Chapter 3

இரவு, பகலுக்கு விட்டுக் கொடுத்தாலும், மனோகரும், சங்கரியும் தத்தம் உள்ளுலகங்களில் மூழ்கிக் கிடந்தார்கள் அவன் மரக் கட்டையாய், மல்லாக்கக் கிடந்தான். அவளோ கள்ளிச் செடியாய்ச் சுருண்டு கிடந்தாள். நிசப்தம் கலைத்த சேவல்கள் கொக்கரக் கோவும், பால்காரப் பையனின் சைக்கிள் மணியோ சையும், பத்திரிகைகள் விழுந்த டொக் டொக் சத்தமும். கை பம்புகளின் டப் டப் சத்தமும் ஒன்றுடன் ஒன்று கூடிக் குலவி. ஒருவித கலவைச் சத்தத்தை எழுப்பின இத்தகைய சபதங்களுக்கு முன்பே எழுந்திருக்கும் சங்கரி, அப்படியே தூக்கத்தில் லயிக்கப் போவது போல் உடம்பில் எந்தவித அசைவும் இல்லாமல் கிடந்தாள் அவனோ, பாதாதி கேசம்வரை, மூடிக் கிடந்தான்.

என்றாலும், வெயில் உறைத்தபோது, சங்கரி கடமைக்காக எழுவதுபோல் எழுந்தாள். கண்களை முந்தானையில் துடைத்த படியே, கணவனைப் பார்த்தாள். அவனை எழுப்பப்போன கரங்களை குறுக்கி கொண்டாள்; எரிந்த கண்களை கசக்கியபடியே, வெயில் தெறித்த மாடிப்படிகளில் இறங்கினாள்.

இதனை நல்ல சகுனமாக அனுமானித்த அண்ணி காந்தாமணி, அடுத்த பத்தாவது மாதத்தில் ஒரு நல்ல குழந்தையை ஏந்தலாம் என்பது போல் தன் கைகளைப் பார்த்தாள். மைத்துனியின் கண்ணில் படும்படியாய் படிக்கட்டுக்கு அருகே நின்றாள். ஆனால் சங்கரியோ அப்படி ஒருத்தி நிற்கிறாள் என்று அங்கீகரிக்காமலேயே, சமயலறைக்கு எதிர் பக்கமாய் உள்ள பூஜை அறைக்குள் நுழைந்தாள். சுவர் முழுக்க தெய்வப் படங்கள். முருகன் - பிள்ளையார் - அய்யப்பன் அனுமான்- அம்பாள் – அஷ்ட லட்சுமிகள் - மூன்றடித் தூக்கலில் உள்ள பீடத்தில் பித்தளை உருவ வேல் முருகன், பக்கத்தில் அம்மை அப்பன் முகத்தோடு முகம் போட்ட சிவ பார்வதி அந்த சிவசக்தியை சங்கரி வெறித்துப் பார்த்தாள் - வெறுப்பாய் பார்த்தாள்... அதைப் பார்க்க மனதில்லாமல் கண்களை மூடினாள்.... அதுவே படிப்படியாய் தியானமானது. தீபம் ஏற்ற மறந்தவளாய்த் திக்கற்று நிற்பவள் போல் நின்றாள்.

இதற்குள், சமையல் அறையிலிருந்து வெளிப்பட்ட மாமியார் சொர்ணம்மா, பூஜை அறையைப் பார்த்தபடியே பின்பக்கமாய் நகர்ந்து, மகள் காந்தாமணியின் மீது முட்டினாள். மகளின் நெற்றியில் தனது பல்பட்ட இடத்தை தடவி விட்டபடியே, முகத்தை ஒரு குலுக்கு குலுக்கி, சலிப்போடும் சத்தமாகவும் கத்தினாள்...

"இவளுக்குக் கொஞ்சமாவது ஒரு இது இருக்குதா... சுத்த பத்தம் இல்லாம எப்படி பூஜை அறைக்குள் போகலாம்... நல்ல பொண்ணாப் பாத்து என் தலையிலே கட்டிட்டே.. தடிமாடு....”

