுத்தபடி, மறு கையால் அவள் முகத்தை நிமிர்த்தினான். அந்தக் கவரை, அவள் கைகளைப் பிரித்துத் திணித்தான். சிறிது நேரம் அசைவற்ற அவள் கண்களில், அந்தக் கவர் தாளாய்ப்பட்டது. அதன் மேல் அவளது பெயர், முகவரி...
மனோகர், அந்தக் கவரை, அவளிடமிருந்து எடுத்து, உள்ள இருந்த காகிதத்தை, அவள் முட்டிக் கால்களில் வைத்தான். அதைப் படிப்பதைத் தவிர, அவளுக்கு வேறு வழியில்லை. மூன்றாம் ஆளாய்ப் படித்தவளின் உடல் நிமிர்ந்தது. கால்கள் சம்மண மிட்டன. கண்கள் பிரகாசித்தன. சாஸ்திரிபவனில், அவள் சேர வேண்டிய அலுவலகத்திலிருந்து வந்துள்ள கடிதம், அவள் வேலையில் சேர ஒரு மாத கால அவகாசம் கொடுக்கப் பட்டிருக்கிறது. இந்த அவகாசம் முடிய இன்னும் இருபத்தைந்து நாட்கள் உள்ளன.
சங்கரி, பரவசப்பட்டாள் சாஸ்திரிபவனில், அவள் அப்போதே வேலை பார்ப்பது போன்ற பிரமை. சக தோழிகளுடன் பேசுகிறாள்.... சிரிக்கிறாள்....
அப்போது, அவளுக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியில், அந்த மகிழ்ச்சியை யாருடனாவது பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பது போல், அவனைப் பார்த்தாள். பார்க்கப் பார்க்க தனது மகிழ்ச்சி, மடிந்து, அவனது கோலம் மனதைக் குடைந்தது. பத்து நாளையத் தாடி; கசங்கிப் போன உடை, உள்ளுக்குள் போன கன்னங்கள். அய்யோ, இது என்ன அலங்கோலம்'
மனோகர், தட்டுத் தடுமாறி தழுதழுத்த குரலில் விளக்கினான்.
"நீ சேரவேண்டிய அலுவலகத்துக்குப் போய், தலைமை அதிகாரியைச் சந்தித்தேன். உனக்கு சுகமானதும், வேலையில் சேர்த்திடுவேன்னு அவகாசம் கேட்டேன். உடனே, அந்தப் பெரிய மனிதர், 'வெளியூர்ல அவங்க அப்பாவுக்கோ , அம்மாவுக்கோ சீரியஸ்னும், இதனால் ஒங்க ஒய்பு அங்கே, போயிருக்காங்கன்னும் ஒரு லெட்டர் எழுதிக் கொடுக்கச் சொன்னார். ஒனக்கு சுகமில்லைன்னு சொன்னால், மெடிகல் சர்டிபிகேட்டில் பிரச்சினை வரும் என்றார். நானும், ஒங்கம்மா, மதுரையில் படுத்த படுக்கையாய் இருக்கிறதாய் எழுதிக் கொடுத்தேன். எந்த நேரம் பொய் சொன்னேனோ , அது எங்கம்மா விஷயத்துல மெய்யாயிட்டு..."
சங்கரி, அவனை நேருக்கு நேராய்ப் பார்த்து, முதல் தடவையாக அதே சமயம், எதார்த்தமான குரலில் கேட்டாள்.
"என்னாச்சு.... என்னால எல்லாருக்குமே பிரச்சினைதான். என்னாச்சு..."
"பயப்படும்படியா இல்ல நாலு நாள் படுக்கை வாசம். இப்போ பக்கத்து வீட்டுக்காரனைத் திட்டுற அளவுக்குத் தேறிட்டாங்க. ஐ.... ஆம் ஸாரி சங்கரி.... ஒன் விஷயத்துல, அரக்கத்தனமா நடந்துக் கிட்டேன்னு, எங்கம்மாவே என்னைத் திட்டுறாங்க....”
சங்கரி, சகவாச தோசத்தில் கேட்பது போல, கேட்டாள்.
"ஒங்க அக்காவுக்கு ஏதாவது செய்தீங்களா..."
