Chapter 4

மனோகர், இடம், பொருள், ஏவல் அறியாதவனாய், இலக்கற்றுப்போய் நடந்தான்... கால்கள் முன்னோக்கியும், மனம் பின்னோக்கியும் போய்க் கொண்டிருந்தன. நினைக்க நினைக்க நெஞ்சம் வெந்தது. அவன் ஆவேசியாய் நடந்தான். உயிரும் உடலும்

அற்றுப் போய், ஆவியாய் தாவுவதுபோல் போனான். உடல், உயிருக்குள்ளும், உயிர் உடலுக்குள்ளும் ஒடுங்கியது போல், ஆமை நடையாகவும் நடந்தான். காலாற்றுப் போனவன் போல், தள்ளாடித் தள்ளாடியும், நடந்தான். தலைவிரி கோலமாகவும் பாய்ந்தான்.

அங்குமிங்குமாய் நடந்து முட்டுச் சந்து சுவரில் மோதி, மனிதச் சந்தடியில் ஊடுருவி, ஒரு மேம்பாலச் சுவரில் உட்கார்ந்தான். ஆட்டோக்களும், சைக்கிள் களும், ஆட்களைப் பிடித்துப் போட்டபடி அலை மோதின. ஒலிப்பெருக்கம்... பேசும் யந்திரங்கள், பேசாத யந்திரங்களில் போய்க் கொண்டிருந்தன இரண்டு தெரு நாய்கள், அத்தனை அமர்க்களத்திலும், ஒட்டிக் கொண்டன. அவனைப் பார்த்து பரிகசிப்பது போல் பல்லிளித்தன.

மனோகருக்கு, மனைவியைப் பாம்பென்று ஒதுக்கவும் முடியவில்லை. பழுதென்று சேர்க்கவும் முடியவில்லை.... நேற்று அவள், இந்திரனிடம் பேசியவிதம், அது சாதாரண நட்பாகத் தெரிய வில்லை. இவன் பயிற்சிக்காக புதுடில்லி போவது வரை, இந்திரனின்

அசட்டுக் கேள்விகளுக்கு ஒற்றை வார்த்தையில் பதிலளிப்பவள், நேற்றோ , இருவரும் ஒருவரானது போல் பேசுகிறாள். ஒரு மாத காலத்தில் அப்படி ஒரு விபரீதம் ஏற்பட்டிருக்குமோ..? நேற்றைய ராத்திரியில், பால்கனியில் அவளுக்கு என்ன வேலை? இருக்காது... படுக்கையறையில் பெருந்தன்மையாய் நடந்து கொண்டவள், வெறுமையாய் உட்கார்ந்த தன்னை, மடியில் கிடத்தி, குழந்தையைத் தாலாட்டுவதுபோல் ஆட்டியவள்... அவனுக்கு தோல்வியை இல்லை என்பது போல் சர்வசாதாரணமாக நடந்து கொண்டவள் - அத்தனை ஏமாற்றத்திலும் அவளால் எப்படி சாதாரணமாக நடக்க முடிகிறது...?

காலப்போக்கில்... சரியாகிவிடும் என்ற நம்பிக்கையா அல்லது ஒரு வேளை... ஒரு வேளை... 'நீ .. இல்லாட்டால் வேறு ஆளே கிடையாதா' என்று கேட்காமல் கேட்கிறாளா... எப்படியோ... அவளைச் சொல்லிக் குற்றமில்லை... கோளாறு என் பக்க அதன் வெளிப்பாடு அவள் பக்கம்..... இந்தச் சித்திரவதையை எத்தனை நாள் பொறுப்பது? அவள் முன் புழுவாய்த் துடிப்பதைவிடச் செத்து விடலாம்... வராத சாவை வருந்த அழைத்துக் கொள்ளலாம்.... தன்னைத் தானே கொலை செய்து கொள்ளலாம்... இந்த ஈன வாழ்க்கை வேண்டாம்.... வேண்டவே வேண்டாம்...

