Chapter 10
மனோகர் திருவான்மியூர் பேருந்து வளாகத்திற்கு எதிரே, மாமல்லபுர பேருந்து நிறுத்தத்தில், கால்களைச் சுழற்றாமலே, கண்களைச் சுழற்றினான். அவன் நின்ற இடத்தை பேருந்துக் கூடாரம் என்று சொல்ல முடியாது. அவனைப்போல் கூடாரம் அற்றுப்போன ஒரு இடம். பாதிக்கிழிந்து போன பேருந்துப் படத்தைச் சுமக்கும் வளைந்துபோன கம்பி. மழை, சாலையைக் குளிப்பாட்டிக் கொண்டிருந்தது. மண் திட்டுகள் சேறும் சகதியும் ஆன சதைகளாய் வழிந்தோடின. குண்டு குழிவாய்கள் நீரைக் கொப்பளித்தன. மூடியற்ற சாக்கடை குழிகளில், நீர் சுழி போட்டது. முந்தய மழையாலும் மண் லாரிகளாலும் ஏழைப் பெண்ணின் புடவைபோல் ஒப்புக்குப் போடப்பட்ட தார், நார் நாராய், தடம் புரண்டு, அந்த சாலையை நிர்வாணமாகக் காட்டியது. ஆள் அரவம் அதிகமில்லை. நின்றவர்களும் அருகே உள்ள கடைக் கண்ணிகளில் ஒதுங்கிக் கொண்டார்கள்.
என்றாலும், மனோகர் மட்டும் மழையில் நனைந்தபடியே நின்றான். நனைகிறோம் என்ற நினைவற்றே நின்றான். அவனுக்குக் குளிரடிக்கவில்லை. தலையைக் குட்டிய மழை நீரும், உடலை அப்பிய ஈர உடையும், அவனுள் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த வில்லை. நல்லதுக்கும் கெட்டதுக்கும் அப்பால் போன ஞானம். ஞானத்தின் எதிர் மறையோ, அஞ்ஞானத்தின் வெளிப்புறமோ.... முற்றும் நனைந்ததற்கு ஈரமில்லை என்பது போல் நின்றான். கங்காவுக்காக நின்றாலும், அவள் வருகையின் உணர்வற்றே நின்றான்.
சங்கரியை, தனியார் மருத்துவமனையில் சேர்த்தாகி விட்டது. காக்காய் வலிப்போ... வேறு எதுவோ... இன்றைய டெஸ்டில் நாளைக்கு ரிசல்ட் தெரியும். அக்காவும், அம்மாவும் மாறி மாறித் தவம் கிடக்கிறார்கள். ஆரம்பத்தில் துள்ளிக் குதித்த அம்மா, அடங்கிப்போனாள். வரதட்சணைக் கொடுமை என்று ஆகிவிடப் படாதே என்று காந்தாமணி சொன்னதும், அவள் ஆடிப்போனாள். ஆனால், இவனுக்கோ அந்தச் சிந்தனையே இல்லை. வாடகைக் காரில், சங்கரியை பிணம் போல் ஏற்றினார்கள். அவனும் பிணம் போலவே அந்தக் காரில் ஏற்றப்பட்டான். அக்காக்காரி அந்தக் காருக்குள்ளேயே அவனைக் கட்டிப்பிடித்து அழுதாள். அம்மாக்காரி அவன்மீது முட்டி மோதினாள்.
மனோகர், நினைவுகளை உதறிவிட்டு, அந்தப் பஸ் நிறுத்தத்தில் பட்ட மரமாய் நின்றான். அவன் பாலை மனத்தில் துளிர் விட்டது ஒன்றே ஒன்று. பெண் மோகம். அந்த மோகமே பித்தானது. எதிர்காலத் திட்டமோ, நிகழ்கால நினைப்போ ஏதுமற்று, அப்போதைக்கு அப்போது, வாழும் தற்காலிக வாழல். பெண் பித்துக்காகவே வாழுதல். மனச்சுமையை மறக்கும் காமத்தேடல். இதனால் தான், இந்த ஒருமாத காலத்தில், தெருக்களில் தேடிப்பிடித்த நான்கு பெண்களோடு கடற்கரைக்குப் போய் இருக்கிறான் மூன்று பெண்களோடு சினிமாவிற்குப் போய் இருக்கிறான். ஐந்தாறு பெண்கள் செருப்புக்களைத் தூக்கியதையும் கண்டிருக்கிறான். ஜீ.பி .எப்பில் கடன் வாங்கினான். டி.ஏ. அட்வான்ஸ் வாங்கி அரசுப் பயணம் மேற்கொள்ளாமல், அதே பணத்தில் பெண் பயணத்தில் லயித்துவிட்டான். பயணம் என்றால், அறைக்குள் நடத்தும் ரகசியப் பயணமல்ல. பகிரங்கமான சினிமா தியேட்டர்களிலும், கடற்கரைகளிலும் நடத்தும் பாதிப்பயணம். எல்லையைக் காணமுடியாத இடைவேளைப் பயணம் இவனால், இப்போதைக்கு அவனுக்கு எதுவுமே உறைக்கவில்லை உயர் பதவியின் பொறுப்பில்லை. தெருப் பொறுக்கியாய் ஆகிப்போன நினைவில்லை.
