Chapter 2

சங்கரியின் தலை, பாதிப் பூந்தோட்டமாகியது... முடி வளையங்கள், பூப்பதியங்க-ளாயின... காந்தாமணி அண்ணிதான், மெனக்கெட்டு, மார்க்கட்டுக்குப் போய் மல்லிகை, முல்லை.... கனகாம்பர பூ வகைகளை, முழக் கணக்கில் வாங்கி வந்தாள். முல்லைப் பூவை முன் தலையில் வைத்து, மல்லிகைச் சரத்தை பின் தலையில் சூடி, அதன் மேல் கனகாம்பரத்தைப் பொருத்தினாள், வலது காதின் மேல் பக்கம் சொருகப்பட்ட ஒற்றை ரோஜா பிறைச் சந்திரனாய் ஒளியிட்டது. பின் தலையில் வைத்த செவ்வந்திப்பூ மஞ்சள் ஒளியாய் ஜொலித்தது. நடுத்தலையில் வில்போல் வரித்துக்கட்டப் பட்ட முல்லை வெள்ளொளியாய் பிரகாசித்தது. அண்ணி அதோடு விடவில்லை. அவளுக்குக் குங்குமம் இட்டாள்... சந்தனம் தடவினாள். அவள் எவ்வளவோ மறுத்தும் கேட்காமல், பாவாடை தாவணி தோற்றம் காட்டும் புடவையை வலுக்கட்டாய மாகக் கட்டிவிட்டாள். இடைக்குக் கீழே மருதாணி நிறம். இடைக்கு மேல் சாம்பல் நிறம்....

காந்தாமணி, சங்கரிக்கு சிங்காரிப்போடு விடவில்லை. சுடச் சுடப் பாயசம் காய்த்து, அதில் நாலு பச்சை முட்டைகளை உடைத்துக் கலந்து, சுண்டக் காய்ச்சி, ஒரு செம்பு நிறைய நிரப்பி அவள் கையில் நீட்டியபடியே கிசுகிசுத்தாள். "ஆளுக்குப் பாதியாய் குடியுங்க... ஆண் பாதியும், பெண் பாதியும் முழு ஆளாய் மாறிவிடும்.” என்று பிளாஷ்பேக் சம்பவங்களை நினைத்தபடியே மெய் மறந்து குறிப்பிட்டாள்.

என்றாலும், சங்கரி, அந்த அறைக்குள் நாணப்பட்டோ , நளினப்பட்டோ வராமல் - ஏனோதானோ என்றே வந்தாள். வாசலில் கண்போட்டபடியே அந்த அறை முழுவதும் கால் போட்ட மனோகர், அவளை வழிமறித்துப் பற்றிக்கொண்டான். உடனே, அவள், செம்பை அவன் வாயில் திணித்தாள். அண்ணி சொன்னதை மெல்லச் சொன்னபடி, பாதியை தான் குடிக்காமல், அந்த செம்பு முழுவதையும் அவனைக் காலி செய்ய வைத்தாள்.

மனோகர், அவளை வலது கையால் இணைத்து, இடது கையால் அவள் பிடறியைத் தடவியபடி கட்டிலுக்கு நடத்தி வந்தான். மூன்று மணி நேரத்துக்கு முன்பே அண்ணி அனுப்பிய போது இருவரும் பேச வேண்டியதை எல்லாம் பேசிவிட்டார்கள். வீட்டுக்காரர், வீட்டைக் காலி செய்யவில்லை யானால், வேறொரு பூட்டைப் போடப்போவதாக மிரட்டியது. மாமியார் சவாலிட்டது... அவனது பாஸ்போர்ட் விசாரணைக்கு வந்த போலிஸ்காரர் நூறு ரூபாயோடு திரும்பிப் போனது, டெலி போன் பில், கரெண்ட் பில், போன்ற அனைத்து விவகாரங்களையும் அலசிவிட்டார்கள்... எனவே இப்போ பேச்சுக்கு வேலை இல்லை... ஆனாலும் பேசினான்....

"சீக்கிரமா வரப்படாதா. நான் தூங்கின பிறகு வர்லாம் என்கிற மாதிரி வாரே..."

அவர்கள் தூங்க வச்சுட்டு வாரேன் ..''