மனோகர், எழுந்தான். பேருந்துகளில் மோதப் போகிறவன் போல் குறுக்கும் நெடுக்குமாய் நடந்தான்.... அண்ணாந்து ஆகாயத்தை வெறுமையாய்ப் பார்த்தபடி... ஆட்டோவில் மோதினான்.... எதிர்ப்பட்ட ஒரு இளம் பெண் முகத்தில் முகமிடித்தான். அவள், பயந்து போய் ஒதுங்கியபோது, ஒரு காய்கறிக்கார கிழவி பொலிகாளப் பயலுக..... வந்துட்டானுக.. என்று திட்டியதைக் கேட்க, அவனுக்குச் சிறிது ஆறுதலாக இருந்தது. ஆனாலும் இப்போது சாலையின் ஓரமாகவே நடந்தான் தன்னைத்தானே தாழ்த்திக் கொண்டு நடந்தவன், சங்கரியை, விட்டுவிட்டு, டில்லி நிகழ்ச்சிகளை நினைவு படுத்தினான்.

சங்கரியை, சந்திக்க வேண்டிய வகையில் சந்திப்பதற்காக, சென்னையிலும், டில்லியிலும் பரிகாரம் தேடத்தான் செய்தான் சென்னையில் பரிச்சயமான மருந்துக் கடையில், ஒரு விளம்பரப் பலகை, அவன் கண்களை முட்டியது. 'மாத்திரைக்கு முன்பு.... மாத்திரைக்குப் பின்பு என்று விலகிய ஜோடியையும், விலக்கப்படும் ஒட்டிக்கொண்ட அதே ஜோடியையும், படங்களாய் பார்த்தான்.

இவன் மாத்திரைகளை வாங்கினான். ஒவ்வொன்றும் பதிமூன்று ரூபாய் .... அறுபது மாத்திரைகளை வாங்கினான். திருப்திக்கு நாளொன்றுக்கு ஒன்றாம். படு திருப்திக்கு இரண்டு. ஆனந்தத்திற்கு மூன்று பேரானந்தத்திற்கு நான்கு.... டில்லிக்குப் போகுமுன், அவளைப் பேரானந்தமாக சந்திக்கத் தயாரானான்... சந்தித்தான்.... சந்தி சிரிக்காத குறைதான்.

என்றாலும், புதுதில்லி போனாலும், மனம் கேட்கவில்லை. அங்கே, 'கேஸ் அண்டு செக்ஸ்' என்று பிரகடனப்படுத்தும் சுவரொட்டிகளை முகவரிகளோடு பார்த்தான். அவனுக்கு தன் வயிற்றுக் கோளாறு நினைவுக்கு வந்தது. அடி வயிறு உப்பியிருப்பதும் உணர்வாய்த் தெரிந்தது.... உருவமாயம் புரிந்தது.... விளம்பரப் படுத்தப்பட்ட இடத்துக்குப் போனான்... ஆட்டோவில் போனான்... விமானம் கிடைத்திருந்தால், அதில் கூடப் போயிருப்பான். ஒரு கரண்டி சிகப்புப் பொடியும், ஒரு லிட்டர் வெள்ளைப் பொடியும் கொடுத்தார்கள். ஒரு கரண்டி வெள்ளையில் ஒரு மிளகளவு சிகப்பைக் கலந்து, பாலில் போட்டு குடிக்கச் சொன்னார்கள். மருந்தை வாங்கிக் கொண்டு பேருந்துக்கே காசில்லாமல் நடந்தே வந்தான். பத்து நாட்களில் மன்மதனே உபதேசம் கேட்க வருவான் என்று சொன்னதை நினைத்துப் பூரித்து ஒரு மாதம் வரை உட்கொண்டான். நேற்றிரவு, அவளை ஆயதபாணியாகத்தான் எதிர்கொண்டான். ஆனாலும் நிராயுத பாணியாகி விட்டான். நிர்க்கதியாகி விட்டான்.

நேற்று ராத்திரி வரையான கனத்துப்போன சிந்தனையில், கால்களின் போக்கை அறியாத மனோகரை, ஒரு ஆட்டோக் காரரின் வசவு திரும்ப வைத்தது அவனைச் அங்கேயே கட்டிப் போட்டது. எகிற எகிறித் திட்டியவனைப் பார்த்துச் சிரித்தான். எப்பவோ சூடுசுரணை அற்றுப் போனவன் போல், மலங்க மலங்கப் பார்த்தான்.

