Chapter 12
உள்ளே வந்து உட்காராமல் நின்ற மனோகரை, டாக்டர் சந்திரசேகரன் ஆச்சரியமாகப் பார்த்தார். சொன்னபடி, எழுதிக் கொடுத்தது போல், குறிப்பிட்ட நாளில், குறித்த நேரத்தில் வந்துவிட்டான். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவதும், நேரம் தவறாமையும் நல்ல பழக்கங்கள் மட்டுமல்ல... பண்பாடுங்கூட... தன்னை மையமாக வைத்துச் சுழலாமல், பிறர் நலத்தையும் பேணும் ஆரோக்கியமான அணுகுமுறை. இதுவே மனநலத்திற்கு முக்கியமான காரணி... இவன் தேறிடுவான்.
"உட்காருங்க மிஸ்டர் மனோகர் ! ஏன் கிழவர் மாதிரி சாய்ந்து இருக்கீங்க? நிமிர்ந்து, நேரா உட்காருங்க.... மனம் எப்படி புற வெளிப்பாடுகளைத் தோற்றுவிக்குதோ.... அப்படி புற வெளிப்பாடுகளும் அகத்தை செப்பனிடும்."
மனோகர், நாற்காலியின் பின்பக்கம் சாய்த்துப் போட்ட முதுகை நிமிர்த்தினான். அதன் சட்டங்களில் கிடந்த கரங்களைத் தூக்கி, வயிற்றுக்கு அணையாய்ப் போட்டான். இதற்குள் டாக்டர், ரேக்கில் இருந்து ஒரு பைலை எடுத்தார். அதன் இரண்டு நீல உறைகளை அகலப்படுத்தி, அவற்றின் இடைவெளிக்குள் கிடந்த காகிதங்களைப் புரட்டினார். அத்தனையும் மனோகர் எழுதிக் கொடுத்தவை. அவற்றை, அவர் ஆழ்ந்து படித்திருக்கிறார் என்பதற்கு அத்தாட்சியாக, ஆங்காங்கே பச்சைக் கோடுகள் போடப் பட்டிருந்தன. பக்கவாட்டில் சின்னச் சின்ன குறிப்புக்கள்.
டாக்டர் சந்திரசேகரன், அவனை ஏறிட்டுப் பார்த்தார். அவனது நேர் கொண்ட தோரணையைப் பார்த்து, சுயச் சிரிப்பாய்ச் சிரித்து விட்டு, நாற்காலியில் படுக்க வைத்த தனது உடம்பை நிமிர்த்தினார். பிறகு, காகிதக் கத்தைகளுக்குள் கண்களைப் படர விட்டபடியே கேட்டார்.
"நீங்க எழுத்தாளரா.. மனோகர்?"
"நான் கெட்ட கேட்டுக்கு..."
''லுக் மிஸ்டர் மனோகர் ! உலகில் உள்ள சகல உயிரினங்களுக்கும், நாம் அனுதாபப்படலாம்; படணும் ஆனால், நமக்கு நாமே அனுதாபப்படுகிற ஒரு சுய அனுதாபம், ஒரு மனங்கொல்லி நோய். நான் நிசமாத்தான் சொன்னேன். மனோயியல் நிபுணர்கள் நல்லதுக்காக நடிக்கிறவர்கள் என்று ஒரு கருத்து இருக்குது . பாவலா செய்யுறவங்க என்றும் ஒரு எண்ணம் இருக்குது. இது தப்பான கருத்து. சைக்கியாட்ரிஸ்டுகளிலும் மெண்டல் கேஸ்கள் உண்டு. ஆனால், பொய்யர்கள் கிடையாது. அதனால, நான் சொல்வதை நீங்க நம்பணும்... ஒங்களுக்கு எழுத்து ஒரு கிப்டா கிடைத்திருக்கு. முயற்சி செய்தால் நீங்க மிகச் சிறந்த எழுத்தாளராய் மாறலாம். மனம் வைத்தால், அப்படி மாற முடியும். கெட்டுப்போன அருணகிரிநாதர்தான் திருப்புகழ் தந்தார். மனநோய் பீடித்த சார்லஸ் டிக்கன்ஸ்தான், டேல்ஸ் ஆப் டூ சிட்டிஸ், பிக்விக் பேப்பர்ஸ் முதலிய அற்புதப் படைப்புக்களைத் தந்தார். அதனால, கெட்டுப் போனதை, அல்லது மன மாற்றத்தைப் ஒரு அனுபவமாய் எடுத்து, நீங்க அதை எழுத்தில் ஆரோக்கியமாய் மாற்றலாம். நான் சொல்வது சரியா எழுத்தாளரே...."