இருவரும் சொல்லி வைத்தது போல் கட்டிலில் ஒரே சமயத்தில் விழுந்தார்கள் விழுந்து எழுந்தவளை, விழுந்து கிடந்தவன் கையைப் பிடித்து இழுத்து, தன் பக்கமாய்ச் சரித்தான்... பிறகு படுக்கையில் எழுந்து உட்கார்ந்து, அவளை தன் மடிமேல் கிடத்தினான். தலையைச் செல்லமாகக் குட்டினான். முகத்தை அவளை நோக்கிக் குனிந்தான். அரைவளைவாய் வளைந்து, அவள் முகம் நோக்கி தன் முகத்தைக் கொக்கு போல் நீட்டினான்... அவள் உடலில் விலாப் பக்கங்களில் நீள வாக்கில் கிடந்த கரங்களை, தனது கரங்களால், அழுத்திப் பிடித்தான். கட்டில் மெத்தையில் உடல் தடயங்கள் விழும்படி இறுக்கிப் பிடித்தான்.

என்றாலும், ஒரு நிமிடத்தில் எதையோ நினைத்துக் கொண்டவன் போல், "மறந்துட்டேன் பாரு" என்று கூறியபடியே முகத்தை நிமிர்த்தினான். கைப்பிடிகளை அகற்றினான். மடியில் கிடந்தவளை, மென்மையாய் புரட்டி, கட்டிலில் ஒருகளித்துப் போட்டு விட்டு, எழுந்தான். சுவர் அலமாரியைத் திறந்து, ஒரு வெள்ளைப் பெட்டியை எடுத்து, அவள் பக்கம் வைத்தான். ஜிகினாக் காகிதம் சுற்றிய அந்தக் காகிதப் பேழையை எப்படித் திறப்பது என்று அவள் அதை அங்கு மிங்குமாய்ப் புரட்டியபோது, மனோகர் குளியல் அறைக்குள் போனான்.

சங்கரி, சந்தன நிறத்தில் சதுர வடிவான, அந்தப் பெட்டியை வியாபித்த ஜிகினாக் காகிதத்தைக் கிழிக்கப் போனாள். கைதான் வழுக்கியது. பிறகு பல்லால் கடித்து, ஒரு பக்கத்தை ஓட்டையாக்கி, அந்த ஜிகினாவை அக்கு வேறு ஆணி வேறாக்கினாள். ஒன்றின் ஒன்றாய்க் கௌவிய பெட்டியை பலவந்தமாக உடைத்து, கௌவப்பட்ட பெட்டியைப் பார்வையிடாள். வண்ணக் காகிதத் துண்டுகளுக்கு மத்தியில் ஒரு முத்துமாலை. வெள்ளை நிற வாளிப்போடு, ஒளி வடிவமாய் மின்னியது. முத்துக்களுக்கு இடையிடையே முடிச்சுப் போடப்பட்ட தங்கச் சரம். அவள் முத்து மாலையை தூக்கிப் பிடித்த போது, மனோகர் குளியல் அறையில் இருந்து திரும்பினான். அவன் முகத்தில் ஆங்காங்கே குமிழிகள்... நீர்க் குமிழிகளா... வேர்வைக் குமிழிகளா..... அல்லது இரண்டு வகையுமா... அவனுக்கே தெரியாது... ஆனாலும் தெரிந்தெடுத்த அந்த மாலையைப் பற்றி அவன் விளக்கினான்....

"தெருவுல விற்கிற பாசி மாலையை வாங்கிட்டு வந்ததாய் நினைக்காதே சங்கரி... இதோட விலை... மூவாயிரம் ரூபாய்... டி.ஏ. அட்வான்ஸ்ல பாதிப் பணம்.... புதுதில்லியில் இருந்து, பீல்டு விசிட்டாய் ஹைதராபாத் போயிருந்தோம்.... அப்போ சார்மினார் பார்க்கப் போனோம். அதன் சுற்று வட்டாரத்தில் பெரிய பெரிய முத்து மாலைக் கடைகள்... அத்தனையும் ஒரிஜினல் முத்துக்கள்... ஏமாந்துட் டேன்னு நினைக்காதே... என்னோட தெலுங்கு சகாக்களைக் கூட்டிக்கிட்டு போய், சலுகை விலையில் வாங்கின மாலை. விற்பனை வரியைத் தள்ளுபடி பண்ணிட்டாங்க... ஆனால் ரசீது தர்ல..."

எனக்கு என்னமோ இது போலி மாலையாய் இருக்குமோன்னு .."

"என்னை இப்படி நோகடிக்காதே சங்கரி.."

