குழந்தையின் குரல்

காரில் வந்து இறங்கிய வேதாந்தம் வாசல் வராந்தாவில் இருந்த மாடிப்படிகள் வழியாக ஏறி மாடியை அடைந்தார். அங்கு கிடந்த சோபா ஒன்றில் சாய்ந்து மின் விசிறியைச் சுழல விட்டுப் பெரு மூச்சு விட்டார் அவர். கடந்த சில வருஷங்களாக மனதில் சிறைப்படுத்தி வைத்திருந்த எண்ணங்களுக்கு விடுதலை அளித்த நிம்மதி அவர் நெஞ்சில் நிறைந்திருந்தாலும், கூடவே ஒரு காரணமற்ற பயம் சூழ்ந்து கொண்டிருந்தது. மாலையோ, நாளையோ காமாட்சி, டாக்டர் ஸ்ரீதரனைச் சந்தித்தால் அவர் தன்னைப் பற்றிக் காமாட்சியிடம் ஏதும் கூறிவிடுவாரோ என்று அஞ்சினார். இந்தச் செய்தியை முன்னாடியே காமாட்சியிடம் கூறி விடுவது நல்லது என்று அவருக்குத் தோன்றவே அவசரமாக மாடியிலிருந்து கீழே வருவதற்குக் கிளம்பினார்.

அப்போது. கீழேயிருந்து ஒரு குழந்தையின் அழுகுரல் கேட்டது. பிறந்து சில நாட்கள் ஆகியிருக்க வேண்டும். ’குவா குவா' என்ற அந்த ஒலி இன்பமாக அவர் செவிகளில் வந்து விழுந்தது . 'யாரேனும் உறவினர்கள் குழந்தையுடன் வீட்டுக்கு வந்திருக்கிறார்-களோ?' என்று நினைத்தார்.

இதற்குள் கீழே இருந்து அவர் மகளின் குரல் தெளிவாகக் கேட்டது.

”சொக்கம்மா! குழந்தை அழுகிறது பார். கொஞ்சம் தொட்டிலை ஆட்டு. இதோ பாலைப் புட்டியில் ஊற்றிக் கொண்டு வருகிறேன்" என்றாள்.

வேதாந்தம் வியப்பும் திகைப்பும் அடைந்தவராக மாடிப்படிகளில் சற்று வேகமாகவே இறங்கிக் கீழே வந்தார். கூடத்துக்கு அடுத்தாற் போல் இருக்கும் காமாட்சியின் அறையில் ஒரு 'ஸ்டாண்டு' தொட்டில் இருந்தது. அதைச் சுற்றிக் கொசுவலை கட்டியிருந்தது. தொட்டிலின் அருகில் காமாட்சி ஒரு சிறு பெஞ்சியின் மீது உட்கார்ந்து குழந்தைக்கு புட்டிப்பால் கொடுத்துக் கொண்டிருந்தாள்.

வேதாந்தம் தம் மகளின் அருகே வந்தார். மிகவும் அதிசயத்துடன் ஒரு நூதனப் பொருளைப் பார்ப்பதைப் போல் தொட்டிலுக்குள் குனிந்து குழந்தையைப் பார்த்துக் கொண்டே, “ என்ன அம்மா இது?" என்று தம் மகளைப் பார்த்துக் கேட்டார்.

”குழந்தை அப்பா ......" என்றாள் காமாட்சி. "அது தெரிகிறது. இது யார் குழந்தை அம்மா?" என்று கேட்டார் ஆச்சரியத்தால் தம் கண்கள் மலர.

”நம் வீட்டுக் குழந்தை அப்பா. இனிமேல் இவளுக்கு இந்த வீட்டிலே சொந்தம் உண்டு" என்றாள் காமாட்சி.

வேதாந்தம் அருகில் கிடந்த நாற்காலியில் உட்கார்ந்து கொண்டார்.

"அம்மா, காமாட்சி. கொஞ்சம் எனக்குப் புரியும் படியாகத்தான் சொல்லேன். மூக்கும் விழியுமாக சந்திர பிம்பம் போல இருக்கும் இந்தக் குழந்தை பிறந்தவுடனேயே பெற்றவர்களை இழந்த துர்பாக்கியசாலியா? எனக்கு ஒன்றும் புரியவில்லையே!"