"ஆமாம். என் போலீஸ் எஸ்.பி. பிரெண்டைப் பார்த்தேன். அவரு, எங்க மாவட்ட எஸ்.பி. கிட்டே பேசினார். இரண்டு நாளுல அக்காகிட்டே தகராறுக்குப் போன அத்தனை பேரும், இங்கே வீட்டுக்கு வந்தாங்க. என் காதைப் பிடித்துத் திருகுனவன் முதல் இளக்காரமாய்ப் பார்த்தவனுங்க வரை அத்தனை பேரும் வந்தாங்க... காலுல விழாத குறையாக் கெஞ்சினாங்க. அக்காவும் சமரசத்திற்குச் சம்மதிச்சிட்டாள். பிரச்சினை தீர்ந்துட்டு."
"கடைசில... எல்லாரும் தர்மத்தை விட, போலீஸுக்குத்தான் பயப்படுறாங்க.. ஒங்க அக்காவுக்கு.... நீங்க இருக்கீங்க தப்பிச்சிட்டாங்க.... இதை மாதிரி அதிகார பலம் இல்லாத அனாதைப் பெண்கள் என்ன செய்வாங்க? உதைக்கிற காலுலதான் விழணுமா? அடிக்கிற கையைப் பிடித்துத்தான் கெஞ்சணுமா?"
சங்கரி, பாதிக் கண்களை மூடியபடி, மனோகரைப் பார்த்தபோது, அவன், அவளைச் சந்திக்க முடியாமல், முழுக் கண்களையும் மூடினான். என்ன சொல்கிறாள்? அவளோட நிலைமையைச் சொல்லாமல் சொல்கிறாளா... பேசிட வேண்டியதுதான்... முழுமையாகப் பேசி.... முடிவை அவளிடம் விட்டுவிட வேண்டியதுதான். எந்த முடிவையும் ஏற்றுக் கொள்ளத் தயாராக வேண்டியதுதான்.
மனோகர், நாற்காலியில் நிமிர்ந்து உட்காருகிறான். மனம், விரக்தியையும், பற்றையும் விலக்கித் தள்ளியது. வாய் அதன் வெளிப்பாடாகியது.
"ஒன் விஷயத்தில், நான் ஒரு மிருகமாகவும், எனக்கு நானே பித்துக்குளியாகவும் நடந்துக்கிட்டேன். இதற்கு, டாக்டர், பல்வேறு பின்னணிக் காரணங்களைச் சொல்கிறார். ஒனக்கு, வலிப்பு வந்தது எப்படி, உன்னை மீறிய செயலோ... அப்படித்தான் நான் நடத்திய ஆர்ப்பாட்டமும், அடித்த கூத்தும், என்னை மீறிய செயல் என்கிறார். ஆனாலும், அவர் சாக்கில், நான், நடந்து கொண்ட விதத்தை நியாயப்படுத்த விரும்பல... உன்கிட்டே மன்னிப்புக் கேட்டுக்கிறேன். தயவுசெய்து என்னைப் பேச விடும்மா..."
"இப்போ... நான், எல்லா அம்சங்களிலும் மேன்மைப்பட்டதாய் நினைக்கேன். டாக்டரும் அதைத்தான் சொல்கிறார். இனிமேல் என்னோட சேர்ந்து வாழ்வதும், வாழாததும் ஒன்னோட உரிமை. பிளீஸ் பேச விடு... நீ என்னோட வாழ்வதற்கு வசதியாய் நானும் நடந்துக்குவேன். டாக்டர் சொன்னது மாதிரி, நம் இரண்டு பேருக்கும் சுற்றுப்புற மாற்றம் அவசியம். ஒன் முடிவு எப்படியோ... நான், வீடு பார்க்கேன். உனக்குச் சம்மதமுன்னால், புது வீடு கிடைக்குற வரைக்கும், ஒன்னோட ஊருக்கே வரத் தயாராய் இருக்கேன். ஊர்க்காரன் அடங்கிட்டதால், அம்மா, அக்காவோட ஊருக்குப் போகப் போவதாய் ஒத்தக் காலில் நிற்கிறாள்"
"இனிமேல், நீ சொந்தக் காலில் நிற்கப் போகிற சுயேச்சையான பெண் கணவன் கையை எதிர்பார்க்கிற ஒரு மனைவியின் அன்பு, மாசு, மருவற்று இருந்தாலும், சில சமயம் அது கட்டாயத்தின் பேரிலும் வரலாம். ஆனால், வேலைக்குப் போகிற ஒரு மனைவியின் அன்பு , எந்தக் கட்டாயத்திற்கும் உட்பட்டதல்ல அந்த அன்பு, நீர் தேக்கமல்ல. தானாய்ப் பீறிடும் நீரூற்று ஒன்கிட்டப் பேசின பிறகு, என் மனம் லேசானது மாதிரித் தெரியுது. ஒன்கிட்ட மனைவியாய்ப் பேசற உரிமையை, நீ தராமல் நான் எடுக்கத் தயாராயில்லை . ஒன்னை ஒரு தோழியாய் நினைத்துத்தான் பேசுறேன். நான் பேசுறதுல, ஒனக்குச் சந்தோசமோ- இல்லியோ எனக்கு ஒரு நிம்மதி. காரணம், நானும் ஒன்னை மாதிரி ஒரு வகையிலே, அனாதரவான----."