மழை , தூறல் ஆகிவிட்டது. இப்போதுதான் அவன் கைக்கடிகாரத்தைப் பார்த்தான். மழைத் துளிகள் பட்டு, மங்கலான கடிகாரக் கண்ணாடிக்குள், சின்ன முள்ளை பெரிய முள் கவ்வியிருந்தது ஒல்லியான வினாடி முள், வட்டமடித்தது. கடைசி முள்ளின் நிலைதான் அவன் நிலையோ.... லேசான நினைப்பு. பழைய ரசனையின் பெருங்காய வாடை வெறுமையாய்ச் சிரித்தான். பிறகு அந்த வெறுமைக்குப் பயந்துபோய் குடையைப் பிடித்துக் கொண்டு சென்ற, ஒரு பெண் பின்னால் போனான். அவளை எட்டிப் பிடிப்பதுபோல் நடந்து, லேசாய் கனைத்தான். அந்தக் கனைப்புக்கு அவள் முகம் கொடுக்காதபோது, திரும்பி நடந்தான். எதிர்பக்கம் இன்னொருத்தி பாளம் பாளமான பட்டை டிசைன் போட்ட புடவைக்காரி. பேருந்தில் அடிபடாத குறையாக அந்தச் சாலையைக் கடந்தான். அவளுக்கு இணையாக நடந்தான். அவளோ, அவனை ஒருமாதிரிப் பார்த்தாள். 'மணி என்னாச்சு' என்றாள். அவன் அவளோடு போயிருப்பான். அதற்குள், கங்கா அவனை வழி மறித்தாள். அவன் கைகளைப் பற்றியபடியே சாடினாள்.
“சொன்ன இடத்தில் நிற்காமல் ஏன் இப்படி அலையறே... அங்க போய் நின்னால், பொறுக்கிப் பசங்க முறைக்கிறாங்க.... உன்னோட பேஜாருய்யா..."
மனோகர், அவளை ஏறிட்டுப் பார்த்தான். இப்போதெல்லாம், அவள் ஸார்' போடுவதில்லை... போய்யா வாய்யாதான். கள்ளக் காதலிலும் அவளுக்கு ஏக புருஷ விசுவாசம். அவள் வருவாள் என்று தெரிந்தே அலைந்தான். ஆனாலும் பெண் தேடினான். எதார்த்தத்தால் தடுக்கப்படவில்லை அந்த வீண் முயற்சியிலும் ஒரு சுகம். அந்த நாய் அலைச்சலிலும் ஒரு கிளு கிளுப்பு.
மனோகர், அவளை மீண்டும் மீண்டும் பார்த்தான். நீண்ட முகத்திற்குப் போட்டியாக பின்புறத் தலையாய் முளைத்த கொண்டை அதில் பாதியை மறைத்து மல்லிகைச் சரத்தின் நிலா வெளிவட்டம் செஞ்சிவப்புப் பிடரியை கருப்புக் கோடுகளாய்க் காட்டி கொண்டையில் தொடங்கி பிடறியில் முடியும் முடிக் கிராதிகள். பாடதி கம்மல்களுக்குப் பதிலாக அங்கும் இங்குமாய் சுழலும் மீன் வடிவ வளையங்கள். இடது கையில் பொன்னிறக் கடிகாரம். வலது கையில் கைப்பை. எல்லாம் இவன் வாங்கிக் கொடுத்ததுதான் அவள் வாங்க மறுத்தும் இவன் திணித்தவைதான்.