காந்தாமணி, அம்மாவின் வாயில் ஆள்காட்டி விரலை வைத்து, அதை அடைத்தாள்... அவளுக்கு ஏதோ ஒன்று தட்டுப்படுவது போல் இருந்தது... இந்த சங்கரி சுத்த பத்தமில்லாமல் பூஜை அறைக்குள் போகிறவள் அல்ல.... திண்ணையில் நடந்தாள். கூட காலைக் கழுவிவிட்டு சாமி அறைக்குள் போகிறவள் அப்படி நடந்திருந்தால், இப்படிப் போகமாட்டாள்....

காந்தாமணி, மெல்ல நகர்ந்து சமையலறை கதவுச் சட்டத்தில் முதுகைப் போட் டி, பூஜை அறையில் நின்றவளைப் பூடகமாகப் பார்த்தாள். தலயில் பூக்கள் கசங்கி இருந்தன... ஆனால் அவள் எதிர்பார்த்தது போல், அவை கசங்கிக் கசங்கிக் கூழாகி, அவள் தலைமுழுக்க அப்பவில்லை. எள் பிசங்குவது போல் ஈரப்பசை காட்டவில்லை. புடவையும், மடிப்புக் கலையாமல் மதப்பாகத் தெரிகிறது.

அண்ணிக்காரிக்கு லேசாகப் புரிவதுபோல் இருந்தது. அதற்கு ஏற்றாற்போல், பூஜை அறையில் இருந்து வெளிப்பட்ட சங்கரி, அண்ணியை தலை தூக்கிப் பார்த்தாளே தவிர, நாணத்தால் கண்சிவந்து, கண்களைக் கீழ்நோக்கி கவிழ்த்து மேல் நோக்கிப் பார்க்கவில்லை. உப்புச் சப்பற்ற சிரிப்பை உதிர்த்தாளே தவிர, குறுஞ்சிரிப்பாய், குறிப்புணர்த்தும் சிரிப்பாய்ச் சிரிக்கவில்லை. அண்ணியிடம் பேசாமலே சமையலறைக்குள் போனாள். அங்கே பாத்திரங்களோடு மோதிக் கொண்டிருந்த மாமியார், மருமகளுக்கு ஆணை இட்டாள்.

"பால் திரிஞ்சிட்டு.-- உமா வீட்ல இருந்து ஒரு டம்ளர் பால் வாங்கிட்டு வா... புருஷனுக்குக் காபி போட்டுக் கொடுக்கணுங்கற கரிசனங்கூட இல்ல..."

சங்கரி , மடமடவென்று வெளியே வந்து, விஷயத்தை அண்ணியிடம் சொல்லிவிட்டு, மீண்டும் சமயலறைக்குள் வந்தாள். காந்தாமணி, முற்றத்திற்குப் போய், எதிர்வீட்டு உச்சாணி பால்கனியில் ஒய்யாரமாய் நின்ற உமாவிடம், நின்ற இடத்தில் நின்றபடியே, நாத்தியார் சொன்னதை வெளிப்படுத்தினாள்

"எங்க வீட்டுப் பாலு கெட்டுப் போச்சு... ஒங்க வீட்ல இருந்து கொஞ்சம் பால் வேணும்.."

"அதுக்கென்ன.. இப்பவே..."

