Chapter 13
"ஒரு பெண், தாம்பத்ய உறவில் சுகம் பெற வேண்டும்; நிறைவு பெற வேண்டும். இதற்கு அவளுக்கு முழுமையான உரிமை உண்டு. இந்த உரிமை மறுக்கப்பட்டால், அது சட்டப்படி, மனைவிக்கு இழைக்கப்படும் கொடுமைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. பிறக்கும்போதே, கோடிக்கணக்கான சின்னஞ்சிறு முட்டைகளை உள்ளடக்கிய ஒரு பெண், தாய்மை அடைவதற்கும் தடங்கல் ஏதும் இருக்கக்கூடாது. இதனாலேயே ஒங்க கணவரை , தொழில் மரபையும் மீறி அதட்டுனேன். ஆனாலும்..."
கட்டில் சட்டத்தில், தலையணையை சுவரோடு சுவராய் போட்டு, அதன் மேல் தலை சாய்த்து கிடந்த சங்கரி, எதிரே பிளாஸ்டிக் நாற்காலியில் உட்கார்ந்தபடி, தனது முகம் பார்த்துப் பேசியவளின் வார்த்தைகளை, வேத வாக்காகக் கேட்டுக் கொண்டிருந்தாள். ஆனாலும்' என்று அவள் நாக்கை இழுத்துப் பிடித்த போது, இவள் முகமும், தொலைக்காட்சிப் பெட்டியில் தடங்கல் ஏற்படும்போது வருமே, சுழிப்புக் கோடுகள், அவை போல் ஆனது. இந்த ஆனாலும்' என்கிற வார்த்தை, சொன்னது அனைத்திற்கும் சூடுபோடும் பதம் என்பதை உணர்ந்தவள் போல், சங்கரி, அந்தக் கவுன்சிலிங் பெண்ணை கண்களால் பரிசீலித்தாள். சம வயதுக்காரி; மனோ தடுமாற்றங்களை தீர்த்து வைப்பதற்காக நியமிக்கப்பட்டவள் . உடம்பு பளபளத்தாலும், உடையில் படாடோபம் இல்லை. குண்டு மாம்பழ முகம். ஒவ்வொரு வார்த்தையும் கேட்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பவள். சங்கரிக்கு, தனது அடுத்த கருத்தை ஏற்றுக்கொள்ள ஆயத்தம் கொடுத்துவிட்டு, அவள் தொடர்ந்தாள்.
"பாலியல், இனப்பெருக்கம் போன்றவற்றில், நாம் இயற்கையிடம், குறிப்பாகத் தாவரங்களிடமிருந்து நிறையக் கற்றுக் கொள்ள வேண்டும். நம் முழங்கால் உயரத்திற்குச் சுருட்டை இலைகளோடு கிடக்குதே பிரளிச் செடி,, அது வண்ணத்துப் பூச்சி, ஆரம்பத்தில் புழுவாய் இருப்பது போல், தரையோடு தரையாய் சின்ன சுருட்டை முளையாய்த் தோன்றும். இப்படிப் பல முளைகள் சிதறிக் கிடக்கும். இந்த முளைகள் எல்லாமே பெண் பாலாய் இருந்தால், இந்த முளைகளில் ஒன்று வேகமாய் வளர்ந்து, பெண் செடியாகி, ஒருவித இனமாற்றத் திரவத்தைச் சுரக்கும். இந்தத் திரவம், தரைக்கு வந்து, நீரில் கரைந்து, பிற முளைகளில் ஊடுருவி, அத்தனை பெண் முளைகளையும், ஆண் செடிகளாக்கி விடும். இதில் இருந்து ஒங்களுக்கு ஏதாவது புரியுதா சங்கரி..."
சங்கரி, தலையணையை எடுத்துக் கட்டிலில் போட்டுவிட்டு, சம்மணம் போட்டு உட்கார்ந்து, முதல் தடவையாகப் பேசினாள்.
