ராதாவுக்குத் தெரிந்தவர்

அன்றிரவு டாக்டர் ஸ்ரீதரன் வீட்டுக்கு வரும் போது இரவு ஒரு மணி ஆகிவிட்டது. அவரால் முடிந்த வரையில் சுப்புலட்சுமிக்கு வைத்தியம் செய்து பார்த்தார். தான் பிழைத்து எழ வேண்டும் என்கிற ஆசை அவள் மனத்தை விட்டுப் போய் பலகாலம் ஆயிற்று. ஊசிகளுக்கும் மருந்துகளுக்கும் அந்த மனத்தின் அபிப்பிராயத்தை எதிர்த்து நிற்கும் சக்தி இல்லை. ’குழந்தை குழந்தை!’ என்று வீட்டைச் சுற்றி வளைய வந்த ஒரு ஜீவன் மறைந்து போவதில் டாக்டர் காமாட்சிக்குத் தான் வருத்தம். தன் அம்மா இனிமேல் பிழைக்க மாட்டாள் என்பது தெரிந்திருந்தும் அவளைப் பிழைக்க வைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டாள். அந்த அறியாமையை நினைத்து அவள் மனத்துள் சிரித்துக் கொண்டாள்.

இரவு மூன்று மணிக்கு டாக்டர் காமாட்சி ஸ்ரீதரனுடன் 'போனில்' பேசினாள். "விளக்கு அணையும் தறுவாயில் இருக்கிறது. அம்மா ரொம்பவும் சிரமப்படுகிறாள். ஊசிகளையும், மருந்துகளையும் நிறுத்தி விட்டேன். அவள் இது வரையில் ஆராதித்து வந்த கற்பகாம்பிகை ஸ்தோத்திரங்களை மாத்திரம் சொல்லி வருகிறேன் ......." ’போனில்' பேசிய குரலில் தெளிவு இல்லை. துக்கமும் துயரமும் இழையோடின. அவள் டாக்டர் ஆனதால் சமாளிக்க முடிந்தது.

பொழுது விடிவதற்குள் சுப்புலட்சுமி போய் விட்டாள். நான் இனிமேல் ’தனி' என்று 'போன்' மூலம் வேதாந்தம் அறிவித்தார். அதிகாலையில் எழுந்து குளித்துக் காலைச் சிற்றுண்டிக்காக வரும் டாக்டர் ஸ்ரீதரன் தம் அறையிலேயே சிந்தனையில் மூழ்கி உட்கார்ந்திருந்தார்.

சுவாமிநாதன் வியப்புடன் மாடிப் படியேறி மேலே சென்று உள்ளே எட்டிப் பார்த்தார்.

“டாக்டர் உடம்பு சரியில்லையா என்ன?" என்று விசாரித்தார்.

"உடம்புக்கு ஒன்றுமில்லை. மனசுதான் சரியாக இல்லை" என்று சொல்லிக் கொண்டே, தம் கடமைகளில் நினைவு வந்தவராக அவர் கீழே இறங்கி வந்து தம் அலுவல்களில் ஈடுபட ஆரம்பித்தார்.

ராதா விழித்தெழுந்து உள்ளே வந்ததும் சுவாமி நாதன் "ஏனம்மா! அண்ணா ஒரு மாதிரியாக இருக்கிறார்? டாக்டர் காமாட்சியின் தாய் போய் விட்டாளாம். பாவம் அந்தப்பெண்ணுக்கு இனிமேல் யார் ஆதரவு? தகப்பனாருக்கும் வயசு ஆயிற்று. பாவம், அவளுக்கும் சிறு வயசு. தனியாக இருக்க வேண்டும்........."

ராதாவுக்கு இந்த விஷயங்களெல்லாம் ஒன்றும் சுவாரசியப்படவில்லை. ’தனியாக வாழ்வது என்றால் இவருக்கு ஏன் பிடிக்கவில்லை?' என்றுதான் அவளுக்குத் தெரியவில்லை . சலிப்புடன் எழுந்து அவள் தோட்டத்துக்குப் போய் விட்டாள். ஸ்ரீதரன் தம் காலை அலுவல்களை முடித்துக் கொண்டு ’டிஸ்பென் ஸரி'க்குப் போய் விட்டார்.

அதற்கப்புறம் பல நாட்கள் வரையில் அந்த வீட்டில் எதுவுமே நடக்கவில்லை. பதினைந்து தினங்களுக்கு அப்புறம் ஒரு நாள் மாலை. ராதா கோகலே ஹாலில் நடக்கவிருந்த சங்கீதக் கச்சேரி ஒன்றுக்கு புறப்பட்டாள்.

"உன்னோடு யார் வருகிறார்கள்?" என்று விசாரித்தார் சுவாமிநாதன்.