அப்போது, மலட்டுக் கண்களில், ஒரு விளம்பரப் பலகை தென்பட்டது. ஒய்யாரமான கடை கண்ணிகளுக்கு இடையே, ஒரு செவ்வக வடிவ அறை. அதன் மேல் விதானத்தில் புலிப் பாணி சித்த வைத்திய நிலையம் என்ற துருப்படிந்த பலகை. அதன் அடிவாரத்தில் வைத்தியர் செகன்னாதன் என்ற பெயர் மற்றபடி எந்த மேக்கப்பும் இல்லாத கூடம் இருபக்கத்துச் சுவர்களிலும், ஆகாயத்தை வில்லாய் வளைக்கப் போவதாய் எந்த மார்தட்டலும் இல்லை .... அதன் சாதாரணத் தோற்றம், அவனை ஈர்த்தது. டை' கட்டாத சித்த வைத்தியர். ஸ்டெதாஸ் கோப்பைக் கூடக் காண வில்லை . இப்படிப்பட்ட மனிதர்களிடம் தான் விஷயம் இருக்கும்... இருக்குதோ இல்லையோ.... இதுவே கடைசி முயற்சி. இதுவும் பலனளிக்கவில்லையானால், இருக்கவே இருக்குது விஷம்... ரயில்வே தண்டவாளம்... தேசிய சாலையின் நடுப்பக்கம்....

மனோகர், வாழ நினைத்தவனாய் நடக்காமல், சாகத் துணிந்தவனாய், அந்த அறையை நெருங்கினான். மூன்று படிகளையும் ஒரே படியாய் அனுமானித்து, ஒரே தாவாய்த் தாவினான். பத்தாம் பசலி நாற்காலியில் முதுகைக் கிடத்தாமல், நிமிர்ந்திருந்த தோற்றத்தைப் பார்த்து, பரவசப்பட்டான். சதுர முகம் - சதுராடும் பார்வை - தினவெடுத்த தோள்கள் - இவ்வளவுக்கும் அவருக்கு, வயது எழுபது இருக்கலாம்.

வைத்தியர் ஜெகன்னாதன், அவனை உட்காரச் சொன்னார். அவனை சாமுத்திரிகா லட்சணங்களால் அளவெடுப்பதுபோல், அவன் மூக்கைப் பார்த்தார். வாய்க்கு மேலுள்ள மச்சத்தைப் பார்த்தார். கால்கள், தரையில் கோலம் போடுகின்றனவா என்று கீழ்நோக்கிப் பார்த்தார். பிறகு இயல்பாகப் பேசினார்....

"எனக்கு காது கொஞ்சம் மந்தம்.... உரக்கப் பேசணும். ஏன் அப்படி மிரண்டு பார்க்கிங்க... கர்ப்பப்பை இல்லாட்டாலும் கர்ப்பிணி ஆகலாம்.... எய்ட்ஸ் நோயை இப்பவே ஒழிக்கலாம். வழுக்கைத் தலையை பசுஞ்சோலை ஆக்கலாமுன்னு' பேப்பர்ல படங்கள் வருதே... கருப்புத் துரைகள். அவங்க மாதிரி நான் இல்யேன்னு ஆச்சரியப்படுகிறீங்களா... ஸ்டெதாஸ் கோப்பை தூக்குக் கயிறாய் கழுத்துல தொங்கப் போட்டு, புன்னகை பூக்கிறாங்களே... அவங்க வேறு... நான் வேறு... இவங்க சித்த வைத்தியர்கள் இல்ல... செத்த வைத்தியர்கள்.

அந்தப் பெரியவர், பேச்சை நிறுத்திவிட்டு, மனோகரின் காதுகளில், தன் பேச்சு ஏறுகிறதா என்பதுமாதிரி, மூக்கும் வாயும் முன் துருத்த உற்றுப் பார்த்தார். அவன் காட்டிய ஆவலில், பேச்சை தொடர்ந்தார்.