மனோகர் மனதில் ஒரு குறுகுறுப்பு. சின்னதாய் ஒரு கம்பீரம். புன்னகைத்தான். டாக்டர் சந்திரசேகர் தொடர்ந்தார்.
"நான், சைக்கியாட்ரிஸ்ட் யூரலாஜிஸ்ட், செக்ஸாலஜிஸ்ட் அதோடு நல்ல வாசகன். நீங்க எழுதியதை, ஒரு நிபுணராய் படிக்கத் துவங்கி, ஒரு வாசகனாய் முடித்தேன். உதாரணத்திற்கு, நீங்க எழுதிய முன்னுரையை வாசித்துக் காட்டுறேன் பாருங்க.. இதை நீங்க எழுதியதாய் அனுமானிக்காமல், மனதை உதறிப் போட்டுவிட்டு, ரசிகனாய் கேட்கணும்."
டாக்டர். சந்திரசேகரன், அவன் எழுதிய முதல் பக்கத்தை படிக்கத் துவங்கினார்.
"தமிழகத்தில் பொதுவாக பலவகைக் கிராமங்கள் உண்டு. முதலாவது, சமபலத்தில் ஆன சாதிகளைக் கொண்ட கிராமம் இங்கே யானைக்குப் புலியிடம் பயம். புலிக்கு யானையிடம் பயம் என்பது மாதிரி பரஸ்பர பயமும் மரியாதையும் கொண்ட இந்த சாதியினர் பொதுவாய் அடித்துக்கொள்ள மாட்டர்கள். ஆனால், தப்பித் தவறி சாதிச் சண்டை வந்தாலோ, அது தமிழகப்போர் மாதிரி ஆகிவிடும். இரண்டாவது வகை கிராமம், சிறுபாண்மைச் சாதியும், பெரும்பான்மைச் சாதியும் கொண்டது. இந்த சாதியினர் அடக்கியும், அடங்கியும் போவார்கள். ஆனால், அடக்கப்படுவது அத்துமீறல் ஆகும்போது, இதர கிராமங்களில் பெரும்பான்மையாய் இருக்கும் இந்தக் கிராமத்தில் சிறுபான்மைச் சாதியினர், தம் சாதியின் பலத்தோடு ஆதிக்க சாதியை எதிர்த்துப் பொங்கி எழுவார்கள். இது மாவட்டப் போராக மாறும் மூன்றாவது வகைக் கிராமம், ஒரே ஜாதியைக் கொண்டது. இங்கே சாதிச் சண்டைக்குப் பதிலாக எந்தக் குடும்பம், பெரிய குடும்பம் என்ற பங்காளிச் சண்டைகள். எந்தத் தெரு, பெரிய தெரு என்ற வீதிச் சண்டைகள், கட்சிக் சண்டைகள், கோவில் சண்டைகள் என்று பலப் பல சண்டைகள் நடக்கும்."
"இதே சாதியம், மதங்களுக்கும் பொருந்தும். இவையும் மூன்று வகை. மூன்றும் மூன்றும் சேர்ந்தும், கிளை பிரிந்தும், யாருக்கு யாருடன் தகராறு என்று கண்டறிய முடியாத பெரும் போர்களைத் தோற்றுவிப்பதும் உண்டு. அதாவது, இரண்டாவது மூன்றில் ஒவ்வொன்றும், முதலாவது மூன்றில் எதில் சேர்கிறது? ஏன் சேர்கிறது? என்பது சேர்கிறவர்களுக்கும், சேர்த்துக் கொள்கிறவர் களுக்கும் புரியாது. சாதி - மதக் கலவரங்களில், இதுவே பெருங் கலவரமாகும். ஆனாலும், எப்படியோ, துண்டுப்பட்ட ஊர்கள் ஒன்றுபடும். ஆனாலும், இந்தச் சண்டைகள் ஜலதோசம் மாதிரி, சட்ட ஒழுங்கு நடவடிக்கையால் ஒரு வாரத்திலும், போலீஸ் தலையீடு இல்லாமல் ஏழு நாட்களிலும் தீர்ந்து போகும். 'மறப்போம்; மன்னிப்போம்.' என்ற தத்துவம், கொடி கட்டிப் பறக்கும்."
"இந்த ஆறுவகைக் கிராமங்களிலும், ஒரு வகை வீடோ அல்லது வீட்டுக் குவியல்களோ இருக்கும். இதற்கு ஒத்தை வீடு' என்று பெயர். இதில் இருப்பவர்களுக்கு ஒத்தை வீட்டுக்காரன்' என்ற பட்டப்பெயர். இந்தக் குடும்பத்தினரை, வந்தேறிகள் அல்லது வந்தட்டிகள் என்பார்கள். இந்த ஒத்தை வீட்டுக்காரக் குடும்பத்துடன் சண்டை என்று வந்தால், சொல்லுக்குச் சொல்... ஒத்தை வீட்டுப் பயலே.. ஒனக்கா இவ்வளவு திமிரு - என்கிற வசைச் சொல் வந்தபடியே இருக்கும். இந்த ஒத்தை வீட்டுக்குப் பங்காளி பலம் கிடையாது. பண பலமும் கிடையாது. ஓட்டுக்கள் குறைவு என்பதால், உள்ளூர் அரசியல்வாதிகளும் சீண்டுவதில்லை.”