”ஏன்?" என்று புருவத்தை சுளித்துக் கொண்டே கேட்டாள் ராதா.

”தனியாகவா நீ திரும்பி வருவாய் என்று கேட்கிறேன்?"

’இதென்ன அசட்டுக் கேள்வி? தனியாகத் திரும்பி வந்தால் என்னவாம்’ என்று கேட்டு விட ராதா துடித்தாள் . ஆனால் அவளை அப்படிக் கேட்க விடாமல் ஏதோ ஒன்று தடுத்து விட்டது.

"எனக்குத் தெரிந்தவர்கள் யாராவது வருவார்கள். அவர்கள் கூட வந்து விவேன்" என்று கூறிவிட்டு அவர் பதிலை எதிர்பாராமல் ராதா வெளியே சென்று விட்டாள்.

தெரு வழியே நடந்து சென்று கோடம்பாக்கம் ரயில் நிலையத்தை அடைந்தாள். ரயில் வந்ததும் அதில் ஏறி உட்கார்ந்து கோட்டை நிலையத்தில் இறங்கி ஒரு ரிக்ஷா வைத்துக் கொண்டாள். அப்பொழுது மாலை சுமார் நாலரை மணி இருக்கலாம். ஹைக்கோர்ட்டுக்கு எதிரில் இருந்த ஹோட்டல் ஒன்றிலிருந்து மூர்த்தியும், கோபியும் வெளியே வந்து கொண்டிருந்தார்கள்.

சென்னை நகரின் ஜனத்திரளில் அரண்மனைக்காரத் தெரு வழியே செல்லும் ரிக்ஷாவில் ராதா உட்கார்ந்திருப்பது மூர்த்தியின் தீட்சண்யயான கண்களுக்குத் தெரிந்தது.

”கோபி ஒரு நிமிஷம். நான் தம்புச் செட்டித் தெருவில் ஒருவரைப் பார்க்கவேண்டும். இப்படியே பீச் ஸ்டேஷனுக்கு நடந்து போய்க்கொண்டிரு, வந்து விடுகிறேன்" என்று சொல்லிக் கொண்டே அவசரமாகச் சென்று அந்தக் கூட்டத்தில் மறைந்து போனான்

மூர்த்தி.

கச்சேரி ஆரம்பமாகிவிட்டது. அன்று ஏனோ அதிகக் கூட்டம் இல்லை. ராதாவுக்கு வெகு சமீபமாக மூர்த்தி ஒரு டிக்கெட் வாங்கிக் கொண்டுபோய் உட்கார்ந் தான். சங்கீதத்திலேயே கவனமாக இருந்த ராதா அவனைக் கவனிக்கவில்லை. அத்துடன் அங்கே அவளுக்குத் தெரிந்தவர்கள் அநேகம் பேர் இருந்தார்கள். பாகவதர் பாடும் ஒவ்வொரு ராகத்தைப் பற்றியும் கீர்த்தனங்களின் அர்த்த விசேஷத்தைப் பற்றியும் அருகில் இருந்தவர்களுடன் பேசிக் கொண்டே சங்கீதத்தை அனுபவித்தாள் ராதா.

அன்று, ராகம், தானம் பல்லவியை ஒன்றரை மணி நேரம் பாடினார் வித்வான், அதற்கப்புறம் சில்லறை உருப் படிகள் பாடப்பட்டன. 'மாயம் வல்லவன் கண்ணனென்று என் தாயும் வந்து சொன்ன துண்டு' என்கிற உருப்படியைப் பாடிய போது ராதா கல கல வென்று சிரித்து விட்டாள். அவள் மனத்திலே சிரிப்பை மூட்டிச் சிரிக்கச் செய்தவன் கண்ணன். ஆனால் மூர்த்தி அதை வேறுவிதமாகப் புரிந்து கொண்டான். ' உணர்ச்சிகளுக்கு சீக்கிரமாக அடிமையாகி விடுகிறவள் இந்தப் பெண், பாட்டைக் கேட்டுச் சிரிக்கிறாள்; பேசும் போது சிரிக்கிறாள். தெருவில் நடந்து செல்லும்போதும் சிரிக்கிறாள். இவளிடம் உறுதியும் கண்டிப்பும் இருக்காது. பவானியைப்போல் இவள் நெஞ்சழுத்தம் வாய்ந்தவள் இல்லை' என்பதை மூர்த்தி சுலபமாகப் புரிந்து கொண்டான்.

வித்வான் மங்களம் பாடி முடிக்கும் போது மணி சரியாக ஒன்பதே முக்கால்; கூட்டம் திமுதிமுவென்று வெளியே வந்தது. காரில் வந்தவர்கள் போய் விட்டார்கள்.

