குற்றமுள்ள நெஞ்சு

குற்றம் செய்தவனுடைய நெஞ்சிலே நிறைந்து இருக்கும் பயமானது ஒருவித விசித்திரத் தன்மையுடையது. ஒவ்வொரு நிமிஷமும் அது அவனை ’நீ ஒரு குற்றவாளி' என்று எச்சரித்துக் கொண்டே இருக்கும். நல்லதையோ கெடுதலையோ செய்யும்படித் தூண்டுவது பானம்தான். எச்சரிப்பதும் மனமேதான்.

பார்வதியும் கோவிலுக்குப் போன பிறகு மூர்த்தி திறந்த கொல்லைக் கதவைச் சாத்திக்கொண்டு தெருவில் இறங்கிக் கோவிலை நோக்கி நடந்தான். பிராகாரத்தை அவர்கள் சுற்றி வரும் போது, திருடனைப் போல பெரிய கல்தூண்களுக்குப் பின்னால் மறைந்திருந்து பவானியையும் பார்வதியையும் கவனித்தான். எதிர்பார்த்தது என்ன? பார்வதியைப் பவானி கோவிலில் சந்தித்தால் தனியாக ஒரு இடம் தேடிப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்து பார்வதியிடம் மூர்த்தியைப் பற்றிச் சொல்லி அழுவாள் என்று நினைத்திருந்தான். ஆனால், ஒன்றுமே நடவாதது போல் பவானி அமைதியாக ஒவ்வொரு சன்னிதியாகச் சென்று சுவாமி தரிசனம் செய்துவிட்டு வருவது அவனுக்கு ஆச்சரியத்தை உண்டு பண்ணியது.

பவானியும் பார்வதியும் வீடு திரும்பும் போது இரவு ஏழரை மணி இருக்கும். கல்யாணராமன் பவானியின் வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்து பாலுவுக்குப் பாடம் சொல்லித் தந்து கொண்டிருந்தார். அவர்கள் வீட்டை அடைவதற்கு முன்பே மூர்த்தி வேறொரு சந்தில் புகுந்து, அங்கே வந்து பாலுவுக்கு அருகில் உட்கார்ந்து கொண்டான். பள்ளிக்கூடம் விடுமுறை ஆதலால், கல்யாணம் சில கதைகளைப் பாலுவுக்குச் சொல்லிக் கொண்டிருந்தார்.

”காந்தி மகாத்மா சிறு பையனாக இருந்தபோது தான் மாமிசம் சாப்பிட்டால் உடம்பு வலுவாகி வெள்ளைக் காரர்களை இந்த நாட்டை விட்டு விரட்டி விடலாம் என்று நினைத்து ரகசியமாகத் தன் நண்பனுடன் மாமிசம் சாப்பிட்டார். ஆனால் அப்பா அம்மாவுக்குத் தெரியாமல் அவர் இப்படிச் செய்வது அவருக்கே பிடிக்கவில்லை. எத்தனையோ இரவுகள் இதைப்பற்றி நினைத்துக் கொண்டு தூங்கவே மாட்டாராம்" என்றார் கல்யாணம்.

”அப்படியானால் கெட்ட காரியங்களையும், மனசுக்குப் பிடிக்காதவைகளையும் செய்தால் தூக்கம் வராதா மாமா?" என்று கேட்டான் பாலு.

”ஆமாம் பாலு! திருடன் நிம்மதியாகத் தூங்க மாட்டான். அப்படித் தூங்கினாலும், அவனைப் போலீஸார் பிடித்துக் கொண்டு போவதாகவும், சிறையில் கல் உடைப்ப-தாகவுமே அவன் கனவு கண்டு கொண்டிருப்பான். அவனவன் செய்கைகளைப் பொறுத்தே இருக்கிறது உள்ளத்துக்குக் கிடைக்கும் ஆறுதல்" என்றார் கல்யாணம்.

