டாக்டர் வீட்டில் பவானி

அப்பொழுது புரட்டாசி மாதம். எல்லோர் வீட்டிலும் கொலு வைத்திருந்தார்கள். சுமதியின் வீட்டிலும் பொம்மைக் கொலு வைக்கப்பட்டிருந்தது. பவானி இந்தப் பண்டிடையை வெகு உற்சாகத்துடன் கொண்டாட வேண்டும் என்று நினைத்து, தினமும் வித விதமாகச் சுமதியை அலங்கரித்தாள். தினுசு தினுசாகப் பலகாரங்கள் செய்தாள். இரவு பத்து மணி வரையில் குழந்தைகள் வீடு வீடாகச் சென்று சுண்டலும், பழங் களும் வாங்கி வந்தனர். கோவிலுக்குப் போகும் ஸ்திரீகளின் கூட்டம் தெருக்களில் நிறைந்திருந்தது. அங்கங்கே சங்கீதக் கச்சேரிகள் நடந்தன. எல்லோர் வீட்டிலிருந்தும் கணீரென்று பாட்டுக்கள் ஒலித்துக் கொண்டிருந்தன. சுமதியுடன். பாலுவும், ஊர் அழைக்கச் சென்றான். கொஞ்சம் பெரியவனாக பாலு இப்போது வளர்ந்திருந்தாலும், பழைய துடுக்குத் தனங்கள் அவனை விட்டுப் போகவில்லை.

“இங்கே பார் சுமதி! கொட்டை கொட்டையாகக் கண்களை வைத்துக் கொண்டு நிற்கிறதே இந்த வெள்ளைக்கார பொம்மை, அது உன்னைப் போலவே இருக்கிறது" என்றான் பாலு சிரித்துக் கொண்டே.

"என் மூஞ்சி இப்படித்தானாடா யிருக்கிறது?" என்று சுமதி கோபித்துக் கொண்டு கேட்டாள்.

”இல்லை சுமதி! உன் கண்கள் அப்படித்தானே இருக்கு?" சுமதிக்கு பாலுவுடன் பிறத்தியார் வீட்டில் சண்டை போட்டுக் கொள்ளப் பிடிக்கவில்லை, ”சரி, வாடா பாலு!" என்று சொல்லிக் கொண்டே சுமதி தெருவில் இறங்கி நடக்க ஆரம்பித்தாள். அன்று வானம் மப்பும் மந்தாரமுமாக இருந்தது. கறுத்த மேகங்கள் வானவெளி எங்கும் திரண்டு இருந்தன. ' பளீர் பளீர்!' என்று மின்னல்கள் கீற்றுக் கீற்றாக வானத்தில் ஒரு கோடியிலிருந்து மற்றொரு கோடி வரை பளிச்சிட்டன. பேய்க் காற்று ஒன்று சுழன்று சுழன்று அடித்தது . சட சடவென்று மழைத் துளிகள் விழ ஆரம்பித்தன.

பாலு பின்னால் வருகிறானா என்பதைக் கூடக் கவனியாமல் சுமதி விடு விடுவென்று நடந்து வீட்டுக்குப் போய் விட்டாள். பாலு, மழை பெய்வதைச் சிறிது நேரம் நின்று வேடிக்கைப் பார்த்துக் கொண்டு ஒரு மரத்தடியில் நின்றான். பிறகு, மழை பலத்து விடவே அவசரமாக வீட்டை நோக்கி ஓட ஆரம்பித்தான். அவர்கள் வீட்டு வாசலில் வாழைப்பழத் தோல்கள் மழை நீரில் நனைந்து கொண்டே இருந்தன. ஓடுகிற வேகத்தில் பாலு அவற்றில் சறுக்கிக் கீழே விழுந்தான். கீழே மண்ணில் புதைந்து கிடந்த சிறு கூழாங்கல்-கூர்மையானது-அவன் நெற்றியில் குத்தி விட்டது. ரத்தம் குபுகுபுவென்று வடித்தது.