மனோகர், தன்னை ரசிப்பதை கங்கா ரசனையோடு பார்த்தாள். போகப் போகிற அந்த இடத்தில் எவருக்கும் அந்தச் சந்தேகம் வந்துவிடக் கூடாது என்பதற்காக இவனே சொல்லி, அவள் செய்த அதிகப்படியான அலங்காரம். அது அலங்கோலமாகி விடக் கூடாதே என்ற பயம். அந்தப் பயத்தை அவளுள் ஏற்படுத்தியவனும் இவன்தான் இந்த இரவில் ஆட்டோவில் போனால், போலீஸ் செக்போஸ்டில் மடக்கி பூர்வோத்திரம் கேட்கலாம் என்று விவரம் சொன்னான். அதற்குப் பரிகாரமாய் பேருந்தில் போகலாம் என்றான். போகிற இடத்தில், இவள் வாயைத் திறக்கக் கூடாது என்றான். அதே சமயம் பயப்படாமல் அசத்தலாகப் பார்க்க வேண்டும் என்றான். இதுவே அவளுக்குப் பயத்தைக் கொடுத்தது. 'போலீஸில் சிக்கினால் படாதபாடு. அந்தக் கஸ்மாலத்துக்குத் தெரிஞ்சா வெட்டிப் பூடுவான்... இந்த ஆளையும் சேர்த்து வெட்டுவான். புருஷன். மேஞ்சாலும், பெண்டாட்டி யோக்கியமா இருக்கணுமுன்னு பினாத்துற ஜென்மம். அதோட மனசாட்சின்னு ..
"வாணாய்யா.... வாணாய்யா.."
"என்ன ஒனக்கு பிடிக்கலியா."
"பிடிக்காட்டி வருவேனா...”
அப்போ பேசாம வா..'
“நம்ம ஆபீஸ்ல வேற, ஒரு மாதிரிப் பேசுறாங்கய்யா..."
"அங்கே ஒவ்வொண்ணும் ஒவ்வொண்ண லவ் பண்ணிட்டுத் தான் இருக்கு... ஜோடிகளை மாற்றி மாற்றி லவ் பண்ணுது அதுகளுக்கு நம்மளப் பத்தி பேச யோக்கியதை இல்லை...”
"ச்சீ என்னப்போல எவளும் இருக்கமாட்டாள்."
"என்னைப்போல ஒருத்தன் ஒனக்குக் கிடைப்பானா...."
"நிசந்தான்யா.. அம்போன்னு இருந்த என்னை இப்படி பைத்தியமாக்கிட்டியே... சதா ஒன் நெனப்புத்தான்யா.."
மனோகர், பெருமை பிடிபடாமல் தன்னையே பார்த்துக் கொண்டான். வெற்றி பெற்றவன் போல் புன்னகைத்தான். சாதாரண வெற்றியல்ல சங்கரியைத் தோற்கடித்த வெற்றி. எப்படி இருக்காளோ... எப்படியும் இருக்கட்டும்... இந்தச் சின்ன வீடே இனிமேல் ஒரு பெரிய வீடு... அடியே சங்கரி... ஒன் கிட்ட முடியாதது இவள்கிட்ட முடியும்... காரணம் இவள் என்னை நேசிக்கிறவள்...'
இருவரும், பேருந்தில் ஏறி, மாமல்லபுரத்திற்கு மூன்று கிலோமீட்டருக்கு முன்பே இறங்கிக் கொண்டார்கள் ஆரவாரமற்ற சாலை இருவரும் பயந்து போய் ஒருவருக்கு ஒருவர் காங்களைப் பற்றிக் கொண்டார்கள். ஆனாலும் அந்த விடுதியின் நுழை வாயிலுக்குப் போன உடனேயே அவர்களுக்குப் பயம் தெளிந்தது. கடலோர விடுதி. ஆகாயம் வளைந்தது போன்ற கட்டிடம்... அதில் அப்பிய கலர் பல்பு நட்சத்திரங்கள்.