பால்கனியில் ஒரு பூச்செடியைப் பதியம் வைப்பது போல் நின்ற உமா, அங்கிருந்து மறைந்து, ஐந்தாவது நிமிடம் அந்த வீட்டிற்குள் வந்தாள். குலுக்கி, மினுக்கி சந்தோஷமாகவே வந்தாள். அவளை மாமியார் படுத்துவதாகக் கருதப்படும் கொடுமைகளை, அவள் இறக்கி வைப்பதற்கு, இந்த சொர்ணம்மா தான் ஒரு சுமைதாங்கிக் கல் நேற்றிரவு புருஷனிடம் சேரவிடாமல் மாமியார் தன்னைப் படுத்திய பாட்டை, சொர்ணம்மாவிடம் சொல்வதற்காகவும் வந்தவள் போல் வந்தாள். 'பெரியம்மா. பெரியம்மா" என்று குரலிட்டபடியே போனவளின் கையிலிருந்த பால் டம்ளரை சங்கரி வந்து வாங்கிக் கொண்டாள்... சங்கரி இருந்தாலும் பரவாயில்லை இந்த வயதிலும் பிரா போடும் மாமியாரைப் பற்றிச் சொர்ணம்மாவிடம் சொல்லியே தீருவது என சங்கரியைப் பின் தொடர்ந்த உமாவை, காந்தாமணி இழுத்துப் பிடித்து கொல்லைப் பக்கம் கூட்டிப்போனாள். இருவரும் பத்து நிமிடத்திற்கு மேலாக வாய் உரச, காது உரச நின்றார்கள். உமா, காந்தாமணியிடம் சில குறுக்குக் கேள்விகளைக் கேட்டு, தலையாட்டினாள். பிறகு காந்தாமணியைப் போகும்படி சமிக்ஞையிட, அவளும் பூனைபோல் காலடிச் சத்தம் எழுப்பாமலேயே சமையலறைக்குள் வந்தாள்.

கொல்லைப் பக்கம் உமா கூவினாள்.

"சங்கரி ஏய் சங்கரி - இங்க வாயேன்."

சமையலறையில், மாமியாருக்கு ஒத்தாசை செய்து கொண்டிருந்த சங்கரி, சொர்ணம்மாவை மவுனமாய்ப் பார்க்க, அவளோ, "அவளுக்கு வேற வேலையில்ல..." என்றாள். அவள் தன் மாமியாரைப் பற்றி அவதூறு கிளப்புவது போல், இவளும், அவளிடம் தன்னைப் பற்றிக் கிளப்பி விடக்கூடாதே என்கிற முன்னெச்சரிக்கை.... ஆனாலும், அங்கே வந்த காந்தாமணி, குறுக்கே புகுந்து, "கூப்பிடறாள் பாரு - என்னன்னு கேளு... அதான் மரியாதை... உன் வேலய நான் பாக்கேன் ..." என்று சொன்னபடியே, சங்கரியின் முதுகைப் பிடித்துச் செல்லமாகத் தள்ளினாள். அவள் பின்வாசலைத் தாண்டியதும், அம்மாவுக்கு உதவியாளாய் ஒத்தாசை செய்யாமல், கொல்லைப்புற பின் கதவை பாதி சாத்தி, அதற்கு பின்னால் தன்னை மறைத்துக் கொண்டாள்.

அந்தக் கொல்லை, பூந்தோட்டமாகவும், குட்டித் தோப்பு போலும் மின்னியது. குடை விரித்தாற்ப் போன்ற மா மரங்கள்... நிமிர்ந்து நின்ற கொய்யா மரங்கள்... வாழைப் பூவை உரசிய தென்னங்கன்று....ஒன்றை ஒன்று பின்னிக் கொண்ட செவ்வரளி... மஞ்சரளிச் செடிகள் - ராட்டினம் போல் பூக்கும் பெங்களூர் அரளி மரம் ... தரை மெத்தையான புல் பிறப்புக்கள்... அணில்களின் ஆரவாரங்கள்... பின்பக்கத்திற்குத் திரையிட்டது போன்ற அசோக மரங்கள் அவற்றின் முக்காடு போட்டத் தோரணை ..

ஆங்காங்கே அழகு காட்டிய பூக்களில் கிடந்த சருகுகளை எடுத்து கீழே போட்டபடியே, சங்கரி, உமாவை நெருங்கினாள். என்ன என்று கேட்காமல், அந்த வார்த்தைக்குப் புன்னகை வடிவம் கொடுத்தாள்... அதற்குள் உமாவுக்கு வந்த காரியத்தைவிட சொந்தக் காரியமே முக்கியமாய்ப்பட்டது...

