சலனம்

யோசனை கேட்க வந்தவரின் மனசில் தெளிவை ஏற்படுத்தினார் ஸ்ரீதரன். வேதாந்தத்தின் கார் சென்றவுடன் சிறிது சிறிதாக அவர் மனம் இருள ஆரம்பித்தது. மனம் பல விதமான எண்ணங்களை அசை போட ஆரம்பித்தது.

காமாட்சியின் வருங்காலத்தைப் பற்றி வேதாந்தம் கவலைப் பட்டுக் கொண்டு வந்து போனதை நினைத்தவுடன் அவர் மனக்கண் முன் பவானி வந்து நின்றாள். சலனமற்ற அவள் முகபாவத்திலிருந்து அவரால் எதுவுமே கண்டு பிடிக்க முடியவில்லை. மலையிலிருந்து குதித்துப் பெருகும் ஆறு, சமவெளியில் வெகு நிதானமாக மென்னடை பழகிச் செல்வதைப் போல் ஒருவித நிதானம் அவளிடம் குடி கொண்டிருந்தது. அடக்கமும், பண்பும் உருவான பவானியைப் பற்றி ஒரே ஒரு சமயம் அவர் மனத்தில் சஞ்சலம் எழுந்ததுண்டு. நாகராஜன் வீட்டில் முதன் முதலாக அவளைப் பார்த்த அன்று அவர் மனத்திலே ஏதோ ஓர் ஆசை முளைத்து எழுந்தது. அன்று அவளைப் பற்றி. பூராவும் அறிந்து கொள்ளாத நிலையில் ஸ்ரீதரன் இருந்தார். பிறகு படிப்படியாகப் பவானியைப் பற்றிப் புரிந்து கொண்டார். பெண்களுக்கு இருக்கவேண்டிய குணச் சிறப்புகள் யாவும் அவளிடத்தில் இருப்பதைக் கண்டார். அன்று அவர் மனத்துள் எழுந்த ஆசைக்கு அவர் முக்கியத்துவம் கொடுக்கவில்லை. கொடுத்திருந்தால் அதன் விளைவுகள் என்னவாகியிருக்கும் என்றும் சொல்ல முடியவில்லை. ஸ்ரீதரன் உள்ளத் திண்மை வாய்ந்தவர். சட்டென்று எழுந்த ஓர் ஆசைக்குப் பிரதானம் கொடுக்காமல் அதை அடக்கிக் கொண்டு விட்டார். எல்ல வற்றிற்கும் மேலாக பாலுவைப் பார்த்ததும் பவானியிடம் அவருக்கு அலாதி அனுதாபமே ஏற்பட்டது. அந்தக் குழந்தையின் நலனுக்காக அவள் தன் சுகத்தையெல்லாம் உதறி விட்டுப் பிறருக்கு வேலை செய்வதைக் கவனித்தார். பிறருடைய சேவையில் அவள் இன்பம் காணுவது ஒன்று தான் அவருடைய மனத்தை வெகுவாகக் கவர்ந்து விட்டது.

காமாட்சியைப் பற்றி அவர் அன்றும், இன்றும் ஒரே எண்ணத்தை வளர்த்துக் கொண்டவர். ஆகவே வேதாந்தம் அப்படிக் கேட்டவுடன் அவருக்குக் கோபமோ, மனத்தாங்கலோ எழவிலலை. பாவம்! வயசான மனிதர்! அதனால் தான். அவர் இப்படிக் கேட்க நேரிட்டது என்று ஸ்ரீதரனுக்குத் தோன்றியது.

சற்று முன் இருண்டிருந்த அவர் மனத்தில் ஒளி பிறந்தது. வேதாந்தம் வந்தது. புதுச் செய்தி ஒன்றைப் பிரஸ்தாபித்தது. பவானியைப் பற்றிய எண்ணங்கள் காமாட்சியைப் பற்றிய முடிவு, எதுவுமே அவர் மனதில் நிலைக்கவில்லை. இவ்வளவு காலம் தாம் ஆற்றி வரும் பணியை. அந்த மகத்தான கடமையைத் தொடர்ந்து ஆற்றவே ஸ்ரீதரன் விரும்பினார். அந்த விருப்பம் அவர் மனத்தில் பலமாக எழுந்ததும், அவர் உள்ளம் தெளிவு பெற்றது. நிம்மதியுடன் அப்படியே உறங்கிப்போனார்.

அங்கிருந்து கிளம்பிய வேதாந்தம் நேராக வீட்டுக்குச் செல்லவில்லை. தமது நண்பர்களுடைய வீட்டுக்குப் போனார். அங்கு அவர்களுடன் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார். பேச்சு பலதரப்பட்டதாக இருந்தாலும் அவர் மனம் திரும்பத் திரும்ப அன்று பகல் ஸ்ரீதரனிடம் அவர் கேட்ட விஷயத்துக்கே தாவிக் கொண்டிருந்தது. சுமார் நான்கு மணிக்கு கடற் கரைக்குச் சென்று. அப்படியே காரில் சாய்ந்து கடற் காற்றை அனுபவித்தார். தேகத்தில் வெப்பம் ஏற்பட் டிருந்ததால் அதைத் தணிக்கக் குளிர்ந்த காற்றும், சுக சாதனங்களும் பயன் படலாம். உள்ளத்திலே வெம்மை சுழன்று மோதிக் கொண்டிருக்கும்போது அதைத் தணிக்கும் வல்லமை குளிர்காற்றுக்குக் கூட இருக்காது. "என்றுமில்லாமல் நல்ல பகல் வேளையில் வீட்டைவிட்டு கிளம்பி இப்படிச் சுற்றுகிறாரே ஐயா' என்று கவலைப் பட்டான் டிரைவர்.

”ஏன் ஸார்! உங்களுக்கு உடம்புக்கு ஒன்றும் இல்லையே. என்னவோ போல இருக்கீங்களே” என்று விசாரித்தான்.

”அதெல்லாம் ஒன்றும் இல்லை அப்பா? நீ பயந்து விடாதே” என்றார் வேதாந்தம்.

ஏறக்குறைய இருபது வருஷங்களாக அவரிடம் வேலை செய்து வரும் அந்த ஆசாமிக்கு அவர்கள் குடும்பத்தைப் பற்றித் தெரிந்து தான் இருந்தது. 'ஐயாவுக்குத் தம் மகளைப் பற்றிக் கவலை இருக்காதா?' என்று நினைத்துக் கொண்டான்.

மனத்தில் ஏற்பட்டிருக்கும் அந்த உளைச்சல் முழுவதும் நீங்கப் பெறாதவராக வேதாந்தம் மாலை ஆறு மணிக்கு மேல் தம் வீட்டுக்குக் கிளம்பினார் .