அண்ணாந்து பார்த்த கங்காவை முதுகைப் பிடித்து நகர்த்தியபடியே வரவேற்பு அறைக்குள் நுழைந்தான். அங்கே தூங்கி வழிந்தவன், தூக்கக் கலக்கத்தில், கண்களால் அதட்டினான். கீழே நான்கு ஐந்து பேர் குறுக்கும் நெடுக்குமாய்ப் படுத்திருந்தார்கள். வரவேற்பாளன், பிணக்காட்டில் நடப்பது போல் அவர்களுக் கிடையே குறுக்கும் நெடுக்குமாய் நடந்து வரவேற்பு வளைவுக்கு வெளியே வந்து சாவியை நீட்டினான். நேற்று மத்தியானமே பதிவு செய்துவிட்டுப்போன முத்துசாமியை புன்னகைத்துப் பார்த்தான். இவன், அப்போது கொடுத்த ஐம்பது ரூபாய் அன்பளிப்பை இன்று மத்தியானம் தான் ஆப்பாக்கி' ஆப்பானவன் இப்போதுதான் எழுந்தான். ஒரு புல்லை' எதிர்பார்த்து, அவனே அவர்களை முதலாவது மாடிக்கு நகர்த்தி மூன்றாவது அறைக்குள் கொண்டு போய் விட்டான்.
அந்த அறையைப் பார்த்து, கங்கா அதிசயித்தாள். அருமையான கிளுகிளுப்பு. அதுவே குரலிடுவதுபோன்ற மென்மையான சத்தம். அவர்களை வரவேற்பதுபோல் டிரான்ஸ்பார்மர் அதிர்வேட்டாய் முழங்கி ஒரு சிவப்பு விளக்கைக் காட்டுகிறது. அவள் தரை தெரியாத கம்பளத்தில் நடந்து, மெத்தையைத் தொட்டாள். எம்மாடியோ என்று குரலிட்டபடியே அவனை நன்றியுடன் பார்த்தாள். கட்டில் சட்டத்தில் பதித்த சுவிட்சுகளைத் தட்டி விட்டாள் அந்த விளையாட்டில் மேல்தளம் வானவில்லானது. அறை முழுக்க மஞ்சள் வெயில் வெளிச்சம்.
கங்காவுக்கும், பயம் போய்விட்டது. வெல்வெட் சோபா இருக்கைக்குத் தாவினாள். பேண்டை கழட்டிப்போட்டு விட்டு லுங்கியைக் கட்டிக்கொண்டு இருந்தவனை பல்லி போல் அப்பிக் கொண்டு, அவனோடு படுக்கையில் விழுந்தாள். ஒரே நிமிடத்தில் அவன் அவளிடமிருந்து விடுபட்டான். அவளோ என் ராசா ராசா..' என்று அரற்றினாள். அவனுக்கோ , அவள் முத்தம் எச்சிலாகப் பட்டது. இதற்கா இவ்வளவு அலைச்சல் என்று தன்னையே நொந்து கொண்டான். அவனுக்கு நல்ல வேளையாக கதவு தட்டப்பட்டது. தவில் அடிப்பதுபோல் சத்தமிட்டது. அதுதான் சாக்கென்று விடுபட்டான். கதவை திறந்தான் அவள் ஆடைகளைச் சரிப்படுத்த முடியாமல், குளியலறைக்குள் போகவேண்டும் என்று நினைப்பில்லாமல், கட்டிலுக்குக் கீழே பதுங்கினாள்.
வந்தவன் பணிரெண்டு, பதிமூன்று வயதுச் சிறுவன் பூவாகாமல், பிஞ்சாகாமல் வெம்பிப்போன பழம். முகத்தில் முதிர்ச்சி. அதாவது வறுமையின் முதிர்ச்சி. செடி மரமாகாமல் தடுக்க கிளைகளை வெட்டியெடுத்த; இலைதளைகள் பிய்த்து எறியப்பட்ட மரத்துப்போன செடி. கண்களைச் சிமிட்டாமல் கள்ளச் சிரிப்பை உதிர்க்காமல், அவர்களைப் பேரன் பேத்தியாய்ப் பார்த்து ஒரு தாத்தாவின் தோரணையில் கேட்டான்.
"வேற ஏதாவது வேணுமா சார்..."
