வக்கீல் வேதாந்தம்

வக்கீல் வேதாந்தத்தின் வீடு மயிலாப்பூரில் இருந்தது. சென்ற இருபத்தைந்து முப்பது வருடங்களில் சென்னை நகரில் பிரபலம் அடைந்திருந்த வக்கீல்களில் வேதாந்தமும் ஒருவர்.

தொழில் முறையில் அவர் எவ்வளவு பிரபலம் அடைந்திருந்தாலும், வாழ்க்கையில் நம்முடைய பழைய வழக்கங்களை விட மனமில்லாதவர். அவருடைய மனைவி சுப்புலட்சுமி, கணவன் எதிரில் நின்றுகூடப் பேசமாட்டாள். வேளைக்கொரு உடையும், நாளைக் கொரு நகையுமாக மாறி வரும் இந்தக் காலத்தில் அந்த அம்மாள் பழைய கெட்டிக் கொலுசும், கடியாரச் சங்கிலியும் செயின் அட்டிகையும் இருபத்தைந்து வருஷங்களாக அழித்துப் பண்ணிப் போட்டுக் கொள்ளாமல் இருப்பதே. அவர்கள் பழைமைக்கு மரியாதை தருபவர்கள் என்பதற்கு அடையாளம், அவர்கள் வீட்டில் செல்வம் கொழித்த அளவு சந்தான பாக்கியம் ஏற்படவில்லை. ஒரு பெண் குழந்தைக்கு அப்புரம் அவர்கள் செய்த தவங்களும் நோன்புகளும் ஒன்றும் பலிக்கவில்லை . காமாட்சி அவர்களின் ஒரே மகள். சங்கீதம். வடமொழி, நாட்டியம். பத்திரிகைத் தொழில் யாவும் வளர்ந்து வரும் மயிலாப் பூரில் காமாட்சியின் படிப்பை அவர்கள் மூன்றாவது படிவத்தோடு நிறுத்தி விட்டு. பதினான்கு வயசு பூர்த்தி யடைந்தவுடன், கல்யாணமும் பண்ணிக் கொடுத்து விட்டார்கள்.

எவ்வளவோ ஆடம்பரமாக, பெருமையாக நடந்தது அந்தக் கல்யாணம். மருமகன் செக்கச் செவேலென்று ராஜா போல இருப்பதாகத் தம்பதி இருவரும் மனம் பூரித்துப் போனார்கள். மருமகன் தங்களுடனேயே இருக்க வேண்டும் என்று வேதாந்தம் சம்பந்தி விட்டாரைக் கேட்டார். அவர்களும் அனுமதி கொடுத்து அனுப்பினார்கள்.

அன்று, அதாவது சுமார் பன்னிரண்டு வருஷங்களுக்கு முன்பு காமாட்சிக்கு வாழ்க்கையின் முதல் நாள். பதினாறு வயதுப் பெண் அந்த நாளை எவ்வளவோ ஆவல்களுடனும், கனவுகளுடனும் எதிர்பார்த்திருப்பாள். அவளுடைய கணவன் வீட்டிலேயே இருந்தாலும் நாள், நட்சத்திரம் முதலியவற்றில் பற்று மிகுந்த பெரியவர்கள் அவர்களைப் பிரித்தே வைத்திருந்தார்கள். கணவனிடம் மனைவி நெருங்கிப் பழக அவர்கள் சந்தர்ப்பம் அளிக்கவில்லை. கணவனுக்குத் தரும் காப்பியைக் காமாட்சி தலையைக் குனிந்து கொண்டே எடுத்துச் சென்று மேஜை மீது வைத்து விட்டுத் திரும்பி வருவாள். அவனும் மனைவியுடன் பேச வேண்டும் பழக வேண்டும் என்கிற ஆவலைக் காண்பித்து கொள்ள வேயில்லை. இப்படி இருக்கையில் பெரியவர்களாகவே அந்தச் சந்தர்ப்பத்தை ஏற்படுத்தினார்கள். காமாட்சிக்கு அன்று விசேஷமாக அலங்காரம் செய்திருந்தார்கள், பூக்கடையிலிருந்து வாங்கி வந்த ஜாதி அரும்பு களைப் பின்னலில் வைத்துத் தைத்திருந்தார்கள். காதுகளில் வைரக் கம்மல்களும், புல்லாக்கும், ஒட்டியாணமும் கழுத்தில் ஐந்தாறு வடங்கள் சங்கிலியும், காஞ்சிபுரம் பட்டுப் புடவையும் அணிந்து காமாட்சி தன் கணவனை நேருக்கு நேர் சந்திக்கப் புறப்பட்டாள்.