"இந்த வகைக் குடும்பத்தை, சொந்த சாதிக்காரனும் அடிப்பான்; எந்த சாதிக்காரனும் அடிப்பான். எங்க வீட்டு நாயை எப்படி அடிக்கலாம்' என்று கேட்கும் ஊரில், இந்த ஒத்தை குடும்பத்திற்கு நாதி கிடையாது. இந்தக் குடும்பத்தினரை, யார் வேண்டுமானாலும் அடிக்கலாம். இவர்கள் சாதி இருந்தும், தள்ளாமல் தள்ளி வைக்கப்பட்டவர்கள். சமயம் இவர்களுக்குச் சமயத்தில் உதவாது. ஆனாலும், இப்படிப்பட்ட ஒத்தை வீடுகளில் சிலர், பெருத்த பங்காளிக் குடும்பத்தில் பெண் கொடுத்து, பாதுகாப்பைத் தேடிக் கொள்வார்கள். அத்தகைய பலமான பங்காளிக் குடும்பமும், இந்த ஒத்தை வீட்டில் பெண் எடுக்குமே தவிர, பெண் கொடுக்காது."
"இப்படிப்பட்ட பின்னணியில், எங்கள் வீடு ஒத்தை வீடு. இத்தகைய சூழலில் ஒதுங்கிப் போக வேண்டிய என் அம்மாவோ, கிராமத்து யதார்த்தம் புரியாத வாயாடி பட்டறிவு இல்லாத பாமரப் பெண். வெறும் உணர்வுகளால் ஆளப்பட்டவள். கெட்ட கெட்ட வார்த்தைகளை வாங்கிக் கொள்வதிலும், அவற்றைத் திரும்பிப் கொடுப்பதிலும் வல்லவள். எத்தனையோ பெண்களிடம், சில சமயம் ஆண்களிடமும் உதைபட்டுப் போனவள். கீழே விழுந்து கிடக்கும் போதும், எதிரிகள் முகத்தில் காலால் மண் வாரித் தூத்துவாள். அடிபட்டால் வலிக்கும் என்பதுதான் அவளுக்குத் தெரியும். அவமானமாயிற்றே என்பதை அறியாதவள் "
"ஒரு தடவை, வழக்கம் போல் ஒரு சண்டை அம்மாவின் வாய்க்கு ஈடு கொடுக்க முடியாத ஒரு தடியன், அவன் பேர் ராமசாமி. எங்கம்மாவைப் பார்த்து, நேத்துக்கூட பத்து ரூபா கொடுத்துட்டு ஒன்கிட்டே படுத்தேனடி..." என்று அபாண்டமாய்ச் சொன்னான். உடனே எங்கம்மா, அவனுடைய மனைவியின் 'வைப்பாளன்களை பட்டியல் போட்டுச் சொன்னாள் அவ்வளவுதான். ராமசாமி, அம்மாவை மல்லாக்கத் தள்ளினான். அவன் பெண்டு பிள்ளைகள், அம்மாவின் கால், கைகளைப் பிடித்துக் கொள்ள, ராமசாமி, ஒரு கூர்மையான கல்லை எடுத்து, அம்மாவின் நெற்றியில் இடித்தான். அம்மாவுக்கு மயக்கம் வரும்வரை குத்தினான். என் அம்மாவின் நெற்றியில் இப்போது கூட அது பள்ளத்தாக்காய் கிடக்கிறது. அதைப் பார்க்கும் போதெல்லாம் -- இப்போது கூட அந்தப் பள்ளத்தில் ஒரு கோரக் காட்சி எனக்குத் தென்படும். அப்போது எனக்கு வயது பன்னிரண்டு இருக்கலாம். ராமசாமியின் பிடறியில் அடிக்கப் போனேன். உடனே, அவன் பெரிய மகன் என்னைக் கீழே தள்ளி, வாயில் மண்ணைப் போட்டு, கை முஷ்டியால் இடித்தான். இந்தச் சமயத்தில், அப்பா வந்தார். பரமசாது. "என்னை அடிக்கிறதப் பார்த்துட்டு நிற்கிறியே... நீயும் ஒரு ஆம்பிளையா?" என்று அம்மாவிடம் வாங்கிக் கட்டும் பரம சாது. அதோடு பூஞ்சையான ஒல்லி உடம்பு.”