ஆனால், என்னை மாதிரி விரல்விட்டு எண்ணக்கூடிய அந்தக்காலத்து வைத்தியர்கள் இன்றும் உயிரோடதான் இருக்கோம். சித்தத்தை சிவனிடம் செலுத்தி, யோகம், ஞானம், மருத்துவம், மந்திரம், யந்திரம், தந்திரம் என்ற அப்பியாசங்களுக்கு அதிபதிகளான நந்தீசர், மூலதீசர், அகத்தீசர், சட்டநாதர், கிடைக்காடர், சண்டிகேசர், கனராமர், போகர், சிவவாக்கியர், பேரக்கர், புன்னாக்கீசர், மச்சமுனி, பூனைக்கண்ணர், யூகமுனி, கொங்கணர், புலிப்பானி, வரமுனி என்கிற பதினெட்டுச் சித்தர்களின் பரம்பரை இன்னும் இருக்கத்தான் செய்யுது... ஆனால், பத்திரிகைகளுல படமா சிரிக்கிறவங்க... இந்தப் பரம்பரையின் பெயரைக் கெடுக்கிறதுக்குன்னே பிறப்பெடுத்தவங்க.. இவங்க சித்தர் முன்னோர்களின் உள் முகம் தெரியாத வான்கோழிகள்... போகட்டும் உடம்புக்கு என்ன செய்யுது?"

மனோகருக்கு ஆன்மீக மனிதராய்த் தோன்றும் அவரிடம், அற்ப விஷயத்தை எப்படிக் கேட்பது என்று புரியவில்லை .... பிடி கொடுக்காமலே சொன்னான். "வயிற்றுக் கோளாறு... வாயுத் தொல்லை... இங்கிலீஸ் மருந்து, கேட்கல.."

"சரி... எழுந்து கைகால்களை உதறிட்டு.. நிமிர்ந்து உட்காருங்க.... இல்லாத கூனை ஏன் போடுறே..?"

மனோகர், மனதை உதறிப்போடப் போவது போல், உதறிவிட்டு உட்கார்ந்தான். வைத்தியர் ஜெகன்னாதன், அவன் நீட்டிய கையின் மணிக்கட்டுக்கு கீழே, தனது மூன்று விரல்களைப் பதித்தார். சிறிது நேரத்திற்குப் பிறகு ஒவ்வொரு விரலாய் எடுத்தெடுத்து, மீண்டும் பதித்தார்... திடுக்கிட்டவராய் அவனைப் பார்த்தார்... கண்டதைச் சொன்னார். இப்போது அவனை ஒருமையிலேயே பேசினார்....

"என்னப்பா .... இது.. நாதம் பேசலியே...”

"அப்படின்னா ..."

"அடக் கடவுளே இது, தெரியாமல் வந்த கோளாறு ... நாதம் என்றால் ஒலி என்று மட்டும் அர்த்தமில்லை .... பருவம் வந்ததும் ஒருத்தரோட குரலை ஆண், பெண் இயல்புக்கு தக்கபடி மாற்றி அமைக்கும் நாதாந்தம் என்றும் அர்த்தம். பதினான்கு, பதினாறு வயதில், ஆண்குரல்... பெண்குரல் என்று அடையாளம் காண முடிகிறதே... அந்த மகரக்கட்டு அடையாளத்தை ஆணுக்குத் தருவது, விந்து. பெண்ணுக்குத் தருவது, நாதம்.

சகல உயிர்களுக்கும் ஆதாரமான பெரும்பொருள் மானுடத்தில் ஆணுக்குச் சுரப்பது விந்து... பெண்ணுக்குச் சுரப்பது நாதம்.... ஆணையும் பெண்ணையும் எப்படிப் பொதுப்படையாய் மனிதன்னு அழைக்கிறோமோ அப்படி விந்துவையும், நாதத்தையும் நாதமுன்னு அழைப்பதுண்டு இதனால் தான் கோடிக்கணக்கான உயிரணுக்களைக் கொண்ட விந்தையும், லட்சோப லட்சம் முட்டைகளில் ஒன்றைக் கருப்பையில் சேர்க்கும் நாதத்தையும், பரம் பொருளின் சொரூபமாய் நினைக்கிறோம் இதனால் தான் நாதவிந்துக் கலாதி நமோ.. என்றார் அருணகிரியார் நாதாந்த ஜோதி என்றார் ஞானமுள்ள தேகமெல்லாம் நாதவிந்தின் கூறு என்றார். இப்படிப்பட்ட பெரும்பொருளை இழந்து நிற்கிறியே ஒரு பெண்ணைத் தொட்டாலே தீட்டாயிடுவியே... அப்படியே ஆகாட்டாலும்... உன்னால் ஒருத்தியை ஊடுருவ முடியாதே.... கல்யாணம் ஆகிட்டா ....? ஆயுட்டுதா..."