"சங்கரி எனக்கு அந்த மாங்காயப் பறிச்சுக் கொடேன்."

"உனக்கு இல்லாத உரிமையா.. நீயே பறிச்சுக்க வேண்டியது தானே"

"நான் ஒன்ன மாதிரி உயர்ந்த மனுஷி இல்லயே.. எனக்கு எட்டல."

"லோசாக் குதிச்சா எட்டுது." "நான் குதிக்கப் படாது."

"ஏன் ?"

''அபார்ஷன் ஆயிடுமாம்.... மூணு மாசம் வரைக்கும் எச்சரிக்கையாய் இருக்கணுமாம்... வயிறு குலுங்கப்படாதாம்...”

"ஒன் புள்ளைக்கி ரெண்டு வயசு கூட ஆகல. இதுக்குள்ளே என்ன அவசரம்...?"

"உனக்கு தெரியுது. அவருக்குத் தெரியமாட்டேங்குதே... எங்க வீட்டு மிஸ்டர், குணத்துல மட்டுமில்ல... அதுலயும் உடும்புப் பிடிதான் அவர் டூர் போய்ட்டுத் திரும்பி வரும்போது, நான் பயந்து போயிடுவேன். பயமுன்னு கூடச் சொல்லப்படாது... பயபக்தி... ஒரு மணி நேரம் புரட்டி எடுத்திடுவார்.... போயும் போயும் கொல்லர் தெருவுல ஊசி விக்கிறேன் பாரு... உங்க வீட்டு மிஸ்ட்ட ரும் நேற்று ராத்திரி ஒன்ன புரட்டி எடுத்துருப்பாறே! ஆசாமியைப் பார்த்தாலே அசத்தறது மாதிரித்தானே இருக்காரு...''

சங்கரி, கண்களை மூடினாள் காணாத ஒன்றை காணவேண்டும் என்ற தாபம். ஒரு மணி நேரம் புரட்டுவாராமே.... முப்பது வினாடிகளே, அவ்வளவு இன்பமாக இருந்தால், அந்த ஒரு மணி நேரம்... அறுபது நிமிடம்... மூவாயிரத்து அறுநூறு வினாடிகள் எப்படி இருக்கும்? இங்கே ஒரு நிமிடம் கூட இல்லை ... அதிலும் பாதி. அதுவும் காதல் விளையாட்டாய்க் கரைந்து, இலக்கு இல்லாமலேயே அற்றுப் போகும்... ஒரு மணி நேரம் அடேயப்பா...

கண்மூடிக் கிடந்த சங்கரியை, உமா உலுக்கினாள்.. நேற்றைய ராத்திரி உருட்டலை, அவள் நினைத்து மனதுக்குள் இன்றைய ராத்திரிக்கு ஒத்திகை நடத்துவதாக நினைத்தாள். அந்தச் சமயத்தில் அவளுக்கு மாங்காய்தான், கண்ணில் பட்ட தே தவிர, காந்தாமணி சொன்னது நினைவிற்கு வராமலே பேசினாள்.

"ஒருவேளை நீ கூட உண்டாயிருக்கலாம்... அப்படின்னா நீயும் குதிக்கப்படாது... மாங்காய் கிடைக்காட்டால் போவட்டும்... மாவடு இருக்கவே இருக்கு.... ஆனாலும் வாலிப மாங்காய் ருசியே தனி... மாவடுவிலே புளிப்புக்குப் பதிலா துவர்ப்புதான் இருக்கும்."

"பரவாயில்ல. ஒனக்காவது ருசிக்கட்டும் நானே பறித்துத் தாரேன்."