மனோகர், விம்மினான். உடனடியாய் அந்த விம்மலை, அடக்கினான். தனக்குத்தானே ஆணையிட்டான். அழுது ஆதாயம் தேடப்படாது நான் வயதுக்கு வந்தப் பெரியவன். அழமாட்டேன். எந்த முடிவையும் ஏற்றுக்கொள்வேன்.'
யந்திர சங்கரி, பெண்ணானாள். அந்தப் பெண், மெள்ள மெள்ள மனைவியாக மாறிக் கொண்டிருந்தாள். இந்தச் சமயத்தில், மனோகரும் யதார்த்தக் குரலில் கேட்டான்.
"இப்போ , எனக்கு ஒரு பதில் வேணும். சங்கரியை, இனிமேல் நான் எப்படிப் கூப்பிடணும்? வழக்கம் போல் நீ என்றா, இல்லை நீங்கன்னா... ரெண்டு எழுத்துத்தான் வித்தியாசம். ஆனால், இது நம்மை ரெண்டாகவும் பிரிக்கலாம்; ஒன்றாகவும் ஆக்கலாம். என் முடிவைச் சொல்லிட்டேன். அதேசமயம், சங்கரி முடிவையும் மதிக்கிறேன். மனசு கேட்கல... நான் நடந்துகிட்டதுக்குப் பிராயச்சித்தம் செய்யணும். எது என்கிறது எனக்கு இப்பத் தெரியணும். இல்லாட்டியும் - நாளைக்குச் சொல்லலாம்."
சங்கரி, மனோகரை மலங்க மலங்கப் பார்த்தாள். அவன், கண் கலக்கத்தில், அவள் கண்கள், கசிந்தன. ஒரு விநாடி அவனையே அசைவற்றுப் பார்த்தவள், மறு விநாடி அவன் மேல் சாய்ந்தாள். அவன் கழுத்தை இரண்டு கரங்களாலும், சுற்றி வளைத்து, அவனை தன் பக்கமாகச் சரித்தாள். ஏதோ பேசப் போனவனின் வாயைப் பொத்தினாள். குலுங்கிக் குலுங்கி அழுதழுது, அவனையும் குலுக்கினாள். அவன் தோள்களை, அழுத்தப் பற்றி, அவன் கழுத்தில் முகம் போட்டாள். சத்தம் போட்டே கத்தினாள்.
"நான் போகமாட்டேன். ஒங்கள விட்டுட்டுப் போகமாட்டேன். என்ன ஆனாலும் சரி... எப்படி ஆனாலும் சரி... நீங்க என்னை விட்டுப் போறதுக்கு விடமாட்டேன் - பார்த்துடலாமா"
சங்கரி, அவனைச் சவாலாகப் பார்த்தாள். ஒரு குழந்தையைப் போல பார்த்தாள். அவனை, பொய்யடியாய் , கன்னத்தில் அடித்தாள். தலையில் குட்டினாள். அவன் சிரித்தபோது, இவள் அழுகை விக்கலாகி, திக்கலாகி, அவன் கழுத்துக்கு இன்னொரு முகம் முளைத்ததுபோல் மவுனமாய் முற்றுப் பெற்றது. அவளது கண்ணீர், மழை விட்ட தூவானமாய், அவன் கழுத்து மேட்டில் துளித் துளியாய் பல்கிப் பரவி நின்றது. அந்த ஒவ்வொரு துளியும், அவன் மனதில் ஒவ்வொரு நதியாய்ப் பிரவாகம் எடுத்தது. அத்தனை நதிகளும், ஒரு மகாந்தியாகி, சங்கரிக்குள் சங்கமித்தது.
கடலும் நதியும் ஒன்றானதில், அவர்களது கரங்களும், கால்களும் அலைகளாய் ஆர்ப்பரித்தன. நேரத்தை இழுத்துப் பிடித்த அலைகள் - இயக்கத்தை நிறுத்தாத புதிய புதிய அலைகள்.
*****