"ஆனாலும், அந்தச் சாதுக்குக் காடு கொள்ளாச் சினம் பொங்கியது. என் மார்பில் உட்கார்ந்திருந்த ராமசாமியின் மகனை மல்லாக்கத் தள்ளினார். ஒரு கல்லைத் தூக்கி, அம்மாவை ரத்தக் காடாக்கிய ராமசாமியின் மேல் போடப் போனார். அதற்குள், அந்த ஒற்றை மனிதர் அடிபட்டதே மிச்சம். பத்துப் பதினைந்து பேருக்கு மத்தியில் சுருண்டு விழுந்தார். ரத்தமும் சதையுமாய் மயங்கிக் கிடந்தார். அப்போதுதான், புல்லுக்கட்டுடன் வந்த அக்கா காந்தாமணி, ஒப்பாரியுடன், வாயிலும் வயிற்றிலும் அடித்தபடியே, ஐந்து கிலோமீட்டர் தொலைவு போலீஸ் நிலையத்திற்குப் போனாள் போலீஸ் வந்தது. கோபத்தோடு வந்தவர்கள், குணத்தோடு' போனது. ராமசாமிக் குடும்பம் கொடுத்த அடியில் 'வர்மம் ஏற்பட்டு வீட்டுக்குள்ளேயே முடங்கிப் போன அப்பா, ஒரு வருடத்தில் ஒரேயடியாய் முடங்கி விட்டார்.
டாக்டர் சந்திரசேகர், மேற்கொண்டு படிக்க முடியாமல், மனோகரை நிமிர்ந்து பார்த்தார். அவர் மனதில், அவரே முன்னால் சொன்ன இலக்கிய நயமும், வாசிப்புச் சுகமும் மரித்துப் போயின. மரித்தவை, மனித நேயமாய் உயிர் பெற்றன. அவர், மனோகரின் தோளைத் தட்டிக் கொடுத்தார். அவனோ, தட்டப்பட்டது தெரியாமல் தலை தாழ்த்திக் கிடந்தான். அந்த மொஸைக் தரை, சாணம் பூசிய வெறுந்தரையானது. மேல் தளம் பனையோலைகள் பதித்த கூரையாகிறது. அப்பா செத்துக் கிடக்கிறார். வெளியே அம்மா, ஊரைத் தூற்றி மண்வாரிப் போடுகிறாள். சிலர் திட்டுகிறார்கள். ஊர் வழியில் பிணம் போவாது என்று அவளை மிரட்டுகிறார்கள். பாவாடை-தாவணி அக்கா, அவன் தலையில் முகம் போட்டு விம்முகிறாள். ஈரப் பசையில், இருவர் விழிகளும் ஒட்டிக் கொள்கின்றன.
விநாடிகள், நிமிடங்களாய் மாறுகின்றன. எப்படிப் பேச்சைத் துவக்குவது என்று யோசித்துக் கொண்டிருந்த டாக்டருக்கு, மனோகரே இறுதியில் அடியெடுத்துக் கொடுக்கிறான்.
"அப்போதான்... அப்படின்னனா... இப்பவும் இப்படி... பட்ட காலுலயே படும்; கெட்ட குடியே கெடும் மாதிரி ஆகிட்டு."
டாக்டர், அவன் பேச்சைப் பிடித்துக் கொள்கிறார்.