மனோகர், அவரை மருண்டும், மிரண்டும், பயந்தும், உண்மையைப் பாக்கப் போகிற புதிய தரிசனமாய்ப் பார்த்தான். அவரோ... கேள்விமேல் கேள்வி போட்டார்....

"குடி... கூத்து.. கஞ்சா... சிகரெட்டுன்னு உண்டா ... போதை ஊசி போடுறது உண்டா ....? இல்லையா....? சந்தோஷம்.... சரி... தூர்ப்பழக்கமுன்னு சொல்றோமே, சுய இன்பம்... அந்தப் பழக்கம் இருக்குதா.?

"இருந்தது... ஆனால் இப்போ இல்லை ..."

"அந்தக் கெட்ட பழக்கந்தான்... நாதம் பேசாததுக்குக் காரணம்.. பொண்டாட்டிகிட்டே... முடியுதா..?"

மனோகர், தலை கவிழ்ந்தான். அந்தத் தலையைத் தூக்கி பதிலளிக்கத்தான் போனான். முடியவில்லை. தலை நிமிர்த்தா மலேயே மென்று விழுங்கிப் பேசினான்...

அந்தப் பழக்கம் ஒன்றும் தப்பில்லன்னு - டாக்டருங்க..."

"எழுதுனவன் ஏட்டைக் கெடுத்தான் படித்தவன் பாட்டைக் கெடுத்தான்னு சொல்வாங்களே... அது இந்த எம்.பி.பி.எஸ் அரக்கன்களுக்குப் பொருந்தும்... அவங்க வாதம் சொத்தை எல்லாம் தெரியும் என்கிற ஆணவத்தில் எழுகிற மூடத்தனம்..."

"விந்து என்பது பிறப்பின் ஆதாரம்... ஆகாயம், வாயு, தேயு, என்ற தந்தைப் பூதங்களும், பிருதிவி, அப்பு என்ற தாய் பூதங்களும் கொண்ட பஞ்ச பூதங்களின் சேர்க்கையே இந்த உடல்.... இந்தப் பூதங்களின் குறிப்பிட்ட விகிதாச்சார சேர்க்கையே ஒரு உயிர்ப்பொருள். அல்லது.. ஜடப் பொருளின் இயல்பையும், உறுதிப் பாட்டையும் தீர்மானிக்குது. அந்தப் பொருளை சமச்சீர் நிலையில் வைக்கிறது... இதைத்தான் இங்கிலீஸில் மெடாபாலிஸம் என்கிறான். உன் உடம்பில் இயற்கையாய் இருந்த இப்படிப்பட்ட சமச்சீர் நிலைகளை... நீ செயற்கையாய் செய்து செய்து சிதைத்திட்டே...

எவள்கிட்டயும், உன்னால முடியாதே...?”

மனோகர், தட்டுத்தடுமாறி சந்தேகம் கேட்டான்.

"வாயுக் கோளாறாய் இருந்தாலும்.. நாதம் பேசாமல் இருக்கலாமே.."

"என் மேலேயே எதிரம்பு விடுறியா..... சந்தோஷம்... சும்மா சொல்லலே... நிசமாவே சந்தோஷம்.... வாயுக் கோளாறு.... அது இருக்கிறது வரைக்கும் ஆண்மைக் குறைவை ஏற்படுத்தும்.... இதை அலோபதிக்காரன் கணக்கில் எடுக்காதது தவறு... பெருந்தவறு... ஆனால் உனக்கு வாயுக் கோளாறு இருக்கிறதாய் நாடி சொல்லல..... நீ உண்மையின் விபரீதத்தைச் சந்திக்கப் பயந்து, அப்படி நினைக்கிறே... விந்து விட்டவன்... நொந்து கெட்டான் என்பது பழமொழி... அப்படிப் பட்டவனை, ஒரு கோழி முடியைக் காட்டயே பயமுறுத்திடலாம். குரு பரசுராமருக்கும், சிஷ்யன் பீஷ்மருக்கும் ஏற்ப்பட்ட போரில் பீஷ்மர் வென்றார்..... குருவிடம் இதற்குக் காரணம் கேட்டார்.... பரசுராமர் என்ன சொன்னார் தெரியுமா..... பீஷ்மா... ஒன் பிரம்மச்சரியம் என்னைத் தோற்கடித்தது.... என்றார். நம்ம மாதிரி சாதாரண ஆட்கள் கடைசிவரைக்கும் பிரம்மச்சரிய விரதத்தை கடைபிடிக்க வேண்டிய தில்லை... ஆனால் கல்யாணம் வரைக்கும் விரதம் இருந்தால்... அதற்குப் பிறகு விரும்பறதை பலமாய்ச் சுவைக்கலாமே.... ஒன்னால் முடியாதே.... பாவம்... ஒன் வீட்டுக்காரி.....