"ஸாரி... முத்துக்கள் போலியாய் இருந்தாலும் தங்கச் சரடு இருக்குதே... அது போதும். அதோட, நீங்க சொல்றது சரிதான். மணக்காத குறையைத் தவிர மற்றபடி நல்ல மாலைதான்.... இதை நான் வெறும் மாலையா நினைக்கல அத்தான்... ஒங்க அன்பின் அடையாளமாவே நினைக்கேன்.... ஆனாலும் காசை இப்படி கரியாக்கப்படாது. காலையில் இருக்குது ஒங்கம்மாவோட பூஜை... அவங்களுக்கு ஒரு புடவை எடுத்துட்டு வரப்படாதா - எப்படில்லாம் திட்டப் போறாங்களோ..."

"எடுத்துட்டு வருகிற புடவைக்கு... எத்தனையோ குறை சொல்ற கேஸு... இந்த முத்து மாலை விலையைக் கேட்டால்... மயக்கம் போட்டுடுவாள் - அதனால் நாம் உண்மையைச் சொல்லப்படாது .."

"அண்ணிகிட்ட சொல்லாமல் இருக்க முடியுமா? அவங்க தண்ணீருக்குள்ளேயே தடம் பார்க்கிறவங்க..."

"எப்பா - ஒன்கிட்ட வாய் கொடுத்து மீள முடியுமா... நீ இங்கே அடிக்கிற லூட்டி. வெளியில் யாருக்குமே தெரியாது.."

சங்கரி , மெல்லச் சிரித்தபடியே, அந்த முத்து. மாலையை விரிவாக்கி, அதற்குள் தலையை நுழைக்கப் போனாள். மனோகர், அவளது கரங்களைப் பற்றிச் செல்லமாகச் சொன்னான்...

"நீயே மாட்டிக்கப் போனால் என்ன அர்த்தம் சங்கரி... நான் ஒருத்தன் எதுக்காக இருக்கேனாம்...''

மனோகர், அந்த மாலையைப் பறித்து, தனது கரங்களுக்கு கொண்டு வந்தான். அவளும் அதைப் புரிந்து கொண்டவள் போல், சின்னச் சிரிப்பொன்றைச் சிதறவிட்டு, அவன் பக்கமாக கழுத்தை நீட்டினாள். அவன் அந்த மாலையின் கொக்கியையும், அது ஊடுருவிய வட்டத்தையும் பிரித்தான்... அந்த முத்துச் சரத்தின் முனைகளை கைக் கொன்றாய் பிடித்தபடி, அவள் கழுத்துக்கு இருபக்கமும் கொண்டு போனான். பிறகு ஒரு முனை கொக்கியை, மறுமுனை வளையத்திற்குள் மாட்டப் போனான். அந்த முயற்சியில், அவள் பிடரி முடி அந்த வளையத்தில் சிக்கியது... கொக்கியை மாட்டியபோது, அவளுக்குப் பிராணன் போகிற வலி... ஆனாலும் வலியைக் கடித்தபடியே வேடிக்கையாகத்தான் கருத்துரைத்தாள்.

அய்யோ ... என் முடி சிக்கிட்டு... ஒங்க கிட்ட நல்லா மாட்டிக் கிட்டேன்... ஒங்களுக்கு எல்லாத்துலயும் எப்பவும் அவசரந்தான்.... பரவாயில்லை ... பழையபடி கழட்டிட்டு மாட்டுங்க..."

சங்கரி, அவன் கரங்கள் இயங்காமல் இருப்பதைக் கண்டாள்... கடவுளே... கடவுளே ஒன்று சொன்னால் இது இன்னொரு அர்த்தத்திலா முடியணும்.

"தப்பு என் மேலதான்... இப்படி பிடரியில் புதர் மாதிரி முடியை வளர்த்திருக்கப்படாது... சரி ஒங்க கையாலேயே கட்டி விடுங்க.."

