இருளுக்குப் பின் ஒளி
உள்ளத்துக்கும் வைத்தியம் அவசியம் என்று சுவாமிநாதன் ராதாவிடம் கூறினார் அல்லவா? கடந்த சில மாதங்களாக, அவர் தம் மனத்தைப் புற விஷயங்களில் அதிகம் செலுத்தாமலேயே இருந்து வந்தார். கடலின் அலைகளைப் போல உலகத்தில் நடக்கும் விஷயங்களுக்கு ஓய்ச்சல் ஒழிவு இருப்பதில்லை. பிறப்பு, இறப்பு, பருவங்கள். பண்டிகைகள், உதயம். அஸ்தமனம் யாவும் இந்த உலகில் நடப்பவை. யார் இருந்தாலும் இல்லாவிடினும் அவற்றிற்கு அதைப்பற்றிக் கவலை கிடையாது. தம்முடைய கடமைகளைச் செய்து கொண்டே இருக்கும். சுவாமிநாதன். சதா ராம தாயத்தை ஜெபித்துக் கொண்டிருந்தார். தாரக மந்திரமாகிய அந்த நாம அவருக்கு உடல் வலிமையை அளிக்காவிடினும், உள்ளத்துக்கு ஒளியும் தைரியமும் அளித்து வந்தது. உட்காரும் போதும் நிற்கும் போதும், நடக்கும் போதும் "ஹரே! ராமா!" என்று அழைத்து ஆறுதல் அடைந்தார். உலகில் இருப்பவர்கள் யாவரினும் இனியனாகிய ஒருவன் அவர் “ராமா!" என்று அழைத்தவுடன் தம் அருகில் வந்து நின்று 'ஏன்?' என்று இதமாகக் கேட்பது போன்ற அமைதியை அவர் உள்ளம் அடைந்தது. அதனால் தான் மூர்த்தியைப் பற்றி அவர் கேள்விப் பட்டதும் அந்த உள்ளம் அதிகமாகத் துயர் அடைய வில்லை. 'ஹே! ராமா! இதுவும் உன் செயல்தான் அப்பா' என்று ஒரு வார்த்தையில் உள்ளத்துக்கு ஆறுதல் தேடித் தந்தார். இருந்தாலும் உலக பந்தங்களிலிருந்து சாமானியமாக மனம் விடுதலை அடைவதில்லை. அந்தச் செய்தி அவர் உடல் நலத்தை வெகுவாகப் பாதித்து விட்டது. சில தினங்கள் வரையில் உட்காரும் சக்தியைப் பெற்றிருந்தவர் அந்தச் சக்தியையும் இழந்து விட்டார்.
அதிகாலையில் எழுந்து பிறருக்குச் சிரமம் தராமல் தன் வேலைகளைத் தானே செய்து வந்த சுவாமிநாதன் அன்று விடிந்ததிலிருந்து தம் படுக்கையை விட்டு எழவே இல்லை. காலைக் கடன்களை முடித்துக் கொண்டு அவரைப் பார்க்க வந்த ஸ்ரீதரன் நொடியில் விஷயத்தைப் புரிந்து கொண்டார். சுவாமிநாதன் இனி அதிக நேரம் இருக்க மாட்டார் என்பது தெரிந்து போயிற்று.
மெல்லக் கண்களைத் திறந்து தன்னைப் பார்க்கும் அவரைப் பார்த்து, ”உங்களுக்கு என்ன வேண்டும் ஏதாவது சாப்பிடுகிறீர்களா?" என்று விசாரித்தார் ஸ்ரீதரன்.
”வேண்டாம் வேண்டியதை சாப்பிட்டு விட்டேன்..." ஸ்ரீதரன் அவர் அருகில் தம் நாற்காலியை இழுத்துப் போட்டுக் கொண்டு அமர்ந்தார்.
”உங்கள் ஒன்று விட்ட தங்கைக்குத் தந்தி அடிக்கவா? உங்கள் பணத்தை அவர்களுக்கு அனுப்பி விடுகிறேன்..."
சுவாமிநாதன் மிகுந்த வேதனையுடன் முகத்தைச் சுளித்துக் கொண்டார்.
”அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை. ராதாவைக் கூப்பிடுங்கள்..." திணறிக் கொண்டே பேசினார் அவர்.
ராதா ஏதோ குற்றம் புரிந்தவளைப் போல அவர் அருகில் வந்து உட்கார்ந்தாள். நடுங்கும் தன் கரங்களால் அவள் மிருதுவான கைகளைச் சேர்த்துப் பிடித்துக் கொண்டார் சுவாமிநாதன்.
"அம்மா! இனிமேல் நீ நன்றாக இருப்பாய். உலகத்தில் இன்பமும் துன்பமும் மாறி மாறித்தான் வரும். இருளுக்கு அப்புறம் ஒளிதானே? நீ உன் புருஷனுடன் ஆனந்தமாக இருக்கும் போது நான் பார்க்கக் கொடுத்து வைக்கவில்லை. அவன் இனிமேல் திருந்தி விடுவான். எல்லோரும் சந்தோஷமாக இருப்பீர்கள் ....."
சுவாமிநாதன் அதற்கு மேல் பேசவில்லை . அவர் வாய் உலக விஷயங்களைப் பேச மறந்தது போல் அசையாமல் இருந்தது. அவர் முகத்தில் துயரம், துன்பம் ஒன்றும் இல்லை. அசாதாரணமான ஓர் அமைதி. புன்னகை நிரம்பி இருந்தது. சுவாமிநாதன் தம் கடமை களைச் சரிவரச் செய்த நிம்மதியில் அவர் இடையறாது துதித்து வந்த ஸ்ரீராமனது திருவடிகளை அடைந்து விட்டார்.
டாக்டர் ஸ்ரீதரனின் கண்களிலிருந்து அருவி போலக் கண்ணீர் வழிந்து கொண்டே இருந்தது. தேம்பியும் புலம்பியும் தன் சகோதரியை அணைத்தவாறு டாக்டர் வெளியே சென்றார்.