மனோகர், புழுவாய் நெளிந்தான். சிறு பிள்ளையாய்த் துடித்தான். சங்கரி, அவன் முன்னால் வந்து ஒப்பாரி போடுவது போல் ஒரு பிரம்மை. அப்புறம் அவள், கைதட்டிச் சிரிப்பது போல் ஒரு கொடுமை. அந்தச் சமயத்திலும் ஒரு சிந்தனை ஆசாமி, இப்படி பயமுறுத்துறது வியாபாரத் தந்திரமாய் இருக்குமோ - இருக்கிறது மாதிரித் தெரியலியே தோரணை, பேச்சு, துஷ்டனுக்கு உரியதாய்த் தோணலியே விளம்பரப் பலகையில் டாக்டர் என்று போடாமல் வைத்தியர் என்று போட்டுக் காட்டும் மனிதரிடம், இப்படிப்பட்ட வில்லத்தனம் இருக்குமா இருக்காது.

வைத்தியர், எழுந்தார் நாற்காலிக்குப் பின்பக்கம் திறந்த பலகை அலமாரியில், வரிசையாய் அடுக்கி வைக்கப்பட்ட லேகியப் பாட்டில்களில் ஒரு சின்னப் பாட்டிலை எடுத்தார். சிறிது நடந்து, மேற்குப் பக்க சுவரோர கண்ணாடி அலமாரியைத் திறந்து, ஒரு சின்னக் குப்பியில் உள்ளதைக் கொட்டிக் கொட்டி, முப்பது சின்னச் சின்ன சரிகைக் காகிதங்களில் நிரப்பினார்... நிரப்பியதை மடித்துக் கொண்டு வர அவருக்கு முப்பது நிமிடமாயிற்று. நிலையற்றுக் கிடந்தவனிடம் திரும்பி வந்தார்.... பாட்டிலையும், பஸ்பத்தையும் வைத்தார்....

"பணம்..."

"நூறு ரூபாய்"

மனோகர் நீட்டிய பத்து ரூபாய் நோட்டுக்களை எண்ணிப் பார்க்காமலேயே, சட்டைப் பைக்குள் திணித்துவிட்டு, அவனுக்கு வைத்தியத்தை வர்ணித்தார்...

"சித்தர்கள், கட்டளைப்படி, நானே தயாரித்த மருந்து.... ஒரு கரண்டி லேகியத்தையும், இந்த காகிதத்தில் இருக்கிற பஸ்பத்தையும் கலந்து சாப்பிடு. தினம் மூணு வேளை. ஆறின பாலைக் குடிக்கணும் சாப்பாட்டிற்குப் பிறகுதான்... போட்டுக்கணும்... ஒரு மணி நேரத்துக்கு முன்னாலேயோ, பின்னாலேயோ, காபி, டீ குடிக்கப்படாது பத்து நாளைக்குப் பல்லைக் கடித்து, பெண்டாட்டியை ஏறெடுத்துப் பார்க்கக்கூடாது... இந்த மருந்து பலிக்காட்டி, எந்த மருந்தும் பலிக்காது... பலன் கொடுத்தால், பதினோராவது நாள் என்னை வந்து பாரு... போய் வா..'

மனோகர் பேசாமலேயே நின்றான்.... அவரையே உதடுகள் துடிக்கப் பார்த்தான். அவர் அவன் பக்கமாய் வந்து, அவன் கையைப் பிடித்தபடியே அறிவுரையாற்றினார்......