சங்கரி, கரங்களை பின்புறமாய்க் கொண்டு வந்து, அந்த முத்துச் ச்ரத்தையும், அதில் சிக்கிய முடியையும் விடுவித்தாள்... அவன், இதைக் கட்டுவதற்கு வசதியாக அவன் மார்பில் சாய்ந்தாள். விலகிக் கிடந்த அவன் கரங்களை, அந்த முத்து மாலையாய் இணைத்தாள். சடையைத் தூக்கி, பின் தலைக்கு மேல் கொண்டு போனாள் அவன் கரங்கள், இப்போது இயங்கின. மாலை சூடியதை உணர்ந்த சங்கரி, தலையை நிமிர்த்தினாள். அவனோ , நிமிர்ந்த தலையை கையால் அழுத்தி அவளை மடியில் போட்டான். அவள் முதுகைத் தட்டிக் கொடுத்தான். பிறகு கட்டிலில் இருந்து துள்ளிக் குதித்து எழுந்தான். பாதிச் சுவராய் பதிந்த அலமாரியைத் திறந்து, ஒரு அட்டைப் பெட்டியைத் திறந்தான். கையில் தொட்டாலே சுகம் கொடுக்கும் ஒரு வழுவழுப்பான துணி.... அசல் புளு... அதுதான் நீல நிறம் மார்பகம் பக்கம் வட்ட வளைவுகள்... கழுத்துப் பக்கம் ஜரிகை மாதிரியான மாலை. மொட்டாகவும், மொட்ட விழ்ந்தும், பூவாய் மலர்ந்தும் தோன்றும் நைலான் துணி மாலை. அதில் ஆங்காங்கே பதிந்த சின்னச் சின்ன சதுரக் கண்ணாடிகளைப் பார்த்து, சங்கரி கண் கூசியபடியே கேட்டாள்.

"அய்யய்ய... இது லம்பாடிப் பெண்கள் போடுறதாச்சே."

"நோ... நோ... காஸ்ட்லி நைட்டி... டில்லியில் ஸ்பெஷலாய் ஆர்டர் கொடுத்து தயாரித்த நைட்டியாக்கும்... கொஞ்சம் போட்டுக் குவியாம்..... சேலை, பாவாடை ஜாக்கெட் அனாவசியங்களைக் கழட்டிட்டு இதப் போட்டுக்கோம்மா... இதுதான் நல்ல பெண்டாட்டிக்கு அடையாளமாம்..."

"நான் கெட்ட பெண்டாட்டியாவே இருந்துட்டுப் போறேன்..."

"கெட்ட மனைவியைத் திருத்த வேண்டியது நல்ல கணவனுக்கு அடையாளமாச்சே."

மனோகர், சங்கரியை மல்லாக்கத் தள்ளி, அவள் புடவையை உருவப் போனான்... உருவி விட்டான். அவள் முதுகிற்கும், கட்டில் மெத்தைக்கும் இடையில் சிக்கிய புடவையை, அசல் துச்சாதனன் போலவே இழுத்தான். கலர்ப் பாவாடையோடு கிடந்தவள், கட்டிலில் இருந்து அவசர அவசரமாய்த் தரையில் விழுந்து எழுந்தாள்... முன்பக்க பட்டன்கள் கொண்ட அந்த நைட்டியைத் தூக்கிக் கொண்டு குளியல் அறைக்குள் ஓடினாள்.

ஐந்தாறு நிமிடங்கள் கழித்து திரும்பிவந்த சங்கரி, அந்த நைட்டியில் ஒளிர்விட்டாள். விளக்கு வெளிச்சம், சதுரக் கண்ணாடிகளில் பிரதிபலித்து, அவளைச் சுற்றி ஒளிவட்டங்கள் போட்டன... பவளக் கம்மலில் பாய்ந்த ஒளிக் கற்றைகள், பாளம் பாளமாய் மின்னின.

மனோகர், எழுந்து போய் அவளைப் பற்றிக் கொண்டான். அவனது முன்பாதியும், இவளது பின் பாதியும் ஒட்டிக் கொண்டன. கட்டிலில் டப்பென்று விழுந்தனர். அவன்பிடி வழக்கத்திற்கு மாறாக, பலமாக இருப்பதை உணர்ந்து ஆச்சரியப்பட்டாள்.... ஆனந்தப்பட்டாள்... முட்டை பாயாசத்தின் வேலையா... சிரித்துக் கொண்டாள். அவனை சிக்கெனப் பிடித்துக் கொண்டாள்....

மனோகரின் பிடி தளர்ந்தது. இரும்பாய்ப் பற்றிய கரங்கள், துரும்பாய்த் துவண்டன. சிறிது நேரம் செயலற்ற சூன்யம்... ஒருமை ரெண்டுபட்ட வெறுமை... சிறிது நேரத்திற்குப் பிறகு, மனோகர் மீண்டும் அவளைப் பற்றினான். அவள் புரிந்து கொண்டாள்.... அது போலியான பிடி பழக்கப்பட்டுப் போன வழக்கமான பிடி. உணர்ச்சியற்ற ஒப்புப் பிடி... இயங்குகிறேன் என்று சொல்லாமல் ஏதோ இருக்கிறேன் என்பதைக் காட்டும் வீம்புப் பிடி. வெறும் பிடி...