கோடம்பாக்கம் செல்லும் பஸ் போய் விட்டது என்று ரிக்ஷாக்காரன் ஒருவன் தெரிவித்தான். "இரண்டு ரூபாய் கொடுங்க அம்மா. வீட்டிலேயே கொண்டு போய் இறக்கிடறேன்" என்று வேறு அவன் யோசனை கூறினான்.

இந்த அகாலத்தில் ரிக்ஷாவில் போனால் சுவாமிநாதன் கோபிப்பார் என்பது ராதாவுக்குத் தெரியும். அவளுக்குப் போவதற்கு தைரியம் உண்டு. நடுவில் ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் 'ஓ' வென்று கத்தலாம். ’உதவி- உதவி' என்று கூக்குரல் போடலாம். முடிந்தால் அருகில் சாலை ஓரத்தில் இருக்கும் வீட்டில் போய் உதவி கேட்கலாம் - என்றெல்லாம் அசட்டுத் தைரியம் அவள் மனதில் நிறைந் திருந்தது. பட்டப் பகலைப்போல் விளக்குகள் எரியும் போது என்னதான் நேர்ந்து விடுமென்று வேறு தோன்றி யது. ஆனால் சுவாமிநாதன் அன்றே சொன்னார்: அகாலத்தில் அப்படி எல்லாம் தனியாக வரக்கூடாதும்மா என்று. அந்தக் கிழவருக்கு யார் பதில் சொல்ல முடியும்?

தயங்கியபடி நின்ற ராதாவின் அருகில் மூர்த்தி வந்து நின்றான். கைகளைக் குவித்து வணக்கம் செலுத்தினான்.

"என்னை நினைவிருக்கிறதா?" என்று கேட்டான். ராதா தன் பெரிய விழிகளைச் சுழற்றியவாறு ஒருகணம் யோசனை செய்தாள்.

"அன்று நீங்கள் மியூஸியம் தியேட்டரில் போட்ட நாடகத்துக்கு நான் வந்திருந்தேனே........"

"எஸ்... எஸ்" என்றாள் ராதா. பிறகு . "நீங்கள் எதுவரைக்கும் போகிறீர்கள்!" என்று விசாரித்தாள்.

”நானா? கோடம்பாக்கத்தில் இருக்கிறேன். ஆமாம். நீங்கள் டாக்டர் ஸ்ரீதரனின் தங்கைதானே? உங்கள் வீட்டுக்கு அருகிலேயே இருக்கிறேனே. ஏன் கேட்கிறீர்கள்? உங்களோடு யாரும் வரவில்லையா?......"

ராதா தலையைக் குனிந்து கொண்டு நின்றாள். பிறகு மெதுவாக. ”எனக்கு பாட்டுப் பைத்தியம் அதிகம் உண்டு, என்னவோ இந்தக் கலைகளில் ஒரு அலாதி ஆசை எனக்கு. திரும்பி எப்படி வருவது என்று யோசிக்காமல் வந்து விட்டேன்."

அருகில் சென்று கொண்டிருந்த 'டாக்ஸி'யைக் கை தட்டி அழைத்தான் மூர்த்தி.

”அதனால் என்ன? நான் துணைக்கு வருகிறேன். வீட்டிலே கார் இருக்குமே....."

"அண்ணாவுக்கு வெளியே போக வேண்டியிருந்திருக்கும். திரும்பி வந்திருக்க மாட்டார். இல்லா விட்டால் கார் வந்திருக்கும்....."

காரின் பின் ஸீட்டில் ராதா உட்கார்ந்திருந்தாள். இரவ வேளையில் இப்படித் தனியாகப் பிற ஆடவனுடன் செல்கிறோமே என்பதை அந்தப் பேதைப் பெண் உணரவில்லை . இம்மாதிரி ஒரு தைரியம் நம் நாட்டுப் பெண்களுக்குத் தேவைதானா? தாய்க்குலத்தில் கற்பு, பண்பு. அடக்கம், பொறுமை இவற்றைப் பக்க பலமாகக் கொண்டு நம் சமுதாயம் சீரிய முறையில் இயங்க வேண்டு மென்றால் இத்தகைய நாகரிகம்' தேவையா? என்பதை நாம் சிந்தித்துப் பார்க்கத்தான் வேண்டும்.

எத்தனையோ இரவுகளைப் போல் சுவாமிநாதன் ராதா இன்னும் வரவில்லையே என்று வாயிற்படியில் காத்துக் கொண்டிருந்தார். தெருவில் கார் வந்து நின்றது அதிலிருந்து ராதா இறங்கினாள். ’வணக்கம். தாங்க்ஸ்’ என்று சொல்லிக் கொண்டே உள்ளே சென்றாள். மூர்த்தியும் அங்கே இறங்கிக் கொண்டு 'டாக்ஸி' காரருக்குப் பணத்தைக் கொடுத்து அனுப்பினான்.