"பெண் என்பவள் சக்தி சக்தியைத் திருப்திப்படுத்த எந்த ஆணாலும் இயலாது... அவளாய்த் திருப்திப்பட்டால்தான் உண்டு... பெண்ணிடம், ஆண் ஒடுங்க வேண்டும்... இதுதான் சித்த வைத்தியத்தின் கோட்பாடு... இதனால்தான் சித்தர்கள், மருந்துப் பொருட்களை தாய் சரக்கு, தந்தை சரக்கு என்று பிரித்தார்கள். தாய் சரக்கில் தந்தைச் சரக்கு மடிந்தால்தான் மருந்து கிடைக்கும்...”

"உதாரணமாய், கந்தகம் தாய்ச் சரக்கு ... பாதரசம் தந்தைச் சரக்கு... பாதரஸத்தை பஸ்பமாக்கி, அதை கந்தகத்தோடு சேர்த்து அரைக்க வேண்டும். இதனால் பாதரசம் மாண்டு, கந்தகத்துடன் இணைகிறது. சத்ரு எதிர்நிலை கொண்டது. சத்ரு.... தாய் நன்மை தரும் மித்ரு... மித்ருவைக் கொண்டு, சத்ருவை மடியச் செய்யவேண்டும். சத்ருவான விந்தை, மித்ருவான நாதத்தில் ஒடுங்கச் செய்ய வேண்டும்.. அதுவே தாம்பத்ய உறவு .. ஆகையால் இந்த உறவில் மனைவியை அடக்க நினைக்காதே... அடங்க நினை... இப்படிச் சொல்வதால், மனைவியை அவள் போக்கில் அடாவடியாய் விடலாம் என்று இல்லை.... அந்த மாதிரிச் சந்தர்ப்பங்களில் அவளைப் பப்ளிக்காய் அடக்கணும் ஆனால், பிரைவேட்டாய் அடங்கணும்.. போகட்டும்... எனக்கு என்ன வயது இருக்கும்..?"

“எழுபது"

"என் வயது எண்பது - இன்னும் ஒரு பல் போகல கண்ணுக்கு கண்ணாடி போடல. ஏன் இளமையிலேயே கட்டுப்பாடான பிரம்மச்சரியம் - தியானம் யோகாசனம். அடுத்த தடவை வரும்போது உனக்கும் சொல்லித்தாறேன் - அதுக்கு முன்னால் ஒன்று சொல்றேன் கவனமாய்க் கேள்- உச்சம் வரும்போது மூக்கின் நுனியைப் பார் புருவ மத்தியைப் பார்... சரி போய் வா."

மனோகர், அங்கேயே இருக்கப் போவதுபோல் நின்றான் வைத்தியர் நாற்காலியில் உட்கார்ந்து பதார்த்த குண சிந்தாமணிப் புத்தகத்தைப் புரட்டிய போது, அவன், அவர் தனக்கு மேற்கோள் காட்டப் போவதாய் அனுமானித்து அவரைப் பார்த்தான்.

என்றாலும், வைத்தியர் அந்தப் புத்தகத்தில் மூழ்கியபோது, மனோகர், மனதுள் மூழ்கியபடியே, இப்போது நடந்தான் - மூக்கு நுனியைப் பார்த்தபடியே தொடர்ந்தான்.... போகப் போக, அந்த வைத்தியசாலையில் கிடைத்த நிம்மதி சுருங்கியது - சுருங்கிச் சுருங்கி, சுருக்கம் தெரியாமலே போய் விட்டது. மனதில் மீண்டும் குழப்பம். இந்த மருந்து பலிக்கா விட்டால் எந்த மருந்தும் பலிக்காது... என்றாரே ஒருவேளை பலிக்காமல் போனால் செய்முறைப் பழக்கம் உடலின் சமச்சீர் நிலையைப் பாதிக்கும். என்றாரே - பாதித்திருக்குமோ- நாத விந்துக்கு அவ்வளவு மகிமையா- குப்புறப் படுத்த பழைய நாட்கள், பகை நாட்களோ - போனது போனதுதானோ - குரல் உடைந்து போனதற்கு அதுதான் காரணமோ. இதனால்தான் டெலிபோனில் வரும் சிலர், அவனை அடையாளம் தெரியாமலேயே மேடம் என்கிறார்களோ மேடமா - மடமா மோசம் போனேனே நாசமானேனே.'