சங்கரிக்குத் தாபம் போய் கோபம் வந்தது. ஆசை பொங்கிய கண்களை, அழுகை படையெடுத்தது. கிறங்கிய கண்கள் தங்களுக்குத் தாங்களே இரங்கிக் கொண்டன. நாகலிங்கப் பூவாய் மலர்ந்த வாய், எருக்கலைப் பூவாய் சுருண்டது. ஒன்றாய் ஒட்டிய உதடுகள், விம்மலுக்கு அணை போட்டன. நெஞ்சில் முட்டி மோதிய வேகத்திற்கும், தாகத்திற்கும் தடை போட்டன. அவள், அவன் கரத்தை வீசியடிக்கப் போனாள். ஆனால் என்ன நினைத்தாளோ.... ஏது நினைத்தாளோ... அவன் கரத்தை மென்மையாய்த் தூக்கி அவனிடமே சேர்த்துவிட்டு, அவனிடம் இருந்து புரண்டாள்.

கோழிக்குஞ்சாய் படுத்தவனைப் பருந்தாகப் பார்க்கப் போனாள். முரட்டுத்தனமாய் இறக்கைகளை அடிக்கப் போன அந்தப் பருந்து, அடுத்த கணமே, தாய்க் கோழியானது. முட்டிக்கால் வரை சுருண்ட நைட்டியை சரிப்படுத்தினாள். குப்புறத் தலை போட்டு, ஐம்புலன்களையும் அடக்கியவளாய் ஆமைபோல் கிடந்தாள். அவன், அவளைப் புரட்டுவதற்கு, ஒரு கையை விலாப் பக்கம் கொண்டு போனான். அவளுக்கு மனம் பற்றி எரிந்தது. சூடாகக் கேட்கப் போனாள். ஆனாலும், உடல் சூடும் மனச்சூடும் ஒன்றை ஒன்று தணித்துக் கொண்டன. முத்துச் சரம் போட்டு, நைட்டியில் தன்னை ரசித்த அந்த ஆசை முகத்தை அவள் புசிக்க விரும்ப வில்லை. அவனது சுயமரியாதையை பங்கப்படுத்த விரும்பவில்லை. முத்துச்சரம் குத்திய கழுத்தை லேசாய்த் தூக்கி, அவனைப் பார்த்தாள். அவன் குரல் மீண்டும் காதுகளில் விழுந்தது. இயலாமை அல்லம் ஏமாற்றம், ஏமாளி வேடம் போட்டுக் கேட்டது.

"என்ன சங்கரி... குப்புறப் படுத்துட்டே .."

அவளுக்கு அழுகை வந்தது. தனக்காக மட்டுமல்ல.... அவனுக்காகவும் பொங்கியது. ஆனாலும், அவளது அழுங்குரல், பச்சதாப ரசமந்திரத்தில் நெகிழ்ந்தது... அவள் பேச்சு, மனோகரை ஓரளவு கம்பீரப்படுத்தியது.

"என்னை இன்னைக்கு விட்டுடுங்க... ஒரே பல்வலி... கூடவே வயித்து வலி... ஸாரி... நாளைக்குப் பார்த்துக்கலாம்... பேசாமல் தூங்குங்க... எனக்குத் தூக்கம் வருது..."

"பல்வலில் எப்படித் தூக்கம் வரும்..."

"எந்த வலியும் உச்சக் கட்டத்துக்குப் போனால் அது மரத்துப் போகும்..... கையை எடுங்க... பிளீஸ்... என்னால் முடியல... தூங்கப் போறேன்.."

'சரியான தூங்கு மூஞ்சி..... எவ்வளவு ஆசையைத் தேக்கி வச்சிருக்கேன் தெரியுமா...?"

"அது எனக்குத் தெரியும்... தூங்குங்க."

"கொஞ்சங்கூட ஒத்துழைக்க மாட்டேங்கிறியே.... "

"நாம் நினைத்தபடியெல்லாம் உடம்பு கேட்குதா என்ன"

"ஆனாலும் நீ... சுத்த மோசம்...''

