கதம்பச் சரம்

மாலை சுமார் நான்கு மணி இருக்கலாம். தோட்டக்காரன் கோபாலன் கூடை நிறைய ஜாதி அரும்புகளையும், கனகாம்பரத்தையும் பறித்து வந்து, கொல்லைத் தாழ்வாரத்தில் உட்கார்ந்த பவானியின் முன்பு வைத்தான். வாழை நாரைத் தொட்டித் தண்ணீரில் ஊற வைத்து எடுத்து வந்து கொடுத்தான். தூணுக்கு அப்பால் நின்று கொண்டு “அம்மா" என்று கூப்பிட்டுவிட்டுத் தலையைச் சொறிந்து கொண்டு நின்றான்.

பவானி அவனை ஏறிட்டுப் பார்த்தாள். பிறகு "என்னப்பா வேணும் உனக்கு?" என்று கேட்டாள்.

”சின்னக் குழந்தையைப் பள்ளிக்கூடத்திலேருந்து வீட்டுக்கு அழைத்து வந்தாச்சு செடிகளுக்கு தண்ணி ஊத்தியாச்சு. மாட்டுக்குத் தீனிவைச்சாச்சு" என்று தன்னுடைய வேலைகள் முடிந்து விட்டதை அறிவித்தான் கோபாலன் .

”சரி உனக்கு என்ன வேணும் என்று சொல்லேன்?" என்று கேட்டாள் பவானி.

கோபாலன் மறுபடியும் தலையைச் சொறிந்நான். ”வீட்டிலே அது சினிமா பார்க்கணும்னு ஒரு வாரமா கேட்டுக்கிட்டு இருக்குது. சாயங்கால ஆட்டத்துக்குப் போகலாம்னு..."

”இருக்கிறயாக்கும்! சரி எதுக்கும் மாடியிலே போய் அம்மாவைக் கேட்டுக்கோ போ..."

இவ்விதம் கூறிவிட்டு, வாழை நாரைக் கிழித்துப் பூ தொடுக்க ஆரம்பித்தாள் பவானி. மாடி அறையிலே அவள் மன்னி கோமதி கோபாலனுக்கு உத்தரவு போடுவது கேட்டது.

"சினிமாவுக்குப் போகிறது இருக்கட்டும், முதலிலே டாக்டர் வீட்டுக்குப் போய் ’இன்றைக்கு என்னாலே அங்கே வரமுடியவில்லை. அவரையே கொஞ்சம் வந்து பார்த்து விட்டுப் போகச் சொன்னாங்க’ என்று சொல்லி விட்டு வா" என்றாள் கோமதி.

அப்புறம் எதையோ நினைத்துக் கொண்டவளாக ”கோபாலா! பூப்பறித்து விட்டாயோ? அம்மாவைக் கேட்டு டாக்டர் தங்கச்சிக்கும் மகளுக்கும் கொஞ்சம் பூ வாங்கிப் போய்க் கொடு" என்றாள்.

கோபாலன் மாடியிலிருந்து கீழே வந்தான். “அம்மா, டாக்டர் வீட்டுக்குப் பூதரச் சொன்னாங்க" என்று சோர்ந்த முகத்துடன் பவானியிடமிருந்து பூச்சரத்தை வாங்கி எடுத்துக் கொண்டு டாக்டர் ஸ்ரீதரனின் வீட்டை நோக்கி நடந்தான்.

கோடம்பாக்கம் ரயில் நிலையத்துக்கு அருகில் செல்லும் நீளமான தெருவின் கோடியில் இருக்கும் பங்களா டாக்டர் ஸ்ரீதரனுடையது. வாயில் சுவரில் ஒரு புறத்தில் டாக்டர் ஸ்ரீதரன் எம். பி. பி. எஸ். என்கிற பெயரையும், மறுபுறத்தில் ஜெயஸ்ரீ' என்கிற வீட்டுப் பெயரையும் காணலாம்.

