அன்னையும் ஆண்டவனும்

மல்லிகை மாலையைக் கையில் பிடித்துக் கொண்டு முகம் வெளிறிட அவள் நின்ற காட்சி பழைய சித்திரம் ஒன்றை நினைவூட்டியது அவன் மனத்தில். ’என் வீட்டுக்குள் உத்தரவில்லாமல் ஏன் வந்தாய்? வெளியே போய் விடு' என்று சொல்ல வேண்டும் போல் பவானி திணறினாள். ஆனால், கலவரத்தால் வார்த்தைகள் தொண்டைக்-குள்ளேயே புதைந்து போயின. கலவரமும் குழப்பமும் போட்டியிட அவள் பேசாமல் தரையைப் பார்த்துக் கொண்டு நின்றாள்.

அவள் வெகுண்டு எழாமல் மௌனியாக நின்றது மூர்த்திக்கு அதிகமான துணிச்சலை ஏற்படுத்தியது. அவன் நிதானமாக பெஞ்சியில் உட்கார்ந்து கொண்டு ”பாருங்கள் மாமாவிடம் சொல்லிக் கொண்டிருந்ததை கேட்டேன். பாலுவை வேறு பள்ளிக்கூடத்தில் சேர்க்க வெண்டும். அவ்வளவு தானே? அதையெல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன். உங்களுக்கு என்ன உதவி தேவையானாலும் என்னிடம் கேளுங்கள் செய்வதற்குச் சித்தமாக இருக்கிறேன்" என்று நாடக பாணியில் தலையைத் தாழ்த்தித் தன் பணிவைத் தெரிவித்துக் கொண்டான்.

பவானிக்குச் சற்றுத் தைரியம் வந்தது. "சே! சே! அதெல்லாம் வேண்டாம். உங்களுக்கு எதற்கு வீண் சிரமம்?" என்றாள் பவானி, தன் கையில் இருந்த மாலையைப் பார்த்துக் கொண்டே.

மாலையிலிருந்த அரும்புகள் யாவும் மலர்ந்து 'கம்' மென்று மணம் வீசிக் கொண்டிருந்தது. இவன் வராமல் இருந்தால் இத்தனை நேரம் அதைப் படத்துக்குப் போட்டிருப்பாள் அவள். சட்டென்று அவள் மனசில் ஓர் எண்ணம் தோன்றியது. கோவிலுக்குப் போகிறேன் என்று சொல்லிக்கொண்டு அங்கிருந்து வெளியே கிளம்பி விட்டால் ஒரு வேளை போய் விடக்கூடும் என்று தோன்றவே, அருகில் இருந்த அலமாரியைத் திறந்து தட்டில் வெற்றிலைப் பாக்குப் பழம், கற்பூரத்தை எடுத்து வைத்தாள்.

பெஞ்சியில் உட்கார்ந்திருக்கும் தன்னை அவள் லட்சியம் பண்ணின மாதிரியாகவே காட்டிக் கொள்ள வில்லையே என்று மூர்த்தி மனத்துள் குமைந்தான். அவளோடு மறுபடியும் பேச்சை எப்படி தொடங்குவது என்று புரியாமல் திகைத்தான்.

அதற்குள் பவானி மாலையை நடராஜப் பெருமானுக்குச் சாத்தி விட்டுக் கையில் தட்டுடன் கொல்லைப் பக்கம் போகத் திரும்பினாள். மூர்த்தி தொண்டையைக் கனைத்துக் கொண்டு எழுந்து நின்றான்.

”எங்கே கோவிலுக்கா?" என்று அவளைத் தடுத்துப் பேசினான்.

"ஆமாம்; இன்று கிருத்திகை போய்விட்டு வருவது வழக்கம்"

முன்னைவிட அவள் வார்த்தைகள் சற்று உஷ்ணமாகவே வெளி வந்தன.

”இதிலெல்லாம் உங்களுக்கு நம்பிக்கை உண்டா?" என்று கேலியாகக் கேட்டான் மூர்த்தி.

”எதில்?" - பவானி திகைத்துப் போய்க் கேட்டாள்.

”கோவிலுக்குப் போகிறதில், அங்கே அவர்கள் இது தான் கடவுள் என்று சொல்லிக் காட்டும் உருவத்தை வணங்குவதில்."

பவானி, கூட்டத்தில் இருந்த நடராஜனின் உருவத்தை ஏறிட்டுப் பார்த்தாள். என்றும் எப்பொழுதும் நிலவும் அந்தப் புன்னகையைக் கவனித்தாள். பிறகு அழுத்தமாக ”உங்களுக்குப் பெற்றோர் இருக்கிறார்களா?" என்று கேட்டாள்.