"அப்படின்னா "
"அதுதான் விஸ்கி, பிராண்டி, ஜின், சிக்கன் 65, நூடுல்ஸ், பிரைடு ரைஸ், சிக்கன் மஞ்சூரி, சிக்கன் டிரை, நான், சப்பாத்தி "
மனோகருக்கு சாப்பிடாமல் இருப்பது அப்போதுதான் உறைத்தது. கட்டிலுக்குக் கீழே கிடந்தவளைக் குனிந்து பார்த்தான். அவளோ எதுவும் வேண்டாம் என்பது போல் தலையாட்டினாள். அந்தச் சிறுவனைப் போகச் சொல்லும்படி படகோட்டுவது போல் கைகளைக் கொண்டு போனாள். ஆனால், மனோகர் வேறுவிதமாக நினைத்தான். நீலம், அன்று படுக்கை அறையில் சொன்னது நினைவுக்கு வந்தது. அடே பையா - ஆளுக்கு ரெண்டு பெக் தண்ணி அடிச்சிட்டு படுக்கையில் புரண்டா அந்தச் சுகமே அலாதிடா...' என்றாள். அப்போது அதை மறுத்தவன், இப்போது ஒப்புக் கொண்டான். பாதிப் போதையில் - கண்கள் கிறங்க பெண் ஆண்வசமாக, ஆண் பெண் வசமாக, ஆணும் பெண்ணும் அற்றுப் போன நிலையில், அந்தச் சுகமே அலாதி.... இப்படி இவனே சொல்லிக் கொண்டான். சிறுவனிடம் பாதிப்பாட்டில் விஸ்கிக்கும், இதர வகையறாக்களுக்கும் பணம் கொடுத்தான் நூறு நூறு ரூபாய் நோட்டுக்கள்.
அந்தச் சிறுவன், கங்காவை ஏறிட்டுப் பார்க்காமலே போனபிறகு, அவள் கட்டிலிலிருந்து வெளிப்பட்டாள். அந்த சிறுவனை போக்கிரி பொறம்போக்கு' என்று திட்டிக் கொண்டே, கதவைச் சாத்தப் போனாள். மனோகருக்கு, இழந்துபோன உடல் முறுக்கு இன்னும் வரவில்லை. அரைமணி நேரமாவது ஆகும். அப்படி வந்தாலும் முடியுதோ.... முடியலையோ... முடிந்தால் சந்தோஷம்.... முடியாவிட்டால் பாட்டில் மீது பழி போட்டு விடலாம். அவன் ஆணையிட்டான்....
"கதவு திறந்திருக்கட்டும்."
"அந்தப்பய வாரறதுக்கு அரை அவுரு ஆகுமே... அதுவரைக்கும் என்ன செய்றதாம்...”
"இந்தா பாரு... கதவைச் சாத்தாதே... இந்த இரவு முழுசும் நமக்குத்தான் .."
அவள், லேசாய் திடுக்கிட்டாள். அவன் குரலில் காட்டிய கடுமை, அவளுக்கு என்னவோ போலிருந்தது. ஆனாலும், தன்னைத் தானே சமாதானப்படுத்திக் கொண்டாள்.
அரைமணி நேரம் முக்கால் மணியாகியது. அதுவரைக்கும் அவள் தான் பேசினாள். அவன் ஒற்றை வார்த்தையிலேயே பதிலளித்தான். அவள் 'பலாவான சில்மிஷங்களைச் செய்தாள். அந்த சதை வஸ்துவை , அவன் பல்லைக் கடித்துப் பொறுத்துக் கொண்டான்.
இதற்குள், அந்தச் சிறுவன் ஆடி அசைந்து வந்தான். வாங்கியவற்றை அங்கிருந்த டீப்பாயில் பொட்டலங்களாகவும் பாட்டிலாகவும் வைத்துவிட்டு எஞ்சிய நோட்டுக்களையும் சில்லறைகளையும் அப்படியே கொடுத்துவிட்டு, கொசுறுக்காகக் காத்திருக்காமல் போய்விட்டான்.
மனோகர், இரண்டு கிளாஸ்களை எடுத்து பாட்டிலில் கால்வாசியைக் காலி செய்தான். எறா மாதிரி நெளிந்து கிடந்த வலுத்த முந்திரிப்பருப்பு ஒன்றை அவள் வாயில் திணித்தபடியே, 'நீயும் போட்டுக்கோ ...' என்றான்.
"வாணாம்யா..."
"பழக்கம் கிடையாதா ?"