தெருவில் பாலு வருகிறானா என்று பார்க்க வந்த பவானி, இதைப் பார்த்ததும் திகைத்து விட்டாள். அப்படியே அவனை அணைத்துப் பிடித்துக் கொண்டு உள்ளே வந்தாள். வீட்டில் கோமதி இல்லை, மஞ்சள் குங்குமத்துக்காக யார் வீட்டுக்கோ போயிருந்தாள். நெற்றியில் வடியும் ரத்தத்தை அலம்பி, ஒரு ஈரத் துணியால் சுற்றிக் கட்டினாள். வெளியே மழை மிகவும் குறைந்திருந்தது ; சிறு தூறல்கள் மட்டுமே விழுந்து கொண்டு இருந்தன.

”சுமதி! பாலுவை நான் டாக்டர் வீட்டுக்கு அழைத்துப் போகிறேன். வீட்டைப் பார்த்துக் கொள்', என்று கூறிவிட்டுப் பவானி, அவனை அழைத்துக் கொண்டு டாக்டர் ஸ்ரீதரனின் வீட்டை அடைந்தாள்.

ஸ்ரீதரனின் வீட்டில் ஜெயஸ்ரீ, பாலுவைப் பார்த்ததும் .. ”என்னடா பாலு! நெற்றியிலே என்ன?" என்று கேட்டாள்.

”மழையிலே ஓடி வந்தேன். விழுந்து விட்டேன்”', என்றான் பாலு.

அவனுக்குத் தலையை 'விண் விண்' என்று வலித்தது. ஜெயஸ்ரீ ஓடிப் போய் உள்ளே இருந்த தன் தகப்பனாரை அழைத்து வந்தாள். நெற்றிக் காயத்துக்கு மருந்து வைத்துக் கட்டினார் டாக்டர் ஸ்ரீதரன். பிறகு கைகளை அலம்பிக் கொண்டே, "இந்த ஊருக்கு நீங்கள் வந்து ஒரு வருஷமாகிறது. நம் வீட்டுப் பக்கமே வருவதில்லை. பாலு அடிபட்டுக் கொண்டதால் இன்று வந்திருக்கிறார்கள்? வெளியிலேயே அதிகமாக எங்கேயும் போக மாட்டீர்களோ?" என்று கேட்டார்.

”போவதில்லை. வீட்டிலேயே வேலை சரியாகப் போய் விடுகிறது. ஒழிந்த வேளைகளில் எதையாவது படித்துக் கொண்டே இருப்பேன்" என்றாள் பவானி.

பவானி வீட்டைச் சுற்று முற்றும் கவனித்தாள். அந்தச் சுவரில் பெரிய அளவில் ஒரு பெண்மணியின் படம் மாட்டப்பட்டிருந்தது. சாந்தமும், புன்னகையும் தவழும் அவள் முகம் பார்ப்பதற்கு அழகாக இருந்தது. ஸ்ரீதரனின் மனைவியின் படம் என்று பவானி ஊகித்துக் கொண்டாள்.

தயக்கத்துடன் பாலுவின் பக்கத்தில் நிற்கும் பவானியைப் பார்த்து ஸ்ரீதரன். ”வாருங்கள். உள்ளே போகலாம். இந்த வீட்டில் ஒரு பெரியவர் இருக்கிறார். அவரும் உங்களைப் பார்க்க வேண்டும் என்று ஆசைப் படுகிறார்" என்று கூறியவாறு முன்னே சென்றார். ஆஜானுபாஹுவான அவர் தோற்றத்தைப் பார்த்து வியந்தாள் பவானி. நல்ல சிவந்த நிறம். உயரத்துக் கேற்ற பருமன்; நீண்ட கூர்மையான நாசி, ஆழ்ந்து சிந்திக்கும் அமைதியான கண்கள். குழந்தையைப் போன்ற களங்கமில்லாத மனம்.