"அப்போ ... அப்படி இருந்ததால் தான், இப்போ இப்படி இருக்குது. ஆமாப்பா.. ஒன்னோட பிரச்சினை, அடிப்படையில் செக்ஸ் பிரச்சினை அல்ல. ஆழ் மனதில் வேரூன்றிய பாதுகாப்பின்மை உணர்வு. அதுதான பீலிங் ஆப் இன் செக்யூரிட்டி வெளி மனதில் பாலியல் இயலாமை. வெளிப் பாடுகளாய் வேடம் போடுது. இந்த அடிமனப் பெரும் பயத்தை, நீக்கினால் தவிர, செக்ஸ் இயலாமையைப் போக்க முடியாது. ஒங்க அம்மா, சிறுமைப் படுத்தப்பட்ட போதெல்லாம் சிறுவனான நீ, எதிரிகளை அடிக்கக் கைகளைத் தூக்கி இருக்கே... பற்களைத் கடித்திருகிகே. பெரியவனாகாமல், போயிட்டமேன்னு வருத்தப் பட்டிருக்கே. இயலாமையில் துடித்திருக்கே. கற்களைத் தூக்கி வைத்துக்கொண்டு, அவற்றை எறிந்தால் என்ன ஆவோமோ என்று நினைத்து சும்மா இருந்திருக்கே”
"பன்னிரண்டு வயதில், அம்மா தாக்கப்பட்ட போது, நீயும் ஒரு பெரிய பையனால் தாக்கப்பட்டு, அவனை மாதிரி பெரியவனாய் ஆகாமல், போனதுக்கு வருத்தப்பட்டே .... சரியா?" ஆனாலும், யதார்த்தத்தின் சூடு தாங்காமல், பேன்டஸி எனப்படும் ஒரு கற்பனை உலகில் உலவி இருக்கே. எதிரிகளின் பெண்கள் ஒனக்கு ஆறுதல் சொல்வது போல் ஒரு கற்பனை. அவர்கள் ஒன் முகத்தோடு முகம் போட்டு முதுகைத் தட்டிக் கொடுத்திருக்கிறார்கள். ஒன் மேலே விழும் ஒவ்வொரு பெண்ணும் படிப்படியாய் கீழே போனாள். பாயில் விழுந்த பாவை, ஒனக்கு மெத்தையாகிறாள். அப்போதெல்லாம், ஒன் விடலை உடம்பில் ஒரு இயக்கம் ; ஒரு சுகம். விதவிதமான பெண்கள். பெரும்பாலும் உள்ளூர் எதிரிகளின் பெண்கள். இவர்கள் உன்னை அடிக்க வரும் அப்பன் மார்களுக்கு எதிராய் வெகுண்டு, உன் முன்பக்கத்தில் முதுகைப் போட்டு, அவரைக் கொல்லுமுன் என்னைக் கொல்லுங்கள்' என்று கேடயமாய்ச் சுசூளுரைத்தார்கள்."
"இப்படிப்பட்ட போலிக் கற்பனையும், நிசமான பாலியல் இயக்கமும் மெல்ல மெல்ல உங்களுக்கு ஒரு பழக்கமாகிறது. பழக்கம் வழக்கமாகி, அதுவே ஒரு போதை ஆகிறது. தெருச் சண்டைகள் நடக்கும் போதும், வரப்புகளை வெட்டி ஒன் வயலை ஆக்கிரமிப்புச் செய்த மிராசுதார்கள், ஒங்கம்மாவை சிரமப் படுத்தும்போதும், கல்லூரிப் படிப்பு சங்கடத்தைக் கொடுத்த போதும், இந்த பாலியல் பழக்கத்துடன் அடைக்கலம் ஆனாய்."
'சைக்கிளில் கல்லூரிக்குப் போகும் ஒன்னை, சின்னப் பிள்ளைகளில் இருந்து பெரிய பயல்கள் வரை, ஒன் கையில் கிடந்த கடிகாரத்தைச் சாக்காக்கி, ஓட்டைக் கடிகாரம். ஓட்டைக் கடிகாரம்.' என்று நையாண்டி செய்த போதெல்லாம், நீ மிரண்டே, துவண்டே, பெரிய ஆளாகாமல் போனோமே என்று துடித்துப் போனே. வீட்டுக்கு வந்ததும், பரிகாசிகளின் பெண்கள், ஒன் படுக்கை அறைக்கு வந்தார்கள். ஆரம்பத்தில் கஷ்டப்பட்டதால், சுய சேர்க்கையில் ஈடுபட்ட நீ, இறுதியில், அந்தச் சேர்க்கை களுக்காக கஷ்டப்பட விரும்பினே. அம்மா திட்டும்படி நடந்துக்கிட்டே சின்னப் பசங்க பரிகசிக்கும்படி, அவர்கள் கண் முன்னாலேயே கடிகாரத்தைக் கழற்றி, 'கீ' கொடுத்தே அவர்கள் கிண்டலடிக்க அடிக்க, அவன் தமக்கைகள் உன் மானசீக காதலிகளாய் ஆனார்கள்."
மனோகர், தலை தானாய் தொங்கியது; முகம் வெளுத்தது; நிமிர்ந்த மேனி, சரிந்து கிடந்தது. டாக்டர், இப்போது சுருதி மாற்றிப் பேசினார்.