"அந்தக் கஸ்மாலம் ஒருவாட்டி வற்புறுத்தித் தந்திருக்கான். அடிக்குப் பயந்து நானும் ஊத்திக்கினேன். அப்புறம் ஆடுனனாம் பாரு ஆட்டம்... அப்படி ஆடுனேனாம். அந்தக் கஸ்மாலத்தைப் போடா வாடான்னு திட்டினேனாம். அவன் வழக்கம் போல் அடிக்க... நான் புதுசாத் திருப்பி அடிக்க... தெருவே திரண்டிட்டு"
'ஒனக்கு புருஷன் மேலே இருந்த வெறுப்பு அப்படி வெளியாயிருக்கு.. இங்கே சூழ்நிலை வேறே... ஒரு பெக்' போட்டுக்கோ... அதுக்கும் நல்லதாம் .."
மனோகர், அவள் வாய் விளிம்பில் அந்தக் கிளாஸை திணித்து, உதடுகளை இரண்டாக்கினான். அவள் அழுத்தம் தாங்காமல் வாயைத் திறக்க, அந்தத் திரவம் அவள் வயிற்றுக்குள் தானாய் ஓடியது. அவன் கோழி வறுவல்களையும், உருளைக்கிழங்கு சிப்ஸையும் அவள் வாய்க்குள் திணித்தபோது, அவள் கிளாஸிலிருந்து தானாகவே கொஞ்சம் ஊற்றி வாய்க்குள் விட்டாள். மூன்றாவது பெக்கை தனக்கு மட்டுமல்லாமல் அவனுக்கும் ஊற்றிக் கொடுத்தாள். மெல்ல மெல்ல அவள் இரண்டு பட்டாள் கண்கள் தனியாய் சுழன்றன. பிறகு தலையோடு சேர்ந்து சுழன்றன. அவன் சுழன்றான். அந்த அறையே சுழன்றது..... அவள் காளியாய் எழுந்தாள். குதியாய்க் குதித்தாள்.... அவன் தோளைப் பற்றித் தூக்கியபடியே... கத்தினாள்....
"ஏன்யா... தெரியாமத்தான் கேக்கேன்... நீ ஆம்பளதானா...? இந்நேரம் அந்தக் கஸ்மாலமாயிருந்தா, என்னமா உருட்டி யிருப்பான் - கதவைச் சாத்தாதேன்னு போக்கு காட்டுறியே.... எனக்கா தெரியாது... நீ நெசமாவே ஆம்பளைன்னா... வாய்யா பார்க்கலாம்... வாய்யா ....."
கங்கா , மல்லாக்க விழுந்தாள். சேலையை அவிழ்த்துப் போட்டாள். தலையைத் தூக்கித் தூக்கி இரண்டு கைகளையும் ஆட்டி ஆட்டி "ஒனக்கு நெசமாங்காட்டியும் தில்லு இருந்தா, வாய்யா.... வாய்யா " என்று அபிநயம் காட்டி குரலிட்டாள்.
போதைக்குள் மூழ்கியிருந்த மனோகருக்கு உடனடியாய் போதை தெளிந்தது. சத்தம் போட்டவளின் வாயை கைகளால் பொத்தினான். அவள் கடித்த வலி பொறுக்காமல், கட்டிலில் கிடந்த பனியனை பந்து போலாக்கி, அவள் வாய்க்குள் திணித்தான். அவள், அவனை ஒரே தள்ளாய்த் தள்ளிவிட்டு எழுந்தாள். வார்த்தைகள் அம்புகளாகின குரல்
அதிர்வேட்டானது.
"ஒன்னையே நம்புற என்னோட வேலையப் பற்றி யோசித்தியா - இன்னாச்சு ஒன் கம்பெனி.- பொல்லாத கம்பெனி.- போவட்டும்... ஆபீஸ்லயாவது பெர்மனென்டு ஆக்கினியா- ஆமாம். தெரியாமத்தான் கேக்கேன். நீ பொம்பளப் பொறுக்கி ஆயிட்டியாமே. ஆபீஸ்ல ஒரு கிளார்க்குப் பொண்ணு வனஜா செருப்பைத் தூக்கிக் காட்டினாளாமே. நான் இருக்கேன் - ஒன் பொண்டாட்டி இருக்காள். இந்த ரெண்டையும் சமாளிச்சாலே ஒனக்குப் பெரிசு... இன்னா மன்ஷன்யா நீ... பொட்டையில்லைன்னா இப்பவே வாய்யா - ஒன்னால் நம்ம ஆபீஸே நாறுதுய்யா.... என்னையும் ஒன்னையும் அந்தக் கிருஷ்ணன் பய ஏடாகூடமாப் பேசுறான்யா - தாங்க முடியலைய்யா என்னால தாங்க முடியலைய்யா- எனிக்குப் பழி பாவத்தைக் கொடுத்திட்டியே. என்ன கைவிட்டிடாதேய்யா- என்னக் காப்பாத்தைய்யா - ஏமாத்திடாதேய்யா ஏமாத்துவியா? மவனே... ஏமாத்தின என்ன நடக்கும் தெரியுமா?"