மாடியில் இருந்த அந்த அறையில் அவள் நுழைந்த போது, அவள் கணவன் உள்ளே சாய்வு நாற்காலியில் படுத்து அரைத் தூக்கத்தில் இருந்தான். காமாட்சி மெல்ல மெல்ல அடி வைத்து உள்ளே சென்றாள்; கணவன் பேசாமல் இருக்கவே, தலை நிமிர்ந்து அவனைப் பார்த்தாள். பிறகு மெதுவான குரலில் ”எழுந்திருங்கள். முதுகை வலிக்கப் போகிறது. படுக்கையில் போய்ப் படுத்துக் கொள்ளுங்கள்" என்று அவனை எழுப்பினாள்.

அவன் கண் விழித்தான். எதிரில் அழகே உருவமாக நிற்கும் காமாட்சியைக் கண்டான். அவன் கண்களில் கண்ணீர் சுரந்தது. ”காமாட்சி" என்று ஆதுரத்துடன் அழைத்து. அவள் கைகளைப் பற்றிக் கொண்டான்.

'உன்னை ஏமாற்றி விட்டேன்! உன்னுடன் நான் வாழ்வதற்கு அருகதை இல்லாதவன். நிரந்தர நோயாளி. உளுத்துப்போன இந்த உடல் அதிக நாள் இருக்கப் போவதில்லை. வெளிப்பார்வைக்கு நான் நன்றாகத்தான் இருக்கிறேன். இருந்தாலும். காச நோய் என்னுடைய உடலை அரித்துக்கொண்டே வருகிறது. சீக்கிரத்தில் எல்லோரும் அதைப் புரிந்து கொள்வீர்கள்" என்றான்.

காமாட்சி கல்லாக உணர்வற்று நின்றாள். பதி னைந்து வருஷங்களுக்கு முன்பு காச நோயிலிருந்து மனித சமுதாயத்துக்கு விடுதலை கிடையாது என்று தான் எல்லோரும் நினைத்திருந்தார்கள். அந்த எண்ணமே அநேகம் பேரை- ஆரம்ப நோயாளிகளைக் கூட பலிவாங்கிவிட்டது.

அவன் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்து கொண்டே இருந்தது .

"பணத்துக்காக வியாதியை மறைத்து வைத்து விட்டார்கள் என்னைப் பெற்றவர்கள்" என்றான் வேதனையுடன்.

”அழாதீர்கள்" என்றாள் காமாட்சி, "இதற்காக அழுவார்களா? நல்ல வைத்தியமாகப் பார்த்தால் போயிற்று. நாளைக்கே அப்பாவிடம் சொல்லி நல்ல வைத்தியரை வரவழைக்கிறேன். இந்தப் பாலைச் சாப்பிட்டு விட்டுத் தூங்குங்கள்." ஆதரவுடன் அவன் கரங்களைப் பற்றிக் கட்டிலுக்கு அழைத்துப் போய்ப் படுக்க வைத்தாள். சிறிது நேரத்திற்கெல்லாம் அவன் தூங்கிப் போனான்.

திறந்த மாடியிலே வந்து நின்றாள் அவள். வெளியே கபாலியின் கோபுரமும் குளமும் தெரிந்தன. பிறந்து புத்தி தெரிந்த நாட்களாய் யாருக்குமே தீங்கு எண்ணாதவள் அவள். அவள் வாழ்க்கை ஒரு சோக கீதமாக மாறப் போகிறது என்பதை நினைத்துப் பார்க்கையில் அவள் உள்ளமெல்லாம் எரிந்தது.

பொழுது விடிந்ததும் கீழே இறங்கி வந்த மகளை நோக்கினாள் சுப்புலட்சுமி. பின்னலில் தைத்திருந்த மலர்கள் வாடாமல், நலுங்காமல் இருந்தன, கண்களின் ஓரத்தில் மட்டும் சிறிது மை கரைந்திருந்தது. தலை குனிந்தவாறு கொல்லைப் பக்கம் சென்ற காமாட்சி திரும்பி வந்து.... ”அம்மா! அப்பா எங்கே?" என்று கேட்டாள்.

"ஏனம்மா! இங்கே தானே இருந்தார்" என்றாள் சுப்புலட்சுமி.

வேதாந்தம் காப்பி சாப்பிட உள்ளே வந்தார்.