சங்கரி, மாமரத்தை நோக்கி நடந்தாள். பின்னர், குதிப் பாய்ச்சலாய்ப் போனாள்... உடல் முழுக்க ஆவேசம்... மனம் முழுக்க ஆதங்கம். அந்த ஆவேசததையும் ஆதங்கத்தையும் உள்ளடக்க முடியாமல், ஒரே ஓட்டமாய் ஓடினாள்... மேலே தொங்கிய காய்களுக்குக் கண்களால் குறி போட்டாள்.. அத்தனையும் தலைக்கு ஒரு முழத்திற்கும் அதிகமான உயரத்தில், பிடி பார்க்கலாம் என்பது போல் பார்த்தன

சங்கரி, வலது கையை நீட்டி குதித்தாள்...... குறிப்பறிந்த மாங்காய், வலதுபக்கம் போனது.. உடனே அவள் இடது கையைத் தூக்கிக் குதித்தாள்... அது வலது பக்கம் போனது. கைப்பக்கம் வருவது மாதிரி வந்து கண் காணாத இலைப் பிரதேசத்திற்குள் மறைந்தது.. இன்னொரு பிஞ்சு, அவளை இளக்காரமாய்ப் பார்த்தது.... அவள் குதித்தாள். குதி குதியென்று குதித்தாள்... காய்களுக்காக குதித்தவள், இப்போது அவற்றின் நினைப்பற்று, சும்மாவே குதித்தாள். அந்த மரத்தைச் சுற்றிச் சுற்றி வந்து தாவினாள். குதியற்று மேலே போய், பிடியற்றுக் கீழே விழுந்தாள்... காய்கள் சிரித்தன.. இலைகள் பரிகசித்தன.. கிளைகள் அவள் தலையில் அடித்தன... கண்களைப் பிராண்டின...

உமா, ஓடி வந்தாள் : பேசிக்கொண்டே ஓடி வந்தாள்....

"சங்கரி! முடியாட்டால் விட்டிடு.... எப்பவுமே கொப்பை வளைத்துப் பிடித்து வசப்படுத்திக் கிட்டுத்தான், காயைப் பறிக்கணும்."

சங்கரிக்கு, மூச்சிரைத்தது. அவள் பிடித்த கிளைகளும் மூச்சிழைப்பது போல் அங்கும் இங்குமாய் ஆடின மாமர பச்சை அனைத்தையும் ஒன்று திரட்டி, அழுத்தப் பச்சையாகத் தோன்றிய கன்னிக் காய்கள், இலை மாராப்பில் அடைக்கலம் கொண்டு, அவளைப் பரிகசித்தன... மீண்டும் குதிக்கப் போன சங்கரியை, உமா பிடித்துக் கொண்டாள். அவளை ஆசுவாசப்படுத்தி, மாமரத்தின் கீழே உள்ள மணல் திட்டில் உட்கார வைத்தாள் தற்செயலாக உமா திரும்பியபோது, கொல்லைக் கதவின் பின்பக்கம் காந்தாமணி கைகளைக் கேள்விக்குறியாக்கி, அவளைப் பார்த்து முக மாட்டினாள்.

உமா, சமர்த்தானாள்.

"என்ன சங்கரி இப்படியா குதிக்கிறது? நேத்துக் கூட, நீ உண்டாயிருக்கலாம் கரு என்னாகிறது? கலைஞ்சிடாது.."

சங்கரி, ஆகாயத்தைப் பார்த்தாள் கைக் கெட்டாத அந்த மாங்காய்களைப் பார்த்தாள். உமா, அவளை மீண்டும் உலுக்கினாள்

"ஏன் இப்படி ஒரு மாதிரி ஆயிட்டே ? ஏன் கன்ணு அப்படிக் கலங்குது? இங்க பாரு சங்கரி! எதையும் மனசுக்குள்ளே கல்லு மாதிரிப் போட்டு வச்சா, அதுவே அப்புறம் பிளட் பிரஷரா.. நீரிழிவா... வயிற்றுக் கோளாறா... ஏன் பைத்தியமாக்கூ - மாறுமுன்னு, எங்க வீட்டு மிஸ்டர் சொல்லுவார்... மனசுல என்ன இருந்தாலும், அதைக் கவுத்து வாயாலே கொட்டிடு.. ஒன்னோட பிரச்சினை காதல் தோல்வியா? இதனால், அவருக்கு இடங்கொடுக்க மனசு வரலயா? காதல் தோல்வி சகஜம்... நான் கூடத்தான் காதலிச்சிருக்கேன். இப்ப உண்டாகலியா - பழச மறக்க முடியாதுதான்... அதுக்காக புதுச உதறணுமா என்ன...?"