தொட்டிலில் இருந்த குழந்தைப் பாலை பருகிய வுடன் அப்படியே அயர்ந்து தூங்கி விட்டது. அதன் வாய் அருகே கசிந்திருந்த பாலை மெதுவாகத் துடைத்து விட்டு, மேலே கட்டி இருந்த கொசுவலையை அவிழ்த்துத் தொங்க விட்டாள் காமாட்சி. பிறகு தன் தகப்பனாரின் எதிரில் வந்து உட்கார்ந்து கொண்டாள்.

"அப்பா! இந்தக் குழந்தை பிறந்து இன்று பதினோரு நாட்கள் ஆகின்றன. இன்று பகல் பன்னிரண்டு மணி வரைக்கும் இதற்கும் இதன் தாய்க்கும் சம்பந்தம் இருந்தது. பிறகு அந்த சம்பந்தம் நீங்கி விட்டது. இனி மேல் நான்தான் இந்தக் குழந்தைக்குத் தாய்" என்றாள். இதைக் கேட்ட வேதாந்தத்தின் உள்ளம் பரபரப் படைந்தது.

"ஏனம்மா ! குழந்தையின் தாய் இறந்து விட்டாளா? தகப்பன் குழந்தையைக் கவனிக்கவில்லையா? வேறு உற்றார் உறவினர் இந்தக் குழந்தைக்கு யாரும்

இல்லையா?"

காமாட்சியின் கண்கள் கலங்கி இருந்தன. அன்று காலை ஆஸ்பத்திரியில் நிகழ்ந்த சம்பவங்கள் வரிசையாக அவள் மனக் கண் முன்பு தோன்றின. அந்த வார்டு'க்கு அவள் தான் டாக்டராக இருந்தாள். அவள் மேற் பார்வையில், பொறுப்பில் தான் நோயாளிகள், பிரசவித்தவர்கள் உள்ளே தங்கியிருக்கவும். வெளியே செல்லவும் முடியும்.

காலையில் ஒவ்வொரு படுக்கையாகச் சென்று, பிரசவித்தவர்களில் வீடு செல்ல வேண்டிய பெண்களைச் சீட்டு எழுதி அனுப்பிக் கொண்டிருந்தாள். அன்று அந்த விடுதியில் சுமார் பத்து பெண்கள் தங்கள் குழந்தை களுடன் வீட்டுக்குச் செல்ல வேண்டியிருந்தது. ஒவ்வொரு பெண்ணாக அவளுக்கு நன்றி தெரிவித்து விட்டு வெளியே சென்றனர். அன்புடனும், ஆசையுடனும் பெருமிதத் துடனும் அந்தத் தாய்மார்கள் தாங்கள் பெற்ற செல்வங்களை அள்ளி அணைத்துச் செல்வதைக் காமாட்சி கவனித்து மகிழ்ந்து கொண்டிருந்தாள்.

கடைசியாக ஒரு பெண் தயங்கித் தயங்கிக் குழந்தையுடன் அவள் அருகில் வந்தாள்.

”ஏனம்மா! உன்னைச் சேர்ந்தவர்கள் யாரும் வரவில்லையா? உன் புருஷனின் பெயரென்ன?" என்று விசாரித்தாள் காமாட்சி. அவள் பதில் கூறு முன் தானே மேஜை மீது கிடந்த விவரங்கள் அடங்கிய புஸ்தகத்தை கவனித்தாள். அதில் அவளுடைய புருஷனின் பெயரைக் காணவில்லை. வேலப்பன் - சகோதரன் என்கிற விவரம் மட்டுமே காணப்பட்டது.

"உன் அண்ணன் கூடவா வரவில்லை?" என்று திரும்பவும் அந்தப் பெண்ணைப் பார்த்துக் கேட்டாள்.

”அவர் என் அண்ணன் இல்லை அம்மா. அந்த சமயத்தில் நாதியற்றுக் கிடந்த என்னை மனமிரங்கி இந்த ஆஸ்பத்திரியில் கொண்டு வந்து சேர்த்தார். தகவல் கேட்டவர்களுக்கு தன்னை என்னுடைய அண்ணன் என்று கூறி இருக்க வேண்டும். எனக்கு யாருமே இல்லை டாக்டர் அம்மா ...."

சமூகத்தில் எந்த வெறியனுடைய ஆசைக்கோ பலியான புத்தியற்ற பெண் அவள் என்பதை ஒரு நொடியில் புரிந்து கொண்டாள் காமாட்சி. சமூகத்திலே பரவி இருக்கும் இந்தக் கொடுமைகளை நினைத்து அவள் மனம் சொல்லொணாத் துயரை அடைந்தது. தன் உணர்ச்சிகளை அடக்கிக்கொண்டு. "சரி, நீ என்ன செய்யப் போகிறாய்? எங்கே போகப் போகிறாய்?" என்று அவளை விசாரித்தாள்.