”குழந்தை உங்களைத் தேடினாளே!" என்று சொல்லிக்கொண்டே சுப்புலட்சுமி இரண்டு தம்ளர்களில் காப்பி கொண்டு வந்து வைத்தாள். இந்தாம்மா! நீ சாப்பிட்டு விட்டு உன் புருஷனுக்கும் கொண்டுபோய்க் கொடு" என்றாள்.

தகப்பனார் காப்பி அருந்துகிற வரைக்கும் மகள் ஒன்றும் பேசவில்லை. அவர் அருகில் சென்று நின்று 'அப்பா! அவருக்கு உடம்பு சரியில்லையாம், நம்ப டாக்டரை அழைத்து வந்து காண்பியுங்கள்." இதைச் சொல்லி முடிப்பதற்குள் அவளுக்கு அழுகை வந்து விட்டது.

"என்னம்மா உடம்புக்கு? தலை வலியா? ஜுரமா?" என்று பதறியவாறு கேட்டுக் கொண்டே சமையல் அறையை விட்டு வெளியே நடந்தார் வேதாந்தம். அவசரமாக மாடிப் படிகளில் ஏறி அவர் உள்ளே போவதற்குள் காமாட்சி அவர் முன்னால் வந்து நின்றாள்.

"அதெல்லாம் ஒன்றுமில்லை அப்பா. அவருக்கு காசமாம். கல்யாணத்துக்கு முந்தியே இருந்ததாம்....."

வேதாந்தம் முகத்தைச் சுளித்துக் கொண்டார். தலையில் பெரிய கல் ஒன்று விழுந்து விட்டது என்பது அவருக்குத் தெரிந்து போயிற்று. பெற்றோருக்கு ஒரே பிள்ளை . பணங்காசு அதிகம் கிடையாது. நமக்கு அடங்கிய மருமகனாக வீட்டோடு இருப்பான். தள்ளாத வயசில் அவனும், மகளும் ஆதரவாக நம்மைப் பார்த்துக் கொள்வார்கள் என்று எண்ணியிருந்த எண்ணமெல்லாம் ஒரு விநாடியில் மறைந்து போயின.

பாதிப்படி ஏறியவர் திரும்பி விட்டார். டாக்டர் ஸ்ரீதரனுக்கு போன்' செய்தார். அப்பொழுது டாக்டர் ஸ்ரீதரன் இளைஞன். வைத்தியக் கல்லூரியிலிருந்து பட்டம் பெற்று வெளியே வந்து ஆறு மாதங்கள் ஆகி யிருந்தன. இவர்கள் குடும்பத்தில் சில்லறை வியாதிகளுக்கு வைத்தியம் பார்த்து வந்தான்.

அவனுக்குத் தெரிந்த பிரபல வைத்தியர்களை அழைத்துவந்து நல்ல முறையில் வைத்தியம் செய்து பார்த்தான் ஸ்ரீதரன்.

பலன் பூஜ்யமாகி விட்டது. காமாட்சி விதவை யானாள். அவர்கள் கல்யாணத்தை ஆமோதித்து நடத்திய அதே சமூகம், இந்தச் சம்பவத்தையும் பார்த்துக் கொண்டு சும்மா இருந்தது.

”அதிர்ச்சி வைத்தியம்' என்று வைத்திய முறையிலே ஒன்று இருப்பதாகப் படிக்கிறோம். வேதாந்தம் அடியோடு மாறிப் போனார். அவரிடம் இருந்த பழைமை எண்ணங்கள், அசட்டுத் தனங்கள். அதைரியம் யாவும் மறைந்து போயின. காமாட்சியை மேலும் 'இண்டர் மீடியட்' வரை படிக்க வைத்து. வைத்தியக் கல்லூரியில் சேர்த்தார். மருமகனின் மறைவு. மகள் நிற்கும் நிலைமை, சமூகத்தின் சுயநலம் யாவும் சேர்ந்து அவருக்கு அதிர்ச்சி வைத்தியம் செய்தன.

இப்பொழுது டாக்டர் காமாட்சி, ஸ்ரீதரனின் சக டாக்டர். வேதாந்தம் மாறினாரே தவிர, சுப்புலட்சுமி மாறவில்லை. மனம் இடிந்தவள் இடிந்தவள் தான்.

சுவாமிநாதன் ராதாவிடம் கூறியபடி அன்று சுப்புலெட்சுமியின் உடல் நிலைமை கவலைக்கிடமாக இருந்தது. அதற்காகத் தன் நண்பரை டாக்டர் காமாட்சி அழைத்திருந்தாள்.