சங்கரி, குமுறினாள். 'காதலே இல்லாத போது, அது எப்படி தோல்வியாகும்? இந்தப் பழியோட நான், இடங்கொடுக்கல என்கிற இன்னொரு பழியா.... கடவுளே.. கடவுளே..'

உமா, தொடர்ந்தாள்.

"ஒருவேளை உன் வீட்டுக்காரருக்குக் காதல் தோல்வியா? அதனால ஒன்ன விட்டு ஒதுங்குறாரா... ஒன் மேல எரிஞ்சு விழுகிறாரா... எதுனாலும் சொல்லு இவளே... பெரியவங்க எதுக்கு இருக்காங்க.."

சங்கரி, முட்டிக் கால்களில் முகத்தை அழுத்தமாகப் பதிய வைத்துக் கொண்டு, வயிற்றுக்கும் கால்களுக்குமான இடை வெளியில், வாயை மூடிக் கொண்டாள். அந்த ஏலாமனிதர் மீதும் ஒரு பழியா ...?

அவள் உடம்பு குலுங்கியது.. தொண்டைக் குமுறல், வாய் மூடிக் கிடந்ததால், அது பிடறி வழியாய்ப் பிய்த்துக் கொள்ளப்போனது... உமா, அவளை தன் மடியில் கிடத்தினாள். அவ்வளவுதான்... சங்கரி, அவள் மடியில் புரண்டு புரண்டு அலைமோதினாள்.

உமா, அவள் முதுகைத் தட்டிக் கொடுத்தபடியே, பேச்சை விட்டாள்.

"அழாதடி அழாதே மனசுக்குள்ளே வச்சுக் குழப்பாதே.... என்கிட்டயாவது சொல்லு.. பெண்ணுக்குப் பெண்... தோழிக்குத் தோழி. போதாக்குறைக்கு ஒன் மாமியார் வேற , ஒன்மேல பழி போடறாள் உன்கிட்ட இருக்கிற உண்மை ஒருத்தர் கிட்டயாவது போனாத்தான், அது உன்னைச் சுடாது.... என்கிட்ட நம்பிக்கை இருந்தாச் சொல்லு. அப்புறம் ஒன்னிஷ்டம்.”

சங்கரிக்கு, சொல்லவும் முடியவில்லை. சொல்லாமலும் இருக்க முடியவில்லை... தலைவெடித்து விடும் போல் இருந்தது. உடலைக் கூனிக் குறுக்கியபடியே, ஆகாயத்தில் கடவுள் இருப்பது போலவும், அவரிடம் முறையிடுவது போலவும் சொன்னாள்.

"அவரால் முடியலேயே முடியலேயே."

சங்கரி விக்கியும், திக்கியும், விம்மியும், துக்கித்தும் அடை மழை தூறலானது போல் ஏங்கியபோது, உமா நெகிழ்ந்து போனாள் அவரால முடியலேயே என்று இவள் கோபமாய்ச் சொல்லவில்லை; குற்றஞ்சாட்டவில்லை. அனுதாபமாய்ச் சொல்கிறாள்... இந்தக் காலத்தில் இப்படி ஒருத்தியா?