சங்கரி, மேற்கொண்டு பேசவில்லை. அவனுக்கு ஒரு சாக்கைக் கொடுத்த திருப்தியில், கண்களைத் துடைத்துக் கொண்டாள். அவனுக்காக சிலுவை சுமப்பது போலான தாலியை, உருட்டி விட்டாள்... லிங்கப்படம் போட்ட அந்த மாங்கல்யம்.... கட்டில் மெத்தையில், நேராய் நின்று, அவள் கழுத்துக் குழியை முள்ளாய்க் குத்தியது... உடனே அவள் அந்த தாலித் தங்கத்தை பின் பக்கமாய்க் கொண்டுவந்து, பிடறியில் விட்டுவிட்டு, நெஞ்சில் வெறுங் கயிரைப் படரவிட்டாள்.

இருவரும் விலகிக் கிடந்தார்கள். ஒவ்வொரு நிமிடமும், ஒரு ஊழியானது. நூற்றுக்கணக்கான நிமிடங்களின் ஊழ்வலியில் உழன்று கிடந்தார்கள்.... அவன் புரளும்போது அவளும், அவள் புரளும்போது அவனும் அசைவற்றுக் கிடந்தார்கள்... ஏதோ ஒரு வகையில் கட்டில் அசைந்தது. ஒவ்வொரு வேளையும், ஒரே ஒரு பக்கமாய் ஆடியது.

சங்கரியால்; தூக்க நாடகத்தைத் தொடர முடியவில்லை .... தலையை ஒருச்சாய்ந்து அவனைப் பார்த்தாள்... தூங்கத்தான் செய்தான்... இரண்டு கரங்களையும் வளை கோடாய் வளைத்துப் போட்டு, அடியற்ற மரம் போல் குப்புறக் கிடந்தான்.

சங்கரி, எழுந்தாள். பின் கதவைத் திறந்து பால்கனிப் பக்கம் வந்தாள்.... கதவோடு கதவாய்ச் சாய்ந்தாள். சுவரோடு சுவராக நின்றாள். உடல் வேகம் எப்போதோ நின்றுவிட்டாலும் மனோவேகம் நின்ற பாடில்லை.... திருமணமான இந்த மூன்று மாத காலத்தில், ஐம்பது இரவுகள், முழுமையாய் வந்திருக்கும். அந்த இரவுகள் ஒரு தடவை கூட விடியவில்லை ... இருட்டில் விளையாடிப் பிரகாசிக்க முடியவில்லை ... அம்மா எழுதிக் கேட்கிறாள்... ஆகலையா' என்று அப்பா பூசகமாய் எழுதுகிறார்... எதுவானாலும் எழுதிப் போடு என்று, அண்ணி வருத்தப்படுகிறாள். மாமியார், ஆடுகிறாள். இவள், அவமானம் தாங்காமல் தலை குனிகிறாள் ஒரு இரவா. இரண்டு இரவா... ஐம்பது இரவுகளும் துறவுகள். இரை தின்ன நினைத்துத் தூண்டிலில் மாட்டிய மீன்கதை அந்த மீனாவது அப்போதே செத்துப் போகும்.

சங்கரிக்குத் தன்னையறியாமலே முதலிரவின் நினைப்பு வந்தது அவளுக்கும், எதிர் மறைவில் சொல்லப்போனால், மறக்க முடியாத இரவு தான். அவள் நாணக் கண்களோடு, தத்தித் தத்தி நடந்தாள் இரு கரங்களிலும் பால் குவளையோடு வருகிறாள் அவனைக் கவிழ்த்து பார்க்கிறாள். பார்த்துப் பார்த்து நிற்கிறாள் நின்று நின்று, அவனை நோக்கி நடக்கிறாள். அவள், தலை கவிழ்ந்து, கண்மூடி, பார்வையற்றவள் போல், அவன் கரமிருக்கும் திசையை அனுமானித்து குவளையை நீட்டுகிறாள். அவன், அதை வாங்கி கட்டில் சட்டத்தில் வைத்துவிட்டு, அவளைப் பிடிக்கிறான். தோளில் சாய்க்கிறான். எலும்புகளை நொறுக்குவது போல் அழுந்தப் பற்றுகிறான். நெருக்குகிறான்...