இந்த உபதேசங்களைக் கேட்கவே பிடிக்கவில்லை மூர்த்திக்கு. ‘வயசான இந்தக் கிழங்களே இப்படித்தான் பெரிய சாமியார் மாதிரி வேதாந்த பாடம் சொல்லிக் கொடுக்கிறார் குழந்தைப் பையனுக்கு’ என்று நினைத்தான் மூர்த்தி.

அப்பொழுது பவானி வீட்டை அடைந்தாள். "இன்றைக்கு என்ன அம்மா கோவிலில் ரொம்ப நாழிகை இருந்து விட்டாய்? ஏதாவது உற்சவமா என்ன?" என்று கேட்டார் கல்யாணம்.

"வீட்டில் இருப்பதைவிட அங்கே இருந்தால் எவ்வளவோ ஆறுதலாக இருக்கிறது மாமா. உலகத்திலே எனக்குச் சில கடமைகள் இருப்பதால் வீடு என்றும் வாசல் என்றும் இருந்து பார்த்து வேலை செய்ய வேண்டி இருக்கிறது. இல்லாவிட்டால் இப்படியே எங்காவது புண்ணிய ஸ்தலங்களாகப் பார்த்து வட்டு வரலாம்" என்றாள் பவானி.

கல்யாணராமன் சிரித்தார். ”ஒவ்வொருவரும் இப்படி விரக்தியடைந்து கிளம்பி விட முடியுமா? அதைச் சரியென்றும் நான் சொல்ல மாட்டேன். உனக்கு வாழ்க்கையில் இன்னும் எவ்வளவோ இருக்கிறதே" என்றார்.

"எனக்கா? வாழ்க்கையில் எனக்கு என்ன மாமா தேவை? காலை மலர்ந்து பகலாவதற்குள் கருகிப் போன என் வாழ்க்கையில் இன்னும் என்னவோ பாக்கி இருக்கிற மாதிரிச் சொல்லுகிறீர்களே!"

”அப்படியெல்லாம் மனசை அலட்டிக் கொள்ளக் கூடாதம்மா. பாலு படித்துப் பெரியவனாகிவிட்டால் அப்புறம் உனக்கு வாழ்க்கையில் என்ன கஷ்டங்கள் இருக்கப் போகிறது!" என்றார் கல்யாணம்.

தன்னுடைய தாய் திடீரென்று கலகல வென்று பேசிக் கொண்டிருப்பது பாலுவுக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

”கதை கேட்டு அலுத்து விட்டது மாமா. வேறே ஏதாவது விளையாட்டுச் சொல்லிக் கொடுங்கள்" என்று .

அவன் கல்யாணராமனைப் பார்த்துக் கேட்டவுடன், மூர்த்தி அவனைப் பார்த்து “உனக்கு என்ன விளையாட்டு தெரியும் சொல். நானும் நீயும் விளையாடலாம்" என்று கேட்டான்.

பாலுவுக்கு உற்சாகம் பொங்கி வந்தது.

"ஒரு வாரமாக சேஷாத்திரி வீட்டில் கேரம் ஆடிப் பழகி இருக்கிறேன். அந்த ஆட்டம் நன்றாக இருக்கிறது. விளையாடலாமா?" என்றான்.

பார்வதியும் அடுப்பங்கரை வேலைகளை முடித்துக் கொண்டு தெருத் திண்ணையில் வந்து உட்கார்ந்தாள். பாலு சொல்லியதைக் கேட்டவுடன் அவள், "ஆமாம் மூர்த்தி! ’கேரம்' பலகை மச்சில் தூசு படிந்து கொண்டு கிடக்கிறது. நாளைக்கு அதை எடுத்து பாலுவுக்குக் கொடு" என்று கூறினாள்.

பாலுவுக்கு அப்பொழுதே அந்தப் பலகையை எடுத்து வைத்துக் கொண்டு விளையாட வேண்டும் என்று ஆசையாக இருந்தது. அன்று இரவு முழுவதும் அவனுக்குச் சரியான தூக்கமே இல்லை.