"புரியுது. சொல்ல வந்ததை முழுசா... முடியுங்க"
"அப்படில்ல. ஒங்களுக்கு என்ன புரிந்திருக்கு என்கிறது எனக்கும் புரிந்தால்தான், நான் மேற்கொண்டு, சொன்னதைப் புரிஞ்சுகிட்டே பேச முடியும். நாம் என்ன பேசுகிறோம் என்கிறதைப் புரிஞ்சிட்டுப் பேசினால், பிரச்சினையில் பாதியளவு போயிடும். சொல்லுங்க மேடம்?”
"அதாவது, கணவனை, முழுமையான ஆணாக்குவதில், ஒரு மனைவிக்கும் பொறுப்பு இருக்குதுன்னு சொல்ல வாரீங்க.... நான் இதுல தோற்றுப் போயிட்டேன்."
"தோற்கல. தோற்றுப் போனதாய் நினைக்கிறீங்க. கணவன் - மனைவி உறவில், மூன்று மாத காலத்தில் ஏற்படும் முட்டுக்கட்டை, ஒரு முட்டுச் சந்தல்ல. ஆண்டுக் கணக்கில், உங்களைவிட மோசமான நிலையில் இருந்தவர்களுடைய பிரச்சினைகளை அடியோடு தீர்த்து வைத்திருக்கிறோம். ஒங்க பிரச்சினை ஒங்களுக்கு அசாதாரணம். ஆனால், எங்களுக்கு சாதாரணம். மனோகரை, கணவராய்ப் பார்க்காமல், ஆண்மைக் குறைவில் அல்லாடுகிற ஒரு வாலிபனாய்ப் பாருங்க!"
"ஆண்மைக் குறைவு உள்ளவர்கள், எப்படி நடப்பாங்கன்னு அந்தக் காலத்திலேயே விஞ்ஞான ஜாதகம் கணித்திருக்காங்க. அதன்படிதான், ஒங்க கணவர் நடந்துக்கிட்டார். அதே ஜாதகத்தில் பரிகாரமும் இருக்குது. அந்தப் பரிகாரம், ஒங்க கணவருக்குக் கொடுக்கப்பட்டு வருது. பொதுவாய், பணக்காரக் குடும்பங்களில் இப்படிப்பட்ட பிரச்சினைகள் வந்தால், ஓசைப்படாமல் விவாகரத்து ஏற்படும். அடிமட்டக் குடும்பங்களில் ஏற்பட்டால், கட்டிய பெண்ணே ஓட்டை வண்டின்னு' கணவனை வெளிப்படையாய் திட்டித் தீர்ப்பாள். நானே பலதடவை, இப்படிப்பட்ட வசவுகளை கேட்டிருக்கேன். ஆனால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் தவிப்பது, நாம் இருக்கிற நடுத்தர வர்க்கந்தான்."
"என்னை ... என்னதான் செய்யச் சொல்றீங்க...?"
"அவருக்கு இன்னும் ஒரு சந்தர்ப்பம் கொடுங்க. இன்னும் இரண்டு மாத புரபேசன். அதாவது பரீட்சார்த்த காலம் இந்தக் கால வரம்புல, நீங்க அவரை குத்திக் காட்டக்கூடாது. அவரைப் பாசத்தோடு அணுகணும். ஏமாற்றத்தை எந்த வகையிலும் காட்டிக்கப்படாது. இன்றைக்குப் பரவாயில்லிங்கன்னு பொய்கூடச் சொல்லணும். இது வள்ளுவர் சொல்றது மாதிரி, புரை தீர்ந்த பொய் அதுலயும் முடியலைன்னா, அப்புறம் இருக்கவே இருக்கு விவாகரத்து... மறுமணம்."
"நீங்க தப்புக் கணக்குப் போட்டுட்டிங்க! அவர் கிட்ட இருந்து, நான் விலகிப் போக நினைக்கிறது உண்மைதான் என் பெற்றோரால்தான் இந்த அறையில் முடங்கிக் கிடக்கேன். ஆனால், மறுமணத்தைப் பற்றி, நான் நினைத்தே பார்க்கல... பட்டது போதும்..."