அந்தப் பெண் கண்ணீரை மாலை மாலையாக உகுத்தாள். கருவிலே அந்தக் குழந்தையை ஏற்ற விநாடியிலிருந்து அவள் உள்ளத்தில் தேக்கி வைத்திருந்த துயர மனைத்தும் கரைந்து கரைந்து கண்ணீராக பெருகியது.

”இந்தக் குழந்தை உனக்கு வேண்டுமா? அதை நீ சரியாக வளர்ப்பாயா?"

அந்தப் பெண் தலைகுனிந்து மௌனமாக நின்றிருந்தாள். காமாட்சியின் முன்பு நடைபாதைகளிலே, மதகுகளின் ஓரங்களிலே, கடற்கரையின் மணலிலே பால் மணம் மாறாத மதலைகள் எறியப்பட்டும், கிடத்தப் பட்டும் இருக்கும் கோரங்கள் நர்த்தனம் புரிந்தன. காமாட்சி சட்டென்று அவள் பக்கம் திரும்பி ”இந்தக் குழந்தை எனக்கு வேண்டும். தருகிறாயா" என்று கேட்டாள்.

குழந்தையின் தாய் நன்றி நிறைந்த கண்களுடன் காமாட்சியை ஏறிட்டுப் பார்த்தாள். பிறகு மெதுவாக அருகில் இருந்த மேஜை மீது குழந்தையைக் கிடத்தினாள். பத்து மாதங்களாக அது அவள் வயிற்றில் பெரிய சுமையாக இருந்தது. அது அவள் கைக்கு வந்த பிறகு அதன் பாரத்தை அவளால் தாங்க முடியவில்லை. தாய்ப்பாசம் தாயன்புகூட அந்த இடத்திலே காய்ந்து விட்டது. எல்லாமே ஒழுங்கான முறையிலும், நேர்மையிலும் இருந்தால் தான் பாசம், அன்பு, கடமை யாவும் தளிர் விடும். இல்லாவிடில் காய்ந்து சருகாக வேண்டியது தான்.

”நான் போய் வருகிறேன் அம்மா” என்று அந்தப் பெண் அவளிடம் வாயால் கூறி விடைபெறவில்லை. அவளுடைய கலங்கிய கண்களிலிருந்தும், பார்க்கும் பார்வையிலிருந்தும் காமாட்சி அவள் தன்னிடம் விடை பெற்றுக் கொள்ள விரும்புகிறாள் என்பதை உணர்ந்தாள்.

மேஜை மீது படுத்திருந்த குழந்தையின் பூப்போன்ற கன்னங்களில் அந்தப் பெண் ஒரு முத்தம் அளித்தாள். ரகசியமாக, தகாத முறையில் தாய்மைப் பதவியை ஏற்று கொண்ட அவளுடைய முதல்-கடைசி-முத்தமாக அது அமைந்தது.

”போய் வா அம்மா.... இனிமேலாவது ஒழுங்காக இரு" என்றெல்லாம் காமாட்சி அவளுக்கு உபதேசிக்க வில்லை. சுட்ட மண்ணை ஒட்ட வைக்கும் முயற்சியாக அது முடிந்தாலும் முடியக்கூடும். ஆகவே, அவள் அந்த பெண்ணின் கைச்செலவுக்கென்று ஏதோ கொஞ்சம் பணத்தைக் கொடுத்தாள். குழந்தைக்கு விலை என்று காமாட்சி நினைத்துத் தரவில்லை. ஒருவேளை அந்தப் பெண் அப்படி நினைத்திருக்கலாம்.

அப்படியே சிந்தனையில் ஆழ்ந்து போய் இருந்த தம் மகளை வேதாந்தம் கண் கொட்டாமல் கவனித்தார். அவளாகவே பேசட்டும் என்று அவர் அவளை ஒன்றும் கேட்கவில்லை.

சிந்தனையிலிருந்து விடுபட்டு காமாட்சி மேற் கூறிய சம்பவங்களை ஒன்று விடாமல் தகப்பனாரிடம் கூறவும், அவர் வியப்பு மேலிட, தம் மகளின் உதார குணத்தையும், சேவை மனப்பான்மையையும் நினைத்து மகிழ்ந்தார்.