"ஏன்? அப்பா போய் ரொம்ப காலம் ஆகிவிட்டது. அம்மா சமீபத்தில் நாலைந்து வருஷங்களுக்கு முன்பு தான் காலமாகி விட்டாள்" என்றான் மூர்த்தி.

”அப்படியா? அந்த அம்மாள் தான் உங்கள் தாயார் என்று எப்படி நிச்சயமாகச் சொல்வீர்கள்?"

மூர்த்தியின் முகம் வெளிறியது. ”என்ன? நீங்கள் என்ன சம்பந்தமில்லாமல் பேசுகிறீர்கள்?" என்றான்.

பவானிக்கு கோபம் வந்தது.

”சம்பந்தத்துடன் தான் பேசுகிறேன். பிறந்த தினத்திலிருந்து பார்த்து வந்தாலும். தாயின் அன்பணைப்பிலே வளர்ந்தாலும், எல்லாவற்றிற்கும் மேலாக அவள் கர்ப்பத்தில், அவள் ரத்தத்தினாலும் வளர்ந்ததனால் அந்த நம்பிக்கை வேரூன்றி விட்டதல்லவா? அதைப் போலவே இறைவன் என்னும் மகாசக்தியும் தாயைப் போன்றதுதான். அதைவிட மேலானது. பெற்ற தாய் மகவை மறக்கும் காலமும் உண்டு. ஆனால் நம்மைப் படைத்த ஆண்டவன் நம்மை மறந்தான் என்கிற பேச்சே கிடையாது. கோவில். கடவுள் பக்தி, அரிய பண் பாடு. சீலம், சத்தியம், நேர்மையாவும் நம் உள்ளத்திலே தாயன்பைப் போல வளர்ந்து வேரூன்றி இருக்கிறது. கண்டதைப் படித்து விட்டு, கண்டவர்கள் பேசுவதைக் கேட்டு விட்டு, குதர்க்கம் பண்ணாதீர்கள்!" என்று சொல்லிக் கொண்டே பவானி கொல்லைக் கதவைத் திறந்து கொண்டு வீதியில் இறங்கிக் கோவிலை நோக்கி நடந்தாள்.

'வெறிச்' சென்று கிடந்த அந்த வீட்டைப் பார்த்தான் மூர்த்தி. கூடத்திலிருந்த நடராஜப் பெருமான் அவனைப் பார்த்துச் சிரித்தார்.

திறந்து கிடந்த கொல்லைப் பக்கமாக பார்வதி பாலுவுடன் உள்ளே வந்தாள். அவள் கையில் ஒரு பாத்திரத்தில் வெண் பொங்கலும், இன்னொரு கையில் மாங்காய் ஊறுகாய் ஜாடியும் இருந்தது.

”பவானி, பவானி, இன்று கிருத்திகை ஆயிற்றே. ராத்திரி நீ சாப்பிடமாட்டாய் என்று நினைவு வந்தது. இதை எடுத்துக் கொண்டு வந்தேன்" என்று சொல்லிக் கொண்டே உள்ளே வந்தாள் பார்வதி. அங்கே மூர்த்தி நிற்பதைப் பார்த்ததும், ”நீ எங்கேடா இங்கு வந்தாய்? எங்காவது வெளியே போய் இருக்கிறாயாக்கும் என்றல்லவா நினைத்தேன்? பவானி எங்கே?" என்று கேட்டாள்.

மூர்த்திக்கு நடுக்கம் கண்டது. ”நீ எங்கேடா இங்கு வந்தாய்?' என்ற கேள்வி என்ன சாமானிய மானதா?

’உனக்கு இங்கே என்ன வேலை’ என்கிற அர்த்தம் அதில் புதைந்து கிடந்தது. பார்வதி சமையலறைக்குள் சென்று தான் கொண்டு வந்தவைகளை வைத்து விட்டுத் திரும்பியதும் மூர்த்தி சமாளித்துக் கொண்டு, "நான் பாலுவைத் தேடிக் கொண்டு வந்தேன் மாமி. நான் உள்ளே வரும் போது பவானி கொல்லைப் பக்கமாகவே கோவிலுக்குப் போவதைப் பார்த்தேன்" என்றான்.

”கோவிலுக்குப் போனாளா? என்னைக் கூப்பிடாமல் போகமாட்டாளே?" என்று ஒரு கணம் தயங்கியபடி யோசித்தாள் பார்வதி. பிறகு என்னவோ நினைத்துக் சொண்டவளாக அவனைப் பார்த்து, "சரி. நானும் இப்படியே கோவிலுக்குப் போய் சுவாமி தரிசனம் செய்து விட்டு வருகிறேன்" என்று கூறிவிட்டுக் கோவிலுக்குச் சென்றாள்.