கால் நிமிடமோ.... அரை நிமிடமோ... அண்ட கோடி வேகம் கொள்கிறான். அவளைக் கடிக்கிறான். அவள் பயந்து போகிறாள். அவனிடம், நளினத்தை எதிர்பார்த்தவள் நடுங்கிப் போகிறாள். அந்த நடுக்கத்தில் கீழே விழாமல் இருப்பதற்கு, அவனைப் பற்றுக்கோலாய் பற்றுகிறாள். அதுவே ஆசையாகிறது. மோகமாகிறது. வேகவேக மான பிடியாகிறது. அரை நிமிடத்தில் அவன் பிடி தளர்கிறது. நிறுத்தப்பட்ட மின் விசிறி போல் அவன் உடல் சுழற்சி மெல்ல மெல்ல நிற்கிறது. எந்த விகற்பமும் இல்லாமல் நிற்பவளை, கட்டிலில் உட்கார வைக்கிறான். அவள் தோளில் தன் கரங்களை முன் சடை போல் தொங்கப் போட்டுக் கேட்கிறான். என்னைப் பிடித்திருக்கா...' என்கிறான். அவள் நாணிக் கோணி தலையாட்டுகிறாள். நீள வாக்கில் முகத்தை முன்னும் பின்னும் ஆட்டுவது தெரியாமல் ஆட்டுகிறாள். காது வளையங்கள் சுழலத் தலையாட்டுகிறாள்;

உடனே, மனோகர் தன் கதையைச் சுருக்கமாகச் சொல்லுகிறான். எடுத்த எடுப்பிலேயே கிளாஸ் ஒன் ஆபீஸராம். கை நிறையச் சம்பளமாம் கார் வாங்கலாமா.... மனை வாங்கலாமா.... என்று யோசிக்கின்றானாம்... அவள் சொன்னபடி நடப்பானாம். அம்மா பித்துக்குளியாம். அவளிடம், நாத்தனார் போல் தான் நடப்பாளாம்... அவளை, இவன் பொருட்டுப் பொறுத்துக் கொள்ளணுமாம்... ஆனால் அவளது கிராமத்து நாத்தனார்.... இவளை அனுப்பி வைத்தாளே காந்தாமணி, அவள் அம்மாவாய் நடப்பாளாம். இவளை, அவனுக்குப் பிடித்துப் போயிற்றாம். இவளைப் பேசச் சொல்கிறான். வாயை , பலவந் தமாகப் பிரிக்கிறான். அவள் பேசாவிட்டால், தான் பேசப் போவதில்லை என்கிறான்....

பழைய நினைவுகளில் மூழ்கி, வெறுந் சிப்பிகளை எடுத்த படியே, சங்கரி, சுவரில் இருந்து தாவி, பால்கனிக்கு வருகிறாள் குத்துக் காலிட்டு பால்கனியின் விளிம்புச்சுவரில் முகம் போட்டு, தான் பேசியதை நினைத்துப் பார்க்கிறாள். அழுகையும் வருகிறது. சிரிப்பும் வருகிறது.

சங்கரி தட்டுத் தடுமாறி பேசப் போகிறாள். மெல்ல மெல்ல நாக்கு, விமானம் போல் நகர்கிறது. பிறகு ஆகாயப் பாய்ச்சலாய் பாய்கிறது. நெடுநாள் பழகிய ஒரு தோழியிடம் பேசுவது போன்ற வேட்கை. பேசுகிறாள்... அவன் தலையைக் கோதிவிட கோதிவிட, பேசிக்கொண்டே போகிறாள். பெண் பார்க்க வந்தபோதே, அவனைப் பிடித்து விட்டதாம். கல்லூரிக் காலத்தில், தனக்கு வருகிறவன், எப்படி வர வேண்டும் என்று கற்பனை செய்தாளோ... அப்படியே இருக்கிறானாம். இவன் தான், அவனின் நகலாம்: இல்லை இல்லை இவனே அசலாம்... அவனைப் பார்த்த நாளில் இருந்து, சர்வீஸ் கமிஷன் பரிட்சைக்குப் படிக்க முடியலியாம்... பெயிலாகி விடுவாளாம்... ஆனாலும் கல்யாணப் பரீட்சையில் பாஸாகியதில் மகிழ்ச்சியாம்... கல்லூரித் தோழிகள், 'உன் நல்ல குணத்துக்கு ஒரு நல்ல ஜென்டில் - மேன்தான் கணவனாய் வருவான்.' என்று கணித்தது போல் கிடைத்து விட்டானாம். ஆனாலும், தோழிகளிடம் ஜென்டில்மேனுக்கு விளக்கம் கேட்டு குறுக்குக் கேள்விகளைப் போட்டாளாம்....