"ஒனக்கு வந்தது, எனக்கு வந்தாலும், நானும் அப்படித்தான் நடந்திருப்பேன். பொதுவாக, வாழ்க்கையில், தாங்க முடியாத கஷ்ட நஷ்டங்களையும், சிறுமைகளையும் அனுபவிப்பவர்கள், ஒன்று ஒன் தந்தையைப் போல், பரம சாதுவாய் ஆவார்கள். அல்லது ஒன் அம்மாவைப் போல் பயங்கரியாய் ஆவார்கள் ஆனாலும், ஒனக்குத் தீமையே நன்மையாகி விட்டது. படித்துப் படித்து நல்ல வேலைக்குப் போய், குடும்பத்தோடு, ஊரை விட்டே, வேரோடும், வேரடி மண்ணோடும் போக வேண்டும் என்ற எண்ணம் ஒனக்கு ஏற்பட்டது. போதாக் குறைக்கு, பாவாடை தாவணியிலிருந்து சேலைக்கு வந்த ஒன் அக்கா, உள்ளூரிலேயே, பங்காளி பலமிக்க தேக்கன் குடும்பத்தில் நல்லவனும் வல்லவனுமான சௌரி முத்துவைக் காதலித்து, அவனையே திருமணம் செய்து கொண்ட பிறகு, உன் வாழ்க்கையில் ஒரு வாசனை வீசியது. ஒன் மச்சானே, உன் குடும்பத்தின் காவல் தெய்வமானார். ஒன்னை மோட்டார் பைக்கில் கொண்டு போய் கல்லூரி வாசலில் விட்டார். ஒன்னை, ஓட்டைக் கடிகாரம் என்று நச்சரித்த பயல்களின் காதுகளைத் திருகினார். தலைகளில் குட்டினார். மனதில் சிறுவனாய் இருந்த நீ, சம வயதுக்கு வந்தாய். சுய சேர்க்கையைக் கூட கைவிட்டாய்."
''ஆனால், வசந்தம், பாலையானது. சௌரிமுத்து, மாரடைப்பால் இறந்தபோது, அவரது சொல்லுக்குக் கட்டுப் பட்டிருந்த குடும்பம், ஒன் அக்காவை, வீட்டை விட்டுத் துரத்தியது. அவள் வந்த வேளைதான், அண்ணன் போய்விட்டான் என்று மைத்துனர்கள் ஊர்ச் சாட்சியாக அவளை அடித்து விரட்டி னார்கள். மனைவிதான், கணவனின் வாரிசு என்று சொல்ல, ஊரில் அதைத் தெரிந்து வைத்திருந்தவர்கள் முன்வரவில்லை. மீண்டும் நீ, மனதுக்குள் சிறுவனாய் மாறிவிட்டாய். உன்னுள் அந்தச் சிறுவன் அப்படியே இருக்கிறான். அவ்வப்போது வளர நினைக்கிற அந்தச் சிறுவனை, அம்மாவின் நெற்றிப் பள்ளமும், அக்காவின் விதவைக் கோலமும் வளர விடாமல் செய்கின்றன. ஒன் மனதில் தவிக்கும் அந்தச் சிறுவனைப் பெரியவனாக்கி விட்டால், ஒன் செக்ஸ் பிரச்சினை தீர்ந்தது மாதிரிதான். நீ, முழுமையான ஆணாய், மனைவியை நெருங்கும் போதெல்லாம், இந்தச் சிறுவன், மூக்கை நீட்டுகிறான். ஒன் மூக்கை அறுக்கிறான். அதோடு, ஓட்டைக் கடிகாரம்... ஓட்டை ' என்ற சத்தம் தானாய்க் கேட்கிறது. இந்த வன்மமான, இளக்காரமான வார்த்தைகள், ஒன் வெளித் தோற்றத்தைக் கலைத்து, உள் தோற்றமான சிறுவனை முன்னிலைப் படுத்திவிட்டன. ஆகையால், இந்தச் சிறுவனை முதலில் வேண்டும். அல்லது, அவனை வளர்த்து, ஒரு வாலிபனாக்க வேண்டும். இது சிரமமமான காரியம் ஆனால், எனக்குச் சிரமமில்லாமல்
செய்துட்டே .."
மனோகர், டாக்டரை ஒரு கேள்வியாய்ப் பார்த்தான். அவரும் பதிலாய்ப் பேசினார்.
''ஒன்னை மாதிரிப் பிரச்சினைக்காரங்களுக்கு அதிரடிச் சிகிச்சை - அதுதான் ஷாக் ட்ரீட்மெண்ட் தேவைப்படும். ஆனால், ஒனக்குத் தேவையில்லை அந்த விடுதி நிகழ்ச்சிகள், ஒனக்கு ஒரு அதிரடிச் சிகிக்சையைத் தந்துவிட்டன. ஒன்னுள் இருந்த சிறுவன், ஒரே சமயத்தில், ஒரேயடியாய் பெரியவனாகி விட்டான். நீ, அந்த விடுதிப் பயல்களோடு நடத்திய போராட்டம் இருக்குதே... அது வெறும் ஆண்மையல்ல.... பேராண்மை . இப்பவே, ஒன் மனதில் ஒன்னைப் பற்றி ஒரு உயர்வான எண்ணம் வந்திருக்குமே. எந்தப் பிரச்சினையையும் எதிர்கொள்ளத் தயார் என்கிற மனப்பான்மை வந்திருக்குமே. நான் சொல்றது சரியா? வாயைத் திறந்து பேசுறது. இப்படித் தலையாட்டினால் எப்படி"
"சரிதான் டாக்டர்."