கங்கா, படுக்கையிலிருந்து எழுவதும் விழுவதுமாகச் சுழன்றாள். பாவாடை ஜாக்கட்டில் ஒரு சினிமாப் பாட்டைப் பாடினாள். அவன் முதுகில் இரண்டு சாத்துச் சாத்தி, தாவி ஆடினாள் அவன் கையை எடுத்து, தன் தலையிலேயே அடித்துக் கொண்டாள்.... அழுதாள். அந்த அறையே குலுங்கும்படி ஒப்பாரி போட்டாள்.
"அந்த கஸ்மாலம் விட்டதுமாதிரி என்னக் கைவிட்டிடா தேய்யா... நீ.... விட்டிடுவே... விடத்தான் போறே.. எனக்கும் ஒனக்கும் எதுவும் நடக்கல..... நடத்தவும் ஒன்னால முடியல.... நடக்காமலே முடிக்கிறே... என்னால ஒனக்குப் பிரயோசனமில்ல... ஒன்னால எனக்குப் பிரயோசனமில்ல... என்னமாதிரி ஒரு வயசுப் பொம்மனாட்டிக்கி இந்த ரூமு முக்கியமில்லய்யா... பெட்டு முக்கியமில்லய்யா... தரை கூடப் போதும்யா... ஏய்யா என்னக் கூட்டி வந்தே...? என்னக் கைவிடப் போறீயே..."
கங்கா, பக்கத்திலிருந்த கிளாஸை எடுத்து பீரோ கண்ணாடி மீது வீசினாள். கையெடுத்துக் கும்பிட்டவனைப் பார்த்துச் சிரித்தாள். கைதட்டினாள்... கதவைக் குத்தினாள். கொண்டையை அவிழ்த்துப் போட்டாள்... பூக்களைப் பிய்த்துப் போட்டாள்... பாட்டுப் பாடினாள். தங்தங்கென்று குதித்தாள்.
அறைக்கதவு பலமாக தட்டப்பட்டது. மனோகர் கைகளை நெறித்தான். அவள் கன்னத்தில் கூட, ஒன்று போட்டான். அவள், உடனே ஒப்பாரி இட்டாள். இப்போது கதவுக்கு வெளிப்பக்கம் வசவுகள் கேட்டன. அந்தக் கதவு அதிர்ந்தது. மனோகர் வேறு வழியில்லாமல் பெட்டிப்பாம்பாய் கதவைத் திறந்தான். வெளியே நான்கைந்து பேர் நாகப்பாம்பாய் சீறி நின்றார்கள். வரும்போது வாஞ்சையோடு இந்த அறையில் விட்டுப்போன வரவேற்பாளன், இன்னும் அங்கும் இங்குமாய் ஆடிக் கொண்டிருந்தவளை நோட்டம் போட்டபடியே கத்தினான்.
"ஏண்டா ... ஒன்னப் பார்த்தா படிச்சவன் மாதிரி தெரியுது... இப்படிப்பட்டவள் ஏண்டா கொண்டு வந்தே...'
"ஏண்டா கமால்... அவங்கிட்டே போய் நியாயமா கேக்குறே ? கற்பழிப்பு கொலைன்னு பழியை நம்ம மேல போட்டுட்டு, தப்பிக்கறதுக்கு வந்திருக்கான்... பேசாம போலீசுக்கு போன் போடு.... நீ பேசறியா? நான் பேசட்டுமா....? ஏடி ஒன்னத்தான் இதுக்கு மேலே ஆடின, கடலுக்குள்ள வீசி கடாசிடுவோம். கடாசினவங்கதான்.... கமால்... இன்னுமா டெலிபோனை எடுக்கலை..."
ஒரு மொட்டைத்தலை தடியனின் அதட்டலுக்குக் கட்டுப்பட்டு, வரவேற்புக் கமால், அந்த அறைக்குள் இருந்த டெலிபோனை எடுத்தான். பிரமித்து நின்ற மனோகருக்கு விபரீதம் புரிந்துவிட்டது. கையெடுத்துக் கும்பிட்டு மன்றாடினான்…..