பகல் பொழுது தாம் பட்ட அவஸ்தையும், அதை மறக்கப் பற்பல இடங்களுக்கு அலைந்து திரிந்ததையும் நினைத்துத் தன் மனதுக்குள் சிரித்துக்கொண்டார்.

தகப்பனார் பதில் ஒன்றும் கூறாமல் இருப்பதைப் பார்த்த காமாட்சி “ஏனப்பா! ஒன்றுமே பேசவில்லை! அதோடு நீங்கள் மத்தியானம் வீட்டை விட்டு கிளம்பி இப்பொழுது தான் வருகிறீர்கள் போல இருக்கிறதே" என்று விசாரித்தாள்.

"ஆமாம். அம்மா! என்னவோ ஒரு பைத்தியம் -மாதிரி எதையோ நினைத்துக் கொண்டு அலைந்துவிட்டு வந்தேன். "

"எங்கே போய் இருந்தீர்கள்?"

வேதாந்தம் மத்தியானம் நடந்தவற்றை ஒன்று விடாமல் கூறி, ஸ்ரீதரன் கூறிய பதிலையும் சொன்னார்.

"என்ன அப்பா இது? உண்மையிலேயே பைத்தியக் காரத்தனம் தான் செய்திருக்கிறீர்கள். எனக்கு அந்த மாதிரி ஆசையெல்லாம் கிடையாது. என் மனசைப் புரிந்து கொள்ளாமல் நீங்கள் அவசரப்பட்டு விட்டீர்களே ...."

"இல்லை அம்மா. சில மாதங்களாக நீ விளையாட்டுச் சாமான்களை வாங்கி வருவதும், பிறர் குழந்தைகளுக்குக் கொடுப்பதும் என்னை என்னவெல்லாமோ யோசிக்கச் செய்து விட்டது...?"

”அதனால் எனக்கு மறுமணம் செய்து வைத்துக் குழந்தை குட்டிகளுடன் பார்க்க ஆசைப்பட்டீர்கள். அப்படித்தானே?" என்றாள் காமாட்சி.

வேதாந்தம் வெட்கத்துடன் தலையைக் குனிந்து கொண்டார்.

"அப்பா!" என்று ஆசையுடன் அழைத்த அவள் அவர் அருகில் வந்து வற்றி உலர்ந்து போன அவர் கரங்கள் இரண்டையும் பற்றிக் கொண்டாள்.

"இங்கே பாருங்கள்! அன்று உங்கள் மருமகன் என்னிடம், ”காமாட்சி! உன்னை நான் ஏமாற்றி விட்டேன்' என்று அரற்றினார். அந்த ஏமாற்றம் என் உள்ளத்தைக் கல்லாக மாற்றி விட்டது. இனிமேல் நான் எதையும் எதிர்பார்க்கப் போவதுமில்லை. ஏமாறப் போவதுமில்லை. குடும்ப வாழ்க்கையில் ஒரு பெண் காண வேண்டிய இன்ப துன்பங்கள் அனைத்தையும் என் தொழிலில் பார்க்கிறேன். கட்டிய கணவனால் கைவிடப் பட்டவளின் துயரைப் பார்த்திருக்கிறேன். மகப்பேறு இல்லை என்று வருந்தும் தாயைப் பார்க்கிறேன் , பெற்ற மகவை இழந்து துடிக்கும் அன்னையைப் பார்க் கிறேன். இவர்களின் துயரங்களில் ஓர் அணுவையாவது துடைக்கும் மகத்தான பேற்றை நான் அடைந்தால் போதும் .."

வேதாந்தம் உபதேசம் கேட்கும் சிஷ்யனின் நிலையில் தம் மகளின் முகத்தையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார். உபதேசிப்பது தந்தையாக இருந்தால் என்ன? மகனாகவோ அல்லது மகளாகவோ தான் இருந்தால் என்ன ?

”இன்று நீங்களும் நானும் சேர்ந்தே சாப்பிடலாம். தினம் தான் அப்படி முடிகிறதில்லை. அதோடு உங்கள் பேத்தி இனிமேல் விழித்துக் கொண்டு அழுவாள். வாருங்கள்" என்று அழைத்தாள் காமாட்சி. வேதாந்தம் சிரித்தார். அந்தச் சிரிப்பில் உள்ளத்து நிறைவைக் காண முடிந்தது.