டாக்டர் வெளியே போகவில்லை. வீட்டில் இருக்கிறார் என்பதற்கு அத்தாட்சியாக அவருடைய கார் ’போர்டிகோ'வில் நின்றிருந்தது. ஒன்றிரண்டு நோயாளிகளும் வெளிப்பக்கம் தாழ்வாரத்தில் நாற்காலிகளில் உட்கார்ந்திருந்தனர்.

கோபாலன் வராந்தாவில் இருந்த ஜன்னல் வழியாக உள்ளே எட்டிப் பார்த்தான். டாக்டர் ஸ்ரீதரன் நோயாளி ஒருவரைப் பரிசோதனை செய்து கொண்டிருப்பது தெரிந்தது. வாசல் பக்கத்திலிருந்து மாடிக்குச் செல்ல படிகள் இருந்தன. மாடியிலிருந்து மெல்லியதாக ரேடியோ இசை கேட்டுக் கொண்டிருக்கவே மாடிக்குப் போனான் கோபாலன்.

அங்கே இருந்த சோபா ஒன்றில் ஸ்ரீதரனின் தங்கை ராதாவும் ஸ்ரீதரனின் மகள் ஜெயஸ்ரீயும் உட்கார்ந்திருந்தார்கள். எதிரில் இருந்த மேஜை மீது கிடந்த பத்திரிகைகளை ஒவ்வொன்றாக எடுத்துப் புரட்டிக் கொண்டிருந்தாள் ராதா. கோபாலன் தயங்கிக் கொண்டே ஹாலுக்குள் நுழைந்தான்.

”அம்மா கொடுத்தாங்க" என்று சொல்லிவிட்டு, பூச்சரத்தை மேஜை மீது வைத்து விட்டு நின்றான் கோபாலன.

”அம்மாவுக்கு உடம்பு எப்படி இருக்கு கோபாலா? பூவெல்லாம் தொடுக்க ஆரம்பிச்-சுட்டாங்க போலிருக்கே!" என்று கேட்டுக்கொண்டே ராதா பூச்சரத்தை. எடுத்துக் கத்தரித்து ஜெயஸ்ரீக்கு வைத்துவிட்டுத் தானும் சூட்டிக் கொண்டாள்.

"அவங்க உடம்பு கொஞ்சம் சுமாருங்க. பூ அவங்க கட்டல்லீங்க. ஊரிலிருந்து ஐயாவோட தங்கச்சி வந்திருக்காங்களே, அந்த அம்மா கட்டினாங்க" என்றான் கோபாலன்.

”ஜோராய்க் கட்டி இருக்காங்க. கனகாம்பரம், அதன் பக்கத்தில் ஜாதி, அதன் பக்கத்தில் தவனம், அப்புறம் ரோஜா என்று அழகான கதம்பமாகக் கட்டியிருக்காங்க. நம்ப வீட்டிலேயும் ஏகப்பட்ட பூதான் பூக்கிறது. இந்த மாதிரி எனக்குக் கட்டத் தெரிய-வில்லையே!" என்று ராதா, அந்தக் கதம்பச் சரத்தைப் புகழ்ந்து பேசினாள். பிறகு ரேடியோவை மூடிவிட்டு "நீ எங்கே வந்தே?" என்று விசாரித்தாள்.

”ஐயாவைப் பார்க்க வந்தேம்மா. அம்மாவுக்கு இன்னிக்கு இங்கே வரமுடிய-வில்லையாம். ஊசி போட டாக்டர் ஐயாவையே அங்கே வரச் சொன்னாங்க..."

"சரி ஐயா உள்ளே வந்ததும் தகவலைச் சொல்லுகிறேன்" என்று கூறிவிட்டு ராதா மாடியிலிருந்து கீழே இறங்கிச் சென்றாள்.