மூர்த்தி சிந்தனை நிறைந்த மனத்துடன் வீட்டை அடைந்தான். அவன் மனத்திலே பல போராட்டங்கள் நடந்தன. கோவிலுக்குச் சென்ற பவானி பார்வதி மாமியிடம் தன்னைப் பற்றி ஏதாவது சொல்லி விடுவாளோ என்று அஞ்சினான். அதைத் தெரிந்து கொண்டு மாமா, "ஏண்டா! அந்த வீட்டுக்குள் உனக்கு என்னடா வேலை? மறுபடியும் உன் புத்தியைக் காண்பிக்க ஆரம்பித்து விட்டாயே' என்று ஏதாவது சொல்லி விட்டால் என்ன பண்ணுவது என்று மனத்துக்குள் வேதனைப்பட்டான்.

ஆனால் பெருந்தன்மையும், நிதான புத்தியுமுடைய பவானி கோவிலுக்குச் சென்றவுடன் முதலில் விநாயகப் பெருமானுடைய சன்னிதிக்குச் சென்று அவனைத் தோத்திரம் செய்து வணங்கினாள். அன்று கிருத்திகை யாதலால் மூலஸ்தானத்தில் அதிகக் கூட்டம். அங்கே நின்று உலகெலாமுணர்ந்து ஓதற்கரிய பரம் பொருளை மன முருகித் துதித்தாள்.

வீட்டிலே அரைமணிக்கு முன்னால் நடந்த சம்பவங்களை அவள் அநேகமாக மறந்துவிட்டாள். அவள் உள்ளத் தெளிவுடன் முருகனின் சமூகத்தை அடைந்தவுடன், ”பவானி! என்னைக் கூப்பிடாமல் கோவிலுக்கு வந்துவிட்டாயே! உன்னை வீட்டில் போய்த் தேடிய பிறகுதான் நீ இங்கு வந்திருப்பது தெரிந்தது. மூர்த்தி சொன்னான்" என்றாள் பார்வதி.

ஒரு கணம் பவானிக்கு மூர்த்தியின் பேச்சுக்கள் நினைவுக்கு வந்தன. அரையிலே பச்சைப்பட்டு தரித்து நவரத்தினங்களால் ஆன ஆபரணங்களை அணிந்து, கையிலே தாங்கியிருக்கும் சக்தி வேலுடன் கந்தவேல் நிற்கும் கண்கொள்ளாக் காட்சியை அவன் பார்க்காததனால் தான் 'கோவிலிலே என்ன இருக்கிறது?' என்று கேட்டான். கோவிலில் இல்லாத அழகு. இன்பம். வேறு எங்கே இருக்கிறது?

ஹும்....... பாவம்! சிறு பிள்ளை ! கட்டுப்பாடு இல்லாமல் வளர்ந்ததனால், இப்படிக் கண்டபடி பேசிக் கொண்டு அசட்டுத்தனமாக நடக்கிறார் பாவம்! என்று மனத்துக்குள் அனுதாபப்பட்டாள் பவானி. மூர்த்தியைப் போலத் தான் பாலுவை வளர்க்கக் கூடாது.

கொஞ்சம் கண்டிப்பும், மிரட்டலும் அவசியம் தான் என்று நினைத்துக் கொண்டாள்.

சன்னிதியில் தீபாராதனை நடந்தது. விபூதிப் பிரசாதம் பெற்றுக் கொண்டு பவானியும் பார்வதியும் வெளியே பிராகாரத்தை அடைந்தார்கள்.

யார் முதலிலே பேசுவது. எதைப் பற்றிப் பேசுவது என்று தோன்றாமல் இருவரும் மௌனமாகவே பிரதட்சிணம் செய்தார்கள். ’மூர்த்தி உன் வீட்டுக்கு வந்திருந்தாளா? அவன் ஒரு மாதிரிப் பையன்' என்று சொல்லிப் பவானியை எச்சரிக்க வேண்டும் என்றெல்லாம் பார்வதிக்கு எண்ணங்கள் தோன்றின. ஆனால் யாரைப் பற்றியும் அவதூறாகச் சட்டென்று பேசி விடக்கூடாது என்று தன் மனத்தை அடக்கிக் கொண்டாள் அவள். மூர்த்தி வந்திருந்தான். வருவதைப் பற்றித் தவறில்லை. ஆனால் உலகம் அதைத் தெரிந்து கொண்டு பேசுமா? எனக்குக் கவலையாக இருக்கிறது! என்று பார்வதியிடம் கூறிவிட வேண்டும் என்று பவானி பன்முறை முயன்று தன்னையே அடக்கிக் கொண்டாள். 'சொந்த மருமகனைப் பற்றி மாமியிடமே அவதூறாகப் பேசி விடலாமா?' என்று நினைத்து பவானி எதுவுமே பேசவில்லை.