உமாவுக்கு, மனம் கேட்கவில்லை. ஆனாலும் முக்கால் வாசி அனுதாபம் கொண்ட மனதின் நுனியில் ஒரு அற்ப சந்தோஷமும் ஏற்பட்டது... அவள் மீது இவள் கொண்ட பழைய பகையற்ற பொறாமை, புதிய பெருமிதமாய் உருமாறியது. இந்த உமாவின் மாமியார் எதற்கெடுத்தாலும், இருந்தால், சங்கரி மாதிரி இருக்கணும்.... இங்கேயும் இருக்காளே... என்று சாடை மாடையாகப் பேசுவது உண்டு. இந்த ஒப்பீட்டுப் போராட்டத்தின் தோற்றாலும் இறுதிப்போரில் தான் வெற்றி பெற்றுவிட்டதாக, உமா எழுந்தாள்.

ஒரு உளவாளியின் சாதனைத் திருப்தியுடன், சரிம்மா.... இது பெரிய பிரச்சினை... ஆற அமர அப்புறமாய்ப் பேசுவோம் எங்க வீட்டுக் கொள்ளிக் கண்ணி, இதுக்கு மேலே இருந்தால் எரிச்சிடுவாள்' என்று சொன்னபடியே, சங்கரியைத் தனிமையில் விட்டு விட்டு, கொல்லையைத் தாண்டி, அந்த வீட்டின் முற்றத்திற்கு வந்தாள். அவளுக்காகவே காத்திருந்த காந்தாமணிடம், "ஒன்றும் நடக்கலியாம் என்று பொதுப்படையாய் சொல்லிவிட்டுப் போய் விட்டாள்.

காந்தாமணி, கொதித்துப் போனாள் இவள் ஆம்பிளப் பிறவிதான்... நேத்துக்கூட என் தம்பி, உமா புருஷன் கிட்ட டில்லி பொண்ணுகளப் பத்தி எப்படியெல்லாம் பேசினான்.. கோளாறு இவகிட்டதான் இருக்கும்... படிக்கும் போது எவனயாவது விரும்பிட்டு சினிமாவுல வரது மாதிரி, என் தம்பிக்கிட்ட ஏடாகூடமா நடந்தாலும் நடந்திருப்பாள். இந்த விவகாரம், சாண் ஏறுன்னா முழம் சறுக்குகிற கதையாச்சே. அம்மாகிட்ட சொன்னால், அவ்வளவுதான். தம்பிகிட்ட பேசவும் முடியாது... கிணறு வெட்ட பூதம் கிளம்புதே.. ராசியில்லாத நான், அவனுக்குப் பொண்ணு பார்த்திருக்கக்கூடாது ராசியிருந்தால், அந்த மனுஷன் அப்படி மாரடைப்புல சாவாரா அதுவும் மூணு வருஷத்துக்குள்ளே ...'

இதற்குள், மனோகர் முற்றத்துக்கு வந்துவிட்டான். பேண்டும் சட்டையுமாய் நடந்தான் மண்மேட்டில் கிடந்த சங்கரி, அந்தப் பக்கமாய் ஓடிவந்து அவனை படபடப்பாய் பார்த்தாள். எங்கே போகிறார்... எதற்காகப் போகிறார்...

சங்கரி நினைத்ததை, காந்தாமணி, தம்பியிடம் கேட்டாள்.

"லீவு நாளும் அதுவுமா வீட்ல இருக்காம எங்கேப்பா போறே... குறைஞ்சத எங்கிட்டேயாவது பேசிக்கிட்டு இருக்கலாம் பாரு."

"போகும் போது எதுக்குக்கா மறிக்கிறே...?"

"ஒன்ன மறிக்கலேப்பா.... ஆண்டவன் புண்ணியத்துலே.... ராவும் பகலும், நீ சந்தோஷமா இருக்கனும் - அதான் என்னோட ஆசை...”