வெளியிலே இருந்த ஒன்றிரண்டு நோயாளிகளுக்கு மருந்து கொடுத்து அனுப்பிவிட்டு ஸ்ரீதரன் உள்ளே வந்தார். கைகளை அலம்பிக் கொண்டு மேஜை அருகில் உட்கார்ந்தார் அவர்.

ஜெயஸ்ரீ மாடிப்படிகளில் குதித்து இறங்கி வந்தாள் ”அப்பா! அப்பா! உன்னோட நானும் சுமதி வீட்டுக்கு வரேன்" என்று தன் தகப்பனாரைப் பார்த்துக் கேட் டாள் அந்தப் பெண்.

ஸ்ரீதரன் மகளைத் தம் அருகில் இழுத்து மடியில் உட்கார்த்திக் கொண்டார். ஆசையுடன் அவள் முகத்தைப் பார்த்து, 'ஏனம்மா! நான் ' பேஷண்டை'ப் பார்க்கப் போனால் நீயும் கூட வருவதாவது?" என்று கேட்டார் கொஞ்சலாக.

இதற்குள் சமையலறையிலிருந்து தட்டுக்களில் சிற்றுண்டியும் ’டீ' யும் எடுத்துக் கொண்டு சமையற்காரர் சுவாமிநாதன் வெளியே வந்தார். மேஜை மீது வைத்து விட்டுக் குளிர்ந்த ஜலமும் கொண்டு வந்து வைத்தார். ”குழந்தை என்ன சொல்கிறாள்?" என்று கேட்டார்.

”உம் சரி, நீயே கேளு சுவாமியை! ஒரு டாக்டர் வைத்தியம் பண்ணுவதற்காக நோயாளிகள் வீட்டுக்குப் போனால் கூடவே தம் குழந்தையையும் அழைத்துப் போவாரா என்று கேட்டுப் பாரேன்" என்று குழந்தை யிடம் கூறிவிட்டுப் பெரிதாகச் சிரித்தார் ஸ்ரீதரன்.

"நான் எல்லோர் வீட்டுக்கும் வருகிறேன் என்று சொல்லவில்லையே அப்பா. அங்கே என் சிநேகிதி சுமதி இருக்கிறாள். அவளைப் பார்க்க வருகிறேன் என்றேன்" என்று அவள் தன் காதுகளில் இருந்த ஜிமிக்கி அசைந்தாடக் கூறி முடித்தாள்.

"என்ன சுவாமி! இவளுக்கு இந்த ஆனியோடு ஒன்பது வயசு பூர்த்தியாகிறது. ஆனால் எப்படிச் சாதுர்யமாகப் பேசுகிறாள் பார்த்தீரா? இவள் தொட்டிலில் உதைத்துக் கொண்டு பாலுக்காக அழுததை நீர் பார்த்திருக்கிறீர். எண்ணெய் தேய்த்துக் கொள்ள இந்த வீட்டைடச் சுற்றி உம்மைத் திணற அடித்தவள் இவள். வக்கணையாகப் பேசத் தெரிந்துவிட்ட....து இப்போது!" என்று ஸ்ரீதரனைப் பார்த்துப் பாதிச் சிரிப்பும் பாதிக் கேலியுமாகச் சொல்லி முடித்தார்.

சுவாமிநாதன் தம் வழுக்கைத் தலையைத் தடவிக் கொண்டார். பிறகு நிதானமாக. இன்னொரு பத்து வருஷங்களைத் தள்ளிப் போட்டுப் பாருங்கள். குழந்தைக்குக் கல்யாணம் ஆகிவிடும். இன்னொரு குழந்தையும் இந்த வீட்டிலே குதிபோடும். நீங்களும் தாத்தா ஆகிவிடுவீர்கள்! ஆனால் உங்கள் சம்சாரம்தான் ஒன்றையும் இருந்து பார்க்கக் கொடுத்து வைக்கவில்லை" என்றார். ஸ்ரீதரன் அப்படியே பிரமை பிடித்தவர் மாதிரி உட்கார்ந்திருந்தார்.