'வேண்டாம் ஸார்... வேண்டாம் ஸார்...'
அந்தச் சமயத்தில் கங்கா, எரிகிற தீயில் எண்ணெய்யை ஊற்றினாள்
"ஏன்? போன் போட்டாப் போடட்டுமே... போலீசு - கொம்பனா... டேய் கஸ்மாலம்.... போலீசு மச்சிக்கிட்ட பேசுடா...'
இதுவரை தயங்கிய கமால், இப்போது டெலிபோன் எண்களை உறுதியாகச் சுற்றினான் மனோகர் அவன் கைகளைப் பற்றி தன் கண்களில் ஒற்றிக் கொண்டே மன்றாடினான்...
"என் கழுத்துல கிடக்கிற இந்த நாலு பவுன் செயினை எடுத்துக்குங்க சார்... பையில் இருக்கிற ரெண்டாயிரம் ரூபாயும் எடுத்துக்குங்க சார்... இந்த கடிகாரத்தையும் வாங்கிக்கிங்க சார்... ஏய் கங்கா... சார் காலுல விழுடி.."
மனோகர் சுட்டிக் காட்டிய அந்த தடித்த மனிதரை அற்பப் புழுபோல் பார்த்துவிட்டு, கங்கா, மனோகரிடம் மல்லுக்கு வந்தாள்.
"அடப்போடா... அந்தக் கஸ்மாலம் மட்டும் ஒனக்குப் பதிலா இருந்திருந்தால், இந்த மொட்டைப்பயல இன்நேரம் கீய்சுப் போட்டிருப்பான்..."
தடித்த மொட்டை, கமாலிடமிருந்து டெலிபோனை வாங்கியபோது, மனோகர், அவன் காலில் விழுந்தான்.
"வேண்டாம் ஸார். தயவு செஞ்சு வேண்டாம் ஸார்... நான் பெரிய ஆபீஸர் ஸார்... அரெஸ்டானால், என் வேலை போயிடும் சார்... நான் சொன்னதெல்லாம் ஒங்களக்கு தாரேன் சார்..."
"சரி கீழே வந்து நீ சொன்னதையெல்லாம் கழட்டிக் கொடுத்திட்டு லாரியப் பிடித்து ஓடு... இந்த தத்தேறி குட்டி இங்கேயே இருக்கட்டும்... காலைல அனுப்பி வைக்கிறோம்..."
"நீங்க நினைக்கிறமாதிரி அவள், அப்படிப்பட்டவள் இல்லை சார்.... போதையிலே உளறினாலும்... புருஷனுக்கு பதிலா என்னையே நம்பியிருக்கிறவள் சார்..."
"இவன் சரிப்படமாட்டான் போலீசு நம்பர் என்கேஜ்டா? சரி.. மூணாவது மாடியில் இருக்கிற, சப்-இன்ஸ்பெக்டரைக் கூட்டி வா... ஏய் ஒன்னத்தான் எதுக்குடி புடவையைக் கட்டுறே... உக்காருடி.."
"சார்... சார் என் மானம் போயிடும்... வேலை போயிடும்... எங்களை விட்டிடுங்க சார்..."
"இந்தா பாருடா.. நீ பண்ணின காரியத்துக்கு நாங்களே ஒன்ன போலீசுல ஒப்படைக்கணும். ஆனால், ஒன்னப் பார்த்தால், பாவமா இருக்கு.... நீ மட்டும் தப்பிச்சுப் போயிட்டே இரு. இவள நாங்க விடப் போறதில்லை டேய்... அவ புடவையப் பிடுங்குடா.
மொட்டைத் தலையனின் தடித்த கால்களில் போட்டிருந்த கைகளை, மனோகர் வெட்டருவாள் வீச்சோடு எடுத்தான் அவனுக்குள் அவனையறியாமலேயே ஒன்று விஸ்வரூபம் எடுத்தது. அவர்களை நேருக்கு நேராய்ப் பார்த்து ஆணையிட வைத்தது. வீறாப்பாய் நின்று சூளுரைக்க வைத்தது....
சரி... போலீஸைக் கூப்பிடுங்க..... ஆனது ஆகட்டும்... என் உயிர் போவதற்கு முன்னால், இவள நீங்க தொட முடியாது...'