"கேட்கிறதுக்கு சந்தோஷமாய் இருக்குது. நான் "வயதுக்கு" வந்த வாலிபன். மிஞ்சேன்; அஞ்சேன்; கெஞ்சேன். என்னால், செக்ஸில் முழுமையாக ஈடுபட முடியும்' என்று பலதடவை மனதுக்குள் சொல்லிப் பாருங்கள். இதுக்கு ஆட்டோ சஜ்ஜஸ்ஷன்னு பேர்... தேவைப்பட்டால், உறிப்னாடிக் சிசிக்கை கொடுக்கேன். ஆனால், அது உங்களுக்குத் தேவைப்படாதுன்னு நினைக்கேன். கடைசியாய் ஒரே கேள்வி. கமர்ஷியல் செக்ஸ் ஒர்கர்ஸ்கிட்டே போனதுண்டா..."
"அப்படின்னா ..."
"விலைமாதர். இந்தப் பெண்கள் பாவிகள் அல்ல. பாவப் பட்டவர்கள். இவர்களில் பலர், தங்கள் விருப்பத்துக்கு விரோதமாய், அந்தத் தொழிலில் ஈடுபடுத்தப் பட்டவர்கள். அதனால்தான், இந்தப் பெயர் மாற்றம். சரி போனதுண்டா ?"
"எல்லாம் கடற்கரை வரைக்கும்தான். எல்லை தாண்டல..."
"குட் எதுக்கு கேட்டேன்னா ... விலை மாதருக்கு, சாரி.... ஒரு பாலியல் விற்பனைப் பெண்ணுக்கு, சலிப்பு வரும்போதோ அல்லது குற்ற உணர்வு கூடும்போதோ, நிர்வாணமாகிறவனை உற்றுப் பார்ப்பாள். பிறகு, திடுக்கிட்டது போல் பாவலா செய்வாள். அப்புறம், 'நீ ஆம்பிளையே இல்ல போய்யா... தம்மாத்துண்டுன்னு துரத்துவாள். இதனாலேயே பலருக்கு ஆண்மைக் குறைவு ஏற்பட்டிருக்கு..."
மனோகர், அவர் வாயையே பார்த்துக் கொண்டிருந்தான். அவர் பேச்சை முடித்து மறு பேச்சைத் துவங்குமுன்பு, அரைகுறையாகச் சொன்னான்.
"சுய சேர்க்கையாலே, ஏடாகூடமாயிடுமுன்னு மயிலாப்பூர்ல, ஜெகன்நாதன்னு ஒரு சித்த வைத்தியர் சொன்னார்."
"ஓ! அவரா. எங்க பெரியப்பாதான். என்னக் கூடத் திட்டுவார். இன்னும் ஐம்பது வருஷம் கழிச்சு, சுய சேர்க்கை ஆபத்துன்னு. அல்லோபதிக்காரன் ஆய்வு அறிக்கை விடுவான்னு கிண்டல் அடிப்பார் ஆனால், அதனாலே, எந்தக் கோளாறும் கிடையாது என்பதுதான் எங்க கட்சி. அதோட, இன்னொரு விஷயம். ஆண்மைக் குறையுள்ளவன், பெண்டாட்டியெல்லாம் ஒழுக்கங் கெட்டவளாய் இருக்க வேண்டியதில்லே.... ஆண்மையுள்ளவன் மனைவிகள் பத்தினிகளாய் இருப்பாங்க என்ற கட்டாயமும் கிடையாது வாட்ட சாட்டமானவன் ஆண்மை உள்ளவனா இருக்கணும் என்கிற அவசியமில்லே. பூஞ்சை உடம்புக்காரன் இயலாதவன் என்கிற பேச்சும் கிடையாது."
மனோகர், மேலும் சில வினாக்களைக் கேட்கப் போன போது, ஒரு யூனிபார வாலிபன், ஒரு பைலைக் கொண்டு வந்து, டாக்டர் சந்திரசேகரிடம் கொடுத்தான். அதன் மேலட்டையில் மனோகரின் பெயர் எழுதப்பட்டிருந்தது. கீழே மெடிகல் ரிப்போர்ட் என்ற ஆங்கில வாசகம்.
டாக்டர் சந்திரசேகர், அந்த பைலுக்குள் இருந்த எக்ஸ்ரே படத்தை உருவிப் பார்த்தார். கருப்பாய்ப் பளபளத்த பின்னணிப் படத்தில் வெளுப்பான நிழல்களைக் காட்டிய அந்த எக்ஸ்ரேயை மானிட்டரில் பொருந்திப் பார்த்தார் சர்க்கரை, ரத்தம், சிறுநீர் போன்றவற்றின் சோதனைக் குறிப்புக்களை படித்துப் பார்த்தார்.