அவள் பேச்சை முடிக்கும் முன்பே, மனோகர் அக்காவையும், மனைவியையும் ஒரு மாதிரிப் பார்த்தான். பிறகு திரும்பிப் பார்க்காமலேயே, வீட்டிற்கு வெளியே வந்தான். அப்போது, உமாவின் கணவன் இந்திரன் குறுக்கே வந்தான். இரண்டு கண்களுக்குப் பதிலாய் ஒரு கண்ணை மட்டுமே மாறி மாறி பயன் படுத்துவது போன்ற காக்கா கண்ணன். உடலைக் குலுக்காமலும், கண்களைச் சிமிட்டாமலும் அவனால் பேச முடியாது... பொம்மைச் சொக்காவில் சென்டு வாசனை படர, மனோகரிடம் பேசினான்...

"ஒரு சின்ன உதவி செய்யணும் பிரதர்... இப்ப இருக்கிற கம்பெனில எனக்கு இருக்க விருப்பம் இல்லை.... ஒரு பாரின் கம்பெனில வேகன்ஸி வந்திருக்கு... என் சர்டிபிகேட்டுகளோட நகல்களை நீங்க அட்டெஸ்ட் பண்ணணும்.... என்னை மாதிரி ஒங்களுக்கு, சம்பளம் இல்லாட்டாலும், அந்தஸ்து அதிகமாச்சே.. கெஸட்டட் ஆபீசரா, கொக்கா.."

'ஆபீஸ்லதான் சீல் இருக்கு... இன்னிக்கும் நாளைக்கும் லீவு. அடுத்தநாள் காலையிலே, ஆபீஸ் வாங்க... இல்லாட்டி ஒரிஜினல் களையும் நகல்களையும் எங்கிட்டே கொடுங்க. நான் செவ்வாய்க்கிழமை சாயங்காலம் கொண்டுவரேன்.''

மனோகர், நேற்று வரை உறவாடிய இந்திரனை எரிச்சலோடு பார்த்தான் அவன் தன்னிடம் பேசிக் கொண்டே, சங்கரியைத் துளைத்துப் பார்ப்பது போல் இருந்தது. எதிர்ப் பார்வை கிடைத்து விட்ட அனுபவமா

இந்திரன் மனோகருக்குள் எரியும் தீயில் எண்ணையை ஊற்றினான்

"எனக்கு எந்தக் காரியமானாலும், அதை உடனே முடிச்சிடனும்... வாங்க உங்க ஆபீசுக்குப் போகலாம் ."

"என்ன சார் நீங்க... காலங்காத்தாலே வழி மறிக்கிறீங்க.... அடுத்தவனுக்கும் வேலையிருக்குமுன்னு நெனைத்துப் பாருங்க.... நாளைக்கும் போஸ்டல் ஹாலிடே அதுக்குள்ளே என்ன அவசரம்....''

இந்திரன், சங்கடமாகச் சிரித்தான். நிற்கவும் முடியாமல், போகவும் முடியாமல் கால்களால் தரையைப் பிராண்டினான். மனோகர், ஏதோ தமாஷ் செய்வது போல் ஒரு மாயச் சிரிப்பை உதிர்த்தான். இதற்குள், உமா தனது வீட்டின் கேட்டிற்கு வந்து, "ஏங்க உள்ள வாங்க. மதியாதார் தலைவாசல் மிதிக்கலாமா? உலகத்துலே இவரு மட்டுந்தான் ஆபீசரா." என்று கத்தினாள்.

இந்திரன் யந்திரமாய் நடந்தான்... ஆனால், அதைப் பற்றிப் பொருட்படுத்தாது போல், மனோகர் , வேக வேகமாய் நடந்து, தெருக்கோடியில் மறைந்தான். இதற்குள் பழைய நட்பை மறந்து உமாவை ஒரு பிடி பிடிக்க ஓடி வந்த சொர்ணம்மாவை, காந்தாமணி இழுத்துக் கொண்டு போனாள். உமா, சொர்ணம்மாவைப் பார்த்து நடுங்கினாள் மாமியாரைப் பற்றி தெரிவித்த சங்கதிகளையெல்லாம், மாமியாருக்கே வந்து விடுமே என்ற பயம்.