'அப்படி நினைத்தால், நீங்கதான் பட்டுப் போவீங்க. விவாகரத்து செய்கிற எந்தப் பெண்ணுக்கும் மறுமணம் செய்ய உரிமை உண்டு. பழையவன் மாதிரிதான், புதியவன் இருப்பான் என்கிற அனுமானமே தவறு ஒரு பெண் தனித்து வாழ்வதாலேயே, அவளுக்குத் தனித்துவம் வந்துவிடாது. ஒங்க பெற்றோரின் நிம்மதிக்காவது, மறுமணம் செய்துக்கணும். இது பெற்றோருக்கு செய்கிற வைத்தியம். ஒங்களுக்கு, நீங்களே ஏற்படுத்திக்கிற புனர்வாழ்வு.''
"என்ன மேடம் நீங்க. எனக்குத் தோணாதையும் சொல்லிக் கொடுக்கிறீங்க. நான் எதுக்கும் லோலோன்னு அலையுற 'லோ டைப் இல்லை , வசந்திம்மா ."
வசந்தி, அவளைத் திடுக்கிட்டுப் பார்த்தாள். சங்கரி, லேசாய்ப் புன்னகைத்தில், அவளுக்கு ஆறுதல். அந்த ஆறுதலை மகிழ்ச்சி யாக்கி, சங்கரி பேசினாள்.
"அவரோடு வாழ்கிறதா... இல்லையா என்கிறதுல என்னால இன்னும் ஒரு முடிவு எடுக்க முடியலதான். அவரோட அடாவடித் தனங்களை, அவருடைய ஆரம்பகால இனிய சுபாவமும், நேர்மையும் இன்னும் பின்னுக்குத் தள்ளுது. ஆனால், என்னோட மாமியாரை நினைத்தால்...."
"அந்தம்மாவும் ஒரு மனநோயாளிதான். வாழ்க்கையின் அடிமட்டத்தில் பிறந்து, அடிபட்டு அடிப்பட்டு அந்தம்மாவுக்கு உள்ளூர ஒருவித உறிஸ்டிரியாவும், சேடிஸமும் வந்துட்டு... நீங்க இல்லாட்டால், அந்தம்மா, சொந்த மகனையும், மகளையும் கூட பாடாய்படுத்தி இருப்பாங்க. அந்தம்மாவுக்கு, ஏவுகணைத் தாக்குதல் தான் முக்கியம். இலக்கு முக்கியமல்ல. இப்போ , அவங்களுக்கும் கவுன்சிலிங்' செய்யுறோம். பாதி குணமாயிடும். நீங்க, கணவனைச் சந்திக்க, இப்போ தயாராய் இருக்கீங்க.. சரியா."
சங்கரி, நகத்தைக் கடித்தபோது, வசந்தி, டெலிபோனில் எட்டைச் சுழற்றி, ஆப்பரேட்டரிடம் லைன் கேட்டாள். உடனே, அவள், டாக்டர் சந்திரசேகரனிடம், சங்கரி, கணவனைச் சந்திக்கத் தயாராய் இருக்கும் விபரத்தைச் சொன்னாள். பிறகு, ஐந்தாறு நிமிடம் பேசினாள். பேசி முடித்துவிட்டு, டெலிபோன் குமிழை சரியாகப் பொருத்திவிட்டு உற்சாகமாகப் பேசினாள்
"வாழ்த்துக்கள் மேடம்! உங்கள் மனோவுக்கு, உடம்பு ரீதியில், எந்த குறையும் கிடையாது. ஒரு சராசரி ஆண்மகனுக்கு உள்ள அத்தனை உடலியல் நிறைவுகளும் அவருக்கு இருக்குதாம். மனம் கூட, இப்போது பாலியல் பயம் இல்லாமல் போய்விட்டதாம். ஆனாலும், பறவை போனாலும், கிளை ஆடுவதைப்போல சில காலத்திற்கு தடுமாறத்தான் செய்யும். அப்போது, நீங்கள் தான், தாங்கிக் கொள்ள வேண்டும் - இரண்டு விதத்திலும்..... சரியா...?"
சங்கரி, நகத்தை கடிப்பதை விட்டுவிட்டு, அவளை புன்முறுவலாய் பார்த்தபோது, "ஓ.கே. குட்லக் " என்று சிரித்தபடியே வசந்தி, போய்விட்டாள்.