மனோகர், உயிரைக் கையில் பிடித்துக் கொண்டான். உடல் ரீதியில் ஏதும் கோளாறு இருக்குமோ என்ற சந்தேகம். அப்படியானால், எப்படி முடிவெடுக்க வேண்டும் என்பதில் ஓர் தீர்மானம்.
மனோகர், பிடித்திருந்த அவனது சொந்த உயிர், இப்போது டாக்டர் சந்திரசேகரின் கைக்கு மாறியது. சிறிது நேரத்தில், அவனின் கையை குலுக்கியபடியே, உயிர் கொடுத்தார்.
"கன்கிராஜ்லேஸன்ஸ் மனோ, உங்களுக்கு உடல் ரீதியிலும் எந்தக் கோளாறும் கிடையாது. ரத்தத்தில் சர்க்கரை, சாப்பாட்டிற்கு முன்பு 90-நார்மல். சாப்பாட்டிற்குப் பிறகு 130... நார்மல். ஆக நீரிழிவு கிடையாது. ரத்த அழுத்தம் 90 - 130; கச்சிதம். ஆண்மைக் குறைவுக்குக் காரணமான சயரோகமோ புட்டாளம்மன் நோயோ வந்ததில்லை. நான், ஆரம்பத்தில் சந்தேகப்பட்டது போல், பிட்டத்துக்குக் கீழே, உட்பக்கமாய்க் கட்டி ஏதும் இல்லை. அப்படி ஒரு கட்டி இருந்தால், அது ஆயுள் வரைக்கும் வலிக்காது. ஆனால், பாலியல் நரம்புகளை அழுத்தி, இறுக்கி அடம் செய்யும். இப்படிப்பட்ட கட்டியும் இல்லை. அதனால, ஆபரேஷனுக்கு அவசியம் இல்லை. இப்போ ஒரு நவீன முறை வந்திருக்கு. செக்ஸ் ரீதியாய் பலவீனப்பட்ட ஆணுக்கு, ஒரு பலூன் மாதிரி வஸ்துவைப் பொருத்தி வைக்கிற சிகிச்சை முறை. ஆனால், இதுக்கு ஒன்றரை லட்ச ரூபாய் செலவாகும். இதுவும் மிச்சம். அதோட உங்க கணவரோட உயிரணுக்கள் சரியான அளவில் இருக்குது. இதனால் அடுத்த வருஷம் நீங்க ஒரு குழந்தையை பெற்றெடுத்தாக் கூட ஆச்சரியமில்லை .”
மனோகர், தன்னை புதிதாய் கண்டுபிடித்தது போல், தன்னையே பார்த்துக் கொண்டபோது, டாக்டர். சந்திரசேகரன், இன்னொரு ஆலோசனையும் வழங்கினார்.
"உடம்பை லகுவா வச்சுக்கணும். கொத்துக்கறி, குலை கறி உடம்பு பாலியல் உறவைப் பாதிக்கும். பாரதி சொன்னதுபோல், காற்றில் ஏறி விண்ணைச் சாடுவது மாதிரியான, மிதப்பான உடம்பு தேவை. இதை ஆசனப் பயிற்சியாலும், அளவான உணவாலும், ஆக்கிக் கொள்ளும்போது, நாமே உணரக்கூடியது மாதிரி நமக்குள்ளே ஒரு வாசனை எழும். பொதுவாய், ஒவ்வொரு மனிதருக்கும், பல வாசனைகள் உண்டு. இதில் பாலியல் வாசனை முக்கியமானது. இந்த வாசனையைப் பிற வாசனைகள் மூழ்கடிக்காமல், பார்த்துக்கணும். உதாரணமாய், ஒரு குழந்தையைக் கொஞ்சும் போது, ஒரு ஆணுக்குப் பெண் மீதோ, பெண்ணுக்கு ஆண் மீதோ ஆசை ஏற்படாது. காரணம், குழந்தையிடம் பீறிடும் வாசனை, பாலியல் வாசனையை அமுக்கிவிடும். இதனால் தான் படுக்கை அறையில், மலர் தூவும் வழக்கத்தை நம் முன்னோர்கள் கொண்டு வந்தார்கள். இப்போது, நான் உங்களுக்கு மலர் தூவ வேண்டிய அவசியமில்லை. அந்த விடுதி நிகழ்ச்சியே, உங்கள் மனதை வைரப்படுத்தியதுடன், அதே மனதில், பாலியல் மலர்களையும் தூவிவிட்டது."
மனோகருக்கு தான் புதிதாய் வளர்ந்தது போன்ற எண்ணம் ஏற்பட்டது.