அந்த ஜென்டில்மேன் என்ற வார்த்தையின் பொருளென்ன... கணவனா... நல்லாயில்லே... மாண்புமிகுவா... மதிப்புக்குரியவனா.. அதிர்ந்து பேசாதவனா.... அநியாயத்தைத் தட்டிக் கேட்கிறவனா... அக்கடா என்று கண்டுக் காதவனர் - ஏக பத்தினி விரதனா - சூதுவாது இல்லாத சுத்தச் சுயப் பிரகாசியா - எல்லாம் தெரிந்தும் தெரியாதது போல் உள்ளடங்கி இருப்பவனா - குட் பெல்லோவா.. அல்லது குட் பார் நத்திங் பெல்லோவா...' ஒரு கணவன், மனைவியிடம் ஜென்டில்மேனாய் நடக்கப்படாது... மனைவியோட முடியைப் பிடித்து இழுக்கணும். காதைத் பிடித்து திருக்கணும். இதெல்லாம், பிறத்தியார் கிட்டே செய்தால், ஜென்டில்மேன் செயலில்லை. இதேமாதிரி , மனைவிகிட்டேயும் செய்யாமல் ஜென்டில்மேனாக இருந்தால், அந்த கணவன் என்ன ரகம்?' என்று ஒருத்தி பேசியதை பாதியில் நிறுத்திவிட்டு, குறும்பாய் பார்க்கிறாள்.

சங்கரி, பின் நோக்கிய சிந்தனையை நிறுத்தி விடுகிறாள். பின்னர் சிறிது இடைவெளி கொடுத்து, மிச்சம் மீதியை நினைத்துப் பார்க்கிறாள். அப்போது மனதில் தோன்றிய சிரிப்பு, அவளைப் பார்த்து, இப்போது சிரிப்பாய்ச் சிரிக்க வைக்கிறது. குண்டுச் சட்டிக்குள் குதிரையை விட்டது போல், அந்தப் பால்கனிக்குள் வட்டமிட வைக்கிறது.

மனம், மீண்டும், பின்னோக்கி பாய்கிறது.

மனோகர், அவளைப் படுக்கையில் சாய்க்கிறான்.... அவள் விளக்கு விளக்கு என்கிறாள். அவன் எழுந்து போய் விளக்கை அணைக்கிறான். இருளில் நடக்கிறான். அவள் மேல் படர்கிறான். அங்குமிங்குமாய்ப் புரள்கிறான். புரண்டதுதான் மிச்சம்... அவன் புரண்டதில் கட்டில் சட்டத்தில் குடிக்காமல் வைக்கப்பட்ட அந்த பால்குவளை, கீழே விழுகிறது.... பால் தரையில் வீணாய் ஓடுகிறது. அவன் குடிக்காமலும், அவளுக்கு கொடுக்காமலும், கெட்டுப் போகாமலேயே கொட்டிப் போகிறது... அப்புறம் சாக்கு சொல்கிறான்... கல்யாணக் காரியங்களை, தனியொரு ஆண் பிள்ளையாய் மேற்கொண்டதால், அலுப்பு என்றான்... நாளை இரவுதான் முதலிரவு என்கிறான்... அவளும் நம்புகிறாள்... நாளை தான் வரவில்லை. ஐம்பது இரவுகளில், பௌர்ணமிக்குப் பதிலாக அமாவாசைகளே வந்தன.

சங்கரி, பால்கனிக் கதவைக் கோபத்தோடு சாத்திவிட்டு, உள்ளே போகிறாள்... கதவுச் சத்தம் கேட்டோ என்னவோ ... எதிர் பால்கனியில் விளக்கு எரிகிறது. இந்த அறையின் ஜன்னல் கம்பிகளுக்கு இடையே ஒளிக்கற்றையாய் ஊடுருவுகிறது. கட்டிலுக்கு வந்தவள், படுக்கையில் குத்துக்காலிட்டு, அதில் முகம் போட்டுக் கிடப்பவனைப் பார்த்துத் திடுக்கிடுகிறாள். அவனைப் பார்க்கப் பார்க்க, கோபம், பரிதாபத்துக்கு விட்டுக் கொடுக்கிறது. படுக்கையில் உட்கார்ந்து அவனைக் குண்டுக்கட்டாய் வளைத்துப் பிடித்து, "தூக்கம் வர்லியா....” என்றாள்.

மனோகர், பதிலளிக்கவில்லை .... அவன் மனதில், சுய-இரக்கம் போய், கோபம் வருகிறது... மனதில் பல்வேறு யூகங்கள் நிழலாடுகின்றன. அந்த நிழல்களே, நிஜமாகி நெருப்பாய் எரிகின்றன... அவளைப் பார்க்கும் கண்கள், நெருப்பாய் கக்குகின்றன. எதிர் வீட்டு விளக்கு, அவனை நெருப்பாய் எரிக்கிறது.