சாப்பிடும் கூடத்தை மூவரும் அடைந்தார்கள். இதற்குள்ளாகவே ஜெயஸ்ரீ, பவானி வந்திருப்பதைச் சுவாமிநாதனுக்குத் தெரிவித்து விட்டாள். அவள் வருவதைக் கவனித்த சுவாமிநாதன் ’வாம்மா ! நீ இந்தப் பக்கமே வருவதில்லையே' என்று அழைத்துப் பேசினார். கொஞ்சம் ஓவல்டின் கரைத்து மேஜை மீது தயாராக இரண்டு தம்ளர்களில் வைத்திருந்தார். ”சாப்பிடு குழந்தை" என்று பாலுவிடமும் பவானி யிடமும் கொடுத்தார்.

”எதற்கு? அதுவும் மணி எட்டடிக்கப் போகிறது. வேளை சமயம் இல்லாமல் சாப்பிடுவதா?" என்று சிரித்துக் கொண்டே கூறினாள் பவானி.

சுவாமிநாதன் அதற்குப் பதில் சொன்னார் : ”இல்லாவிட்டால் நீ சாவகாசமாய் எங்கே எங்கள் வீட்டுக்கு வரப் போகிறாய்? நீ தான் வெளியில் அதிகம் வருவதே இல்லையே..... அதுவும் நல்லது தான் அம்மா. கண்ட வேளைகளில் பெண்கள் வெளியில் திரியாமல் இருந்தால் தான் அவர்களுக்கு மதிப்பும், கௌரவமும் அதிகம் ஏற்படும்..."

பவானி ஒன்றும் பேசாமல் சுவாமிநாதன் பேசுவதைக் கவனித்துக் கொண்டிருந்தாள். பிறகு. ”நான் வருகிறேன். ராதா எங்கே காணோம்? நம் வீட்டுப் பக்கமே வருவதில்லை. அவளைப் பார்த்து மூன்று நான்கு மாசங்களுக்கு மேல் ஆகிவிட்டது. மன்னிகூட அவள் வருவதில்லை என்று குறைப்படுகிறாள்" என்று கூறியவாறு கிளம்பினாள்.

சுவாமி நாதனின் முகம் வாட்டமடைந்தது. ”ராதாவா? அவளுக்கு ஏகப்பட்ட அலுவல்! அவள் இல்லாமல் ஊரில் ஒரு நாடகம், சங்கீதக் கச்சேரி, சினிமா சங்கங்கள், கடற்கரை ஒன்றும் வளராதாம். எங்கே யாவது எதற்காவது போயிருப்பாள். அவளை இப்படியே விடக் கூடாதம்மா. சீக்கிரத்திலேயே ஒரு கல்யாணத்தை பண்ணி ஆக வேண்டும்" என்றார் சுவாமிநாதன்.

"அதுவும் சாமானியமாக நடந்து விடுகிற காரியமா சுவாமி? ராதாவுக்கு ஒரு புருஷனைத் தேடிப் பிடித்து நீங்களும், நானும் கல்யாணம் பண்ணி வைத்துவிட முடியுமா? அவளே தேர்ந்தெடுத்துச் சொல்லப் போகிற வனைத்தான் நாம் அவளுக்குக் கல்யாணம் பண்ணி வைக்கும்படி இருக்கும்" என்றார் ஸ்ரீதரன்.

”அவ்வளவு தூரம் அந்தப் பெண்ணுக்கு என்ன தெரியும்? நீங்கள் இதுவரைக்கும் கொடுத்திருக்கிற செல்லம் போதும். அந்த அளவுக்கு வேறு இடம் கொடுத்து விடாதீர்கள்" என்று கேட்டுக்கொண்டார் சுவாமிநாதன்.

பவானி வீடு திரும்பும் போது ராதாவைப் பற்றிப் பலவிதமாக எண்ணமிட்டாள். பாவம், அந்தப் பெண்ணைச் சரியான முறையில் வளர்க்கத் தாயும் தந்தையும் இல்லை. உடன் பிறந்தவர் தம் தொழில் ஒன்றையே பிரதானமாகக் கொண்டவர். அத்துடன் குடும்ப வாழ்க்கையில் அவ்வளவு அனுபவம் அடையாதவர். நல்ல இடத்தில் ராதா வாழ்க்கைப்பட்டுச் சந்தோஷமாக இருக்க வேண்டும்' என்று நினைத்துக் கொண்டே வீட்டுக்கு வந்தாள்.