சுவாமி நாதன் தெரு வெளிச்சத்தில் மூர்த்தியின் முகத்தைக் கவனித்தார். 'அகத்தின் அழகு முகத்தில் தெரியும்' என்றார்கள் பெரியவர்கள்.

அந்த முகத்திலே தெளிவு இல்லை; அந்தக் கண்களில் உண்மையும், நேர்மையும் இல்லை. ஒரு வேளை அவ ருடைய ஊகம் தவறாகக்கூட இருக்கலாம். என்னவோ அவருக்கு அவனை அவ்வளவாகப் பிடிக்கவில்லை.

உள்ளே சென்றவர், "யாரம்மா அந்தப் பிள்ளை?" என்று கேட்டார். அவள் பெண்கள் கல்லூரியில் படித்துத் தேறிய மாணவி ஆதலால், ஓர் ஆடவன் அவளுக்கு நண்பனாக இருக்கமுடியாது என்பது அவர் தீர்மானம். இதுவரையில் இப்படி யாரும் அவளுடன் வந்த தில்லையே .

”தெரிந்தவர்" என்று பதில் கூறினாள் ராதா.

"என்ன அம்மா சொல்லுகிறாய்? நமக்கு ஏதாவது உறவா? அப்படி யாரும் இதுவரையில் இங்கு வந்ததே யில்லையே?...."

”உறவு என்று சொன்னேனா. தெரிந்தவர் என்று தானே சொல்கிறேன்!"

ராதாவுக்கு அவர் ஏதோ சந்தேகமாகக் கேட்கிறார் என்பது விளங்கிவிட்டது. கோபம் வர, அவள் பெரு மூச்சு விட்டுக் கொண்டே சாப்பிட்டு முடித்தாள்.

சுவாமிநாதனுக்கோ சரிவரப் பேசத் தெரியாமல் ’இருந்த பொழுதிலிருந்து வளர்த்த குழந்தை என்னிடமே மறைத்துப் பேசுகிறாளே’ என்று கோபம் வந்தது. 'இருக்கட்டும். அவளும் வயசு வந்த பெண், படித்தவள். நல்லது கெட்டதை ஆராயும் திறமை படைத்தவள் நாமும் அவசரப்படக்கூடாது' என்று நினைத்து அவர் அத்துடன் அன்று விட்டு விட்டார்.

ஸ்ரீதரனுடைய போக்கே அலாதியாக இருந்தது. வீட்டிலே அவர் மனத்தைக் கவர மனைவி இல்லை. ஒரே பெண் குழந்தை. ஸ்ரீதரன் வீட்டில் இருக்கும் சமயங்களில் ஜெயஸ்ரீ பள்ளிக்கூடம் போய் விடுவாள்.

இரவில் ஸ்ரீதரன் வீட்டுக்கு வரு முன்னே படுத்துத் தூங்கிப் போவாள் ஜெயஸ்ரீ.

ராதா பெரிய பெண்ணாக வளர்ந்து விட்டாள். அவளை நன்றாகப் படிக்க வைத்து விட்டார் அவர். தகுந்த இடமாகப் பார்த்துக் கலியாணம் பண்ணிக் கொடுத்து விட்டால் அவள் புருஷன் வீட்டுக்குப் போய் விடுவாள்; வீட்டைச் சுற்றிச் சுற்றி வரும் பொறுப்புகள் அதிகம் இல்லை. ஆகவே தன் சகோதரியைப் பற்றித் தெரிந்து கொள்ளவோ அவள் சுதந்திரத்தில் தலையிடவோ ஸ்ரீதரனுக்கு அவகாசம் இல்லை. ஆசையும் இல்லை .

தாமரை இலைத் தண்ணீரைப் போல இருந்தது அவர் வாழ்க்கை . அத்துடன் இந்த விஷயங்களிலெல்லாம் பெண்களுக்கு இருக்கிற அனுபவம் ஆண்களுக்குப் போதாது. சுவாமிநாதன் நாலும் தெரிந்தவர். உலசு விவகாரங்களில் அடிபட்டவர். ஆகவே, அவர் தான் ராதாவைப் பற்றி அதிகமாகக் கவலைப்பட்டார். *சமயம் வாய்க்கும்போது ஸ்ரீதரனிடம் சொல்லி விரைவிலேயே அவளுக்குக் கலியாணத்தைப் பண்ணி வைத்து விடவேண்டும்' என்று தீர்மானித்துக் கொண்டார்.